
தேவன் மீதான பயபக்தி
03-11-202695 குற்றச்சாட்டுகள் எதை உள்ளடக்கியது?
அக்டோபர் 31, 1517 அன்று, அப்போது நடுத்தர வயதான 30 தாவது வயதில் இருந்த மார்ட்டின் லூத்தர், விட்டன்பர்க் நகரில் உள்ள கோட்டைத் தேவாலயத்திற்குச் சென்று, தனது தொண்ணூற்றைந்து கோட்பாடுகளைத் (Ninety-Five Theses) தேவாலயத்தின் வாசலில் ஆணியடித்தார். ஆரம்பத்தில் இவை பொதுவான விவாதத்திற்கான விவாதப் பொருட்களாகவே கருதப்பட்டன. மேலும் இவை வீதிகளில் மக்களால் பொதுவாக பேசப்படும் மொழியிலல்ல, அறிஞர்களின் மொழியான இலத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்தன. இவை ஐரோப்பா முழுவதும் எதிரொலிக்கும் என்றும், ஒரு ஆன்மீகப் புரட்சிக்கு வித்திடும் என்றும் லூத்தர் சற்றும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
தேவாலய கோட்டையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த அந்த செய்தியை பார்த்தவர்களில் பலர் இலத்தீன் மொழியை வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், விரைவில் அந்தக் கோட்பாடுகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பிறகு காட்டுத் தீ போல—உண்மையில், ஒரு “வல்லமையான தேவச் செயல்” போல—ஐரோப்பா முழுவதும் பரவின.
தொண்ணூற்றைந்து கோட்பாடுகள் எவற்றை உள்ளடக்கியது? அவை லூத்தரின் காலத்தில் சபையில் நிலவிய குறிப்பிட்ட சீர்கேடுகளை, குறிப்பாக பாவமன்னிப்புச் சீட்டுகள் ( indulgences), உத்தரிக்கும் ஸ்தலம் (purgatory), மற்றும் போப்பின் அதிகாரம் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகக் குறிவைத்துக் கூறப்பட்ட அறிக்கைகளாகும். அவற்றுள் முதல் கோட்பாடு மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது:
“நம்முடைய ஆண்டவரும் போதகருமாகிய இயேசு கிறிஸ்து, ‘மனந்திரும்புங்கள்’ என்று கூறியபோது, விசுவாசிகளின் முழு வாழ்க்கையுமே மனந்திரும்புதலாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தமாக இருந்தது.” (Dominus et magister noster Iesus Christus dicendo “Poenitentiam agite etc.” omnem vitam fidelium poenitentiam esse voluit.)
வல்கேட் (Vulgate) மொழிபெயர்ப்பில் “மனந்திரும்புங்கள்” (poenitentiam agite) என்ற வார்த்தையானது, “பிராயச்சித்தம் செய்யுங்கள்” (Do penitence / penance) என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்பதை லூத்தர் நன்கு அறிந்திருந்தார். மேலும், ஜான் கால்வின் பிற்காலத்தில் மிகுந்த தெளிவுடன் விளக்கிய ஒரு கொள்கையையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்: அதாவது, மனந்திரும்புதல் என்பது ஒரு கணத்தில் நிகழும் செயலல்ல; அது முழு வாழ்வின் திசையை மாற்றுவது—பரிசுத்த ஆவியானவரின் கிருபையினால் பாவத்தை முற்றிலுமாக வெறுத்து தள்ளும் ஒரு செயலாகும். எனவே, அது ஒரு கணத்தில் முடிவடையும் தனித்திருக்கும் செயலல்ல; அது நாம் மகிமையில் சேர்க்கப்படும் வரை தொடரும் ஒரு வாழ்க்கைமுறையாகும்.
