
அவர் நம்மை விசாரிக்கிறவர்
22-10-2026
இயேசு ஏன் கடைசி ஆதாம் என்று அழைக்கப்படுகிறார்?
29-10-2026ஒரு போதகர் என்ன செய்கிறார்?
விரைவான சுருக்கம்
ஒரு போதகரின் பணி, கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவருடைய பரிசுத்த அழைப்பிலிருந்து உருவாகிறது. மேலும் அது மூன்று முதன்மைப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது: தேவபக்தியுள்ள முன்மாதிரியின் மூலம் திருச்சபையை வழிநடத்துதல், திருவசனம், அருட்சாதனங்கள் மற்றும் ஜெபத்தின் மூலம் ஆவிக்குரி ஊட்டத்தை வழங்குதல், மற்றும் மந்தையைப் பாவத்திலிருந்தும் தவறான போதனையிலிருந்தும் பாதுகாத்தல். போதகர். ஜோயல் ஸ்மித் அவர்கள், இந்தக் கடமைகள், தம் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுத்த பிரதான மேய்ப்பரான கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்ட, வேதத்தில் உள்ள மேய்ப்பன் என்னும் உருவத்தைப் பிரதிபலிக்கின்றன என்று விளக்குகிறார்.
என் மகன் மழலையர் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பள்ளியில் அவன் வரைந்த ஒரு வரைபடத்தை வீட்டிற்கு கொண்டு வந்தான். அது சுருக்கமாக அவனைப் பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் கூறுகின்ற வரைபடம். அதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று உன்னுடைய தகப்பன் என்ன வேலை செய்கிறார்? என்பது.
அவனுடைய பதில் ஒருவேளை ன, “என்னுடைய தகப்பன் அவர் ஒரு திருச்சபையின் போதகர்”, “அவர் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கிறார்” அல்லது “அவர் மக்களுக்கு இயேசுவைப் பற்றிய சொல்கிறார்” என்பது போல இருந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் இவற்றில் எதையும் அவன் கூறவில்லை எனக்கு மிகுந்த ஏமாற்றமும் ஆச்சரியமும் அளிக்கும் வகையில் அவனுடைய பதில் வெறுமனே, “அவர் தன் கணினியில் வேலை செய்து கொண்டு காஃபி குடிக்கிறார்” என்பதாக இருந்தது.
பல ஆண்டுகளாக என் மகனுக்குத் தன் தந்தையின் பணி குறித்த புரிதல் முதிர்ச்சியடைந்திருக்கும் என்று நான் நம்பினாலும், “ஒரு போதகர் என்ன செய்கிறார்?” என்ற கேள்விக்கு பெரியவர்களால்கூட அவ்வளவு எளிதில் பதிலளிக்க முடியாது என்பதை அந்த நகைச்சுவையான தருணம் எனக்கு உணர்த்தியது.
அப்படியானால், ஒரு போதகர் என்ன செய்கிறார் ?
ஒரு தனித்துவமான அழைப்பு
ஒரு போதகரின் பணி, முதன்மையாக, அவருடைய அழைப்பிலிருந்து உருவாகிறது. நற்செய்தி ஊழியத்திற்கான அழைப்பு, இரட்சிப்பிற்கான பொதுவான அழைப்பிலிருந்து வேறுபட்டது. அப்போஸ்தலனாகிய பவுல், தனது இளம் ஊழியனான தீமோத்தேயுவுக்கு, “கைகளை வைப்பதன்” மூலம் இந்தத் தனித்துவமான அழைப்பை நினைவூட்டி, அதை ஒரு “பரிசுத்த அழைப்பு” என்று விவரிக்கிறார் ( 2 தீமோ. 1:6-9 ). அது உண்மையில் ஒரு பரிசுத்த அழைப்பாகும், ஏனெனில் ஊழியர், ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ திறவுகோல்கள் ஒப்படைக்கப்பட்ட அவருடைய தூதராக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வார்த்தையிலும் செயலிலும் பிரதிநிதித்துவப்படுத்த, திருச்சபையால் மற்றும் அதன் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறார் ( 2 கொரி. 5:20 ; மத். 16:19 ).
