
பலதார மணம் பற்றி வேதம் கூறுவது என்ன?
07-07-2026நான் இறையியல் கல்லூரிக்கு செல்ல வேண்டுமா?
நான் சந்திக்கும் மாணவர்களில் பலர், “நான் இறையியல் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டுமா?” என்ற கேள்வியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இக்கேள்விக்கான பதிலை தேடும் ஒரு திசையில் செல்கிறார்கள். அவர்கள் இறையியல் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரா அல்லது என்னுடைய வாழ்க்கையில் வேறு ஏதேனும் செய்ய விரும்புகிறாரா? என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். மற்றவர்களோ, பட்டம் பெறுவதற்குத் தேவையான பொருளாதாரத்தை இழக்கும் அளவிற்கு இறையியல் கல்லூரி தகுதியானதுதானா என்று சிந்திக்கிறார்கள். அவர்கள் செய்யும் முதலீட்டிற்கு ஏற்ற லாபத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட பொதுவான கேள்விகளை கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள். அதாவது “இறையியல் கல்லூரி எனக்கு என்ன நன்மையை செய்யும்? இதிலிருந்து நான் எதை பெற்றுக் கொள்ளப் போகிறேன்?” என்று கேட்கிறார்கள்.
இந்தச் சிறிய கட்டுரையில், முதல் வகையைச் சேர்ந்த மாணவர்களிடம், அதாவது இறையியல் கல்லூரி செல்வதைக் குறித்து தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதில் போராடிக்கொண்டிருப்பவர்களிடம் பேசப் போகிறேன். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த கட்டுரையில் பதிலளிக்கிறேன். எனவே, நான் இறையியல் கல்லூரிக்கு செல்ல வேண்டுமா என்று கேட்டுக்கொண்டிருப்பவர்களிடம் நேரடியாகப் பேசுவதே என் நோக்கமாகும். நீங்கள் ஒருவேளை என்னை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருந்தால், நான் கூறும் ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும்.
முதலாவது, உங்கள் விருப்பங்களைச் சிந்தித்துப் பார்க்க நான் உங்களை தூண்டுகிறேன். உங்களுக்கு இறையியல் கல்லூரிக்குச் செல்ல விருப்பமா? வேதாகமம், இறையியல் மற்றும் திருச்சபையின் வரலாறு குறித்துப் படிக்கவும், உங்கள் வேதஅறிவை வளர்த்துக்கொள்ளவும் உங்களுக்கு ஆழமான ஆர்வம் உள்ளதா? உங்கள் வாழ்நாள் முழுவதையும் வேத விசுவாசத்தின் காரியங்களைப் போதிப்பதிலும் அல்லது அதைப்பற்றி எழுதுவதிலும் காலத்தை செலவிட நீங்கள் விரும்புகிறீர்களா? கிறிஸ்தவ வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளிலும் தேவனுடைய ஜனங்களை மேய்க்கவும், அவர்கள் “மரண இருளின் பள்ளத்தாக்கில்” (சங்கீதம் 23:4) நடக்கும்போது அவர்களுடன் துணையாகச் செல்லவும் நீங்கள் ஆவலுடன் இருக்கிறீர்களா?
பல ஆண்டுகளுக்கு முன்பு, இதேப்போல நான் எதை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்ற கேள்வியை குறித்து நான் போராடிக் கொண்டிருந்தபோது, நான் என்னையே கேட்டுக்கொண்ட சில கேள்விகள் இவைகளே, ஒருநாள் காலையில் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது, எனது வாழ்நாள் முழுவதையும் தேவனுடைய வார்த்தையைப் படிக்கவும், அதைத் தேவனுடைய ஜனங்களுக்குப் போதிக்கவும் செலவிட விரும்புகிறேன் என்பதை நான் உணர்ந்தேன். உங்களுக்கும் அதே போன்ற விருப்பங்கள் இருந்தால், நீங்கள் இறையியல கல்லூரிக்கு செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிவதற்கு இத்தகைய விருப்பங்கள் உங்களிடத்தில் காணப்பட வேண்டியது மிகவும் அவசியமான முதல் படியாகும்.