மார்ட்டின் லூத்தர் ஒரு முழுமையான மற்றும் ஆவிக்குரிய வீரச்செயல்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார்; அதை ஒரு விரிவான வாழ்க்கை வரலாற்றால் மட்டுமே நன்றாக விவரிக்க முடியும். அவர் தேவன் அருளிய மகத்தான வல்லமையால் நிரப்பப்பட்ட ஒரு தனிச்சிறப்புடைய மனிதராவார். அவருடைய பேச்சு வெளிப்படையாகவும் தெளிவானதாகவும் இருந்தது, அடிக்கடி இயல்பானதாகவும் அமைந்தது. அவர் ஒரு இறையியல் ஆசிரியராகவும், சுவிசேஷப் பிரசங்கியாகவும், சீர்திருத்தக் காலத்தின் மிக முக்கியமான சில புத்தகங்களின் ஆசிரியராகவும் விளங்கினார். அவருடைய ஆரம்பகால வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவை, ‘ பாபிலோனிய சிறையிருப்பில் திருச்சபை’ (On the Babylonian Captivity of the Church) என்பதாகும். இதில் அவர் சபையின் தோல்விகளை வெளியரங்கமாக்கினார். அதே நேரத்தில் ‘ஒரு கிறிஸ்தவனின் சுதந்திரம்’ (On the Freedom of a Christian) என்ற நூலில், இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் எவ்வாறு தேவனை நேசிக்கவும், தன்னுடைய அயலானை சேவிக்கவும் விடுதலையாக்கப்பட்டுள்ளனர் என்பதை விளக்கினார். இதனால் அவர் சுவிசேஷத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையின் முரண்பாட்டை அழகுறச் சித்தரிக்கும் ஒரு வாக்கியத்தை எழுதினார்: “ஒரு கிறிஸ்தவன் என்பவன் மற்றெல்லாரையும்விட மிகவும் சுதந்திரமான பிரபு, யாருக்கும் அடிபணிந்தவன் அல்ல; ஒரு கிறிஸ்தவன் எல்லோரையும் விட மிகவும் கடமைமிக்க ஊழியன், மற்றும் எல்லாருக்கும் அடிபணிந்தவன்.”
தன் பிரசங்கங்களினாலும், எழுத்துக்களினாலும், குறிப்பாக கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாக வரும் கிருபையினாலே இரட்சிப்பு போன்ற சத்தியங்களை விளக்கப்படுத்தியதால் அவர் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், கிறிஸ்தவ திருச்சபைகளை மாற்றியமைக்க தேவன் லூத்தரைப் பயன்படுத்தினார். இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் முதன்மையான சீர்திருத்தவாதிகள் அவரது எழுத்துக்களால் தாக்கம் பெற்றனர், அவை பெரும்பாலும் வணிக மாலுமிகளால் இரகசியமாக உள்ளே கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக ஸ்காட்லாந்தில், இரத்த சாட்சிகளான செயின்ட் ஆண்ட்ரூஸ்,பேட்ரிக் ஹாமில்டனும், ஜார்ஜ் விஷாட்டும் (ஜான் நாக்ஸ் இவருக்கு பாதுகாப்பாளராக இருந்தவர்) லூத்தரின் போதனைகளை பின்பற்றிய சீஷர்களாக இருந்தனர். அதேபோல் இங்கிலாந்தில், வீரதீரமிக்க வில்லியம் டின்டேல் வேதாகமத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமல்லாமல், ஜெர்மன் சீர்திருத்தவாதியின் பணியை எதிரொலிக்கும் முழு இலக்கியத் தொகுப்பிலும் தனது பங்களிப்பை விட்டுச் சென்றார்.
ஆனால் லூத்தர் என்ன போதித்தார்? அவருடைய முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட சீர்திருத்தத்தின் தனித்துவமான கொள்கைகளை சுருக்கமாகக் பார்க்கலாம்:
வேதம் மட்டுமே (sola Scriptura): சபையின் பாரம்பரியங்களின் மூலமாக அல்ல, வேதத்தின் மூலமாக மட்டுமே நாம் தேவனை அறிந்து கொள்கிறோம்;
கிருபை மட்டுமே (sola gratia): நாம் தகுதியுள்ளவர்களாக இருப்பதினால் அல்ல, தேவனுடைய கிருபையின் மூலமாக மட்டுமே மன்னிப்பைப் பெறுகிறோம்;
விசுவாசம் மட்டுமே (sola fide): விசுவாசத்தோடு வேறு எதையாவது சேர்ப்பதன் மூலமல்ல, விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம்;
கிறிஸ்து மட்டுமே (solus Christus): தேவனுடைய சகல ஐசுவரியங்களும் கிறிஸ்துவில் மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றன;
தேவ மகிமை மட்டுமே (soli Deo gloria): நமது வாழ்வின் அனைத்து நோக்கமும் தேவனுடைய மகிமைக்காக மட்டுமே.
