உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?
12-09-2024குழந்தையின் பிறப்பை தீர்மானிக்கும் உரிமை என்றால் என்ன?
22-10-20243 வகையான சமயசட்ட ஒழுக்கவியல்
ஒரு கிறிஸ்தவராக நீங்கள் எப்பொழுதாவது ஒரு சமயசட்ட ஒழுக்கவியல் அடிப்படையில் (legalism) குற்றம் சாட்டப்பட்டதுண்டா?. இன்றைக்கு இருக்கக்கூடிய கிறிஸ்தவ கலாச்சாரத்தில் சமய ஒழுக்கவியல் என்ற வார்த்தை தவறான விதத்தில் பந்தாடப்பட்டு கொண்டிருக்கிறது. உதாரணமாக யோவான் என்றொரு மனிதனை சிலர் சமய சட்ட வாதியாக அழைக்கிறார்கள் (legalist) ஏனென்றால் அவன் குறுகியநோக்க சிந்தையை உடையவனாக அவர்களுடைய பார்வையில் இருப்பதால் தான். ஆனால் சமயசட்ட ஒழுக்கவியல் என்ற வார்த்தை குறுகியநோக்க சிந்தையை குறிக்கவில்லை. உண்மையாகவே, சமயசட்ட ஒழுக்கவியல் என்ற வார்த்தை நுட்பமான பல ஆழமான வழிகளைக் உள்ளடக்கியதாக இருக்கிறது.
அடிப்படையாக சமயசட்ட ஒழுக்கவியல் என்பது தேவனுடைய கட்டளைகளை, அதின் உண்மையான கொடுக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தனியாக வழிவிலக செய்வதாகும். சிலர் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கர்த்தருடைய பிரமாணங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்வதில் மிக தீவிரமாக இருக்கிறார்கள், அது மட்டுமல்லாது வாழ்வா சாவா என்பது போல் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று தங்களுக்கென ஒரு ஒழுக்க ரீதியாக கொள்கைகளை உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒரு வகையான சமயசட்ட வாதிகள், ஏனென்றால் இவர்கள் வெறுமனே தங்களுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்வது மட்டுமே போதும் என்று எண்ணி வாழ்கிறவர்கள்.
உண்மைதான் தேவன் அவருடைய கட்டளைகளை கைக்கொண்டு நாம் கீழ்படிய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இத்தோடு நாம் விட்டு விடாமல் இன்னும் நாம் சிந்திக்க வேண்டிய அனேக காரியங்களும் வேதத்தில் உண்டு. தேவன் முதலாவது இஸ்ரவேல் மக்களோடு உடன்படிக்கை செய்யும் போது அதற்கு அடையாளமாகவே பத்து கட்டளைகளை கொடுப்பதை பார்க்கிறோம். அதில் முதலாவதாக, தேவன் கிருபையுள்ளவர். அவர் தன்னுடைய கிருபையினால், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, அவர்கள் தம்முடைய சொந்த ஜனங்கள் மற்றும் தன்னுடைய நேசத்திற்குரியவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார். கிருபையினால் நிலைநிற்கும் அந்த உறவை ஸ்திரப்படுத்தும் படியாக மட்டுமே அதற்குப்பிறகு அவர் தமக்குப்பிரியமான தன்னுடைய பிரமாணங்களை அவர்களுக்கு
கொடுக்கிறதை பார்க்கிறோம். நான் பட்டம் பெற்ற கல்லூரியில் ஒரு பேராசிரியர் இவ்விதமாக என்னிடம் கூறுவார், “கிறிஸ்தவ இறையியலின் சாரம்சம் கிருபை, கிறிஸ்தவ கட்டளைகளின் சாரம்சம் நன்றியறிதல்”. ஆனால் சமய சட்டவாதிகள், தேவனுடைய கட்டளைகளை அதைதந்த தேவனை விட்டு தனியாக பிரித்து விடுகிறார்கள். அவர்கள் வெறுமெனே அவருடைய கட்டளைகளை கைக்கொள்ள விரும்புவதால், அதின் விளைவாக அவர்கள் தேவனுக்கு மெய்யாக கீழ்ப்படியவோ அல்லது கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும் என்கிற சிந்தனையோ, தேவனோடுள்ள இணக்கமான உறவோ இல்லாமல் இருக்கிறார்கள்.
அங்கே எந்த விதமான மெய்யான அன்புக்கோ, சந்தோஷத்துக்கோ, ஜீவனுள்ள உறவுக்கோ, உணர்வுகளுக்கோ இடமில்லை. மாறாக அவர்கள் அர்த்தமில்லாத, இயந்திரத்தனமாக கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, வெளிப்புறமாக மட்டும் தங்களை அலங்கரிக்கிறார்கள். சமய சட்டவாதிகள் கட்டளைகளை வெளிப்பிரகாரமாக கடைபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்களே ஒழிய, பிரதானமாக தேவனுடைய அன்பு மற்றும் அவருடைய மீட்பின் அடிப்படையில் அவர் கொடுத்த பிரமாணங்களின் நோக்கங்களை விட்டு விடுகிறார்கள்.
