
தாய்மையின் சவால்களை நேர்த்தியுடன் கையாளுதல்
15-09-2026கிறிஸ்தவ முதிர்ச்சி என்றால் என்ன?
எங்கள் தோட்டத்தில் ஒரு சிறிய ஆப்பிள் மரம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக வளர்கிறது, மேலும் அதன் பழங்களும் அதிகமாகின்றன. பல வருடங்களாக அது அதிகமாக வளர்ந்து முதிர்ச்சியடைந்துள்ளது, மேலும் அந்த மரமானது பக்குவமாக வளர்ந்ததினால் கிடைக்கும் பழங்கள் எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது.
மேற்கண்ட இந்த உவமான காட்சி பல வழிகளில், கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்முடைய அழைப்பின் நோக்கத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது—அதாவது தொடர்ச்சியாக கனி கொடுக்கும் வளர்ச்சியே ஆகும். எனவே, “நாம் பூரணராகும்படி (முதிர்ச்சியாகும்படி) கடந்து போவோமாக” (எபிரெயர் 6:1).
கிறிஸ்தவ முதிர்ச்சிக்கான முன்மாதிரி
கிறிஸ்தவ முதிர்ச்சியானது நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் நமக்கு படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாறுவதன் மூலமே நாம் முதிர்ச்சியடைந்து கனிதரும் வாழ்க்கையும் பெறுகிறோம்.
ஆண்டவராகிய இயேசுவின் மானுட வாழ்க்கையின் உண்மையைக் குறைத்து மதிப்பிடும்போக்கு இன்றைய காலங்களில் அதிகரித்துள்ளது. ஆனால் கிறிஸ்துவின் மானுட வாழ்க்கையில் உண்மையான முதிர்ச்சிக்கு நேரான வளர்ச்சி காணப்பட்டது. அவர் ஒரு பரிபூரண குழந்தையாக, சிறுவனாக மற்றும் வளர்ச்சியுற்ற மனிதனாக காணப்பட்டார். அவர் எவ்விதமானப் பாவமுமின்றி இந்த ஒவ்வொரு நிலைகளிலும் முதிர்ச்சியடைந்து தேறினார்.
லூக்கா 2:40-ல் இவ்வாறாக படிக்கிறோம்: “பிள்ளை வளர்ந்து, ஆவியில் பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேலிருந்தது.” இதை ஜான் கால்வின் குறிப்பிடுவது போல, “கிறிஸ்து ஒரு உண்மையான மனிதனாக வெளிப்பட்டார், மனித சுபாவத்திலிருந்து பிரிக்க முடியாத எல்லாவற்றையும் அவர் விருப்பத்துடன் தன்மேல் ஏற்றுக்கொண்டார்.” அதில் அவர் முதிர்ச்சியை நோக்கி வளர்ந்ததும் அடங்கியிருக்கிறது.
இயேசு தம்முடைய பிதாவினால் தேவ வார்த்தையைக் கற்றுக் கொண்டபோது அவர் முதிர்ச்சியை நோக்கி பயணித்தார்:
“காலைதோறும் என்னை எழுப்புகிறார். கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல நான் கேட்கும்படி, என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.” (ஏசாயா 50:4)
கிறிஸ்து வீழ்ச்சியடைந்த இந்த உலகத்தில் வாழ்ந்தபோது சோதனைகள் மற்றும் பாடுகள் மூலமாகவும் அவர் பக்குவப்பட்டார். எபிரேயர் ஆசிரியர், “அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” (எபிரெயர் 5:8) என்று கூறுகிறார். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இயேசுவின் கீழ்ப்படிதல் பரிபூரணமாக இருந்தது, அதேசமயம் அவருடைய பாடுகள் அவரை மேலும் அதிகமான கீழ்ப்படிதலுக்கும் முதிர்ச்சிக்கும் வழிநடத்தின.
முதிர்ச்சிக்கான வழிகள்
கிறிஸ்து முதிர்ச்சியின் மாதிரி மட்டுமல்ல; அவரே கிறிஸ்தவ வாழ்க்கையின் முதிர்ச்சிக்கான வழியுமாவார். மரத்தோடு இணைந்திருக்கும் போது மட்டுமே கிளைகள் கனி கொடுக்கமுடியும். வாம்ஃப்ரேயின் ஜான் பிரவுன் இவ்வாறு கூறுகிறார்:
“நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, விசுவாசத்தினால் அவரோடு ஒன்றாகும் வரை, நம்முடைய மாம்சத்தின் தீமைகளை அழிப்பதற்கும் புதிய மனுஷன் வளர்ச்சியடைவதற்கும் கிறிஸ்துவிடமிருந்து எந்தச் சாரத்தையோ அல்லது பெலத்தையோ நம்மால் பெற்றுக்கொள்ள முடியாது.”
முதிர்ச்சி என்பது “அவருக்குள்” மட்டுமே உருவாகிறது.
