3 Things You Should Know About Hebrews
எபிரெயர் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
31-03-2026
What Is the Wrath of God?
தேவ கோபம் என்றால் என்ன?
07-04-2026
3 Things You Should Know About Hebrews
எபிரெயர் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
31-03-2026
What Is the Wrath of God?
தேவ கோபம் என்றால் என்ன?
07-04-2026

மனித இயல்பு அடிப்படையிலேயே நல்லதா அல்லது முழுவதும் பாவத்தில் உள்ளதா?

Is Human Nature Basically Good or Completely Sinful?

“மனிதர்கள் இயற்கையாகவே அடிப்படையில் நல்லவர்கள்” என்ற கருத்து, ‘பெலஜியன் வேத புரட்டு’ (Pelagian heresy) என்ற பண்டையக் கொள்கையையே எதிரொலிக்கிறது. இந்தக் கொள்கையின்படி, ஆதாமின் பாவம் ஆதாமை மட்டுமே பாதித்தது என்றும், அவனது வீழ்ச்சியால் மனக்குலத்தின் இயல்பு பாதிக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால், வேதாகமம் இதற்கு மாறாகப் போதிக்கிறது; ஆதாமின் பாவம் அவனுடைய வழியில் வந்த எல்லா சந்ததியையும்  பாதிக்கிறது என்றும் அது உறுதிபடக் கூறுகிறது (ரோமர் 5:12–14). இயல்பாகவே, மனிதர்கள் “கோபாக்கினையின் பிள்ளைகளாய்” இருக்கிறார்கள் (எபேசியர் 2:3). இதையே ‘முழுமையான வீழ்ச்சி’ (Total Depravity) என்ற இறையியல் கருத்து விளக்குகிறது (TULIP என்ற சுருக்கச் சொல்லில் உள்ள ‘T’ இதுதான்). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாவம் நம் அனைவரையும் (இயேசுவைத் தவிர) இருதயம், சிந்தை, சரீரம் மற்றும் ஆத்துமா என எல்லா பாகங்களையும் சீர்குலைத்துள்ளது. இந்தக் கோட்பாடு பழைய மற்றும் புதிய ஏற்பாடு முழுவதும் காணப்படுகிறது (எ.கா: ஆதியாகமம் 6:5; சங்கீதம் 14:1–3; 143:2; பிரசங்கி 7:20; ஏசாயா 64:6; மாற்கு 7:18–23; ரோமர் 1:21–32; 3:10–18, 23; 8:5–8; கலாத்தியர் 4:3; எபேசியர் 2:1–3; 4:17–19; தீத்து 3:3).

மனிதர்கள் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டார்கள் என்றும் (ஆதியாகமம் 1:26–27), தேவன் படைத்த யாவற்றையும் “நல்லது” என்று கண்டார்  (வசனம் 31) என்றும் வேதம் போதிப்பதால் கிறிஸ்தவர்கள் சில நேரங்களில் குழப்பமடையலாம். தேவன் படைத்த அனைத்தும் நல்லதென்றால், மனித இயல்பும் நல்லதாகத்தானே இருக்க வேண்டும்? ஆம், ஆதியில் படைக்கப்பட்டபோது மனித இயல்பு நல்லதாகவே இருந்தது. இருப்பினும், மனித சித்தமும் (Will) மனித இயல்பின் ஒரு பகுதியாக இருந்தது. முதல் மனிதர்கள் தங்கள் சித்தத்தைத் தேவனுடைய சித்தத்தோடு முழுமையாக இணைத்து, அவருக்குக் கீழ்ப்படிய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள். சாத்தானைப் போலவே, அவர்களும் தங்கள் சித்தத்தைத் தேவனுடைய சித்தத்திற்கு நேர் எதிராகத் திருப்பினார்கள்; இதன் மூலம் உலகிற்குள்ளும் தங்களுக்குள்ளும் பாவத்தையும் துக்கத்தையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் பாவம் செய்தபோது, மனித இயல்பு சிதைக்கப்பட்டு சீர்குலைந்தது. “ஒன்றின் இயல்பு அதன் சந்ததியிலும் தொடரும்” என்பதற்கேற்ப, இப்போது பிறக்கும் அனைத்து மனிதர்களும் சீர்குலைந்த மற்றும் வீழ்ச்சியடைந்த மனித இயல்புடனேயே பிறக்கிறார்கள். மனிதர்கள் இப்போது பாவத்திற்கு அடிமைகளாகவே பிறக்கிறார்கள்.

இதனால்தான், “எல்லோரும் கொஞ்ச பாவம் தான் செய்கிறார்கள்” என்ற கூற்றும் தவறானது. நாம் பெரும்பாலும் மற்ற மனிதர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம்; அதிலும் குறிப்பாக மிக மோசமானவர்களோடு தான் ஒப்பிடுகிறோம். அடோல்ஃப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் அல்லது மா சேதுங் போன்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறோம். கோடிக்கணக்கான மக்களைக் கொல்லாமல் இருப்பதால் நம்மைப் பற்றி நாமே பெருமிதம் கொள்வது எளிது. ஆனால், தேவனுடைய வார்த்தை பாவத்தை அளவிடும் தரம் இதுவல்ல. தேவனுடைய சித்தமே அதன் தரம்; அந்தச் சித்தத்திற்குப் பூரணமாகக் கீழ்ப்படிவதே அதன் தேவையாகும். “ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் அவன் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்” (யாக்கோபு 2:10; கலாத்தியர் 3:10 காண்க). கேள்வி என்னவென்றால்: இன்று நீங்கள் கோடிக்கணக்கானோரைக் கொலைசெய்யாமல் இருந்தீர்களா என்பதல்ல; மாறாக, இன்று “உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் தேவனாகிய கர்த்தரிடத்தில்” பூரணமாக அன்பு கூர்ந்தீர்களா? “உங்களை நீங்கள் நேசிக்கிறது போல  பிறனையும்” பூரணமாக நேசித்தீர்களா? (மத்தேயு 22:37–39) என்பதே அக்கேள்வி. இதைச் செய்ய நீங்கள் எத்தனை முறை தவறினீர்கள்? அது வெறும் “கொஞ்சமாகவா” இருந்தது? இல்லை. நாம் இதைச் செய்யப் பலமுறை தவறுகிறோம்; அதன் பொருள் என்னவென்றால் நாம் திரளான பாவங்களை செய்கிறோம் என்பதே. இதனால்தான் நமக்கு இயேசு கிறிஸ்துவின் பூரண நீதி தேவைப்படுகிறது. நியாயப்பிரமாணத்தை முழுமையாக நிறைவேற்றிய ஒரே நபர் அவர் மட்டுமே என்பதை அறிந்து அவரை பற்றிக் கொள்வோமாக.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

லிகோனியர் இதழ்
லிகோனியர் இதழ்
ஆர்.சி. ஸ்ப்ரூல் நிறுவிய லிகோனியர் ஊழியங்கள், முடிந்தவரை பலருக்கு கடவுளின் பரிசுத்தத்தை அதன் முழுமையுடன் அறிவிக்கவும், கற்பிக்கவும், பாதுகாக்கவும் உள்ளன.