Stephen-Nichols-How-Did-Martin-Luther-Die
மார்ட்டின் லூத்தர் எவ்வாறு மரித்தார்?
25-01-2025
3 Things You Should Know about Exodus
யாத்திராகமம் புத்தகத்தை பற்றி நீங்கள் அறிய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்.
29-01-2025
Stephen-Nichols-How-Did-Martin-Luther-Die
மார்ட்டின் லூத்தர் எவ்வாறு மரித்தார்?
25-01-2025
3 Things You Should Know about Exodus
யாத்திராகமம் புத்தகத்தை பற்றி நீங்கள் அறிய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்.
29-01-2025

ஜான் கால்வினின் சபையின் சீர்திருத்தத்தின் அவசியம்

John-Calvin-on-the-Necessity-for-Reforming-the-Church

சுமார் 450 வருடங்களுக்கு முன்பு திருச்சபை சீர்திருத்தத்தின் தன்மையைக்குறித்தும் அதன் அவசியத்தைக்குறித்தும் எழுதுவதற்கான வேண்டுதல் ஜான் கால்வினிடம் வந்தது. இந்த காலகட்டம் கால்வினின் மற்ற எழுத்துக்களுக்கு உத்வேகம் அளித்த சூழ்நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும், சீர்திருத்தத்தை பாதுகாப்பதை பற்றிய அவரின் மற்ற பரிமாணங்களையும் காண நமக்கு உதவுகிறது. பேரரசர் சார்லஸ் V, 1544 ல் ஸ்பேயர் நகரத்தில் சந்திக்க புனித ரோமானிய பேரரசின் குழுவை அழைத்தார். ஸ்ட்ராஸ்பர்க்கின் சிறந்த சீர்திருத்தவாதியான மார்ட்டின் புசர், சீர்திருத்தத்தின் கோட்பாடுகள் மற்றும் அதன் அவசியத்தின் அறிக்கையை உருவாக்குமாறு கால்வினிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் முடிவு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. கால்வினின் நண்பரான தியோடர் பெசா, கால்வினின் “சபையின் சீர்திருத்தத்தின் அவசியம்” என்பதே தனது காலத்தில் மிகவும் வலிமைவாய்ந்த எழுத்துக்களாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

இந்த புத்தகத்தை (The Necessity for Reforming the Church) கால்வின் மூன்று பெரும் பகுதிகளாக பிரித்து வடிவமைக்கிறார். முதல் பிரிவு சீர்திருத்தம் தேவைப்படும் சபைகளில் உள்ள “தவறான கொள்கைகளை” பற்றி உள்ளது. இரண்டாம் பிரிவு அந்த தவறான கொள்கைகளுக்கான “குறிப்பிட்ட தீர்வுகள்” பற்றி பேசுகிறது. மூன்றாவது பிரிவு சீர்திருத்தத்தை ஏன் தள்ளிப்போடமுடியாது என்பதைப் பற்றியும் மாறாக அச்சூழ்நிலையில் உடனடியான கொள்கை திருத்தத்தின் அவசியத்தை பற்றியும் பேசுகிறது.

இந்த மூன்று பிரிவுகளில் ஒவ்வொன்றிலும்,கால்வினால் திருச்சபையின் ஆத்துமா மற்றும் சரீரம் என்று அழைக்கப்படும் நான்கு தலைப்புகளில் அவர் கவனம் செலுத்துகிறார். ஆராதனையும், இரட்சிப்பும் திருச்சபையின் ஆத்துமா என்றால், திருநியமங்களும் சபை அமைப்பும் திருச்சபையின் சரீரமாகும். கால்வினின் சீர்திருத்தத்தின் அவசியத்திற்கான மிகப்பெரிய காரணம் இந்த நான்கு தலைப்புகளிலும் உள்ளது. தவறான கொள்கைகள், அதற்கான தீர்வுகள், உடனடி சீர்படுத்தும் செயல்களுக்கான அவசியம் ஆகிய அனைத்தும் ஆராதனை, இரட்சிப்பு, திருநியமங்கள் மற்றும் சபை அமைப்போடு தொடர்புடையதாக உள்ளது. 

