What Do Christians Believe About Divine Revelation

தெய்வீக வெளிப்பாட்டைக் குறித்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன?

02-07-2026
What Do Christians Believe About Divine Revelation

தெய்வீக வெளிப்பாட்டைக் குறித்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன?

02-07-2026

பலதார மணம் பற்றி வேதம் கூறுவது என்ன?

What Does the Bible Say About Polygamy

தொடர்ச்சியாக வேதாகமத்தின் ஒழுக்கத்தன்மை பற்றி விமர்சகர்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள சில நடைமுறைகளை ஆதாரமாக சுட்டிக்காட்டுகின்றனர். அதில் ஒன்றுதான் பலதாரமணம். பழைய ஏற்பாட்டில் இது வெளிப்படையாகவே நடைமுறையில் காணப்பட்டது. ஆதியாகமம் 4:19 ல் இது ஆரம்பமாகிறது: “லாமேக்கு இரண்டு ஸ்தீரிகளை விவாகம்பண்ணினான். ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர்.” பின்பு, ஆபிராம் சாராயை திருமணம் செய்தான், ஆனால் சாராய் தனது கணவனான ஆபிராமுக்கு தன் எகிப்திய அடிமைப் பெண்ணாகிய ஆகாரை கொடுத்தாள். (ஆதி 16:3). யாக்கோபு நான்கு மனைவிகளைக் கொண்டான், இருவர் முறையான மனைவிகள், மற்ற இருவர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கென்று வைத்துக்கொள்ளப்பட்ட மறுமனையாட்டிகள். இருப்பினும், இந்த பலதாரமணமானது ஆதி பிதாக்களுடன் நின்றுவிடாமல், இஸ்ரவேல் வரலாற்றில் சில முக்கிய நபர்களான தாவீது, இன்னும் முக்கியமாக சாலமோன் உள்ளிட்ட நபர்களும் இதை நடப்பித்தனர் (1 இராஜா 11:3). பண்டைய அண்மைக் கிழக்கில் பலதார மணம் அசாதாரணமானதாக இருக்கவில்லை. இருப்பினும், பல மனைவிகளை மணப்பதால் உருவாகும் பெரிய குடும்பத்தைப் பராமரிக்கும் ஆணின் திறனைப் பொறுத்து அதன் வழக்கம் வரையறுக்கப்பட்டிருந்தது. ராஜாக்களைப் பொறுத்தவரை, இந்தத் திருமணங்கள் பெரும்பாலும் அரசியல் தன்மை கொண்டவையாக இருந்தன; அவை அடிப்படையில் ராஜ்ஜியங்களுக்கு இடையிலான உறவுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்தன. இஸ்ரவேலில் காணப்பட்ட இந்த வழக்கம், பண்டைய உலகின் பெரும்பகுதியில் காணப்பட்ட நடைமுறையைப் பிரதிபலித்தது. 

இந்த உண்மைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவதாக, பழைய ஏற்பாடு பலதார மணத்தை அங்கீகரிக்கிறதா? பழைய ஏற்பாட்டில் அநேக மனிதர்கள் பலதாரமணத்தை நடப்பித்தாலும், பண்டைய இஸ்ரவேலிலும் பண்டைய உலகத்திலும் இந்த பழக்கம் பொதுவாக இல்லை. இதற்கான செலவுகளை அநேக நபர்களால் செய்யமுடியாமல் இருந்தது. உதாரணமாக, ரூத் 4 ல் உள்ள மற்றொரு மீட்பரான அந்த நபர், ரூத்தை திருமணம் செய்வதால் தனது வளங்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதகம் ஏற்படும் என்றறிந்து அவளை திருமணம் செய்யவில்லை (ரூத் 4:6). எனவே பலதாரமணமானது ஒரு சதவீத நபர்கள் மட்டுமே நடப்பித்துள்ளனர். இதற்கான உதாரணங்களை பழைய ஏற்பாடு காண்பித்தாலும், ஒருபோதும் இந்த பழக்கத்தை வேதம் அங்கீகரிக்கவில்லை. 

நமது காலத்திற்கேற்ப எந்தெந்தப் பாவங்களைச் சபையில் நாம் சகித்துக்கொண்டிருக்கிறோம்?

இரண்டாவதாக, பலதார மணம் என்ற பழக்கத்தின் தவறான தன்மையைப் பற்றிப் பேசும் விதிமுறைகளோ அல்லது கோட்பாடுகளோ வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளனவா? முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் பலதார மணத்தின் ஆரம்ப உதாரணமான லாமேக், காயீனின் வம்சத்தில் தோன்றுகிறார். லாமேக்கின் வன்முறைக் கவிதையைக் கருத்தில் கொண்டால், அவர் உயர்ந்த ஒழுக்கப் பண்பு கொண்ட ஒருவருடன் தொடர்புடையவர் அல்ல. இரண்டாவதாக, ஆதாமிற்காக ஏவாளைப் படைத்தது, ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற கோட்பாட்டை திருமணத்திற்கான இலட்சியமாக அமைக்கிறது. விவாகரத்து என்ற கேள்வியை எதிர்கொண்டபோது இயேசு இந்தக் கோட்பாட்டையே பயன்படுத்தினார் ( மத்தேயு 19:3-6 ). மூன்றாவதாக, பழைய ஏற்பாட்டில் உள்ள பலதார மணங்களின் அனைத்து உதாரணங்களும் திருமணத்தில் பெரும் மோதலைக் காட்டுகின்றன. யாக்கோபின் அன்பைப் பெறுவதற்காக லேயாளுக்கும் ராகேலுக்கும் இடையே இருந்த போட்டியில் இதை ஆதியாகமம் 29-30- ல் நாம் காண்கிறோம் . யாக்கோபுக்குக் கூடுதல் பிள்ளைகளைப் பெறுவதற்காக பில்காளையும் சில்பாளையும் அறிமுகப்படுத்தியது, ராகேலுக்கும் லேயாளுக்கும் இடையிலான மோதலைத் தொடரச் செய்கிறது. நான்காவதாக, எல்கானாவின் திருமணத்தில் ( 1 சாமுவேல் 1 ), பெனின்னாள் அன்னாளின் போட்டியாளராகக் குறிப்பிடப்படுகிறாள் ( 1 சாமுவேல் 1:6 ). “போட்டியாளர்” என மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை, “எதிரியாகச் செயல்படுவது” என்று பொருள்படும் ஒரு வினைச்சொல் மூலத்திலிருந்து வருகிறது. இறுதியாக, லேவியராகமம் 18:18 கூறுகிறது, “அவளுடைய சகோதரி உயிரோடு இருக்கும்போதே, அவளுடைய நிர்வாணத்தை வெளிப்படுத்தி, அவளுக்குப் போட்டியான மனைவியாக ஒரு பெண்ணை நீ எடுத்துக்கொள்ளக்கூடாது.” நேரடிப் பொருளில், ஒரு ஆண், யாக்கோபு செய்தது போல ஒரு பெண்ணையும் அவளுடைய சகோதரியையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதை இது குறிக்கிறது. இருப்பினும், “சகோதரி” என்ற வார்த்தை, உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத மற்றொரு பெண்ணைக் குறிக்க உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது,  திருமணம் என்பது ஒருதார மணமாகவே இருக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படைக் கருத்தாக உள்ளது. 1 கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்தில் பவுல் திருமணத்தைக் கையாளும்போதும், ஒருதார மணம் பற்றியே பேசுகிறார். 1 தீமோத்தேயு 3 மற்றும் தீத்து 1-ஆம் அதிகாரங்களில் உள்ள திருச்சபை அதிகாரிகளுக்கான விதிமுறைகள், மூப்பர்கள் “ஒரே மனைவியுடைய புருஷராக” இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. திருச்சபையில் பலதார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு புதிய ஏற்பாட்டில் எந்த அறிகுறியும் இல்லை.

கடைசியாக கேள்வி என்னவென்றால், வேதாகமம், குறிப்பாக பழைய ஏற்பாடு, பலதார மணப் பழக்கத்தை ஏன் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை? அல்லது, இந்தக் கேள்வியை வேறு விதமாகக் கேட்டால், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் ஏன் பலதார மணத்தைப் பொறுத்துக்கொண்டார்? இறுதியில், நமக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால், இஸ்ரவேலைச் சுற்றியிருந்த கலாச்சாரத்தில் இயல்பாக இருந்த சில குறிப்பிட்ட பாவங்களை தேவன் தம் மக்களிடையே பொறுத்துக்கொண்டார் என்று தெரிகிறது. அடிமைத்தனம் விஷயத்திலும் இதையே கூறலாம். இருப்பினும், யாக்கோபையோ, தாவீதையோ, அல்லது சாலொமோனையோ அவர்களின் பலதார மணத்திற்காக தேவன் உடனடியாகத் தண்டிக்கவில்லை என்பது, நாமும் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கு ஒரு சாக்குப்போக்காகாது. பழைய ஏற்பாட்டில்கூட, ஒருதார மணத்தின் கோட்பாடுகள் தெளிவாக உள்ளன. ஆனால், இது நம்மை நாமே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளத் தூண்ட வேண்டும்: நம் காலத்தில் இயல்பாக இருக்கும் எந்தப் பாவங்களை நாம் திருச்சபையில் பொறுத்துக்கொள்கிறோம்? நம்முடைய சொந்த வாழ்க்கையில் தேவன் எந்தப் பாவங்களில் பொறுமையுடன் இருக்கிறார்? தாமதிக்காமல் அவற்றை நாம் புறந்தள்ளுவோம்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டாக்டர் பெஞ்சமின் ஷா

டாக்டர் பெஞ்சமின் ஷா

டாக்டர் பெஞ்சமின் ஷா, புளோரிடாவின் சான்ஃபோர்டில் உள்ள சீர்திருத்த வேதாகம கல்லூரியின் பழைய ஏற்பாட்டுப் பேராசிரியர் ஆவார். இவர் "பிரசங்கி: வீழ்ச்சியடைந்த உலகில் வாழ்க்கை" (Ecclesiastes: Life in a Fallen World) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.