இரண்டாம் வகையான சமயசட்ட வாதிகளை பற்றி நாம் அறிய வேண்டுமானால், புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தினால் உண்டான பிரமாணத்துக்கும் ஆவியின் பிரமாணத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கு அறிய வேண்டும். இரண்டாம் வகையான சமயசட்ட வாதிகள் ஆவியின் பிரமாணத்திலிருந்து எழுத்தினால் உண்டான பிரமாணத்தை பிரிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தினால் உண்டான பிரமாணத்துக்கு கீழ்ப்படிய விரும்பியபோதிலும் ஆவியின் பிரமாணத்தை மீறுகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த இரண்டாம் சமயசட்டவாதிகள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள முதலாம் சட்ட வாதிகளிலிருந்து சற்று ஆழமான விதத்தில் வேறுபடுகிறார்கள்.
சமய சட்டவாதிகள், தேவனுடைய கட்டளைகளை அதைதந்த தேவனை விட்டு தனியாக பிரித்து விடுகிறார்கள்.
நமக்கு ஒரு கேள்வி எழலாம் எப்படி ஒரு மனிதன் எழுத்தின் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து ஆவியின் பிரமாணத்தை மீற முடியும் என்று. உதாரணமாக ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட சட்ட வரைவுகுட்பட்டு தேவைப்படும் வேகத்தில் தன்னுடைய காரை இயக்கிக் கொண்டிருக்கிறதாக வைத்துக் கொள்வோம். அவன் ஒரு பட்டணத்தில் இருந்து மற்றொரு பட்டணத்திற்கு செல்ல சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒருமணி நேரத்திற்கு 40 மைல் தூரம் என்ற வேகத்தில் கடந்துவிட முடியும் என்பதாக வைத்துக் கொள்வோம். ஆனால் பெருமழை பெய்து வெள்ளோட்டம் பாயும் பொழுதும் அதே வேகத்தில் அவன் சென்று கொண்டிருப்பானானால் அது மற்றவர்களுக்கு ஆபத்தாய் முடியும். ஏனெனில் மற்றவர்கள் நீரோட்டத்திற்கு ஏற்றார் போல் தாங்கள் மழையில் சறுக்கி எந்தவிதமான ஆபத்திலும் சிக்கிக் கொள்ளாதபடிக்கு வாகனத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 20 மைல் தூரமே செல்வார்கள். ஆனால் இதே விதமான சூழலிலேயும் அவன் ஒருமணி நேரத்திற்கு 40 மைல் தொலைவை கடக்க முற்படுவானாகில் மற்றவர்களுடைய பாதுகாப்பை குறித்து அக்கறை இல்லாமல் தன்னை மட்டுமே பிரியப்படுத்த பார்க்கிறான். அதுபோலவே சமயசட்ட வாதிகளும் சட்டபூர்வமான பார்வையில் குற்றமற்றவர்களாக இருந்தாலும், அவர்களுடைய கீழ்ப்படிதல் வெளிப்பிரகாரமானதும் தேவனுடைய பிரமாணத்தின் உண்மையான சாரம்சம் என்ன என்பதையும் அறியாதிருக்கிறான். இந்த இரண்டாம் வகையான சமயசட்ட வாதிகள் வெளிப்பிரகாரமாக கீழ்படிந்தாலும், இருதயத்திலோ தேவனுக்கு பிரியமாய், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கிறிஸ்துவை கணப்படுத்த விரும்புவதில்லை.
இந்த இரண்டாம் வகையான சமயசட்ட வாதிகளை குறித்து வேதத்தில் ஒரு பகுதியில் இருந்து ஒப்புமைப்படுத்தி பார்க்கலாம். உதாரணமாக நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் ஒரு மனிதனை சொஸ்தப்படுத்தினதினால் பரிசேயர் அவர் மேல் குற்றம் சாட்டுவதை பார்க்கலாம் (மத்.12:9-14). அவர்கள் நியாயப்பிரமாணத்தின் மேல் அக்கறை காட்டுவதைப் போல் காட்டிக்கொண்டு தங்கள் பார்வையில் வேலையாக தெரிகிற எல்லாவறையும் நிராகரித்தார்கள். இவர்கள் ஆவியின் பிரமாணத்தை விட்டு விட்டுவிட்டார்கள் எப்படியென்றால், தேவனின் ஓய்வுநாள் கட்டளையானது அனுதினமும் மனிதன் செய்கிற வாழ்வாதார வேலையைத்தான் தடைசெய்கிறதே ஒழிய, நோயுற்ற மனிதன் ஜீவன் பெரும்படியான சுகம் பெறுவதை அல்ல.