சீர்திருத்தத்தின் காரணம் மேற்சொன்ன இந்த நான்கு தலைப்புகளிலும் மையம் கொண்டுள்ளது. இந்த நான்கு தலைப்புகளிலும் உள்ள தாக்குதல்களுக்கு கால்வின் பதிலளிக்காமல் மாறாக இந்த தலைப்புகளை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக கருதினார் என்பதை நாம் நினைவுகூறும் பொழுது இந்த சத்தியங்களின் முக்கியத்துவம் சிறப்பிக்கப்படுகிறது. முறையான ஆராதனையே கால்வினின் முக்கிய நோக்கமாக இருந்தது‌.

ஆராதனை

ஆராதனையின் முக்கியத்துவத்தை குறித்து கால்வின் முதலாவது குறிப்பிடுகிறார். காரணம் மனிதன் தேவ ஞானத்தின்படி அல்லாமல் தங்கள் சுய ஞானத்தின் படி மிக எளிதாக தேவனை ஆராதிக்க விரும்புகிறார்கள். ஆராதனை என்பது தேவனுடைய வேதத்தின் படிதான் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்:

“தேவன் தனது வார்த்தையினால் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படாத அனைத்து ஆராதனை முறைமைகளையும் நிராகரிக்கிறார் என்பதை இவ்வுலகத்திற்கு கூறுவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். அவர்களின் எலும்பு மஜ்ஜை போலவே அவர்களை பற்றிக்கொண்டிருக்கும் எதிர் நம்பிக்கை என்னவென்றால், அவர்கள் எதை செய்தாலும் அது தேவனின் மகிமைக்கான வைராக்கியத்தை காட்டுவதற்கு தங்களில் தாங்களே போதுமான உரிமையை கொண்டுள்ளதாக வாதிடுகிறார்கள். ஆனால் தேவன் இவ்விதமான ஆராதனையை பிரயோஜனமற்றதாக மட்டும் கருதாமல், அதை வெறுக்கிறார். அவருடைய வார்த்தைக்கு முரணாக அவரை ஆராதிப்பதற்கு நாம் எவ்வித வைராக்கியத்தை காண்பித்தாலும் அது வேதத்துக்கு நேர்மாறாக இருக்கிறபடியால் அதினால் நமக்கு பிரயோஜனம் என்ன? “பலியைக்காட்டிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” வேதம் தெளிவாக சொல்கிறதல்லவா!”

இந்த உறுதியான நம்பிக்கையே சீர்திருத்தம் தேவைப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்:

“வேதத்ததினால் முறைப்படுத்தப்படாத எவ்வித புதிய ஆராதனை முறைகளையும் தேவன் தடைசெய்கிறார் என்பதை வேதம் அநேக இடங்களில் கற்ப்பிக்கிறது. இவ்விதமான மனித ஞானத்தை சார்ந்த புதிய ஆராதனை முறைமைகள் மூலம் தேவன் மிகவும் துக்கப்பட்டவராகவும், அதன் மீது கோபமுற்று தண்டிக்கிறவருமாயிருக்கிறபடியினால், நாம் ஏற்படுத்தியிருக்கும் இந்த சீர்திருத்தம் ஓர் வலுவான அவசியத்தை கொண்டுள்ளது.”

தேவனுடைய வேதத்தின் அளவீட்டின்படி, ரோமன் கத்தோலிக்க ஆராதனை முறைமையானது “ இன்றைய நாட்களில் பொதுவாக அனுசரிக்கப்படும் எல்லா ஆராதனை முறைமைகளும் சீர்கேட்டை தவிர வேறொன்றுமில்லை.” என்று கால்வின் முடிவு செய்கிறார். 