இந்தப் பிரதிநிதித்துவ அதிகாரம் ஒருபோதும் சுயமுன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படக்கூடாது ( 2 கொரி. 4:5 ), அல்லது ஒருவரின் பராமரிப்பில் உள்ளவர்களை ஆதிக்கம் செலுத்தவும் கூடாது ( 1 பேதுரு 5:3 ). மாறாக, போதகரின் பணி என்பது தாழ்மையான சேவையாகும்; இது, தம்முடைய சீடர்களின் பாதங்களைக் கழுவிய ( யோவான் 13:1-17 ) நம் ஆண்டவரையே முன்மாதிரியாகக் கொண்டது. இந்த அழைப்பையும் நோக்கத்தையும் மனதில் கொண்டு, இந்த விதத்தில் சேவை செய்பவர்கள் ஆண்டவரால் மதிக்கப்படுகிறார்கள்—மேலும், தங்கள் பராமரிப்பில் உள்ள சபையாராலும் மதிக்கப்பட வேண்டும் ( 1 தீமோ. 5:17 ).
இந்த அழைப்பிலிருந்து மூன்று முதன்மைப் பொறுப்புகள் உருவாகின்றன.
1.வழிநடத்துதல்
முதலாவது கர்த்தராகிய கிறிஸ்துவின் திருச்சபையை வழி நடத்துவது. ஒரு போதகர் ஒரு தலைவர். ஆனால் இந்த தலைமைத்துவத்தை அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் பெரு நிறுவன தலைமைத்துவத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. அங்கெல்லாம் வெற்றியானது பெரும்பாலும் அதன் முடிவுகளைக் கொண்டே அளவிடப்படுகிறது.
கிறிஸ்துவின் சபையில் தலைமைத்துவம் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, தேவபக்தி மற்றும் கிறிஸ்துவைப் போன்ற தன்மையின் முன்மாதிரியாக விளங்கும் ஒரு தலைமைத்துவமாகும். யோசுவா தேவனுடைய மக்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் வழிநடத்திச் சென்றபோது, கர்த்தர் வெற்றியின் திறவுகோலாக இராணுவ உத்திகளை வழங்கவில்லை. மாறாக, அவர் யோசுவாவுக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”
(யோசுவா 1:8).
அதேபோல, பிரிவினையாலும் ஒழுக்கக் குழப்பத்தாலும் பீடிக்கப்பட்டிருந்த கொரிந்து சபையினரை நோக்கிப் பேசியபோது, பவுல் தேவபக்திக்கு வழிகாட்டியாகத் தனது சொந்த உதாரணத்தையே சுட்டிக்காட்டினார்: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல, நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்” ( 1 கொரி. 11:1 ).
தனிப்பட்ட நேர்மை மற்றும் தெய்வீக முன்மாதிரி எனும் இந்த அடித்தளத்திலிருந்தே, ஒரு போதகரால் தேவனுடைய மக்களை தேவனை ஆராதிப்பதிலும் திருச்சபையின் ஊழியத்திலும் வழிநடத்த முடிகிறது.
2. பராமரித்தல்
இரண்டாவது ஒரு போதகர் கர்த்தர் ஆகிய கிறிஸ்து இயேசுவின் திருச்சபையை பராமரிப்பதற்கென்று அழைக்கப்படுகிறார். விதத்தை பிரசிங்கிப்பதன் மூலமாகவும் திரு நியமங்கள் மற்றும் ஜெபத்தின் மூலமாகவும் இவைகள் நடைபெறுகிறது இவை எல்லாம் தேவன் தமது மக்களுக்கு முழுமையாகவும் போதுமான அளவிலும் ஊழியம் செய்வதற்காக ஏற்படுத்திய சிறப்பான இருப்பினும் சாதாரண கிருபையின் சாதனங்களாகும். இவற்றின் மூலமாகவே அவர் கிறிஸ்துவில் அவர்களுக்கு கிடைத்த மீட்பின் பலன்களை அவர்களுக்கு வழங்குகிறார்.
தன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மந்தைக்கு இந்த வழிமுறைகளை உண்மையாகவும் தொடர்ச்சியாகவும் வழங்குவதே ஊழியரின் பணியாகும். மற்ற கவலைகள் எவ்வளவு நியாயமானவையாக இருந்தாலும், அவர் அவற்றால் அதிகமாக திசைதிருப்பப்படக்கூடாது. ஆரம்பகாலத் திருச்சபையில் அன்றாட உணவு விநியோகம் தொடர்பாக அவசரத் தேவைகள் எழுந்தபோது, அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 6-ஆம் அதிகாரத்தில் இந்த முன்னுரிமையைத் தெளிவுபடுத்துகிறார் . பேதுரு பதிலளிக்கிறார், “நாம் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதை விட்டுவிட்டு, மேஜைகளுக்குப் பணிவிடை செய்வது சரியல்ல… ஆனால் நாம் ஜெபத்திற்கும் வார்த்தையின் ஊழியத்திற்கும் நம்மை அர்ப்பணிப்போம்” ( அப்போஸ்தலர் 6:2, 4 ).
ஒரு போதகரின் பணி, முதன்மையாக அவரின் அழைப்பிலிருந்து உருவாகிறது. சுவிசேஷ ஊழியத்திற்கான அழைப்பானது, இரட்சிப்பிற்கான பொதுவான அமைப்பிலிருந்து வேறுபட்டது.
இந்த வலியுறுத்தலானது, திருச்சபைக்குள் உள்ள மற்ற ஊழியங்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில்லை; மாறாக, அது ஆவிக்குரிய போஷாக்கு எனும் அடிப்படையான ஏற்பாட்டின் கீழ் அவற்றைச் சரியாக ஒழுங்குபடுத்துகிறது. பேதுரு இந்த முன்னுரிமையை நம் ஆண்டவரிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொண்டார்; அவர், “என் ஆடுகளை மேய்க்கும்படி” ( யோவான் 21:17 ) அவரிடம் மூன்று முறை கூறினார்.
3. பாதுகாத்தல்
மூன்றாவதாக, ஒரு போதகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பொறுப்பானது, முதல் மனிதனான ஆதாம் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அவர் ஏதேன் தோட்டத்தில் “அதைப் பண்படுத்தவும் அதைப் பாதுகாக்கவும்” ( ஆதி. 2:15 ) வைக்கப்பட்டார். தோட்டத்தைப் பண்படுத்துவதும், அதன் செழிப்பிற்குத் தடையாக இருக்கக்கூடிய எதிலிருந்தும் அதைப் பாதுகாப்பதும் ஆதாமின் பணியாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, ஆதாம் இந்தப் பாதுகாப்புப் பணியில் தோல்வியடைந்து, தன் மனைவி ஏவாள் மூலமாக சர்ப்பம் செய்த வஞ்சகத்திற்கு அடிபணிந்து, அதன் மூலம் மனிதகுலம் அனைத்தையும் பாவத்தில் ஆழ்த்தினார்.
இன்றுவரை, பாவமும் சாத்தானும் உலகத்தையும், குறிப்பாக திருச்சபையையும் தொடர்ந்து பீடித்து வருகின்றன. எனவே, ஊழியர் மந்தையைக் காப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆவிக்குரிய ஆபத்துகளுக்கு எதிராக எச்சரிக்கவும், பொல்லாதவனின் தாக்குதல்களுக்கு எதிராகப் போர் தொடுக்கவும் அவர் அழைக்கப்பட்டிருக்கிறார் ( எபேசியர் 6:10-20 ). அவ்வாறு செய்வதன் மூலம், உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிச் சென்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் இறுதி வெற்றி ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது என்று அவர் பிரகடனம் செய்கிறார். உலகின் வீழ்ச்சியுடனும் நமது சொந்த இருதயங்களுடனும் தொடர்ந்து நடக்கும் போராட்டத்தின் மத்தியிலும், திருச்சபை அவரில் வெற்றி பெற்று நிற்கிறது.
மேலும், போதகர் சபையின் சமாதானத்தையும் தூய்மையையும் பேணுவதற்குப் பாடுபட வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவின் மூப்பர்களுக்கு இந்த முக்கியமான அறிவுறுத்தலைக் கூறுகிறார்:
“ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்கு புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து வழித்திருங்கள்.”
(அப்போஸ்தலர் 20:28-31).
வழிநடத்துதல், பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய இந்த மூன்று பொறுப்புகளையும் , தேவனுடைய மக்களின் தலைவர்களுக்கான வேதத்தில் அடிக்கடி காணப்படும் உவமையான மேய்ப்பன் மூலம் சுருக்கமாகக் கூறலாம். “போதகர்” என்ற பட்டம்கூட, கிறிஸ்துவின் மந்தையைப் பராமரித்து, உணவளித்து, வளர்க்கும் இந்த உருவகத்திலிருந்தே வருகிறது.
இந்த மேய்ப்பர் மாதிரியானது, அதன் பரிபூரண முன்மாதிரியையும், அதன் நிலையான வலிமையையும், அதன் நித்திய பாதுகாப்பையும் பிரதான மேய்ப்பராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவில் காண்கிறது; அவர் “ஆடுகளுக்காகத் தம் ஜீவனைக் கொடுக்கிறார்” ( யோவான் 10:11 ). இந்தக் காரணத்திற்காக, அப்போஸ்தலனாகிய பேதுரு நற்செய்தி ஊழியர்களுக்கு இந்த நிலைத்திருக்கும் கட்டளையை அளிக்கிறார்:
“உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.”
(1 பேதுரு 5:2-4).
கர்த்தர் தமது கிருபையால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையை உண்மையுடன் மேய்க்கும் அநேக போதகர்களை எழுப்புவாராக.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