மூன்றாவது வகையான சமயசட்ட வாதிகள் யார் என்றால், தேவனுடைய நியாய பிரமாணத்தோடு தங்களுடைய சட்டங்களையும் சேர்த்து அதை தெய்வீக சட்டமாக எண்ணுபவர்கள். இவர்களே மிகவும் கொடிதான மோசமான சமய சட்டவாதிகள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேதத்தில் பரிசேயர்களை பார்த்து, “உங்கள் பாரம்பரியங்களை தேவனுடைய கட்டளைகளாக போதிக்கிறீர்கள்” என்று கடிந்து கொள்ளுகிறார். தேவன் தராத எந்தவிதமான வரையறைகளையும் , கட்டுப்பாட்டையும் நாம் மக்களின் தோள்மீது சுமத்துவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.
ஒவ்வொரு சபைகளும் தங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட வரையறையை வைத்திருக்கிறார்கள். உதாரணமாக ஒரு திருச்சபை தாங்கள் ஐக்கியமாக கூடிவரும் ஒரு இடத்தில் குளிர் பானங்களை வைப்பதை பற்றி வேதாகமம் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அதை பயன்படுத்துவதற்கு அந்த சபைக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. ஆனால் இவ்விதமான மனித கோட்பாடுகளை வைத்து ஆத்துமாக்களுடைய இரட்சிப்புக்கு நேரடியாக ஊறு விளைவிக்கும்படியான காரியங்களை செய்தால், நாம் தேவ இராஜ்ஜியத்திற்கு எதிராக துணிகரமாக பாவம் செய்கிறவர்களாக காணப்படுவோம்.
கிறிஸ்தவத்தின் அடிப்படை சாராம்சம் சரியான கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதுதான் என்றும், அது வேதத்திற்கு வெளியில் இருந்தாலும் கீழ்படிய வேண்டுமென்று என்று அநேகர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக நாம் எங்கும் நம்முடைய இரவு உணவோடு கூட கொஞ்சம் திராட்சரசம் குடிக்க கூடாது என்றோ அல்லது நாம் சீட்டு விளையாட கூடாது என்றோ வேதத்தில் நமக்கு எந்த வரையறையையும் சொல்லவில்லை. இவ்விதமான காரியங்களை குறித்த தர்க்கங்களை நாம் கிறிஸ்தவத்தின் அடிப்படை சட்டங்களாக எண்ணக்கூடாது. ஏனெனில் இவ்விதமான காரியங்கள் சுவிசேஷத்தை புரட்டி ஆவிக்குரிய கனிகளை கொடுப்பதற்கு பதிலாக மனித கோட்பாடுகளை பின்பற்றுவதுபோல் ஆகிவிடும். இந்தவித அர்த்தமற்ற மனித கோட்பாடுகள் அடிப்படையில் கிறிஸ்துவை தூஷணத்திற்குள்ளாக்கி, மிகப்பெரிய அழிவை உண்டு பண்ண கூடும். தேவன் எங்கே நமக்கு ஆவிக்குரிய சுதந்திரத்தை கொடுத்திருக்கிறாரோ அங்கே நாம் கட்டுப்பாடுகளை விதித்து மனிதனை அடிமையாக்க கூடாது. இந்த விதமான சமயசட்ட வாதத்திற்கு எதிராக நாம் ஜாக்கிரதையாக போராட வேண்டும்.
சுவிசேஷம் மனிதர்களை மனந்திரும்புதலுக்கும் பரிசுத்தத்திற்கும் தேவ பக்திக்கும் நேராக அழைக்கிறது. இதினாலே உலகத்திற்கு சுவிசேஷம் பைத்தியமாய் இருக்கிறது. இந்த மகிமையான சுவிசேஷத்தோடு கூட நாமும் தேவையற்ற இந்தவிதமான சமயசட்டவாத தடங்கல்களை கொண்டு வந்து, கிறிஸ்தவத்தின் அடிப்படை சாரம்சத்தை மாற்றுவோமானால் நமக்கு ஐயோ!. ஏனெனில் கிறிஸ்தவம் ஒழுக்க கட்டளைகள், நீதிகள், நியாயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதை நாம் வேத வெளிச்சத்தில் ஜாக்கிரதையாக கையாளாவிட்டால் அன்போடு கூடிய தேவபக்தியோடு வாழும் வாழ்க்கையை விட்டுவிட்டு தந்திரமான முறையில் மேலே குறிப்பிட்ட சமயசட்ட வாதிகளாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது.