
தேவனின் சுய வெளிப்பாடு
23-10-2025
அன்பின் பிணைப்பு
30-10-2025பிளவுபட்ட நமது இருதயத்திற்கான மருந்து
காரா டீடர்ட்
The Cure for Our Divided Hearts (Kara Dedert)
ஒரு வயதான பெற்றோர் அல்லது நண்பர் இறக்கும்போது, அவர்கள் நன்றாக இந்த உலகத்தைவிட்டு விடைபெற்று சென்றனரா என்ற கேள்வியை அக்குடும்பத்தினரிடம் நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இறக்கும் தருவாயில் அவர்கள் பேசின கடைசி வார்த்தைகள் மிகவும் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன; அது இறுதி விடைபெறுதலாக மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைக்க வேண்டிய ஞானமுள்ள மற்றும் அன்புக்குரிய வார்த்தைகளாக எண்ணப்படுகிறது.
வேதாகமம் அத்தகைய ஒரு விடைபெறுதலை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது— அது, மரித்துக்கொண்டிருந்த ஒரு ராஜாவிற்கும், வளர்ந்து வருகிற அவரது மகனுக்கும் இடையேயான இறுதித் தருணங்கள்: தாவீதுக்கும் சாலொமோனுக்கும் நடைபெற்ற இறுதி உரையாடல். தாவீது இராஜ்ஜியத்தில் ஆட்சி செய்வதற்கான நடைமுறை ஆலோசனைகளை சாலொமோனுக்கு
பகிர்ந்த பிறகு, தாவீது தனிப்பட்ட முறையில் இங்கு இடைப்படுகிறார். வயதான தகப்பனாகிய தாவீது, சாலொமோனின் கண்களைப் பார்த்து, அவன் அருகே நெருங்கிச் சென்று, “என் குமாரனாகிய சாலமோனே நீ உன் பிதாவின் தேவனை அறிந்து அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி” (1 நாளாகமம் 28:9) என்று கூறுகிறார்.
இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள “உத்தம” (Whole) என்ற வார்த்தை “முழுமையான” அல்லது “நிறைவான” என்று பொருள்படும். இது, “பகுதியான” என்ற வார்த்தைக்கு எதிரானது. பகுதி என்பது, ஏதோ ஒன்றை செயல்படுத்தாமல் நிறுத்தி வைப்பது அல்லது பிளவுபட்டிருப்பதைக் குறிக்கிறது. தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று அழைக்கப்பட்டான் (அப். 13:22); ஆனால், தன் வாழ்க்கையின் சில பகுதிகளைத் தேவனுக்கு முழுவதுமாக அர்ப்பணிக்காமல், தன்னிடமே வைத்துக் கொள்ளும் தன்னுடைய இருதயத்தின் கேட்டுக்கு இழுக்கும் வலிமையை அவன் அறிந்திருந்தான். அதனால், அவன் “உமது நாமத்திற்குப் பயப்படும்படிக்கு என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” (சங்கீதம் 86:11) என்று தேவனிடம் மன்றாடினான்.
தேவனைவிட நாம் நம்மையே சிறப்பாக நேசிக்க முடியும் என்று நாம் எப்போதெல்லாம் நம்புகிறோமோ, அப்போதெல்லாம், நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை “இது என்னுடையது” என்று வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாத எண்ணத்தோடு தேவனிடமிருந்து நம்மை பிரித்து வைக்கிறோம். சாலொமோன் ஞானமும், பலமும் நிறைந்த ஒரு பலத்த ராஜாவானான். ஆனால், தன் இருதயத்தின் ஆசைகளைத் திருப்திப்படுத்த தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு அப்பால் தேட ஆரம்பித்தான். அது முதலில், தேவனிடத்தில் அடைக்கலம் தேடுவதற்குப் பதிலாக, பெண்களிடத்தில் அடைக்கலம் தேடுவதிலிருந்து ஆரம்பமானது. பின்பு அது, விக்கிரகாராதனைக்கு நேராக வழிவகுத்தது. அதனால் தேவனுடைய மகிமையை அவனால் பிரதிபலிக்க கூடாமல் போயிற்று, மேலும் ராஜ்ஜியம் பிளவுபட்டு பேரழிவை உண்டாக்கக்கூடிய கனிகளை தந்தது.
