Shepherding-Children-through-Hardships-and-Trials
துன்பங்கள் மற்றும் சோதனைகள் வழியாக பிள்ளைகளை மேய்த்தல்
18-09-2025
Contentment_2560
மனநிறைவில் நிலைத்திருப்பதற்கான ஐந்து வழிமுறைகள்
25-09-2025
Shepherding-Children-through-Hardships-and-Trials
துன்பங்கள் மற்றும் சோதனைகள் வழியாக பிள்ளைகளை மேய்த்தல்
18-09-2025
Contentment_2560
மனநிறைவில் நிலைத்திருப்பதற்கான ஐந்து வழிமுறைகள்
25-09-2025

அன்பான ஒருவரை இழக்கும்போது ஏற்படும் துயரம் 

Losing-a-Loved-One

நமக்கு அன்பான ஒருவரை இழக்கும் போது ஏற்படும் பாதிப்பை தவிர வேறு எதுவும் மிக அதிகமாக நம்மை  காயப்படுத்துவதில்லை. நாம் நேசிப்பவர்களை விட்டு பிரிந்து வாழும்படியாய்  நாம் தேவனால் படைக்கப்படவில்லை. பாவத்தின் விளைவினால் மரணம் ஏற்பட்டது நம்முடைய படைப்பின் நியதியில் நாம் அவ்வாறாக படைக்கப்படவில்லை  (ரோமர் 5:12). நாம் நேசிப்பவரை இழக்கும்போது நமக்கு ஏற்படும் ஆழமான வேதனையை குறித்து நாம் ஆச்சரியப்படலாம். நம் நேசத்திற்குரியவர்களின் குரல்களைக் கேட்கவும், அவர்களின் கைகள் நம்மைச் சுற்றி இருப்பதை உணரவும், அவர்களின் கண்களைப் பார்த்து மீண்டும் அவர்களுடைய ஆத்துமாவோடு ஒன்றிணையவும் நம்முடைய ஆத்மா ஏங்குகிறது. அதின் வலி மிகப் பெரியது, தாங்க முடியாதது, பெரும்பாலும் விவரிக்க முடியாதது. இவ்விதமான துயரமான வலி, பயம், சோகம் மற்றும் கோபமானது ஒரு கொந்தளிப்பான புயலை போன்றதாகும். நாம் கவனமாக இல்லாவிட்டால், அது நம்மை விழுங்கிவிட வாய்ப்புண்டு. அன்பான ஒருவரை இழந்த ஒரு விசுவாசி அதை எப்படி சரியான விதத்தில் கடந்து செல்ல முடியும்?

முதலில், நீங்கள் எவ்விதமான சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்கள் என்பதை நன்றாக அறிய வேண்டும். பிரிவு துக்கத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க மனித வாழ்வில் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் ஒரு புயலுக்கு அதை ஒப்புமைப்படுத்துவது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வார்த்தையின் அர்த்தத்தோடும் (யோனா 2:3) உருவக ரீதியாகவும் (சங்கீதம் 42:7; 88:7) இது வேதத்திற்கு ஒத்திருக்கிறது.  ஆழ்ந்த துயரத்திற்குள்ளாவதை, நாம் இயல்பாகப் பேசும்போது, ​​அதை 

 ” மூழ்கிபோகுதல்” என்ற வார்த்தையைக் கொண்டு அதை  விவரிக்கிறோம். எனவே, அன்பான ஒருவரின் பிரிந்த துயரத்தின் வழியாகச் செல்வது ஒரு கொந்தளிப்பான கடலில் செல்வது போன்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்போது, ​​அலைகள் மிக அதிகமாகவும், கரைசேர முடியாது என்ற  நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுவோம்.

இருப்பினும், அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின இந்த  வசனங்கள் இங்கே மிகவும் நமக்கு உதவியாக இருக்கும்:

சகோதரரே,  நித்திரை அடைந்தவர்களின் நிமித்தம் நீங்கள் நம்பிக்கை யற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூட கொண்டு வருவார். (1 தெசலோனிக்கேயர் 4:13-14).

மூழ்காத உயிர்காக்கும் படகு போல, துயரத்தின் அலைகள் எவ்வளவு உயரமானாலும், அவை மலைகள் போல இருந்தாலும், கிறிஸ்து உங்களை மூழ்கிப்போக விடமாட்டார். ஏனெனில் அவர் மரணத்தை ஜெயித்தார் (1 கொரிந்தியர் 15:55). மேலும் ஏக்கம் மற்றும் இழப்பினால் ஏற்படும் வலி என்றென்றும் நீடிப்பது போல் தோன்றினாலும்,  அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்று ஆண்டவராகிய கிறிஸ்து தனது சொந்த மரணத்தினால் நமக்கு உத்தரவாதம் அளிக்கிறார், ஏனெனில் அவர் மூலமாய் மரணமும் கண்ணீரும் இனி இல்லாத ஒரு நாள் வரப்போகிறது (வெளிப்படுத்துதல் 21:4).

மரணம்  தற்காலிகமானது என்றும் கிறிஸ்து அதை ஜெயித்து வெற்றி சிறந்தார் என்பதும் உண்மையென்றால்,  இன்னும் அது ஏன் மிகுந்த வலியுள்ளதாய் காணப்படுகிறது? புயல்  ஏன் இவ்வளவு தீவிரமாகவும்,பயங்கரமாகவும் வீசுகிறது? சுருக்கமாக சொல்லப்போனால், நாம் நேசிப்பவர்களிடமிருந்து நம்மை பிரிக்கும் இந்த மரணமானது நம்முடைய ஆத்துமாவின் இயல்புக்கு எதிரானது. நம்மை ஆட்கொள்ளும் இந்த துயரம், நம்முடைய ஒரு பகுதியையே இழந்து விட்டதைப் போன்ற ஆத்தும வியாகுலத்தை ஏற்படுத்துகிறது. கிறிஸ்துவும் அவருடைய நண்பனாகிய லாசரு மரித்தபோது அழுததை நாம் பார்க்கலாம்  (யோவான் 11:35). லாசருவை எழுப்பப் போகிறோம் என்று கிறிஸ்து அறிந்திருந்தும் (யோவான் 11:23), தான் நேசித்த ஒருவர்  மரணம் அடைந்ததைக் கண்டு அவரும் அழுதார் அப்படியானால், நாம் எப்படி அழாமல் இருக்க முடியும்? வீழ்ச்சியடைந்த இந்த உலகத்தில், நாம் நேசிப்பவர்களை நம்மிடத்தில் இருந்து பிரிக்கக்கூடிய இந்த மோசமான நிலையை நினைத்து நம்முடைய ஆத்துமா எப்படி துக்கத்தில் அங்கலாய்க்காமல் கடக்க கூடும்?

மழை, அலைகள், காற்று, மின்னல் மற்றும் இடி – இதேபோன்ற அம்சங்கள் புயலுக்கும் இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் நீங்கள் இன்னும் ஆழமாக  செல்லும்போது, ​​ஒவ்வொரு புயலும் தனித்துவமானது என்பதை காண்பீர்கள். இதேபோல், ஒவ்வொரு நபரும் துயரப்படும் விதமும், அவர்கள் துயரப்படும் நபரையும் சார்ந்து வேறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் காணப்படும். உதாரணமாக, ஒரு நபர் ஒரு பெற்றோரின் இழப்பிற்கு துயரப்படும் விதம், அவருடைய தாத்தாவின் இழப்பிற்கு துயரப்படும் விதத்திலிருந்து சற்று வேறுபடும். மேலும் இரண்டு உடன்பிறந்தவர்கள், எவ்வளவு ஒன்றாக இருந்தாலும், இதுபோன்ற இழப்புகளுக்கு ஒருவருக்கொருவர் வித்தியாசமாகவே துயரப்படுவார்கள். ஒவ்வொருவரும் தனது சொந்த வேகத்தில் புயல் நிறைந்த கடலைக் கடக்க வேண்டும். ஆனாலும் திசை ஒன்றே: கிறிஸ்துவே நமது திசைகாட்டி. நாம் கிறிஸ்துவின் வல்லமை, இரக்கம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றின் மீது ஒரு வலுவான உறுதிப்பாட்டை கொண்டு செயல்பட வேண்டும். ஒருவன் சிலுவையை எவ்வளவு அதிகமாக பற்றிக்கொள்கிறானோ – ஒருவேளை தன்னுடைய விரல் நகங்களால் மட்டுமே பற்றிக்கொண்டிருந்தாலும் -துக்கம் என்னும் புயல்  கடந்து செல்லும்போது இறுதியாக அந்த மனிதனுக்கு  அதிக நம்பிக்கை இருக்கும் என்பது நிச்சயம். உபத்திரவம் என்பது நம்பிக்கையின் தொழிற்சாலை என்பதை பவுல் ரோம விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறார் (ரோமர் 5:3-5).மேலும் நம்முடைய நேசத்திற்குரியவர்களை இழப்பதை போன்ற பெரிய துக்கம் வேறு எதுவும் இருக்க முடியாது.

