
பரிசுத்தத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
17-02-2026
ரூத் யார்?
24-02-2026மோசேயைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய ஐந்து பிரதான காரியங்கள்
1. மோசே தன் உடன்பிறந்த சகோதரர்கள் மூன்று பேரில் இளையவர்.
அவருடைய சகோதரி மிரியாம், ஒரு குழந்தைக்கு (மோசேக்கு) என்ன நடக்கும் என்பதைக் கவனிக்கும் அளவுக்குப் பெரியவளாக இருந்தாள்; பின்னர் பார்வோனின் மகளிடம் பரிந்துபேசவும் செய்தாள் (யாத். 2:1-10). அவருடைய சகோதரர் ஆரோன், மோசேயை விட மூன்று வயது மூத்தவர் (எண். 33:39 மற்றும் உபா. 34:6-ஐ ஒப்பிடுக).
2. மோசேயின் வாழ்க்கை ஒவ்வொன்றும் நாற்பது ஆண்டுகள் கொண்ட மூன்று காலப்பகுதிகளாகப் பிரிக்கலாம்.
யாத்திராகமம் 2-ஆம் அதிகாரம் இதைக் குறிப்பிடவில்லை என்றாலும், மோசே எகிப்தியனை அடித்தபோது அவருக்கு நாற்பது வயது என்று அப்போஸ்தலர் 7:23 கூறுகிறது. தேவன் முட்செடியில் அவருக்குத் தோன்றுவதற்கு முன்பு, அவர் வனாந்தரத்தில் ஆடுகள் மேய்த்தபடி நாற்பது ஆண்டுகளைக் கழித்தார் என்று அப்போஸ்தலர் 7:30 கூறுகிறது. பின்னர், உபாகமம் 34:6, மோசே தனது 120-வது வயதில் மரித்தார் என்று கூறுகிறது. எனவே, மோசே நாற்பது ஆண்டுகள் எகிப்திலும், நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் ஆடுகளை மேய்ப்பவராகவும், நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்துபவராகவும் கழித்தார்.
3. மோசே ஒரு எத்தியோப்பிய (Cushite) பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் (எண். 12:1).
மீதியானிய ஆசாரியரின் மகளான சிப்போராளை அவர் மணந்தார் என்று நமக்குத் தெரியும் (யாத். 2:16, 21). ஆனால் எண்ணாகமம் 12-ல் குறிப்பிடப்பட்டுள்ள அந்த எத்தியோப்பியப் பெண் சிப்போராள்தானா? அகஸ்டின் மற்றும் கல்வின் போன்ற சிலர், சிப்போராளும் அந்த எத்தியோப்பியப் பெண்ணும் ஒருவரே என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ‘கூஷ்’ (Cush) என்பது பொதுவாக எத்தியோப்பியாவைக் குறிப்பதால், அந்தப் பெண் ஒரு இரண்டாம் மனைவியாக இருக்கலாம் என்று மற்றவர்கள் கருதுகின்றனர். வேதாகமமே இது குறித்து மேலான விளக்கங்களைத் தராததால், நாம் இதை உறுதியாக தீர்மானிக்கப்படாத ஒன்றாக விட்டுவிட வேண்டும்.
4. மோசே “பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” (எண். 12:3).
இந்தக்கூற்று மோசேயினாலே எழுதப்பட்டது என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் ஒரு சாந்தமுள்ள அல்லது தாழ்மையான மனிதர் தனது சொந்த சாந்தத்தைப் பற்றி இவ்வாறு எழுத முடியுமா? இதை குறித்து விமர்சிப்பவர்கள் மோசே அதை எழுதவில்லை என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் சரியாகப் புரிந்துகொண்டால், அந்தச் சூழலுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமானது என்பதை உணரலாம். மிரியாமும் ஆரோனும் மோசேயின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போராடினர். மோசே கோபத்தோடோ அல்லது கசப்போடோ பதிலளிக்காமல், தேவன் தனக்காகப் பேச அனுமதித்தார். ‘கைல் அண்ட் டெலிட்ச்’ (Keil and Delitzsch) விளக்கவுரை கூறுவது போல: “அவர் எல்லா மனிதரிலும் சாந்தகுணமுள்ளவராக இருந்தபடியால், தன் மீதான இந்தத் தாக்குதலை, தன்னை அழைத்தவரும் தகுதியாக்கியவருமான அந்த ஞானமுள்ள நீதியுள்ள நியாதிபதியிடம் (தேவனிடம்) அமைதியாக ஒப்படைக்க முடிந்தது.”
5. மறுரூப மலையில் மோசேயும் எலியாவும் இயேசுவுடன் காணப்பட்டனர் (மத். 17:1–8; மாற்கு 9:2–8; லூக்கா 9:28–36).
பழைய ஏற்பாட்டில் காணப்படும் மற்ற பல பெரிய மனிதர்களுக்குப் பதிலாக மோசேயும் எலியாவும் மட்டும் ஏன் இயேசுவுடன் காணப்பட்டார்கள் என்பது விவாதத்திற்குரிய விஷயம். மோசே நியாயப்பிரமாணத்தையும், எலியா தீர்க்கதரிசிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் பழைய ஏற்பாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மற்றவர்கள் பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த அற்புதங்கள் இவர்கள் இருவருடைய காலகட்டத்தில் தான் நிகழ்ந்தது என்பதினால் அப்படி எண்ணுகிறார்கள். எனது கருத்து என்னவென்றால், பழைய ஏற்பாட்டில் சீனாய் மலையில் கர்த்தரைச் சந்தித்த இரண்டு மனிதர்கள் மோசேயும் எலியாவும் என்பதாலேயே என்று நினைக்கிறேன். எனவே, கர்த்தர் மறுரூபமானபோது அவரைச் சந்திப்பதற்கும், அவருடைய மேசியானிய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்கள் இருவரும் மிகவும் பொருத்தமானவர்களாய் காணப்பட்டனர்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