கால்வினுக்கு, இடைக்கால திருச்சபைகளில் (mediaeval Church) உள்ள ஆராதனை, முற்றிலும் “விக்கிரகாரதனை”யாகவே மாறிவிட்டதாக இருந்தது. கிரியைகள் மூலம் நீதிமானாக்கப்படமுடியும் என்ற மிக தீவிரமான தவறான கோட்பாட்டைப்போலவே விக்கிரகாராதனையும் கால்வினுக்கு இருந்தது. இவை இரண்டுமே, தேவனின் வெளிப்பாடாகிய பரிசுத்த வேதாகமத்துக்கு மாற்றாக வைக்கப்பட்ட மனித ஞானமாகவே காணப்பட்டது. இவை இரண்டுமே, தேவனை பிரியப்படுத்தி அவருக்கு கீழ்ப்படிவதைக்காட்டிலும் மனிதனின் விருப்பங்களை தழுவிக்கொடுக்கும் அலட்சியங்களாகவே உள்ளன. கால்வின், ஆராதனையில் விக்கிரகாரதனை செய்பவர்களுடன் எவ்வித ஐக்கியமும் இருக்கமுடியாது என்கிறார்:

“ஒருவேளை நீங்கள் இவ்வாறு கூறலாம்: தீர்க்கதரிசிகளுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் பொல்லாத ஆசாரியர்களோடு கோட்பாட்டில் கருத்து வேறுபாடு இருந்தாலும், பலிகளிலும், ஜெபங்களிலும் அவர்களோடு ஐக்கியத்தில் இருந்தார்களே என்று. அவர்கள் விக்கிரகாரதனையில் கட்டாயப்படுத்தப்படவில்லையென்றால், இவ்வாறு ஐக்கியத்தில் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பெத்தெலில் எப்போதாவது பலி செலுத்தின தீர்க்கதரிசிகளில் யாரைப் பற்றி நாம் படிக்கிறோம்?.

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளை போன்றே சீர்திருத்தவாதிகளும் அவர்களின் காலத்தின் உருவ வழிபாடு மற்றும் ஆராதனையின் வெளிப்புற கவர்ச்சியை எதிர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஜெனிவா ஆலயத்தில் காணப்பட்ட தேவபயமுள்ள வேதத்தின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்ட ஆராதனை முறையே கால்வினின் நாட்களில் உள்ள சபைகளின் சீர்கேடான வெளிப்புற அலங்கார முறைமைக்கு எதிர்ப்பு மருந்தாக அமைந்தது. இவ்வித எளிமையான ஆராதனையானது, ஆராதிப்பவர்களை சரீரத்தைப்போலவே இருதயத்தையும் கொடுப்பதற்கு உற்சாகப்படுத்தியது:

இருதயத்தையும் மனதையும் கொடுப்பது ஆராதிப்பவர்களின் கடமையாக இருக்கும்போது, தேவனை ஆராதிப்பதற்கு முற்றிலும் வேற்றுமையான முறைமைகளை கண்டுபிடிப்பதில் மனிதர்கள் எப்போதும் விரும்புகிறார்கள். மனதை தங்களுக்குள் வைத்துக்கொண்டு, ஒரு சில சரீர அனுசரிப்புகளின் மூலம் ஆராதனை செய்வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

நீதிமானாக்கப்படுதல்

அடுத்ததாக, நீதிமானக்கப்படுதல் என்ற சத்தியத்திற்கு கால்வின் செல்கிறார். இந்த சத்தியத்தின் மீதான தவறான கொள்கைகளை பற்றிய கருத்து வேறுபாடுகள் மிகவும் கடுமையானதாக இருந்தன என்று கால்வின் இங்கு குறிப்பிடுகிறரார்:

நீதிமானாக்கப்படுதலில் நாம் அதை விசுவாசத்தினாலா அல்லது கிரியையினால் பெறுகிறோமா என்கிற வாதத்தில் நமது எதிரிகள் அக்கறைக்காட்டுவதை விட வேறெதிலும் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

இந்த சத்தியத்தின் அடிப்படையில் தான் “சபையின் பாதுகாப்பு” அமைந்திருக்கிறது. காரணம், இந்த கோட்பாட்டின் காரணமாகவே திருச்சபை மிகவும் காயப்படுத்தப்பட்டு அழிவின் விளிம்பிற்கு கொண்டு வரப்பட்டது.

