Was Jesus Perfect?

இயேசு பரிபூரணமானவரா?

13-08-2026
Was Jesus Perfect?

இயேசு பரிபூரணமானவரா?

13-08-2026

ஞானத்தில் நான் எவ்வாறு வளருவது?

How Can I Grow in Wisdom?

நாம் ஞானம் மற்றும் மதியீனம்ஆகிய ஒன்றுக்கொன்று முரண்பட்ட காரியங்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம் என்று வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. இவ்விரண்டும் தனிநபர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் எதிர்மாறான பாதைகளைக் குறிக்கின்றன. ஞானம் வாழ்வின் பாதையுடனும், புத்தியீனம் மரணத்தின் வழியுடனும் தொடர்புடையது.

ஞானம் என்பது பெரும்பாலும் நடைமுறை அறிவு அல்லது அந்த அறிவைத் திறமையாகப் பயன்படுத்துதல் என வரையறுக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம், சாலொமோனின் வார்த்தைகளை நினைவுகூர்வதன் மூலம் இதை ஒரு படி மேலே கொண்டு செல்ல வேண்டும்: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதிமொழிகள் 1:7 ). வேதாகமத்தின்படி, ஞானம் என்பது தேவனைப் பற்றிய அறிவை வாழ்க்கையில் பயன்படுத்துவதாகும், அல்லது வேறுவிதமாகக் கூறினால், ஞானம் என்பது தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான திறமையாகும்.

நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த திறமை நமக்கு தேவைப்படுகிறது. நமது வார்த்தைகள், உறவுகள், குடும்பம், வேலை, உணர்ச்சிகள், பாலியல், தலைமைத்துவம், குடியுரிமை, திட்டங்கள், வளங்களின் மேலாண்மை மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் நாம் ஞானம் கொண்டிருக்க வேண்டும். நமது அன்றாட வாழ்வில் ஞானம் தேவைப்படாத காரியம் எதுவும் இல்லை , ஏனெனில் தேவனுடைய கனத்திற்காகவும் மகிமைக்காகவும் எல்லாவற்றிலும் திறமையுடன் வாழ்வதே நமது நோக்கமாகும்.

ஆனால் ஞானத்தில் நாம் எப்படி வளர முடியும்? எந்தவொரு திறமையிலும் நாம் எப்படி வளர்கிறோம் என்பதைப் பற்றி சிந்திப்பது உதவியாக இருக்கும். நாம் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்யக் கற்றுக்கொள்ள விரும்பும்போது, அதற்குத் திட்டமிட்ட முயற்சி, வழிகாட்டுதல் மற்றும் செயல்படுத்துதல் தேவைப்படுகிறது. ஞானம் எனும் திறமையில் வளர்வதும் இதற்கு விதிவிலக்கல்ல.

திட்டமிட்ட முயற்சி

ஞானம் எனும் திறன் என்பது நாம் கேட்கும் ஒன்றாகவும், நாம் தேடும் ஒன்றாகவும் இருக்கிறது. இறுதியில், ஞானம் என்பது இயேசு கிறிஸ்துவில் நமக்கு அருளப்பட்ட ஒரு நன்மையாகும். அப்போஸ்தலனாகிய பவுல், இயேசுவுக்குள் “ஞானம் மற்றும் அறிவின் அனைத்து பொக்கிஷங்களும்” மறைந்திருப்பதாகக் கூறுகிறார் ( கொலோ. 2:3 ). பவுல் வேறொரு இடத்தில் கூறுவது போல, நம்முடைய கர்த்தர் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக அந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறார்; அவர் “தேவனிடமிருந்து நமக்கு ஞானமானார்” ( 1 கொரி. 1:30 ). தேவனுடைய குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட நாம், இயேசுவுக்குள் ஞானம் பெறுவோம் என்று வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளோம்; அதை கேட்பதற்கு நமக்குத் தைரியத்தையும், பூரணராகிய தேவன் கொடுப்பார் என்ற உறுதியையும் அளிக்கிறது ( யாக்கோபு 1:5 ). ஆனால் ஞானம் அருளப்படுவது, அதற்கான வழிகளிலிருந்து பிரிக்கப்பட்டதல்ல.

திட்டமிட்ட முயற்சியின் மூலமே ஞான வளர்ச்சி வருகிறது என்று வேதாகமமும் போதிக்கிறது. ஞானம் என்பது பிறவியிலேயே வரும் குணம் அல்ல; அது வயதாவதாலும் தானாக வந்துவிடுவதில்லை. மீண்டும், ஞானமுள்ள அரசன் நாம் அதைத் தேட வேண்டும் என்று வழிகாட்டுகிறான்:

அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், 
அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். 
(நீதிமொழிகள் 2:4-5).

கேட்பதாலும் தேடுவதாலும் நாம் ஞானத்தில் வளர்கிறோம்: “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்” ( மத்தேயு 7:7 ).

