3-Things-about-Revelation
வெளிப்படுத்தின விசேஷம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
20-05-2025
3-Things-about-Zephaniah
செப்பனியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
27-05-2025
3-Things-about-Revelation
வெளிப்படுத்தின விசேஷம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
20-05-2025
3-Things-about-Zephaniah
செப்பனியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
27-05-2025

எஸ்தர் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள  வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்

3-Things-about-Esther

எஸ்தர் புத்தகத்தில் தேவனுடைய பெயர் நேரடியாகக் எங்கும் சொல்லப்படவில்லை. வெளிப்படையாக சொல்வோமானால், எஸ்தர் சரித்திரத்தில் பக்திக்குரிய அல்லது மத ரீதியிலான எந்த காரியங்களும் காணப்படவில்லை. அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான நபர்களும் கூட  தேவனுடைய உடன்படிக்கையைப்  பற்றிக்கொண்டு, அதன் மீது அக்கறை கொண்ட பக்தியுள்ள மற்றும் விசுவாசமுள்ள யூதர்களாகவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட புத்தகத்திலிருந்து தேவனையும் அவருடைய வழிகளையும் குறித்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?.

எஸ்தர் மீதும் மற்றும் அவளுடைய சரித்திரத்தின்மீதும் எனக்கு எந்தவிதமான ஈர்ப்பும் இல்லாமல் (என் மகள்களில் ஒருவருக்கு எஸ்தரின் யூதப் பெயரான ஹடாசா என்று பெயரிட்டுள்ளேன்), எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் உண்மையான விசுவாசம் எங்கேயென்றும், அவர்களுடைய கிரியைகள் எபிரேயர் 11 இல் விவரிக்கப்பட்டுள்ள விசுவாசத்தைப் பிரதிபலிக்கின்றனவா என்றும் நான் சில சமயங்களில் யோசிப்பதுண்டு. ஆரம்ப நாட்களில் இவ்விதமான சிந்தனை போக்கு இருந்தபோதிலும், அதைத் தொடர்ந்து ஆராய்ந்து பார்த்தபோது தான் எஸ்தர்  புத்தகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையை உயிர்ப்பிக்கக்கூடிய, ஆழமான இறையியல் சத்தியங்கள் பொதிந்திருப்பதை நான் கண்டு கொண்டேன். எஸ்தர் புத்தகத்திலிருந்து நாம் சிந்திக்க வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள் உண்டு:

1. தேவனுடைய உடன்படிக்கையின் உண்மைத்தன்மை: எஸ்தர் , தேவனுடைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதை போல் காணப்பட்ட சமயத்தில் நம்பிக்கைக்குரிய எதிர்பார்ப்புகளோடு தோன்றின சரித்திர புத்தகமாகும்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வெகு தொலைவான தேசத்தில் எஸ்தர் சம்பவம் நிகழ்கிறது. கி.மு. 539 இல் கோரேஸ் ராஜாவின் கட்டளைக்கு பிறகு, சில இஸ்ரவேலர்கள் நாடுகடத்தப்பட்டு,  பின்பு எருசலேமுக்குத் திரும்பினர் (எஸ்றா 1:1-4 ஐப் பார்க்கவும்). இருப்பினும், சிலர் பெர்சியாவிலேயே தங்க முடிவு செய்தனர். அப்படி தங்கியிருந்த அந்த யூதர்களில் ஒருவரை பற்றியே இங்கே எஸ்தர் புத்தகத்தில் முதலாவது படிக்கிறோம். முந்தைய ராணியின் அகங்காரத்தால் பெர்சிய மன்னர் அவமானப்பட்ட பிறகு, எஸ்தர் பெர்சிய ராஜமேன்மையான வாழ்க்கைக்குட்பட்டு, அதிவேகமாக அத்தேசத்தின் ராணியாக நியமிக்கப்படுகிறாள்.

இந்த புத்தகத்தில் எதிர்பார்ப்பு, முரண்பாடு மற்றும் ஏளனம் போன்றவைகள் பின்னிப்பிணைந்த சரித்திரமாக எழுதப்பட்டது மட்டுமல்ல, ஒரு சிறிய, வாய்பேச்சில்லாமல் சைகையின் மூலமாகவே, இரண்டு ஆண்களுக்கு இடையே (அமலேக்கியனான ஆமான் மற்றும் யூதனான மொர்தெகாய்) எவ்வாறு  பிரச்சனைகள் உருவாகின்றது  என்பதையும் ஆசிரியர் விவரிக்கிறார். இந்த பிரச்சனையானது  அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு, இனப்படுகொலையாக மாறி தேவனுடைய உடன்படிக்கையின் ஜனங்களை (அதன் மூலம் அவருடைய வாக்குத்தத்தங்களை) கிட்டத்தட்ட அழிவுக்கு நேராக இட்டுச் செல்கிறதையும் பார்க்கலாம். ஒரு மதியீனமான ராஜாவினுடைய தூக்கமின்மை மற்றும் சட்ட ரீதியாக  நியமிக்கப்படாத ஒரு ராணியின் கணநேரத்தில் தோன்றிய புத்திசாலித்தனம் ஆகியவற்றின் மூலம் கடைசி நிமிடத்தில் நிலைமை தலைகீழாக மாறுகிறதையும் இங்கே பார்க்கலாம். யூத இனப்படுகொலையின் தலைவனாகிய ஆமான், தன் எதிரியான மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் அவனே தூக்கிப் போடப்படுவதையும் மற்றும் யூதர்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படுவதையும் ஒரு சேர காண முடிகிறது.

இந்த புத்தகத்தை ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய  நாவலைப் போல் படிக்கலாம், நீங்கள் இந்த சரித்திர புத்தகத்தை ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக  படிக்கவில்லையென்றால், அவ்வாறு செய்யும்படி நான் உங்களை அழைக்கிறேன். இதில் வரும் திருப்பங்கள் மிக முக்கியமான சத்தியங்களை நமக்கு கற்றுத் தருகின்றன.ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு தேவன்தாமே அளித்த உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் அவர்  உறுதியாக இருக்கிறார். மேலும் சாத்தானின் கைபொம்மைகளாகிய  – பார்வோன், ஆகாப், அப்சலோம், நேபுகாத்நேச்சர், ஆமான் என யாராக இருந்தாலும் தனக்கென ஒரு கூட்ட ஜனங்களை பாதுகாக்கும் தேவனுடைய  உடன்படிக்கையின் உறுதிபாட்டை யாராலும் தடுக்க முடியாது என்றும் இங்கு தெளிவாக காண்கிறோம்.

2. கண்ணுக்குப் புலப்படாத தேவனுடைய பராமரிப்பின் செயல்: தேவனை வல்லமையான செயல்களை உரத்த சத்தத்தோடு அறிவிக்கும் பொருட்டு எஸ்தர் புத்தகம்  தேவனுடைய மௌனத்தை காண்பிக்கிறது.

எஸ்தர் புத்தகத்தில் உள்ள வஞ்சப்புகழ்ச்சி நிறைந்த காரியங்கள் தேவனுடைய பராமரிப்பின் செயல்களை நமக்கு விளக்கப்படுத்தி காட்டுகின்றன. இதை ஹைடெல்பெர்க் விசுவாச கேள்வி – பதில் புத்தகம்  இவ்வாறு விவரிக்கிறது:

பராமரிப்பு என்பது தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியம் மற்றும் எங்கும் இருக்கிற அவருடைய வல்லமையின்  மூலமாக தேவன் தம்முடைய கரத்தால் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள எல்லா படைப்புகளையும் தாங்குகிறதை குறிக்கிறது., மேலும் இலை மற்றும் புல், மழை மற்றும் வறட்சி, செழிப்பான மற்றும் வறட்சியான ஆண்டுகள், புசிப்பவை மற்றும் குடிப்பவை, ஆரோக்கியம் மற்றும் நோய்,  செல்வம் மற்றும் வறுமை – உண்மையில் இவைகள் எல்லாமே, தற்செயலாக நமக்கு கொடுக்கப்படாமல், பரம தகப்பனின் வல்லமையான கரங்களிலிருந்தே நமக்கு வருகின்றன. (கேள்வி பதில் 27)

எஸ்தர் புத்தகத்தில் எல்லாம் தற்செயலாக நடப்பதுபோல் நமக்கு தோன்றலாம், ஆனால் பரம சிந்தை கொண்ட ஒரு நபர் இதை வாசிக்கும்போது, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்,தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு  (ரோமர் 8:28) மற்றும் அவருடைய உடன்படிக்கையின் ஜனங்களுடைய நன்மைக்காக எல்லாவற்றையும் ஒரு திறமையான, நாடக ஆசிரியராக இருந்து, அவர் ஒருங்கிணைத்து  செயல்படுத்துகிறதை காண முடியும். தேவனுடைய ஆளுகையின் பராமரிப்பில் விபத்துகள் என்று எதுவும் இல்லை. எஸ்தர் புத்தகத்தில் வரும் ஒவ்வொரு தற்செயலான காரியங்களும் தேவனுடைய அமைதியான மற்றும் கண்ணுக்கு தெரியாத பராமரிப்பின் ஆளுகையை சத்தமிட்டு கூறுகின்றன, இவ்விதமாகவே அவருடைய எல்லா படைப்பு மற்றும் அவைகளுடைய கிரியைகளையும் அவர் பராமரித்து ஆளுகை செய்கிறார் (WSC 11). இந்த புத்தகத்தில் காணப்படும் தேவனுடைய மௌனம் மிக முக்கியமான பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது: அவருடைய எல்லா படைப்புகளின் மீதான பாதுகாப்பை புறக்கணிக்க முடியாத அளவிற்கு தேவனுடைய சர்வவல்லமையுள்ள ஆளுகையானது அமைதியாகவே செயல்படுகிறது. இவை எல்லாவற்றையும் இயக்குகிற நாடக ஆசிரியருடைய செயல்களை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், அவருடைய ஆளுகையின் பராமரிப்பின் எல்லைக்கு வெளியே எதுவும் நிகழ்வதில்லை.

3. குறைவுள்ள மக்களை தேவன் தொடர்ச்சியாக தெரிந்தெடுக்கிறார்: எஸ்தர் புத்தகம் தேவனுடைய உடன்படிக்கையின் ஜனங்களென்று சொல்லப்படும் முக்கியமான நபர்களை பற்றிய பல ஒழுக்க ரீதியான, விசுவாசமுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

எபிரேய நடைக்கு ஏற்றார் போல் சொல்லப்பட்டுள்ள இந்த சரித்திரத்தின் ஆசிரியர் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கான தரத்தை பற்றி பேசாமல், அந்த நிகழ்வுகளை மட்டுமே பேசுகிறார். பெரும்பாலும் இந்த புத்தகத்தின் இரண்டு முக்கிய நபர்களான  எஸ்தர் மற்றும் மொர்தெகாய் ஆகிய இரண்டு பேருடைய முன்மாதிரியாக மற்றும் விசுவாச வீரர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். பயம் மற்றும் விசுவாசம் ஆகிய இரண்டும் இந்த புத்தகத்தில் கலந்து ஒரு குழப்பமான சூழலில் காணப்படுவதால் எது எதோடு தொடர்புடையது என்பதை கண்டுபிடிப்பது  வாசிப்பவர்களுக்கு சற்று கடினமானதே. எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் குணாதிசயங்கள் மற்றும் செயல்கள் குறித்து வாசிப்பவர்களுக்கு எழும் கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் கொடுக்கப்படவில்லை. அப்படி பதிலளிக்கப்படாத பல கேள்விகளில், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கேள்விகளும்  உள்ளடங்கும்.

1.மொர்தெகாயும்,எஸ்தரும் ஏன் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பி போகவில்லை  (எஸ்தர் 2:5)?

2.எஸ்தர் கர்த்தரால் விதிக்கப்பட்ட உணவு சம்பந்தமான சட்டங்களைப் பற்றி கவலைப்படவில்லையா, அல்லது அவள் அங்கு சூழ்நிலை கைதியாக காணப்பட்டாளா? (எஸ்தர் 2:9)?

3.எஸ்தர் தன் குலத்தையும் பூர்வோத்தரத்தையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று மொர்தெகாய் ஏன் அறிவுரை கூறினார் (எஸ்தர் 2:10, 20)?

4. சமீபத்தில் தனது மனைவியை தள்ளிவிட்ட ஒரு புறஜாதி ராஜாவினுடைய மனைவியாக செல்வதற்கு (எஸ்தர் 2:15-18), மொர்தெகாய் ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், தன் மகளை ராஜாவின்  அரண்மனைக்கு அனுப்பினான்? (எஸ்தர் 2:8)

5.மொர்தெகாய் ஆமானுக்கு முன்பாக வணங்க மறுத்தது  மிகப்பெரிய விளைவுகளுக்கு வழிவகுத்தது, இது இது ஒரு அற்பமான செயலா அல்லது விசுவாசத்தினுடைய வெளிப்பாடா? (எஸ்தர் 3:2)

6.தன் மக்களுக்காக ராஜாவிடம் ஆரம்பத்தில் மன்றாட  மறுத்தது எஸ்தரின் சுயநலமா அல்லது ஞானமான செயலா? (எஸ்தர் 4:10-11)?

7.யூதர்களைக் காப்பாற்ற ராஜாவிடம் முறையிடும் மொர்தெகாயின் வேண்டுகோளை எஸ்தர் ஆரம்பத்தில் மறுத்த பிறகு, மொர்தெகாய் தன் மகளை அவமானப்படுத்தும்படியாய் மிரட்டினானா அல்லது அது ஒரு கிருபையுடன் கூடிய எச்சரிப்பா? (எஸ்தர் 4:12-14).

8. ராஜாவுக்கும், ஆமானுக்கும் விருந்து வைக்கும்படியான எஸ்தரின் வேண்டுகோள்கள் ஏமாற்றுத்தனமானதா அல்லது நீதியுடன் கூடிய புத்திசாலித்தனமா? (எஸ்தர் 5:4-8).

9.யூதர்கள் இன்னும் முன்னூறு பேரை கொல்லவும், ஆமானின் பத்து மகன்களை தூக்கு மரத்தில் தொங்கவிடவும் அனுமதி கேட்ட எஸ்தரின் வேண்டுகோள் கொடூரமான பழிவாங்குதலா அல்லது சந்தர்ப்பத்திற்கேற்ற நியாயமான செயலா? (எஸ்தர் 9:13-15).

இந்த கேள்விகள் தீர்க்க முடியாத பிரச்சினைகள் போல தோன்றினாலும் – மீட்பின் சரித்திரத்தில் தேவனுடைய ஜனங்கள் முக்கியமான நபர்களாக செயல்பட்டு, ஒழுக்க ரீதியான செயல்பாடுகளில் தெளிவில்லாமல் காணப்படுவது, தேவனுடைய இரட்சிப்பு இறுதியில் அவருடைய ஜனங்களின் விசுவாசத்தையோ அல்லது இயலாமையையோ சார்ந்தது அல்ல என்கிற பிரகாசமுள்ள செய்தியை வெளிப்படுத்துகிறது. அவர் தம்முடைய நாமத்தின் நிமித்தம் தம்முடைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார் (ஏசாயா 48:9-11; எசேக்கியேல் 20:44 ஐப் பார்க்கவும்). எஸ்தரும் மொர்தெகாயும் – அவர்களுடைய பாவமான, பயங்கரமான செயல்களாலும் மற்றும் அவர்களுடைய நீதியான, விசுவாசமான செயல்களாலும்  “சீயோனுக்கு நன்மை செய்ய” (சங்கீதம் 51:18) தங்களை அர்ப்பணித்து, தேவனுடைய தடுக்க முடியாத மற்றும் உறுதியான திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். ஹடாசாவின் (எஸ்தர்) அழகான சரித்திரத்தின், உண்மையான அர்த்தம் இதுதான். எல்லாவற்றையும் சரியாகச் செய்யாத ஒரு எளிய “மிர்டில் மரம்” மான (ஹடாசா என்ற எபிரேய சொல்லின் அர்த்தம்) ராணியாகிய எஸ்தர், தேவனுடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பாதுகாக்கவும், அவருடைய  நோக்கங்களை நிறைவேற்றவும் கர்த்தருடைய கருவியாக இருந்து செயல்படுகிறாள் என்பது எஸ்தருடைய சரித்திரத்தில் மிகவும் தெளிவாக காணப்படுகிறது.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆரோன் கேரியட்
ஆரோன் கேரியட்
ஆரோன் எல். கேரியட் எஸ் எடிட்டர் பிரின்சிபல் டி டேப்லெட்க் இதழ், பேராசிரியர்.