கடைசியாக, ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய பாதையும் தனித்துவமானது என்றாலும், அப்படிப்பட்ட விசுவாசிகள் ஒரு போதும் தனியாக இருப்பதில்லை. அன்பான ஒருவருடைய மரணத்தை எதிர்கொள்வது எப்படி என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து சிலுவையில் மரணத்தை சந்தித்தபோது, ​​இயற்கை அனைத்தும் பிதாவுடன் சேர்ந்து புலம்புவதை போல காணப்பட்டது. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்று மணிநேரமும், சூரியன் பிரகாசிக்காமல் அந்தகாரப்பட்டது  என்று லூக்கா எழுதுகிறார் (லூக்கா 23:44-45). நீங்கள் புயலைக் கடக்க எடுக்கும் நேரம் ஒரு நித்தியம் போல் தோன்றினாலும், அதுவரையில் உங்களுக்கு திசை காட்டும்படியாய் நிலையான கரங்கள் கூடவே இருக்கின்றன. ஆணிகளால் கடாவபட்ட கரங்கள் உங்களை மறுபக்கத்திற்கு அழைத்துச் செல்லும் (யோவான் 20:27). இதற்கு இடைப்பட்ட காலத்தில், நீங்கள் தனியாகவும் கைவிடப்பட்டவராகவும் இருப்பதைப் போல உணர்ந்தாலும் கூட, ஒருபோதும் அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்கு பண்ணியிருக்கிறாரே (எபிரேயர் 13:5). நீங்கள் உணரும் வலிகளுக்கு அவர் அந்நியர் அல்ல. அவரும் இந்த புயலைக் கடந்து சென்றுள்ளார். மேலும் அதை எப்படி கடந்து செல்வது என்பதும் அவருக்குத் தெரியும்.

அன்பான ஒருவரின் இழப்பிற்கு துயரப்படுவது மிகவும் வலி நிறைந்தது மட்டுமல்ல அதிக நேரமும் அதற்கு தேவைப்படுகிறது. அவர்களுடைய ஆத்துமா அவர்களில் இல்லாதிருப்பதை காணும் போது ஏற்படும் வலியை நம்மால் தவிர்க்க முடியாது. ஒரு சூறாவளியை போல, துக்கம்  நம்மை அழிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்ததாகத் தோன்றலாம். ஆனால் நாம் மிகுந்த தாழ்வான நிலையில் இருக்கும்போது, ​​நாம் அவரை நோக்கி கூப்பிட்டு அவருடைய வார்த்தையால் நம்மை எடுத்து நிறுத்தும்படியாக  (சங்கீதம் 119:28) சங்கீதக்காரனைப் போல மன்றாடலாம். மரணம் தற்காலிகமானது. கிறிஸ்து ஜெயத்தை தருகிறவர் என்று அந்த வார்த்தை நமக்குச் சொல்கிறது. இதற்கிடையில், நாம் நம்மை அவரிடத்தில் ஒப்புக்கொடுக்கும் போது, அவர் நம்மை வழிநடத்தி, நமக்கு இளைப்பாறுதலையும் தருகிறவராக இருக்கிறார் (மத்தேயு 11:28-30).

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஜோஸ்வா A. ஸ்கொய்ர்ஸ்
ஜோஸ்வா A. ஸ்கொய்ர்ஸ்
Rev. ஜோஸ்வா A. ஸ்கொய்ர்ஸ் என்பவர் கொலம்பியா, எஸ்.சி.-யில் உள்ள முதல் பிரஸ்பைடேரியன் திருச்சபையின் இணை ஊழியம் செய்பவர். அவர் ஆலோசகராகச் செயல்படுகிறார்