நாமோ இரட்சிப்பின் தலைக்கவசத்தைத் நம்முடைய சிரசிலே அணிந்து, கிறிஸ்துவின் நீதியென்னும் அங்கியை உடுத்திக்கொண்டிருந்தாலும், பிளவுபட்ட இருதயத்தினால் உருவான நிழலின் கீழ் வாழ்ந்து நம்மை தேற்றிக்கொள்ள முடியும் என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். கிறிஸ்துவின் இரட்சிப்பு மிகவும் முழுமையானது மற்றும் உறுதியானது; அதை நரகம்கூட அசைக்க முடியாது. ஆனால், நம்மிலுள்ள பிளவுபட்ட இருதயம் அவருடைய இரட்சிப்பில் உள்ள சமாதானம், பலன் மற்றும் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பறித்துவிடுகிறது. அது நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை மங்கச் செய்கிறது, சிலுவையின் மகிமையைப் புறக்கணிக்கச் செய்கிறது, மேலும் நம் வாழ்வில் இருந்து மற்றவர்களுக்குப் வழிந்தோட வேண்டிய நன்மைகளுக்கு தடைக்கல்லாய் அமைகிறது.
கிறிஸ்துவே பிளவுபட்ட இருதயத்துக்கு மருந்து
தாவீது மற்றும் சாலொமோனின் வாழ்க்கை முறைகளில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. சாலொமோனின் வாழ்க்கை பாவ சமரசத்தில் ஆழமாக மூழ்கியிருக்க, தாவீதோ உண்மையான மனந்திரும்புதலுடன் தேவன் தன்னை மீட்க தயாராக இருப்பதை உணர்ந்தவராக இவ்வாறு எழுதுகிறார். “ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். ” (சங்கீதம் 86:15). இதில் நமக்கும் தெரிந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது—ஒன்று நாம் நம்முடைய பிளவுபட்ட இருதயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது மறைக்கலாம், இரண்டாவது, நாம் அவற்றைக் கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்து, மனந்திரும்பி, அவருடைய வாக்குத்தத்தங்களை மீண்டுமாக பற்றிக்கொள்ளலாம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவருடைய முழு இருதயத்தோடும் நம்மில் அன்பு கூறுவதினால், நாம் நம்முடைய பிளவுபட்ட இருதயங்களுடன் அவரிடம் வர முடியும் என்கிறார். அதன் மூலமாக நம்முடைய முழு இருதயத்தையும் அவருக்கு அர்ப்பணிக்க முடியும். அவருடைய இருதயம் ஒருபோதும் இரண்டாக பிரிவதில்லை —நாம் நம்முடைய பாவங்களில் மரித்திருந்தபோது, அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்தார்; நாம் அவருக்கு சத்துருக்களாயிருந்தபோது, அவர் தம்மோடு நம்மை ஒப்புரவாக்கி, நம்மை சிநேகிதர் என்று அழைத்தார். எவ்வளவு ஆச்சரியமான கிருபை! நம்முடைய வாழ்க்கையின் மீதான தேவனுடைய நோக்கம், நாம் கற்பனை செய்யக்கூடிய அல்லது நமக்காக நாமே உருவாக்கிக்கொள்ளக்கூடிய எந்தவொரு பிரம்மாண்டமான காரியத்தை விட, மகிழ்ச்சியையும் விட மிகப்பெரியது. நாம் தேவனை நோக்கிப் பார்த்து, அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கும் போது, நம்முடைய வாழ்க்கையானது அவருடைய மகிமையினாலும், நோக்கத்தினாலும், அன்பினாலும் மிகுந்த வெளிச்சத்துடன் பிரகாசிக்கும். ஆமென்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


