
கிறிஸ்து எப்பொழுது மரித்தார்?
30-06-2026
பலதார மணம் பற்றி வேதம் கூறுவது என்ன?
07-07-2026தெய்வீக வெளிப்பாட்டைக் குறித்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன?
தேவன் தாமாகவே தம்மை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே தம்மையும், தமது சித்தத்தையும் மனிதகுலத்திற்குத் தெரியப்படுத்துகிறார். படைப்புகளாகிய மனிதர்கள் தேவனை அறிந்துகொள்வதற்கு இது அவசியமாகும். ஏனெனில் படைத்தவராகிய தேவன் உன்னதமானவர் மற்றும் அவர் தம்முடைய படைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர். தேவனே தம்மை வெளிப்படுத்த முன்வராதவரை, மனிதர்களால் அவரை ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. அவருடைய சுய-வெளிப்பாட்டிற்கு அப்பாற்பட்டு, மனிதர்கள் தங்கள் சொந்த அறிவு, அனுபவம் அல்லது முயற்சியால் அவரைப் பற்றிய அறிவைப் பெற முடியாது. இதன் காரணமாகவே, தேவனுடைய கிருபையின் சுய-வெளிப்பாடானது, படைப்புகளாகிய மனிதர்களின் புரிந்துகொள்ளும் திறமையின் எல்லைக்கேற்ப இறங்கி வந்து தன்னை வெளிப்படுத்துகிறது. இதனடிப்படையில், தேவனை பற்றியும் மற்றும் படைப்பில் அவருடைய நோக்கங்கள் யாவையும் குறித்த மனிதனுடைய அனைத்து அறிவும், படைத்தவராகிய தேவன் தன்னைப்பற்றியும், தமது படைப்பைப் பற்றியும் கொண்டிருக்கிற அறிவுக்கான ஒரு படைப்புசார் ஒப்புமையாகும்.
தேவன் தம்மையும் தமது சித்தத்தையும் மனிதர்களுக்குத் தெரியப்படுத்தும் இரண்டு வழிகளை நாம் வேறுபடுத்திப் பார்க்கலாம். இவை இரண்டும் ஒன்றை ஒன்று முழுமையாக்குபவைகளாகவும், இணைந்து செயல்படுபவையாகவும் உள்ளன. முதலாவது பொது வெளிப்பாடு (general revelation) என்று அழைக்கப்படுகிறது; இதில் தேவன் தமது படைப்பு, பராமரிப்பு மற்றும் மனித மனசாட்சி ஆகியவற்றின் மூலமாக அனைத்து மக்களுக்கும் உலகளாவிய ரீதியில் தம்மை வெளிப்படுத்துகிறார். இயற்கையின் ஒழுங்கும் பிரபஞ்சமும் தேவனுடைய வல்லமை, ஞானம் மற்றும் தெய்வீகத் தன்மையைக் காட்டுகின்றன (ரோமர் 1:19–20). வரலாற்றையும் மனிதனுடைய எல்லா நிகழ்வுகளையும் ஆளும் அவருடைய ராஜரீகம் அவருடைய நீதியையும் நன்மையையும் பிரதிபலிக்கிறது (மத்தேயு 5:45; அப்போஸ்தலர் 14:17). மனிதனுடைய பொதுவான நடத்தையில் காணப்படும் நன்மை தீமை குறித்த வெளிப்பிரகாரமான ஒழுக்க நெறியானது, தேவனுடைய ஒழுக்க சட்டத்தைப் பிரதிபலிக்கிறதாயிருக்கிறது (ரோமர் 2:14–15). இவை அனைத்தும், சிருஷ்டிகராக நமது தேவன் யார் என்றும், அவருடைய சாயலில் படைக்கப்பட்ட சிருஷ்டிகளாக நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதையும் மனிதர்களுக்கு, தொடர்ச்சியாகவும், தெளிவாகவும், உண்மையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படுத்துகின்றன. இவைகள் உறுதியான மற்றும் இடைவிடாத சாட்சிகளாக இருப்பதால், மனிதர்கள் எல்லா காலங்களிலும் தேவனுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இந்த பொதுவான வெளிப்பாடு மனிதர்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாகக் கணக்குக் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதை உணர்த்த போதுமானதாக இருந்தாலும், அது மனிதர்களின் இரட்சிப்பிற்கு ஒருபோதும் போதுமானதல்ல. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Confession of Faith 1.1) இதைக் பின்வருமாறு கூறுகிறது:
“இயற்கையின் ஒளி மற்றும் படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்கள் தேவனுடைய நன்மை, ஞானம் மற்றும் வல்லமையை மனிதர்களுக்கு தெரிய காட்டி அவர்கள் எந்த சாக்குபோக்கும் சொல்லாதபடிக்கு செய்தாலும், இரட்சிப்பிற்கு அவசியமான தேவனையும் அவருடைய சித்தத்தையும் பற்றிய அறிவை வழங்க அவை போதுமானவை அல்ல.”
தேவன் தம்மை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட மேலான காரியங்களை உள்வாங்கிக்கொள்ளும் திறமையானது படைப்புகளாகிய மனிதர்களுக்கு இல்லை என்பது இதற்குக் காரணமல்ல. மனிதர்களுக்கு போதுமான அளவில் தம்மை வெளிப்படுத்துவதற்கு தேவன் எப்போதும் இறங்கி வருகிறார். மாறாக, பாவத்தின் தன்மையை அவர்கள் அறியாததினால் அந்தப் பாவமானது மனிதர்களின் அறிவு மற்றும் விருப்பத்தை கறைப்படுத்துவதே இந்த போதாமைக்கு காரணமாக அமைகிறது. தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்ட மனிதனின் ஒவ்வொரு அம்சமும் அவருடைய தெய்வீகத்தன்மையையும் குணாதிசயத்தையும் பிரதிபலிக்கவும் அவரை சார்ந்து வாழவுமே வடிவமைக்கப்பட்டது. பாவம் மனிதர்களின் மனதையும் நோக்கங்களையும் சீரழித்துவிட்டது. இதனாலேயே பொதுவான வெளிப்பாட்டின் மூலம் அவர்கள் படைப்பின் தேவனால் பெற்ற தேவனைப் பற்றிய அறிவை மட்டுப்படுத்தவும் சீர்குலைக்கவும் அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் முழுமையான செயல்பாடு இல்லாவிட்டால், வெளிப்படுத்தப்பட்ட இத்தகைய சத்தியங்களை மனிதர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, அதை திரித்து அல்லது அதை நிராகரித்து அதற்கு எதிராக செயல்படுவார்கள்.
சிறப்பான வெளிப்பாடு (special revelation) என்பது தேவன் தம்மையும் தமது சித்தத்தையும் மனிதர்களுக்குத் தெரியப்படுத்தும் இரண்டாவது வழியாகும்; இது பொதுவான வெளிப்பாட்டில் தேவன் வெளிப்படுத்தியதை விளக்குவதுடன், அதற்கு மேலான சத்தியங்களையும் வெளிப்படுத்துகிறது. இது ஒரு மீட்பராக தேவன் யார் என்பதையும், வரலாற்றில் அவர் செய்த மீட்பின் செயல்களின் நோக்கங்களையும், தமது மக்களுடனான உடன்படிக்கையின் உறவையும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவர் ஏற்படுத்தின இறுதியான மீட்பின் திட்டத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. இந்த சிறப்பான வெளிப்பாடு, மீட்பின் வரலாறு முழுவதும் சொப்பனங்கள், தரிசனங்கள், தேவதூதர்களின் தோற்றங்கள், தெய்வீக தரிசனங்கள் மற்றும் தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்றவை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மீட்பின் வரலாறு முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டது. இருப்பினும், இது இயேசு கிறிஸ்து என்ற நபரில் உச்சக்கட்டத்தையும் முழுமைத்தன்மையையும் அடைந்தது; அவர் மூலமாக தேவன் திட்டவட்டமாகப் பேசியிருக்கிறார் (எபிரெயர் 1:1–2) மற்றும் அவர் பிதாவின் பரிபூரண வெளிப்பாடாக இருக்கிறார் (யோவான் 1:18; 14:9). இதற்கு அதிகாரப்பூர்வமாகவும் பிழையின்றியும் சாட்சியளிக்கும் வகையில் சிறப்பான வெளிப்பாட்டின் முதன்மையான, இறுதியான மற்றும் போதுமான வடிவமாக பரிசுத்த வேதாகமம் நமக்கு காணப்படுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையும் (1.1) இதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது:
கர்த்தர் அநேக காலங்களாக பல வழிகளில் தம்மைத் தாமே வெளிப்படுத்தவும், தமது சித்தத்தைத் தமது திருச்சபைக்கு அறிவிக்கவும் பிரியப்பட்டார்; பின்னர், பாவமாம்சத்தின் கரைப்பட்ட தன்மை மற்றும் பிசாசின் தந்திரம் மற்றும் உலகத்தின் தீமைகளுக்கு எதிராகச் சபையை திடப்படுத்தவும், சத்தியத்தை பாதுகாக்கவும், பரப்பவும் அதையே முழுமையாக எழுத்து வடிவில் கொடுப்பதற்கும் திருவுளம்பற்றினார்; இதுவே பரிசுத்த வேதாகமத்தை மிகவும் அவசியமானதாக மாற்றினது.
இந்த சிறப்பான வெளிப்பாடுதான், பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் இரட்சிப்பு, விசுவாசம் மற்றும் தேவபக்தியுள்ள பரிசுத்த வாழ்க்கைக்குத் தேவையான தேவனைப் பற்றிய அறிவை மனிதர்களுக்கு கொடுக்கிறது ; இது தேவனுடைய சுய-வெளிப்பாட்டை மனிதர்களுக்கு அருளும்படி, பொதுவான வெளிப்பாட்டுடன் இணைந்து முழுமையான ஒன்றாகச் செயல்படுகிறது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


