
பெண் போதகர்கள் பற்றி வேதம் என்ன சொல்கிறது?
12-05-2026
சீர்திருத்த இரட்சிப்பியல் ஏன் அவசியம்?
19-05-2026வேதத்தில் இரட்சிப்பு
வேதாகமம் வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்டதோடு தொடங்குகிறது (ஆதி. 1-2), மேலும் அது ஒரு புதிய வானமும் புதிய பூமியும் சிருஷ்டிக்கப்படுவதோடு முடிவடைகிறது (வெளி. 21-22). சிருஷ்டிப்பும் புதிய சிருஷ்டிப்பும் வேதாகமத்தின் ஒட்டுமொத்த மீட்பின் வரலாற்று உள்ளடக்கத்தை வடிவமைத்து, அதை தேவனை மையமாகக்கொண்ட அதன் சரியான சூழலில் வைக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதனின் மீட்பு என்பது தேவனின் இறுதி முடிவு அல்லது இலக்கு அல்ல; அது இறுதிக்கு முந்தையது. வேதவாக்கியங்கள் மனிதனை மையமாகக் கொண்டவை அல்ல. அவை தேவனை மையமாகக் கொண்டவை. இறுதி முடிவு அல்லது இறுதி இலக்கு தேவனும் அவருடைய மகிமையுமே ஆகும். மனிதனின் மீட்பு அந்த இறுதி இலக்கிற்குச் சேவை செய்கிறது.
ஆதியாகமத்தில் ஆறு நாள் சிருஷ்டிப்பின் உச்சக்கட்ட செயல் தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்ததாகும். ஆனால் மனிதன் தனக்குத்தானே ஒரு இறுதி இலக்கு அல்ல. ஏழாவது நாள், மனிதன் தன் சிருஷ்டிகரை தொழுதுகொள்ளவே சிருஷ்டிக்கப்பட்டான் என்பதைக் காட்டுகிறது. தேவன் முதல் மனிதனுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார், இது பொதுவாக ‘கிரியைகளின் உடன்படிக்கை’ (covenant of works) என்று அழைக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கையில், ஆதாமுக்கும், அவனுக்குள் அவனுடைய சந்ததியினருக்கும், பூரணமான மற்றும் தனிப்பட்ட கீழ்ப்படிதலின் அடிப்படையில் ஜீவன் வாக்குத்தத்தம் செய்யப்பட்டது (வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 7.2). ஆனால் துக்ககரமாக, ஆதாமும் ஏவாளும் தங்களது அன்பான படைத்த தேவனின் வார்த்தையை விட சர்ப்பத்தின் வார்த்தையை நம்பத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்து, கிரியைகளின் உடன்படிக்கையின் மூலம் நித்திய ஜீவனைப் பெறும் தகுதியை இழந்தனர் (ஆதி. 3). அவர்களின் சந்ததியினரும் இதே முற்றிலும் தொலைந்துபோன நிலையிலேயே பிறக்கிறார்கள்.
ஆதாம் பாவத்தில் விழுந்த உடனேயே வேதவாக்கியங்களில் இரட்சிப்பின் கதை தொடங்குகிறது. ஆதாமையும் ஏவாளையும் தம்மோடு நிரந்தரப் பகைமை நிலையில் விட்டுவிடுவதற்குப் பதிலாக, தேவன் சர்ப்பத்திடம், “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகைமையை உண்டாக்குவேன்” என்று கூறுகிறார். மேலும் தேவன் இந்த அற்புதமான வாக்குத்தத்தத்தை இணைக்கிறார்: “அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதி. 3:15). இது சர்ப்பத்திற்கு எதிராக தேவனால் அறிவிக்கப்பட்ட ஒரு யுத்த பிரகடனம் ஆகும், மேலும் இது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அளிக்கப்பட்ட கிருபையின் அறிவிப்பாகும். இந்த இடத்திலிருந்து நாம் வேதத்தில் வாசிக்கும் அனைத்தும், இந்த ஆரம்பகால வாக்குத்தத்தங்களின் இறுதி நிறைவேற்றத்தை நோக்கி தேவன் கிரியை செய்வதையே காட்டுகின்றன.
மனிதகுலம் ஆரம்பத்தில் கேடான மற்றும் பாவத்திற்குள் மேலும் மேலும் கீழ்நோக்கிச் சுழன்றது, தேவன் ஜலப்பிரளயத்தைக் கொண்டு உலகை நியாயந்தீர்த்தார் (ஆதி. 6-9). எஞ்சியிருந்த ஒருசில தப்பிப்பிழைத்தவர்களும் தொடர்ந்து பாவம் செய்தனர், தேவன் அவர்களின் பாஷையைக் தாறுமாறாக்கி, அவர்களைப் பூமி எங்கும் சிதறடித்தார் (ஆதி. 11). ஆனால் அதன் பிறகு தேவன் ஆபிராமை அழைத்து அவரோடு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தங்களில்:
“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்றார்.
ஆபிரகாமின் ஒரு குமாரன் மூலமாகவே மனிதனின் இரட்சிப்பின் கிரியை நிறைவேற்றப்படும் என்றார் தேவன்.
இறுதியில், ஆபிரகாமின் சந்ததியினர் எகிப்தில் அடிமைகளாகிறார்கள். அங்கே இருந்தபோது, அவர்கள் ஒரு பெரிய ஜனத்தொகையாக பெருகுகிறார்கள் (யாத். 1:7). நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் தான் செய்யப்போவதை மோசேயிடம் கூறி, அதை ஜனங்களுக்கு அறிவிக்கும்படி கட்டளையிடுகிறார்:
“ஆதலால் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; நான் உங்களை எகிப்தியரின் பாரங்களுக்கு நீங்கலாக்கிப் புறப்படப்பண்ணி, அவர்களின் அடிமைத்தனத்திற்கு உங்களை நீங்களாக்கி விடுவித்து, ஓங்கிய கையினாலும் பெரிய நியாயத்தீர்ப்புகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்குத் தேவனாயிருப்பேன்; எகிப்தியரின் பாரங்களுக்கு நீங்கலாக உங்களைப் புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே என்று அறிவீர்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பதாக நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நானே கர்த்தர் என்று சொல் என்றார்” – யாத். 6:6-8.
“நான் உங்களைப் புறப்படப்பண்ணுவேன், நான் உங்களைக் கொண்டுபோய் சேர்ப்பேன்.” பழைய ஏற்பாட்டில் தேவன் செய்த மீட்பின் முன்மாதிரியான செயல்பாடு இதுதான். தீர்க்கதரிசிகள் பின்னர் வரவிருக்கும் ஒரு எதிர்கால, மாபெரும் மீட்பின் கிரியையைப் பற்றிப் பேசும்போது, அது இந்த எகிப்தின் விடுதலை சார்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியே விவரிக்கப்படுகிறது.
எகிப்து புறப்பாட்டின் போது, தேவன் தனது ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து, வரவிருக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் ஒரு ராஜ்யத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறார். இருப்பினும், ராஜாக்கள் மற்றும் ஜனங்களின் பாவங்கள் காரணமாக அந்த ராஜ்யம் நிலைத்து நிற்கவில்லை. தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் அவர்களை எச்சரித்தார், ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுத்து சிறையிருப்புக்கு அனுப்பப்பட்டனர். வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் தீர்க்கதரிசன எச்சரிக்கைகள், இறுதி வார்த்தையாக இருக்கவில்லை. நியாயத்தீர்ப்பின் மறுபக்கத்தில், முதலாவதான எகிப்து புறப்பாட்டை விட பெரியதொரு உன்னத மீட்பின் கிரியையைச் செய்வேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்கிறார். அவர் தனது ஜனங்களை இரட்சிக்க அவர்களுக்கு ஒரு இரட்சகரான ராஜாவை (மேசியாவை) அனுப்புவார். அவர் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி, ஒரு புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிப்பார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரவேலில் உள்ள ஒரு இளம் கன்னிப்பெண்ணுக்கு ஒரு தேவதூதன் தோன்றி, அவளுடைய குமாரன் இந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட மேசியானிய ராஜாவாக இருப்பார் என்று அறிவிக்கிறான் (லூக்கா 1:26-33). அவருடைய நாமம் இயேசு என்று அழைக்கப்படும், “ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21). இயேசுவே சாத்தானாகிய சர்ப்பத்தின் தலையை நசுக்க வந்தவர். அவர் ஆபிரகாமின் குமாரன், அவர் மூலமாகவே பூமியின் சகல வம்சங்கள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும் (மத்தேயு 1:1). அவரே நமது மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நமது அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பாடுபட்ட ஊழியக்காரர் (ஏசாயா 53:5). அவர் நமது பாவங்களுக்காக மரித்தார் (1 கொரி. 15:3), மேலும் அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 3:16; அப். 16:31).
இரண்டாவது ஆதாமாகிய இயேசுகிறிஸ்து ஒரு புதிய மனிதகுலத்தின் தலைவராக இருக்கிறார், மேலும் இந்த மாபெரும் புதிய எகிப்து விடுதலையில் அவர் தமது ஜனங்களைப் பாவம் மற்றும் பிசாசின் அந்தகாரத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, மெய்யான தேவனை ஆராதிக்கவும், தேவனுடன் ஐக்கியத்திலும் தொடர்பிலும் இருக்கவும், என்றென்றும் தேவனில் மகிழ்ந்து அனுபவிக்கவும் அவர்களைத் தமது நித்திய ராஜ்யத்திற்குள் கொண்டுவருகிறார். இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பின் கிரியையும், அதை அவருடைய ஜனங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும் வேதவாக்கியங்களில் உள்ள மிகவும் மகிமையான உபதேசங்களில் ஒன்றாகும். இந்த கட்டுரைத் தொடரில், திருச்சபை இந்த வேதபூர்வமான இரட்சிப்பின் கோட்பாட்டை எவ்வாறு புரிந்துகொண்டது மற்றும் சில நேரங்களில் எவ்வாறு
தவறாகப் புரிந்துகொண்டது என்பதைப் பார்ப்போம், மேலும் இந்த உபதேசத்தின் சரியான புரிதல் நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதை விளக்க முயற்சிப்போம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