கிறிஸ்து நியமித்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலமே இந்த முதிர்ச்சி உருவாகிறது. எபேசியர் 4-ல் பவுல் கூறுகையில், இயேசு சபைக்கு “மேய்ப்பர்களையும் போதகர்களையும்” ஈவாகக் கொடுத்துள்ளார், மேலும் இவர்கள் நம்மை “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்படி [முதிர்ச்சியடையும்படி]” நடத்துவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளனர் (எபே. 4:11, 13). தேவன் தம்முடைய சபைக்குக் கொடுத்துள்ள போதகர்களிடமிருந்து பயனடைவதன் மூலம், நாம் “இனி குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதுக்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்… தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களுமாயிருக்கிறோம்.” (எபே. 4:14, 15.) தேவ வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட போதனைகளைக் கேட்பது கிறிஸ்தவ கொள்கையில் நம்மை ஸ்திரமடைந்து பெனடையச் செய்கிறது மற்றும் தவறான உபதேசங்களால் திசைதிருப்பப்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இதுவே நம்முடைய தலையாகிய கிறிஸ்துவைப் போல மாறுவதற்கு நமக்கு வழிவகுக்கிறது. இதுவே முதிர்ச்சியாகும். தங்கள் போதனைகளை கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த முதிர்ச்சியைக் காண்பதே பிரசங்கிகளின் இலக்காகும்: “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்” (கொலோ. 1:28).
கிறிஸ்தவ முதிர்ச்சியானது உலகில் இருக்கும் பாடுகளை அனுபவிப்பதின் மூலமாகவும் வருகிறது. ரோமர் 5:3-4 கூறுகிறது: “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்கும் என்று அறிந்து, உபத்திரவங்களிலேயும் நாங்கள் மேன்மைபாராட்டுகிறோம்.” வீழ்ச்சியடைந்த உலகில் ஏற்படும் சோதனைகளும் உபத்திரவங்களும் நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கு நேராக வழிநடத்துகிறது.
தேவனுடைய வார்த்தையின் போதனைகளினால் நாம் ஆசீர்வதிக்கப்படும்போதும், வாழ்க்கையின் சோதனைகளால் நாம் பரிசுத்தமாக்கப்படும்போதும், நாம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து முதிர்ச்சியடைகிறோம். நீதிமொழிகள் நமக்கு இப்படி சொல்கிறது: “ஞானமுள்ளவனுக்குப் போதனைசெய், அவன் அதிக ஞானமுள்ளவனாவான்” (நீதி. 9:9). பாடுகளை குறித்து “அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது (எபிரெயர் 12:11).
முதிர்ச்சியற்ற தன்மையின் அடையாளங்கள்
முதிர்ச்சி என்பது இயேசுவின் சாயலுக்கு ஒப்பாவதாகும். ஆனால் அதன் எதிர்ச்சொல்லான முதிர்ச்சியற்ற தன்மையிலிருந்தும் முதிர்ச்சி என்றால் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். எபிரெயர் 5:12-14-ல் முதிர்ச்சியற்ற தன்மை பற்றிய விரிவான விளக்கம் உள்ளது. விசுவாசிகளுக்கு “தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிற்று. “பலமான ஆகாரத்தை அல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள், “மேலும் “நன்மை தீமை இன்னதென்று பகுத்தறிய முடியாதவர்களாக” இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பால் மற்றும் குழந்தைத்தனத்திற்கு ஏற்ற சரியான நேரமும் இடமும் உண்டு (1 பேதுரு 2:2; 1 கொரி. 13:11). ஆனால் கிறிஸ்தவர்கள் கொள்கைகளை அறியாமல் இருக்கவோ, அல்லது சரி எது தவறு எது என்பது பற்றிய ஒழுக்க நெறிமுறைகளை குறித்து அறியாதவர்களாகவோ இருக்கக்கூடாது. கிறிஸ்தவ முதிர்ச்சி என்பது இதற்கு முற்றிலும் மாறானது.
முதிர்ச்சியற்ற தன்மையின் மற்றொரு அடையாளம் 1 கொரிந்தியர் 3:1-3-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பவுல் கொரிந்தியர்களை “கிறிஸ்துவுக்குள் குழந்தைகள்” என்று அழைத்து, “உங்களுக்குள் பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் இருக்கிறது” என்று கூறுகிறார். தனிநபர்களை மையமாகக் கொண்டு சபையில் ஏற்படும் பிரிவினைகள் ஆவிக்குரிய முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. மாறாக, கிறிஸ்தவ முதிர்ச்சியானது விசுவாசிகளிடையே காணப்படும் அன்பின் ஒற்றுமையை காண்பிப்பதாகும்.
முடிவுரை
கிறிஸ்தவர்கள் இந்த பூலோக வாழ்க்கையில் முழுமையான முதிர்ச்சியை அடைய முடியாது, இருப்பினும் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நமக்கு எப்போதும் தேவைப்படுகிறது. “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” (2 பேதுரு 3:18) என்று நாம் அழைக்கப்படுகிறோம். முழுமையான முதிர்ச்சி நமக்கு பரலோகத்தில் காத்திருக்கிறது. நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிந்திருக்கிறோம் (1 யோவான் 3:2). அந்நாளில் மட்டுமே முழுமையான மகிமையான முதிர்ச்சி நம்முடையதாகும். இப்போதைக்கு நாம், “கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோல கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18).
கிறிஸ்துவின் சாயலுக்கொப்பான நம்முடைய முழுமையான முதிர்ச்சியின் நாள் நிச்சயமானது: “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்” (ரோமர் 8:29). நாம் கிறிஸ்துவுக்குள் நிச்சயமாக முதிர்ச்சியடைவோம். கிறிஸ்துவுக்குள்ளாக எப்படிப்பட்ட ஒரு மேன்மையான நம்பிக்கை நமக்கு உள்ளது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