இந்தக் கொள்கைகள் லூத்தர் வேதத்தில் கண்டறிந்த இன்றியமையாத சத்தியங்களை எளிய முறையில் விளக்கப்படுத்துகின்றன. ஆனால் சூழ்நிலைகளை பார்க்கும்போது, இக்கொள்கைகளைப் பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷம் என்னவென்றால், அவை எதை வலியுறுத்தின என்பது மட்டுமல்ல, எதைத் நிராகரித்தன என்பதையும் உள்ளடக்கியுள்ளது. லூத்தரும் மற்ற மேலான அதிகாரம் கொண்ட சீர்திருத்தவாதிகளும் சபையை ஒருபோதும் இகழவில்லை. ஆனால் அவர்கள் சபையை இரட்சிப்பை வழங்கும் கருவியாகப் பார்க்காமல், கிருபையினால் வரும் இரட்சிப்புக்குச் சாட்சியாகவும் வல்லமையான எடுத்துக்காட்டாகவும் மட்டுமே பார்த்தார்கள். எனவே ஒரு வகையில், சபை நற்செய்தியைச் சரியாகப் போதிக்கத் தவறியது மட்டுமல்லாமல், இரட்சிப்பில் பரிசுத்த ஆவியானவரின் பங்கை அது தன் வசப்படுத்திக் கொள்ள முயன்றது. இரட்சிப்பை நடைமுறைப்படுத்துவதில் ஆவியானவரின் பணியை மீண்டும் நிலை நிறுத்துவதினால் மட்டுமே தேவனுடைய கிருபையின் தேவையையும், கிறிஸ்துவின் மூலமாக வரும் மன்னிப்பு மற்றும் புதிய வாழ்வின் மகிழ்ச்சியையும் மன்னிப்பையும் மனிதர்களுக்கு கொண்டுவரும். கிருபைக்கும் இரட்சிப்புக்கும் நாம் சபையின் மத்தியஸ்த பணியை அல்ல, கிறிஸ்துவை மட்டுமே நோக்கிப் பார்க்க வேண்டும்.
ஹுல்ட்ரிக் ஸ்விங்லி மற்றும் ஹென்ரிச் புல்லிங்கர், ஜான் கால்வின் மற்றும் ஜான் நாக்ஸ் மற்றும் மிகப்பெரிய மற்ற சீர்திருத்தவாதிகள் பற்றி நாம் இங்கே விவாதிக்கவில்லை. ஆனால் லூத்தரையும் அவருடைய தாக்கத்தையும் பற்றிய இந்தச் சிறிய சிந்தனையும் கூட, பதினாறாம் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான காலம் என்பதைக் காட்டுகிறது. அது தவறுகளும் தோல்விகளும் இல்லாத காலம் அல்ல. ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், தங்களுடைய பாவ பாரமானது இயேசு கிறிஸ்துவினால் நீக்கப்பட்டது என்பதையும், இறுதியாக அவர்கள் விடுதலைப்பெறமுடியும் என்பதை உணர்ந்து, இப்படிப்பட்ட மகத்தான சத்தியத்தால் கிடைக்கப்பெற்ற வல்லமையாலும், ஆற்றலினாலும் நிரப்பப்பட்டவர்களாக இருந்தனர். நாக்ஸ் இவ்வாறு உரைக்கிறார், அந்த நாட்கள் “தேவன் எளிய மனிதர்களுக்குத் தமது பரிசுத்த ஆவியானவரை நிறைவாக கொடுத்த” நாட்களாகும்.
அதுவே இன்றும் நமக்குத் தேவை!
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


