Who Was Abraham?

ஆபிரகாம் யார்?

08-09-2026
Who Was Abraham?

ஆபிரகாம் யார்?

08-09-2026

நான் எப்படி ஞானத்துடன் பேச வேண்டும்?

How Can I Speak with Wisdom?

நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், மற்றவர்களோடு நன்றாக தொடர்பு கொள்ள வேண்டும், மற்றவர்களை கவர்ந்து கொள்வதற்காக அல்ல, இயேசுவின் உவமையில் வரும் தாலந்துகளைப் போல (மத்தேயு 25:14–40) உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதினாலேயே. உங்களிடம் பேசிய தேவனுக்குப் பிரதிபலன் செய்யும்படியாக உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் பேச்சுகள் வீணாகத் தரையில் விழவொட்டாமல், இலக்கைத் தாக்கும் அம்புகளைப் போல காணப்பட வேண்டும் (1 சாமு. 3:19). நீதிமொழிகள் 15:23 இல் புகழ்வதைப் போன்று,  “ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளாக” இருக்க வேண்டும்.

“குற்றம்பிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தை” (தீத்து 2:8 பார்க்க) பேசுவதில் நீதிமொழிகள் புத்தகம் அதிக கவனம் செலுத்துகிறது. வேதாகமத்தின் பிற புத்தகங்களை விட நீதிமொழிகளில் பேச்சு, நாவுகள், வாய், வார்த்தைகள் போன்ற சொற்கள் அதிக அளவில் வருகின்றன. நீதிமொழிகள் 15-ஆம் அதிகாரத்தில், அதன் ஆக்கியோன் தயவுள்ள, ஞானமுள்ள, ஒழுக்கமுள்ள மற்றும் அறிவுள்ள வார்த்தைகளை பேசும் உதடுகளை பாராட்டுகிறார். “பிரதியுத்திரம் சொல்ல யோசிக்கும்” நபரை அது மெச்சுகிறது (நீதி. 15:28). “யோசிப்பது” என்றால் தியானிப்பது, சிந்திப்பது மற்றும் திட்டமிடுவது என்று அர்த்தம் (சங். 1:2; 2:1; நீதி. 24:2). விசுவாசிகள் ஒருபோதும் கவனக்குறைவாகப் பேசக்கூடாது.  நமக்கு சரியான சிந்தனைகள்  இருந்தபோதிலும், நமது வார்த்தைகள் வெறுமையாய் நம்மிடமே திரும்பி வருகிறது என்று நாம் நிச்சயபடுத்திக் கொள்ளலாம் (ஏசா. 55:11 பார்க்க). ஆனால்,  நமது வார்த்தைகளுக்கு ஜீவனளிக்கும் வல்லமையை தேவன் அளித்திருக்கும் போது (நீதி. 18:21), நாம் ஏன் நமது வார்த்தைகளை வீணாக்க வேண்டும்?

“ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள்” என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, இணையான சொற்றொடர்களை கொண்ட பொதுவான எபிரெய கவிதை நடையை அறிந்து கொள்வது நமக்கு உதவும். ஒரு வசனத்தின் முதல் வரி பெரும்பாலும் அதைத் தொடர்ந்து வரும் வரிகளைத் தெளிவுபடுத்துகிறது. நீதிமொழிகள் 15:23 இவ்வாறு தொடங்குகிறது:”ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது.” வேதாகமத்தில், “உத்தரவு” அல்லது “பதில்” எனும் சொல் ஒரு கேள்விக்கான சாதாரணப் பதிலை விட மேலான அர்த்தத்தை உடையது. அது ஒரு பொருத்தமான பதில் அல்லது சரியான ஒன்றைக் குறிக்கிறது; ஒரு கணக்குப் பாடத்திற்கு கொடுக்கப்படும் ஒரே ஒரு சரியான பதிலுக்கு அதை ஒப்பிடலாம் – தவறான பதில்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதனிமித்தமே, யோபின் நண்பர்கள் பல வார்த்தைகளைப் பேசியபோதிலும், யோபின் பிரச்சனைக்கு “ஏற்ற பதில் ஒன்றையும் கொடுக்க முடியாததால்” எலீகூ கோபமடைந்தான் (யோபு 32:3). எனவே, “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை” என்பது ஒரு புதிிருக்கான ஒரே ஒரு பதிலை போன்றது, அல்லது பூட்டைத் திறக்கக்கூடிய ஒரே ஒரு சாவிக்கு ஒப்பிடலாம். இந்த வசனத்தின் இரண்டாம் பகுதி, நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறது. சாலமோனின் மொழிநடையை நேரடியாக மொழிபெயர்த்தால், “அதன் காலத்தில்” சொன்ன வார்த்தை என்று அர்த்தமாகும். நன்கு பேசப்பட்ட ஒரு வார்த்தை என்பது சரியான தருணத்தில் கொடுக்கப்படும் உண்மையான பதிலாகும். இவ்விதமாக நாம் செயல்பட, குறைந்தது மூன்று காரியங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

  1. நீங்களும் உங்களைக் கேட்டுக் கொண்டிருப்பவரும் ஆயத்தமாக இருக்கும்போது மட்டுமே பேசுங்கள்.

உங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாதபோது, தவறான வார்த்தைகளைப் பேசுவதை விட சில வார்த்தைகள் பேசுவது அல்லது பேசாமல் இருப்பதே நல்லது (நீதி. 10:10). நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை அறிந்திருந்த போதிலும், உங்கள் இருதயம் சரியான நிலையில் இல்லாதபோது கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் கோபத்தில் வெடிக்கும்போது, உங்கள் வார்த்தைகள் ஜீவனளிக்கும் வசந்த கால மழைச்சாரலைப் போலல்லாமல், தீயணைப்பு குழாயின் வெடிப்பைப் போல இருக்கும்.

உங்களை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஆயத்தமில்லாமல் இருப்பதும் மறுபுறம் சாத்தியமே. இயேசு தம் சீஷர்களிடம், “இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, ஆனாலும் அவைகளை இப்போது நீங்கள் தாங்கமாட்டீர்கள் ” என்றார் (யோவான் 16:12). அதற்கு பின்னரே அவர்களால் “சகல சத்தியத்தையும்” கேட்க முடிந்தது (யோவான் 16:13). நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஆனால் நிலம் ஆயத்தமாக இல்லாதபோது விதையை விதைப்பதில் எந்தப் பயனும் இல்லை (1 சாமு. 25:37 பார்க்க).

  1. சரியான நேரத்தில் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம்: “நீயே அந்த மனிதன்” என்று சொல்லியிருக்காவிட்டால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் (2 சாமு. 12:7). அநீதியான தேவபக்தியற்ற தன்மையை தாவீது கண்டுகொள்ள நாத்தான் தீர்க்கதரிசி உதவினார்; அவனுக்கு “கோபம் மிகவும் மூண்டது”, ஆனால் இன்னும் அவனுடைய சொந்த பாவத்திற்கு விரோதமாக அல்ல. அதிர்ஷ்டவசமாக, நாத்தான் கடினமான சத்தியத்தைச் சரியான நேரத்தில் பேசினார் (2 சாமு. 12:1–15).

ஒரு போதகரோ அல்லது ஒரு நண்பரோ எப்போதாவது தேவனிடமிருந்து உங்களுக்குத் தேவையானதை—அதாவது தெளிவான பார்வை, ஊக்கம் அல்லது சரிசெய்தல்—போன்றவற்றை அளிக்கும் வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்களா? நீங்கள் தேவன் அல்ல. ஆனால், அந்தத் தருணத்திற்குச் சரியான வார்த்தைகளைப் ஜெபத்தோடே தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் அவரைப் பின்பற்றுகிறீர்கள். சந்தேகப்படுபவருக்கு, நீங்கள் இரக்கமுள்ள வார்த்தைகளைப் பேசலாம். நரகத்தை நோக்கிச் செல்பவரிடம், உங்கள் வார்த்தைகள் வல்லமையாக காணப்படலாம் (யூதா 22–23). நல்ல சொற்கள் என்பது அநேக கருவிகளைக் கொண்ட ஒரு முழு பெட்டியை போன்றது; நன்றாக செய்து முடிப்பதற்கு ஏதுவான கருவிகளைப் உங்கள் வாழ்வில் பயன்படுத்துங்கள், மேலும் கொல்லனைப் போல, இரும்பு சூடாக இருக்கும்போதே அடியுங்கள்.

  1. பரிசுத்த ஆவியானவரை சார்ந்து அவருடைய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

உங்களைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கை “மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய வல்லமையில் நிலைநிற்கும்படி” கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் (1 கொரி. 2:4–5). மார்ட்டின் லூத்தர் எழுதினார்: “தேவைப்படும் நேரத்தில் பரிசுத்த வேதாகமத்திலிருந்து பிரசங்கிக்கப்படும் ஒரு சகோதரனின் வார்த்தை, விவரிக்க முடியாத கனமான எடையைக் கொண்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் அதனுடன் இணைந்து செயல்படுகிறார், மேலும் மக்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் இருதயங்களை அசைத்து அதை உயிர்ப்பிக்கிறார்.” பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருந்து, நீங்கள் தேவனுடைய வார்த்தையை உட்கொண்டு வந்தால், நீங்கள் இவ்வாறு செயல்பட முடியும்:

இளைப்படைந்தவனுக்கு சமையத்திற்கு ஏற்ற வார்த்தை  சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் (ஏசா. 50:4).

மேத்யூ ஹென்றி எழுதுகிறார், பயனுள்ள பேச்சு என்பது “சரியான நேரத்தில் மற்றும் இடத்தில், ஏற்ற சூழ்நிலையில் சொல்லப்பட்ட ஒன்று” என்றும்,  “உபதேசம், ஆலோசனைகள் அல்லது ஆறுதல் ஆகியவற்றை ஏற்ற சமயத்திலும், பொருத்தமான உணர்வுகளோடும், பேசிக் கொண்டிருக்கும் நபரின் சூழ்நிலைக்கு ஏற்பவும், கேட்பவரின் குணத்திற்கு ஒத்துப் போகும் வகையிலும் கொடுக்க முயற்சிக்க வேண்டும்” என்றும் கூறுகிறார். அதைச் செய்து முடிப்பது ஒரு பெரிய காரியம்! ஆனால் என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு, தேவன் ஒரு நல்ல ஜெபத்தைக் கொடுத்திருக்கிறார்:

என் கன்மலையும்  மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரிதியாயிருப்பதாக. (சங். 19:14)

உதவிக்காக நீங்கள் தேவனை நோக்கும்போது, இவ்வாறு சொல்லலாம்:

மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். (நீதி. 8:6).

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

வில்லியம் ஃபோகஸ்டீன்

வில்லியம் ஃபோகஸ்டீன்

மிச்சிகனில் உள்ள இம்மானுவேல் ஐக்கிய சபையின் போதகராக உள்ளார். Why Christ Came, the glory of grace, glorifying and enjoying God மற்றும் finding my vocation போன்ற புத்தகங்களின் ஆசிரியருமாவார்.