ஆனால், உங்கள் விருப்பங்களைப் பற்றி உங்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றால் என்ன செய்வது? அப்படியானால், ஒரு இறையியல் வகுப்பில் சேர்ந்து உங்களுக்கு அது பிடித்திக்கிறதா என்பதை சோதித்து பாருங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். முடிந்தால், நேரில் சென்று, தகுதிக்கான இறையியல் வகுப்பைப் படியுங்கள். இது ஒரு மாணவராக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும், அந்தப் படிப்பை முடிக்க என்ன தேவை என்பதையும் உங்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டக்கூடும். கொடுக்கப்பட்ட வாசிப்பு பகுதிகள் மற்றும் அதைக் குறித்து ஆராய்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா? அதை குறித்து விரிவாகபடிக்க உந்தப்படுகிறீர்களா? வகுப்பில் நடத்தப்படும் பாடங்களைப் பற்றி உங்கள் வகுப்புத் தோழர்கள் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விவாதிக்கும்போது நீங்கள் உற்சாகமடைகிறீர்களா? மிக முக்கியமாக, மேற்கண்டவைகளின் விளைவாக தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆர்வத்தினால் தூண்டப்படுகிறீர்களா?
இரண்டாவதாக, விசுவாசத்தில் உங்களை நன்கு அறிந்தவர்களிடம் நீங்கள் இதைக் குறித்து பேச வேண்டும் என்று
நான் உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களைக் குறித்து அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது என்பதை கேட்டு அறியுங்கள். வேதாகமத்தைப் படிக்கவும் போதிக்கவும் உங்களுக்கு விருப்பம் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்களா? தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும், நடைமுறைப்படுத்தவும், மற்றவர்களுக்குப் புரிய வைக்கவும் உங்களுக்குத் தனித்துவமான திறமை இருப்பதாக அவர்கள் கவனித்திருக்கிறார்களா? கடினமான வேதாகமப் பகுதிகளை எளிதாகப் புரியவைக்கும் வரம் உங்களிடம் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்களா? தேவனுடைய ஜனங்களிடம் உங்களுக்கு இருக்கும் மென்மையான குணத்தை அவர்கள் கண்டிருக்கிறார்களா?
என்னுடைய வாழ்க்கை பயணத்தில் இவைகள் எனக்கு மிகவும் பேருதவியாக காணப்பட்டன. எனது மனைவியும், நெருங்கிய நண்பர்களும் நான் இறையியல் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினர். நான் ஞாயிறு பள்ளி அல்லது வேதாகம பாடங்களை நடத்தும்போதெல்லாம், மக்கள் என்னிடம் வந்து இறையியல் கல்லூரிக்கு செல்லும்படி அடிக்கடி என்னை உற்சாகப்படுத்தினர். இந்தக் காரியங்களில் என்னுடைய போதகருக்கும் முக்கிய பங்குண்டு. இப்படிப்பட்ட திரளான சாட்சிகள், நான் ஏற்கனவே எனக்குள் கொண்டிருந்த எண்ணத்தை உறுதிப்படுத்தியது. இறையியல் கல்லூரி செல்வதற்காக, ஏற்கனவே இருந்த நல்ல வருமானம் மற்றும் எதிர்காலம் கொண்ட வேலையை விட்டு விடும்படி துணிந்ததை பற்றிய என்னுடைய எண்ணம் பைத்தியக்காரத்தனமானது அல்ல என்பதை அறிந்துகொள்ள இவைகள் எனக்கு உதவியது.
இறையியல் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்குள் இருந்து, உங்களுக்கு நெருக்கமானவர்களும் உங்களை அந்தத் திசையில் செல்லும்படி உங்களை உற்சாகப்படுத்தினால், நீங்கள் அந்தப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். நீங்கள் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பே எல்லாவற்றையும் திட்டமிட்டு முடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் உங்கள் எல்லா குழப்பமான கேள்விகளுக்கும் தேவன் பதிலளிப்பார். உங்கள் இறையியல் வகுப்புகள், வகுப்பில் உள்ள நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களை அதற்காக அவர் பயன்படுத்துவார். நீங்கள் அதை தொடங்குவதற்கு முன்னமே ஒவ்வொரு விவரங்களையும் முழுமையாக அறிய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் போது தேவன் உங்களுக்கான எல்லாவற்றையும் செய்வார். ஜெபம் செய்யுங்கள், விசுவாசத்துடன் அடியெடுத்து வையுங்கள். சங்கீதக்காரனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “உன் வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்” (சங்கீதம் 81:10) என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். அவருடைய வார்த்தையை அப்படியே நம்புங்கள். தரிசித்து நடவாமல், விசுவாசத்துடன் நடவுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, நம்முடைய மகத்துவமான தேவனும் மகாராஜாவுமானவர், அவருடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக, வருகிற அநேக ஆண்டுகளுக்கு உங்களை வல்லமையால் பயன்படுத்த வேண்டும் என்று நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