விசுவாசத்தினால் நீதிமானக்கப்படுதலை குறித்து கால்வின் கூறுகையில்:

மனிதனின் கிரியைகள் எதுவாக இருப்பினும் அவன் இலவசமான இரக்கத்தினால் மட்டுமே நீதிமானென்று எண்ணப்படுகிறான். ஏனெனில், தேவன் மனிதனின் எவ்வித கிரியைகளையும் நோக்கமால், கிறிஸ்துவின் நீதியை அவனது நீதியாக கருதி அவன்மீது செலுத்துவதின்மூலமாய் கிறிஸ்துவுக்குள் புத்திரசுவிகாரத்தை அளித்து அவனை தனது பிள்ளையாக மாற்றுகிறார்.

இந்த சத்தியம் கிறிஸ்தவனின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டுள்ளது:

ஒரு மனிதனின் ஏழ்மை மற்றும் இயலாமையை அவனுக்கு உணர்த்துவதின்மூலம், மெய்யான மனத்தாழ்மைக்கு நேராகவும் தனது அனைத்து சுய நம்பிக்கைகளை எடுத்துப்போட்டு முழுவதும் தன்னை தேவன் மீது சார்ந்துகொள்ளும்படி செய்வதற்கும் வழிநடத்தப்படுகிறான். இதைப்போலவே, அவன் பெற்றிருக்கும் அனைத்து நன்மைகளும் அது தேவனின் கிருபையினால் கொடுக்கப்பட்டது என்ற சத்தியத்தை கூறுவதின் மூலம் அவன் நன்றியறிதலுக்கு நேராகவும் வழிநடத்தப்படுகிறான்.

திருநியமங்கள்

கால்வினின் மூன்றாவது தலைப்பு அவர் தெளிவாக விளக்கும் திருநியமங்களாகும். “மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட சடங்குகள், கிறிஸ்துவின் மூலமாய் ஸ்தாபிக்கப்பட்ட இரகசியங்களுக்கு இணையாக வைக்கப்படுகிறது. குறிப்பாக கர்த்தரின் திருவிருந்து என்பது ஓர் “நாடக கண்காட்சியாக” மாற்றப்பட்டிருக்கிறது.” கர்த்தரின் பந்தியை இதுபோன்று துஷ்பிரயோகம் செய்வது சகிக்க முடியாத ஒன்றாகும்.

இதைப்பற்றி நாம் குற்றம் சாடும் முதல் காரியம் என்னவென்றால், மக்கள் தங்கள் பகட்டான சடங்குகளின் முக்கியத்துவத்தையும், அதன் உண்மையையும் வேதம் எங்குமே சொல்லாத பொழுது, அவர்கள் இவ்வித பகட்டான சடங்குகள் மூலம் நேரத்தை செலவிடுகிறார்கள். திருநியமங்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு காரியங்களும் தேவனுடைய வார்த்தையின்படி விளக்கப்படுத்தப்படாவிட்டால் , அதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஆதி திருச்சபையில் கடைபிடிக்கப்பட்ட திருநியமங்களின் கோட்பாட்டின் எளிமைத்துவமும், செயல்பாடுகளும் இப்பொழுது இழக்கப்பட்டிருக்கிறது என்று கால்வின் புலம்புகிறார். கர்த்தரின் பந்தியில் இது மிகவும் தெளிவாக காணப்படுகிறது. கர்த்தரின் பந்தியில், கிறிஸ்து இன்றும் சிலுவையில் அடிக்கப்படுகிறார் (Eucharistic) என்ற தவறான எண்ணமும், பந்தியில் உள்ள அப்பமும் திராட்சரசமும் மெய்யாகவே கிறிஸ்துவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றப்படுகிறது என்ற நம்பிக்கையும் (transubstantiation), கொடுக்கப்பட்ட அப்பத்தையும் ரசத்தையும் ஆராதிக்கும் முறைமையும் வேதத்திற்கு ஒத்துபோகாததாகவும், திருப்பந்தியின் மெய்யான அர்த்தத்தை கெடுக்கிறதாயும் உள்ளது. 

