
மெய்யாகவே தேவன் அக்கறைக் கொள்கிறாரா?
10-03-2026கொடிய நோயின் தாக்கத்தின் மத்தியில் நமது நம்பிக்கையை கண்டடைதல்
என் மகனின் ஐந்தாவது பிறந்தநாளில், நான் அறுநூறு மைல்கள் தொலைவில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் அமர்ந்து, ஊசி வழியாக (IV bags) என் உடலுக்குள் கீமோதெரபி மருந்து செலுத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அரிய வகை புற்றுநோயுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். ஒரு மருத்துவப் பரிசோதனைக்காக எனது கணவர் மற்றும் மூன்று சிறு குழந்தைகளை விட்டு பிரிந்து பல மாதங்கள் இருக்க வேண்டியிருந்தது.
எனது உலக பிரகாரமான வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் அதிபயங்கரமான பயத்திற்குள்ளானேன். எனது நல்ல ஆரோக்கியம் மறைந்து போனது; அதினால் எனது திறமை, என்னுடைய தலைமுடி மற்றும் எதிர்காலத்தை குறித்து கணிக்கக்கூடிய சிந்தனைப்போக்கு என அனைத்தையும் நான் இழந்துவிட்டேன். என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்குப் பதிலாக, எனது நாட்கள் காத்திருப்பு அறைகளிலும், இரத்த மாற்றங்களிலும் (blood transfusions), மருத்துவப் பரிசோதனைகளிலும், ஓய்வெடுப்பதிலுமே கழிந்தன. என் குழந்தைகளின் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற தருணங்களை நான் தவறவிட்டேன், மேலும் பலவற்றைப் பார்க்க நான் உயிரோடு இருப்பேனா என்பதும் எனக்குத் தெரியவில்லை.
புற்றுநோய் மற்றும் அதிலிருந்து மீண்ட போராட்டங்களின் வழியாக, எனது உடல்நலம் சார்ந்த போராட்டங்களின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கக்கூடிய ஒரு நம்பிக்கை எனக்குத் தேவைப்பட்டது. தேவனுடைய இரக்கத்தாலும் கிருபையாலும், நாம் சார்ந்துக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த நம்பிக்கை நமக்கு இருக்கிறது: அவரே நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து. உங்களைப் போன்றும் என்னைப் போன்றும் துன்பப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்துவுக்குள்ளாக காணப்படும் இந்த ‘ஜீவனுள்ள நம்பிக்கையானது’ உலகப் பிரகாரமான சோதனைகளால் அசைக்கப்படாது என்றும், மகிமையான முடிவு உண்டாகும் வரைக்கும் அது நிலைத்திருக்கும் என்றும் உறுதியளிக்கவே பேதுரு தனது முதல் நிருபத்தை எழுதினார்.
நமது ஜீவனுள்ள நம்பிக்கை
பேதுரு தனது கடிதத்தை நமது ஜீவனுள்ள நம்பிக்கையைப் பற்றிய நற்செய்தியுடன் தொடங்கினார்:
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, தம்முடைய மிகுந்த இரக்கத்தின்படியே, ஜீவனுள்ள நம்பிக்கை நமக்கு உண்டாகும்படி நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். (1 பேதுரு 1:3)
இன்னும் கல்லறையில் இருக்கும் ஒரு இரட்சகரை நாம் சார்ந்திருக்கவில்லை. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பாவம் மற்றும் மரணத்தின் மீது தன்னுடைய வெற்றியை வெளியரங்கமாக்கினார் (1 கொரிந்தியர் 15:54–57). மேலும், அவரது உயிர்த்தெழுதல் என்பது உயிர்த்தெழுதல் சரித்திரத்தின் தொடக்கம் மட்டுமே. அவர் உயிர்த்தெழுந்தவர்களில் முதற்பலனானார்; அவர் நமது ஜீவனுள்ள நம்பிக்கையாக இருப்பதால், அவருக்குச் சொந்தமான அனைவரும் என்றென்றும் ஜீவிப்பார்கள் (1 கொரிந்தியர் 15:20–23).
கொடிய நோயின் பாதிப்பால் நாம் துன்பப்படும்போது, எளிதில் சோர்ந்துபோகவும், மனச்சோர்வடையவும் வாய்ப்புண்டு. வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையை நாம் இழக்கக்கூடும். அந்த இருண்ட நேரங்களில், பாதாளத்தை ஜெயித்த நமது ஜீவனுள்ள நம்பிக்கையான இரட்சகரைப் பற்றிக்கொள்ள வேண்டும். நம்மிடம் ஒரு ஜீவனுள்ள இரட்சகர் இருப்பதால், நமக்கும் ஜீவனுள்ள நம்பிக்கை உண்டு.
நமது அசைக்க முடியாத நம்பிக்கை
நாம் ஒரு ஜீவனுள்ள நம்பிக்கைக்கு மாத்திரமல்ல, பின்வரும் சுதந்தரத்திற்கும் மறுபடியும் நாம் பிறந்திருக்கிறோம்:
அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்தரத்திற்கு ஏதுவாகவும்… கடைசி காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது (1 பேதுரு 1:4–5).
கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் இந்த உலகத்தின் துன்பங்களுக்கு அப்பால் ஒரு பாதுகாப்பான சுதந்தரத்தை எதிர்பார்க்க முடியும். நமது சரீரத்தை இரக்கமின்றி சிதைக்கும் நோய்களால் அந்த சுதந்திரத்தை நம்மை விட்டு பறிக்க இயலாது. நம்மை நிலைகுலையச் செய்யும் சூழ்நிலைகளால் அதன் நித்தியமான பூரணத்தன்மையையும் தூய்மையையும் குறைக்க முடியாது. தேவன் நமக்காகப் பரலோகத்தில் வைத்திருப்பதை எதுவும் ஒன்றும் செய்யவோ பயமுறுத்தவோ முடியாது.
இந்த வாடாத சுதந்தரத்தை நாம் நிச்சயமாகப் பெறுவோம் என்று நமக்கு எப்படித் தெரியும்? விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நாம் காக்கப்படுகிறோம் என்று பேதுரு சொல்லுகிறார். இது நமது சொந்த வல்லமையையோ அல்லது நமது விசுவாசத்தின் வலிமையையோ பொறுத்தது அல்ல. தேவனுடைய இரக்கத்தால் இந்தச் சுதந்தரத்தைப் பெறுகிறோம், தேவனுடைய வல்லமையால் அதைத் தக்கவைத்துக் கொள்கிறோம். நம்மை இறுகப் பற்றியிருக்கும் தேவனுடைய கரத்தை அசைக்க முடியாததால் நமது நம்பிக்கையும் அசைக்க முடியாது (யோவான் 10:27–29).
நமது மகிமையான நம்பிக்கை
இந்த ஜீவனுள்ள, அசைக்க முடியாத நம்பிக்கையைப் பற்றி பேதுரு எழுதும்போது, அவர் வாழ்க்கையின் சோதனைகளை அறியாதவராக இருக்கவில்லை. இருப்பினும், துன்பங்களால் நாம் துக்கப்படும்போது சந்தோஷப்பட வேண்டும் என்று பேதுரு நம்மை கீழ்க்கண்டவாறு உற்சாகப்படுத்துகிறார்:
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்பட வேண்டியது அவசியமானதால் இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1 பேதுரு 1:6–7).
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நமது தற்காலிகப் பிரச்சினைகளை விட்டு நமது கண்களை நித்திய மகிமையை நோக்கி பார்க்கச் செய்கிறது. தேவன் நம்மில் நடப்பிக்கும் கிரியையினால், நாம் பலவிதமான உபத்திரவங்களினால் சோதிக்கப்படும்போது நமது விசுவாசம் உண்மையானது என்பதற்கு அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. கிறிஸ்து திரும்பவும் வரும்போது, இந்த சோதனைகளின் மூலம் பிதாவாகிய தேவன் நம்மில் பெருகச்செய்த விசுவாசமானது “புகழ்ச்சியும் மகிமையும் கனமும்” உண்டாகக் காணப்படும் (1 பேதுரு 1:7). இந்த மகிமை கிறிஸ்துவின் மகிமையாக இருக்கலாம் அல்லது, அவருடன் நாம் பெறப்போகும் மகிமையாக இருக்கலாம் அல்லது இரண்டையுமே குறிக்கலாம். ஆனால் கிறிஸ்துவுடனான நமது எதிர்காலம் மகிமையாக இருக்கும் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்; ஆகவே இன்று நாம் அனுபவிக்கும் துன்பத்தின் மத்தியிலும் நம்மால் மகிழ்ச்சியடைய முடியும்.
தாங்கொண்ணா வலியால் விழுங்கப்படும் போதும், பயம் நம்மை ஆட்கொள்ளும் போதும், சரீர ரீதியாகவும் மற்றும் எதிர்காலத்தை குறித்த மாற்றங்கள் நம்மைச் சோர்வடையச் செய்யும் போதும், கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய நம்பிக்கையே ஒரு நிலையான புகலிடமாகும். நமது ஜீவனுள்ள, அசைக்க முடியாத, மகிமையான நம்பிக்கையின் காரணமாக, நாமும் பேதுருவுடன் இணைந்து இவ்விதமாக சொல்லலாம்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக!” (1 பேதுரு 1:3).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