தேவனால் போதிக்கப்படுதல் 

ஒரு திறமையில் வளருவதென்பது எப்படி அதற்கான போதனைகளையும் ஆலோசனைகளையும் அவசியமாக்குகிறதோ அதேபோல்தான் ஞானத்திற்கும். நாம் ஞானத்தைப் பற்றி தேவனுடைய வார்த்தையிலிருந்தும் உலகத்திலிருந்தும் கற்றுக் கொள்கிறோம். 

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்: அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். 
நீதிமொழிகள் 2:6

ஞானம் என்பது பிறப்பிலேயே காணப்படும் குணம் அல்ல அல்லது தானாக வயதில் வரக்கூடியதும் அல்ல.

அநேக வழிமுறைகளில் ஆலோசனைகள் வேதத்திலிருந்து வருகிறது, ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஞானத்தில் போதிப்பதின் முக்கியத்துவத்தை வேதம் வலியுறுத்துகிறது. நீதிமொழிகளின் முதல் பகுதி ஒரு தந்தை தன் மகனுக்கு அறிவுரை கூறுவது போன்ற வடிவத்தில் அமைந்திருப்பதால், சாலொமோன் இதைத் தெளிவாக முன்மாதிரியாகக் காட்டுகிறார். அவர் கூறுகிறார்:

பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். 

நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்: என் உபதேசத்தை விடாதிருங்கள். 

நான் என் தகப்பனுக்கு பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். 

அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது: என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 

(நீதிமொழிகள் 4:1-4).

சிறுவயதிலிருந்தே இரட்சிப்புக்கு ஞானமுள்ளவராக்கக்கூடிய வேதவாக்கியங்களை அறிந்திருந்த தீமோத்தேயுவின் முன்மாதிரியால் நாமும் ஊக்கமடைகிறோம் ( 2 தீமோ. 3:15 ). அவருடைய தாயும் பாட்டியும் அவருக்கு அந்த ஞானத்தைக் கற்பித்தபோது, அவர் அவர்களுடைய போதனைகளைக் கவனமாகக் கேட்டிருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது ( 2 தீமோ. 1:5-ஐக் காண்க ).

படைப்பு என்பது தேவனுடைய ஞானத்தைப் பற்றி நமக்கு அறிவுறுத்தக்கூடிய ஒரு புத்தகமாகவும் இருக்கிறது. ஏனென்றால், படைப்பில் ஞானத்திற்கு ஒரு பங்கு இருந்தது, அதனால் ஞானத்தின் முத்திரை எல்லா இடங்களிலும் இருக்கிறது ( நீதிமொழிகள் 8:22–31 ). நினைவுகூரத்தக்க வகையில், நீதிமொழிகளின் இறுதியில் ஆகூரின் வார்த்தைகள் இவ்வாறு கூறுகின்றன:

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. 
நீதிமொழிகள் 30:24.

எறும்பு, கரடி, வெட்டுக்கிளி மற்றும் ஊர்வன ஆகியவற்றின் ஞானத்தை அவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார். படைப்பின் சிறிய மற்றும் முக்கியமற்ற பகுதிகள் கூட, திறமையான மற்றும் இறைபக்தியுள்ள வாழ்க்கைக்கான கொள்கைகளை நமக்கு அறிவுறுத்துகின்றன.

ஞானத்தை செயல்படுத்துதல்

ஒரு காரியத்தை செய்ய நாம் உறுதியுடன் இருந்தால் மட்டுமே அதை அடையவும் வலுப்படுத்தவும் முடியும். சாலமோன் கூறுகிறார்:

என் மகனே, என் போதகத்தை மறவாதே: உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. 
நீதிமொழிகள் 3:1.

இதனால்தான் ஞானமும் மதியீனமும் ஒரு பாதைக்கு ஒப்பிடப்படுகின்றன. 

ஒரு சாலையின் முழு நோக்கமே அதில் உங்கள் கால்களை வைத்து நடப்பதுதான். நாம் ஞானத்தில் வளர விரும்பினால், ஞானத்தைக் கேட்பவர்களாக மட்டுமல்லாமல், அதன்படி நடப்பவர்களாகவும் நாம் அதைப் பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நாம் மெதுவாக முன்னேறலாம், ஆனால் நமது வளர்ச்சி உறுதியானது.

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். 

துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப் போலிருக்கும்: தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள். 

நீதிமொழிகள் 4:18-19.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கைல் போர்க்

கைல் போர்க்

ரெவரெண்ட் கைல் போர்க், கேன்சஸ் மாகாணத்தின் வின்செஸ்டரில் உள்ள வின்செஸ்டர் சீர்திருத்த பிரஸ்பிடேரியன் தேவாலயத்தின் மூத்த போதகர் ஆவார். அவர் ' நம்பிக்கையின் இல்லம்' மற்றும் 'அன்பு என்றால் என்ன?' ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார்