Leadership in the Church

திருச்சபையில் தலைமைத்துவம்

10-02-2026
5 Things You Should Know About Holiness

பரிசுத்தத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

17-02-2026
Leadership in the Church

திருச்சபையில் தலைமைத்துவம்

10-02-2026
5 Things You Should Know About Holiness

பரிசுத்தத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

17-02-2026

பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் அறிய வேண்டிய 5 பிரதான காரியங்கள்

5 Things You Should Know About Fighting Sin

1. பாவத்திற்கு எதிரான அச்சம் உண்மையானது தான்.

உலகம், மாம்சம் மற்றும் பிசாசு ஆகிய மூன்று வலிமையான எதிரிகளிடமிருந்து நமக்குக் கடுமையான சோதனைகள் வரும் என்ற வேதாகமத்தின் தெளிவான சத்தியத்தின் மூலம் வரக்கூடிய அச்சம் உண்மையானது தான் என்று வேதாகமம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

உலகம்: இந்த உலகம் நம் பட்சத்தில் இல்லை. இந்த உலகத்தின் அமைப்பு முறை பெரும்பாலும் நம்மைத் தவறான திசையில் தள்ளவே சூழ்ச்சி செய்கிறது. அதனால்தான், “நீங்கள் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” (ரோமர் 12:2) என்று பவுல் எச்சரிக்கிறார்.

மாம்சம்: நம்முடைய சொந்த மாம்சமும் நமக்கு எதிராகப் போர் செய்கிறது. பிறப்பிலேயே நாம் பாவிகளும், தேவனை விட்டு விலகி நம்முடைய மாம்ச இச்சைகளில் விரைந்தோடுகிறவர்களாயும் இருக்கிறோம். மறுபிறப்பு எனும் ஆச்சரியமான நிகழ்வின்  மூலம், தேவன் நம்முடைய சில பாவத்தன்மைகளில் இருந்து நம்மை விலக்கி வைத்தாலும், அதன் எச்சங்கள் நமக்குள் இருக்கவே செய்கின்றன. நம் இருதயத்தை மட்டுமே நாம் பின்பற்றினால் அது நம்மைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நாம் எண்ணலாகாது.

பிசாசு:”உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கர்ஜிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8). நன்கு தேறின ஒரு கொலைகாரன் உங்களைக் கொலை செய்ய காத்திருந்தால் நீங்கள் எவ்வளவு விழிப்புடன் இருப்பீர்களோ, அதைவிட மேலாக சாத்தானைக் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

2. சோதனையை குறித்து நீங்கள் அறியும் முன்பே அது தொடங்குகிறது

நாம் பாவத்தில் விழுவதற்கான காரணம், பெரும்பாலும் முன்கூட்டியே நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளத் தவறுவதுதான். பாவம் நம்மை ஆட்கொள்ளாது என்பதைப் போல நாம் நம்முடைய வழக்கமான செயல்களில் ஈடுபட முடியாது. சோதனைக்கு இட்டுச் செல்லும் இடங்களையும் செயல்களையும் தவிர்ப்பதே பாவத்திற்கு எதிரான சிறந்த போராட்டமாகும்.

சிலருக்கு தனிமையில் இருக்கும்போது ஏற்படும் சலிப்பு சோதனையைத் தரும், எனவே அவர்கள் தங்களை வேலையில் மும்முரமாக வைத்திருக்க வேண்டும் என்பதே பாவத்திற்கு எதிரான போராட்டம் என்று எண்ணுகிறார்கள். வேறு சிலர் சில மனிதர்களைத் நிராகரிப்பதால் அவர்களுடைய தாக்கத்தால் வரும் பாவ வழிகளில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறார்கள். நாம் பார்க்கக்கூடாத காரியங்கள், செல்லக்கூடாத இடங்கள் மற்றும் தனிமையில் இருக்கக்கூடாத நேரங்கள் என்று சில உண்டு. இவ்விதமான நபர்கள், இடங்கள், நிகழ்வுகள் போன்றவை  நமக்கு உடனடியாகப் பாவமாகத் தெரியாவிட்டாலும், இவ்விதமான காரியங்களில் நாம் ஈடுபடும்போது இவை நம்மைச் சோதனைக்கு ஆளாக்கி பாவத்தில் விழச்செய்யும் சிக்கலுக்குள்ளாக்கி விடுகிறது.

3. போராட்டம் இருதயத்திலிருந்து தொடங்க வேண்டும்

பாவம் மனிதனுக்குள்ளிருந்து (இருதயத்திலிருந்து) வருகிறது என்று இயேசு தெளிவுபடுத்தியுள்ளார் (மத்தேயு 15:19). எனவே, போராட்டமானது உள்ளான மனுஷனிடமிருந்து தொடங்க வேண்டும்.

சங்கீதம் 119:11 கூறுகிறது:

“நான் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு, உம்முடைய வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

தன்னுடைய இருதயம் தேவனுடைய வார்த்தையினால் மட்டுமே வழிந்தோட வேண்டும் என்பதை சங்கீதக்காரன் நன்றாக அறிந்திருந்ததினால் தன்னை பாவத்திலிருந்து காத்துக்கொள்ள அவனால் முடிந்தது. நம்மெல்லாருக்கும் இத்தகைய வழிமுறை பொருந்தும்.

நம் இருதயம் கர்த்தருடைய வார்த்தையினால் நிரம்பி வழிய வேண்டும். நம்முடைய இருதயத்தை நாம் வெறுமனே பின்பற்றி அது நம்மை சரியான பாதைக்கு நடத்திச் செல்லும் என்று நாம் நினைக்கலாகாது. இதனால்தான் தினசரி வேதாகம வாசிப்பு, வசனங்களை மனப்பாடம் செய்தல் மற்றும் ஜெபம் ஆகியவை மிக முக்கியம். நாம் எதைச் சிந்திக்கிறோமோ அதுவே நம் வார்த்தையிலும் செயல்களிலும் பிரதிபலிக்கும். இந்த வெளிச்சத்தின் அடிப்படையிலேயே அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக எழுதுகிறார், “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் (பிலிப்பியர் 4:8).

4. திரியேக தேவன் நம்மைப் பெலப்படுத்துகிறார்

ஒரு கிறிஸ்தவனாக அநேக சோதனைகளில் நாம் அகப்பட்டாலும், கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கிறார். மறுபடியும் பிறந்தவர்களை குறித்து வேதாகமம், 

” நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையை கண்ணாடியிலே காண்கிறது போல கண்டு ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரிந்தியர் 3:18) என்றுரைக்கிறது.

 “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:6) என்ற வாக்குறுதியும் நமக்குண்டு. 

“தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்”(பிலி 2:13) என்று மறுபடியும் கூறுகிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி விசேஷமாக 

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடம் கொடாமல் சோதனையை தாங்கத்தக்கதாக சோதனையோடு கூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குகிறார்” என்று

1 கொரிந்தியர் 10:13 இல் பார்க்கிறோம். 

நம்முடைய சத்துருக்கள் பலமானவர்களாக இருந்தாலும், தேவன் அவர்களை விடப் பெரியவர். கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழும்பச் செய்த அவருடைய பரிசுத்த ஆவியானவரே நம்முடைய சரீரத்திலும் கிரியை செய்கிறவராய் இருக்கிறார். எனவே வேதாகமம் “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” 

(1 யோவான் 4:4) என்று நமக்கு நினைவூட்டுகிறது.

5. மகிமையடையும்வரை இந்தப் போராட்டம் முடிவடையாது

நாம் நம்முடைய இரட்சகரின் சமூகத்தில் சேரும் வரை, பாவத்திற்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். “நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” 

(1 யோவான் 1:8) என்று வேதாகமம் தெளிவுபடுத்துகிறது.

பூமியில் நாம் இருக்கும் காலம் வரைக்கும் ஆவிக்குரிய யுத்தக் களத்தில் போராடுவதே பாவத்திற்கு எதிரான நமது போராட்டமாகும். நித்தியத்தில் நாம் இளைப்பாறும்வரை நாம் இவ்வுலகில் ஓய்வை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் ஒரு நாள் நாம் மாற்றப்படுவோம். இயேசு நம்மை நித்திய வீட்டிற்கு வரவேற்கும்போது, நாம் அவரைப் போல இருப்போம். அன்று யுத்தம் முடிவுக்கு வரும், பாவத்திற்கு எதிரான வெற்றி நமதாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஜோனத்தன் எல். மாஸ்டர்

ஜோனத்தன் எல். மாஸ்டர்

என்பவர் தென் கரோலினாவில் (Greenville, S.C.) அமைந்துள்ள க்ரீன்வில் பிரஸ்பைடீரியன் இறையியல் கல்லூரியின் (Greenville Presbyterian Theological Seminary) தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மேலும், அவர் அமெரிக்காவில் உள்ள பிரஸ்பைடீரியன் திருச்சபையில் (Presbyterian Church in America - PCA) போதகராகவும் (Teaching Elder) பணியாற்றுகிறார். அவர் பல நூல்களின் ஆசிரியர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: Growing in Grace (கிருபையில் வளருதல்) Reformed Theology (சீர்திருத்தப்பட்ட இறையியல்) ஆகியவை ஆகும்.