ஒருபக்கம் திருநியமங்கள் நமது மனதின் பக்தியை பரலோகத்தை நோக்கி எழுப்பவேண்டியதாயிருந்திருந்தாலும், மனிதன் கிறிஸ்துவை சிந்திக்காமல் அவரை மறந்து, பந்தியின் பொருட்களில் கவனம் செலுத்தி, தங்கள் கண்களை அதன்மீது வைத்தும் அவைகளை ஆராதித்தும் திருப்தியடைந்து, முற்றிலும் வேறொரு நோக்கத்திற்காக அதை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

நற்கருணை ஆராதனையின் நம்பிக்கையான “கிறிஸ்து நாள்தோறும் ஆயிரம் முறை சிலுவையில் மரிக்கிறார்” என்ற நம்பிக்கை கிறிஸ்துவின் பணியை அவமதிக்கிறதாயிருக்கிறது. அவர் ஒரேதரம் சிலுவையில் மரித்து எல்லாவற்றையும் போதுமான அளவிற்கு செய்து முடித்தார் என்ற மாபெரும் உண்மைக்கு இது எதிராக உள்ளது.

திருப்பந்தியின் மெய்யான அர்த்தம் கால்வினால்  இங்கு விளக்கப்படுத்தப்படுகிறது:

“அனைவரும் திருப்பந்திக்கு விசுவாசத்தோடு வரும்படி நாங்கள் புத்திசொல்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் அவரது சரீரம் மற்றும் இரத்தத்தின் ஆசீர்வாதங்கள் திருப்பந்தியில் நமக்கு கொடுக்கப்படுகிறது என்று பிரசங்கிக்கிறோம். அப்பம் மற்றும் ரசத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை, அவைகள் எதையும் பிரதிபலிப்பதில்லை, அவைகள் வெறும் சின்னங்களாகவே உள்ளது என்பதையும் நாங்கள் கற்பிக்கவில்லை.”

மெய்யாகவே, பந்தியில் விசுவாசத்தோடு பங்குபெறும் ஒவ்வொரு விசுவாசிக்கும் கிறிஸ்து தம்மையும் அவரது மீட்ப்பின் பலாபலன்களையும் அளிக்கிறார்.

திருப்பந்தி மீதான கால்வினின் சுருக்கமான கண்ணோட்டம் இந்த முக்கிய சத்தியத்தை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை மட்டுமே நமக்கு காண்பிக்கிறது. அவர் ஞானஸ்நானம் பற்றிய காரியத்திலும் கணிசமான கவனத்தை செலுத்தி, ரோம் கத்தோலிக்கர்கள் கூறும் மேலும் ஐந்து சடங்கு நியமங்களையும் மறுக்கிறார்.

திருச்சபை அமைப்பு

கால்வின் இறுதியாக, திருச்சபையின் அமைப்பு என்ற பாடத்திற்கு வருகிறார். இது ஓர் முக்கிய பெரிய பாடமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். “திருச்சபை அமைப்பின் தவறுகளை நான் விரிவாக கண்டுக்கொள்ளாமல் சென்றிப்பேனென்றால், நான் ஒருபோதும் அதை செய்திருக்கக் கூடாது.” போதக பணியின் முக்கியத்துவத்தில் அவர் கவனம் செலுத்துகிறார். பிரசங்க பணியின் சிறப்பும் பொறுப்பும் தான் போதக பணியான் இருதயமாகும்: “போதிக்கும் பணியை நடப்பிக்காத எந்த மனிதனும் திருச்சபையின் மெய்யான போதகனாக இருக்க முடியாது.” சீர்திருத்தத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, தேவனுடைய மக்களின் வாழ்க்கையில் மீண்டும் பிரசங்கத்தை மீட்டெடுத்து அதன் சரியான இடத்தில் வைத்ததுதான். “வேதப்பூர்வ பிரசங்கம் இல்லாத எந்த சபையையும் நம்மில் பார்க்கமுடியாது.” போதக பணியானது பிரசங்கத்தோடு பரிசுத்தமாகுதலை இணைக்கவேண்டும்: “திருச்சபையில் போதக பொறுப்பில் இருப்பவர்கள் தனது பரிசுத்த வாழ்க்கையின் மூலம் மாதிரிகளாக காண்பித்து மற்றவர்களையும் சிறந்து விளங்க செய்யவேண்டும்.”

முறையான ஆராதனையே கால்வினின் நோக்கமாக இருந்தது.

பிரசங்கத்திற்கும், பரிசுத்தத்தை வளர்ப்பதற்கும் பதிலாக ரோம சபைகள் மிக கொடூரமான கொடுமைகளை மக்களின் ஆத்துமாக்கள் மீது செலுத்தி, தேவனால் தங்களுக்கு கொடுக்கப்படாத அதிகாரத்தையும், வல்லமையையும் தாங்கள் பெற்றிருப்பதாக கூறுகின்றனர். திருச்சபையை சிறைப்பிடித்திருந்த வேதமற்ற முறைமைகளிலிருந்து, சீர்திருத்தமானது மகிமையான விடுதலையை கொண்டு வந்தது.

ஆகவே, விசுவாசிகளின் மனசாட்சியை அவர்களை பிடித்திருக்கும் தேவையற்ற அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது நமது கடமையாயிருக்கிறது. எனவே அவர்கள் விடுதலையானவர்களும் மனித சடங்குகளுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கினவர்களென்றும், கிறிஸ்துவின் இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட இந்த சுதந்திரத்தை மீறமுடியாது என்பதையும் பிரசங்கிக்கிறோம். 

ரோம சபைகள் தங்களை அப்போஸ்தலர்களின் வாரிசுகள் என கூறிக்கொண்டு திருநியமங்களை தங்கள் இஷ்டத்தின்படி அனுசரிக்கின்றனர். கால்வின் கூறுவதென்னவெனில், சீர்திருத்த திருநியமமானது கிறிஸ்துவினுடைய போதனைகளையும், அவர் அப்போஸ்தலர்களுக்கும் திருச்சபைக்கும் எதை கற்பித்து செயல்படுத்தினாரோ அதையே பின்பற்றுகிறது. “எனவே எந்த ஒரு நபரும் சத்திய கோட்பாடுகளின் தூய்மையால் திருச்சபையின் ஒற்றுமையை தாக்காத திருநியமங்கள் மீது தங்களுக்கு தேவனால் கொடுக்கபடாத அதிகாரத்தை உரிமை பாராட்ட எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை.”

சீர்திருத்தம்

சீர்திருத்தத்தை பற்றிய காரியங்களுடன் கால்வின் இந்த கட்டுரையை நிறைவு செய்கிறார். கால்வின் சீர்திருத்தத்தின் ஆரம்பத்தை, தனது கனிவான கரத்தின் மூலம் சீர்திருத்தத்திற்காக அழைப்பு விடுத்த லூத்தருக்கே சாட்டுகிறார். ரோமிலிருந்து வெளிப்பட்ட பதில்கள் அவர்கள் “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைத்த” தீமைகளுக்கான ஓர் பிரதிபலனாகும். சீர்திருத்தத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை மற்றும் எப்பொழுதும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரசங்கிக்கப்பட்ட மாறாத சுவிசேஷத்தின் மேன்மைக்கிடையில், இந்த சீர்திருத்த போராட்டம் கால்வினை ஒருபோதும் திகைப்படையச்செய்யவில்லை. 

மிகமுக்கியமான காரியங்களுக்காக சபை போராடுகிறபடியால், திருச்சபையின் வாழ்க்கையில் சந்திக்கிற அனைத்து பிரச்சனைகளையும் கால்வின் நியாயப்படுத்துகிறார். கிறிஸ்தவத்தின் முழு தன்மைகளும் ஆபத்தில் உள்ளது என்ற உண்மையை சிறுமைப்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. சீர்திருத்தவாதிகள் வேதத்துக்கு கீழ்ப்படிந்து செயல்பட்டபடியால், அவர்கள் பிரிவினைவாதிகள் என்று கூறப்படுவதை கால்வின் நிராகரித்தார்.

“முதன்மையாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், திருச்சபையை அதன் தலைவராகிய கிறிஸ்துவிடமிருந்து பிரிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்பொழுது நான் கிறிஸ்து என்று சொல்கிறேனோ அப்பொழுது தன் இரத்தத்தின் மூலம் முத்திரையிடப்பட்ட சுவிசேஷத்தின் உபதேசத்தை குறிப்பிடுகிறேன். எனவே தெளிவான வேத உபதேசத்தை ஏற்றுக்கொண்டு, நாம் கிறிஸ்துக்குள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும்போது நம்மில் பரிசுத்த ஐக்கியம் ஏற்படுகிறது என்று உண்மையே எப்பொழுதும் நிலையான புள்ளியாக இருக்கட்டும்.”

வெறுமனே பெயர் திருச்சபை ஐக்கியத்தை ஏற்படுத்துவதில்லை. தேவனின் வார்த்தையில் நிலைத்திருக்கும் மெய்யான திருச்சபையே உண்மையில் ஐக்கியத்தை ஏற்படுத்துகிறது.

யாரால் திருச்சபையின் சீர்திருத்தத்தை கொண்டு வரமுடியும் என்ற நடைமுறை கேள்விக்கு நேராக கால்வின் திரும்புகிறார். போப்பினால் சபையை வழிநடத்த முடியும் என்ற கருத்தை கால்வின் மிகவும் உறுதியான வார்த்தையால் நிராகரிக்கிறார்:

“அவர்கள் அப்போஸ்தலர்களாக காட்டிக்கொள்வதை நான் மறுக்கிறேன், இதில் திகைப்பூட்டும் விசுவாச துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. போப் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மிக கடுமையாக தாக்கி, தான் ஒரு அந்திக்கிறிஸ்துவாக இருக்கையில், அவர் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்பதை நான் மறுக்கிறேன். அவர் பேதுருவின் வாரிசு என்பதை நான் மறுக்கிறேன், பேதுரு கட்டிய உபதேசங்களை முற்றிலும் அழிப்பதை தவிர வேறொன்றும் போப் செய்யவில்லை. கிறிஸ்துவை தலையாக கொண்டுள்ள திருச்சபையின் அங்கங்களை சிதைத்து அவளை தலையை விட்டு பிரிக்கும் போப்தான் திருச்சபைக்கு தலைவர் என்பதை முற்றிலும் நிராகரிக்கறேன்.”

திருச்சபையின் பிரச்சனைகளை தீர்க்க உலகளாவிய கவுன்சிலுக்கான அழைப்பு என்று அவருக்கு தெரியும். ஆனால் அத்தகைய கவுன்சில் ஒன்றுக்கூட முடியாது என்றும், அப்படி கூடினாலும் அது போப்பினால் கட்டுப்படுத்தப்படும் என்றும் கால்வின் அஞ்சினார். திருச்சபைகள், வேதத்தில் ஆதி திருச்சபையின் முறைமைகளை பின்பற்றி அதன் மூலம் பல்வேறு உள்ளூர் சபைகளிலும் மாகாண கவுன்சிலிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று பரிந்துரைத்தார். எவ்வாறாயினும், எல்லா சீர்திருத்த முயற்ச்சிகளுக்கான ஆசீர்வாதங்களை தனது விருப்பத்தின்படி அளிக்கும் தேவனிடமே விளைவுகளை விட்டு விடவேண்டும்: “ஆம்! மெய்யாகவே நாம் நமது ஊழியம் உலகிற்கு பயன்படவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கான பதில்களை கொடுப்பது தேவனுடையது, நம்முடையதல்ல.”

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ராபர்ட் காட்ஃப்ரே
ராபர்ட் காட்ஃப்ரே
Dr. Robert Godfrey லிகனியர் ஊழியத்தின் தலைவரும் சக ஆசிரியருமாவார். கலிபோர்னியாவில் Westminster Seminar லும் ஆசிரியராக உள்ளார். A survey of Church History, God's pattern for creation, Reformation sketches, An unexpected journey போன்ற புத்தகங்களின் ஆசிரியருமாவார்.