
ஆபகூக் புத்தகம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
01-04-2025
யோனா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
08-04-2025யூதா நிருபத்திலிருந்து நாம் அறிய வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்

இன்றைக்கு அநேகர் உண்மையான சத்தியத்திற்காக போராடுவதை விட்டு விட்டவர்களாகவும், இயேசுவே பரலோகத்திற்குச் செல்லும் ஒரே வழி என்கிற சத்தியத்தில் உறுதியாக நில்லாமலும், உலகம் முழுவதும் பல இரட்சிப்பின் வழிகளாக சொல்லப்படும் தவறான உபதேசங்களை அங்கீகரிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இன்றைக்கு இருக்கக்கூடிய திருச்சபைகளும் இதனால் பாதிக்கப்படாமலில்லை. சத்தியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கிறிஸ்துவின் திருச்சபை மக்கள், அநேக அழுத்தங்களுக்கு உட்பட்டவர்களாய், அதற்கு தங்களுடைய முதுகையே காண்பிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இவ்விதமான பிரச்சினைகள் குறித்து அதிகம் பேசக்கூடிய யூதாவின் நிருபம் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவது மிகவும் வருத்தத்திற்குரியதே. ஒருவேளை இந்த நிருபம் சுருக்கமாக இருப்பதாலும், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அநேக ஆழமான சத்தியங்கள் இதில் சுட்டிக்காட்டப்படுவதாலும் இது புறக்கணிக்கப்படுகிறது. இருப்பினும், யூதாவின் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்கள் இன்றைய சபைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாய் இருக்கிறது. ஏனெனில் இங்கே “பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும் இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்கள்” (யூதா 1) ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காகப் போராடவும் விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் வேண்டுமென்று அவர் நினைப்பூட்டுகிறார்.
தனது பெயரைக் கொண்ட இந்த நிருபத்தின் ஆசிரியரான யூதா, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மற்றும் யாக்கோபின் தம்பியாவார். இதில் யாக்கோபு ஆரம்பகால திருச்சபையில் ஒரு முக்கியமான தலைவராகவும், அவரது பெயரைக் கொண்ட நிருபத்தின் ஆசிரியராகவும் இருந்தார் என்று நாம் அறியலாம் (மாற்கு 6:1–6; அப்போஸ்தலர் 15:13–21; கலா. 2:9; யாக்கோபு 1:1). இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால், யூதா, இயேசுவின் மாம்சிகமான வாழ்க்கை மற்றும் ஊழியத்தின்போது அவரைப் பின்பற்றுபவராக காணப்படவில்லை (யோவான் 7:5), ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் இரட்சிப்பிற்கேதுவான விசுவாசத்தை பெற்றுக் கொண்டதை நாம் பார்க்கலாம் (அப்போஸ்தலர் 1:12–14). யூதா மற்றும் 2 பேதுருவில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களில் உள்ள ஒற்றுமையின் காரணமாக, யூதாவின் நிருபம் பெரும்பாலும் 2 பேதுருவின் புத்தகம் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் அதாவது கி.பி. 60 களின் நடுவில் எழுதப்பட்டிருக்கலாம் .
யூதாவின் புத்தகம் ஒரு குறிப்பிட்ட திருச்சபைக்கோ அல்லது பல திருச்சபைகள் உள்ளடங்கிய ஒரு குழுவிற்கோ எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதில் “நமது தேவனுடைய கிருபையை காமவிகாரத்துக்கு ஏதுவாக புரட்டி ஒன்றான ஆண்டவராகிய மெய்தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்” என்று எழுதுகிறார் (யூதா 4). பழைய ஏற்பாடு மற்றும் யூத இலக்கியங்களுக்கு ஏற்றார்போல் பல குறிப்புகள் இருப்பதால், யூதாவின் புத்தகம் பெரும்பாலும் யூத கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டிருக்கலாம், இருப்பினும் சில வேத வல்லுநர்கள் இந்த குறிப்புகள் யூதர்களுக்கு எழுதப்பட்டதை விட, யூதாவின் சொந்த பின்னணியைப் அவரின் நம்பிக்கை பற்றியே அதிகமாகச் சொல்கின்றன என்று நம்புகிறார்கள்.
முக்கியமாக, யூதா தேவனுடைய உடன்படிக்கையின் அன்பின் அடிப்படையில் செயல்படுமாறு தன்னுடைய அழைப்பை இங்கே விசுவாசிகளுக்கு கொடுக்கிறார் . முதலாவதாக தேவன் யார் என்பதன் வெளிச்சத்தின் அடிப்படையில், விசுவாசிகள் தாங்கள் யார் என்பதை நிதானித்து அறிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பின்னர், விசுவாசிகளை விசுவாசத்திற்காகப் போராடவும் அதில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் வேண்டுவது அவசியம் என்றுரைக்கிறார். யூதா, தேவனுடைய மகிமை, மகத்துவம், ஆளுமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சிந்தித்து செயல்படுமாறு அழைக்கிறார். ஏனெனில் இவைகளின் மூலமாகவே அவர்கள் விசுவாசத்திற்காகப் போராடவும் அதில் உறுதியாக நிற்கவும் முடியும் என்பதினாலேயே அப்படி எழுதுகிறார்.
1. விசுவாசிகள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள்.
யூதா தனது கடிதத்தை “அழைக்கப்பட்டவர்களுக்கு” (யூதா 1) என்று ஆரம்பிக்கிறார். தேவன் ஜனங்களை தம்மிடமாக அழைக்கும் போது, அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு, “அவர்கள் இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு தேவனிடத்திற்கும் “திருப்பப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 26:18). விசுவாசத்தினாலே கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட விசுவாசிகள் பிதாவாகிய தேவனுக்கு பிரியமானவர்களுமாய் இருக்கிறார்கள்” (யூதா 1). அவர்கள் “உலகத்தோற்றத்திற்கு முன்பே” கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் (எபே. 1:4), அவர்கள் “இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக காக்கப்பட்டவர்கள்” (யூதா 1). தேவனாலே அழைக்கப்பட்டவர்கள் அவரால் நீதிமான்களாக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுத்தபடுகிறார்கள் (ரோமர் 8:30). ஆகையால், தேவன் ஒருவரே “வழுவாதபடி அவர்களை காக்கவும் தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவராயிருக்கிறார்” (யூதா 24).
2. விசுவாசிகள் விசுவாசத்திற்காக போராடுபவர்கள்.
யூதா தன்னுடைய புத்தகத்தை வாசிக்கும் விசுவாசிகள், “ஒருமுறை பரிசுத்தவான்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காகப் போராட வேண்டும்” என்பதை வலியுறுத்தி எழுதுவதை அவசியமென்று கண்டார் (யூதா 3). விசுவாசிகள் தங்களுக்கு மிகவும் அருமையான விசுவாசத்திற்காகப் போராட வேண்டும். குறிப்பாக அவர்களுடைய சபைகளில் கிருபையின் போதனைகளுக்கு எதிராக ஊடுருவிய விபரீத போதனைகளுக்கு விரோதமாக போராட வேண்டும் என்றும் அவர் நினைவூட்டுகிறார். தேவபக்தியற்றவர்கள் மீது தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு வருகிறபடியினால், திருச்சபை விசுவாசிகள் விசுவாசத்திற்காக போராட வேண்டும் என்றும், மேலும் யூதா 5-16 வசனங்களில் பழைய ஏற்பாட்டின் கடந்த கால உதாரணங்களை பயன்படுத்தி, அதன் மூலம் அவபக்தி உள்ளவர்கள் மீது வரவிருக்கும் தேவனுடைய நியாயதீர்ப்பையும் எச்சரித்து எழுதுகிறார்.
3. விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்கள்.
ஏனெனில் விசுவாசிகள் சத்தியத்தின் மீது ஆர்வமற்றவர்களாகி, தவறான உபதேசத்தை ஏற்றுக்கொள்வதில் விருப்பம் காட்டுகிறவர்களாய், நம்முடைய தேவனுடைய உண்மையான கிருபையை புரட்டி, ஒன்றான ஆண்டவரும் இரட்சகரமாகிய இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கக்கூடும் என்பதினால், யூதா தொடர்ந்து, “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம் பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களை காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற காத்திருங்கள்” (யூதா 20–21) என்றும் எழுதுகிறார். அதோடுகூட, பலமான விசுவாசிகள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, பலவீனருக்கு இரக்கம் பாராட்டி, அவர்களுக்கு சத்தியத்தை நினைப்பூட்டி, அக்கினியிலிருந்து அவர்களை இழுத்துவிட்டு, இரட்சிப்புக்கேதுவாக வழிநடத்த வேண்டும் என்றும் கூறுகிறார் (யூதா 22–23).
ஒருவேளை நீங்கள் இன்று விசுவாசத்திற்கான போராட்டத்தை கைவிட்டு, பன்மைத்துவ இரட்சிப்பின் வழிகளை தழுவுவதற்கான, நுட்பமான கலாச்சாரத்திற்கேற்றார் போல் வாழ முற்படலாம். அல்லது உங்கள் விசுவாசத்தின் மையக் கோட்பாடுகளின் நம்பிக்கையிலிருந்து நழுவி, அதற்கு பதிலாக வேறு வழிகளை பின்பற்றியிருக்கலாம். வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையின் நிமித்தமாக உங்கள் வேத வாசிப்பையே கைவிட்டு விட்டு அதை மறுபடியும் சிரத்தையுடன் படிப்பதற்கான முயற்சிகளை வாஞ்சிக்கும்படி காணப்படலாம். அல்லது தவறான போதனைகள் இன்றும் சபைகளில் ஊடுருவியிருக்கிறது என்பதை இன்னும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டியதாயும் இருக்கலாம். இவ்விதமான ஒரு பன்மைத்துவ வழிகள்கொண்ட சமூகத்தின் மத்தியில் திரித்துவ தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை நீங்கள் சற்று நினைவு கூற வேண்டும். எப்படியிருந்தாலும், யூதா நம்மெல்லாருக்கும் ஏற்றதான ஒரு செய்தியை தமது நிருபத்தில் கொடுத்திருக்கிறார். விசுவாசத்திற்காகப் போராடவும், அதில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் வேண்டும் என்றும், அதே நேரத்தில், நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தில் உறுதியாயும், நித்தியமும் மகா மேன்மையும் கொண்ட தேவனுடைய மகிமை, மகத்துவம், ஆளுமை மற்றும் அதிகாரத்திலும் நாம் ஊன்றக்கட்டப்பட வேண்டும் என்றும் நம்மை ஊக்கப்படுத்துகிறார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.