
இயேசு ஏன் கடைசி ஆதாம் என்று அழைக்கப்படுகிறார்?
29-10-2026தேவன் மீதான பயபக்தி
எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் கூறுகிறார், “ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.”
(எபிரேயர் 12:28-29). “பயபக்தி” என்பதற்குப் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை யூலபேயா (eulabeia) ஆகும் . அதன் பொருள் “தேவனுடைய பிரசன்னத்தில் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பு” என்பதாகும், மேலும் இது தேவனுக்குப் பயப்படும் பரிசுத்த பயத்தை விவரிக்கப் பயன்படுகிறது. புதிய உடன்படிக்கையின் விசுவாசிகளாகிய நாம் தேவனை ஆராதிப்பதை இந்தப் பயபக்தியே வரையறுக்க வேண்டும் என்று எபிரேயர் நிருபத்தின் எழுத்தாளர் வலியுறுத்துகிறார்.
ஆசிரியர் இந்த வார்த்தையை எபிரேயர் 5:7- ல் இன்னொரு முறையும் பயன்படுத்துகிறார் . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் செயல்களை விவரிக்க அவர் அதைப் பயன்படுத்துவதால், அந்த வார்த்தையின் பயன்பாடு வியப்பளிக்கிறது: “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,”. இயேசு கிறிஸ்து தேவனுடைய நித்திய குமாரன். அவர் நித்திய காலமெல்லாம் பிதாவாகிய தேவனுடன் இருந்தார். அவரும் பிதாவும் ஒன்றே: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” ( யோவான் 1:1 ).
ஆயினும், எபிரேயர் நிருபத்தின் எழுத்தாளர், இயேசு தமது ஊழியம் முழுவதும் பிதாவை “பக்தியுடன்” அணுகினார் என்று கூறுகிறார். தேவனுக்கான அவருடைய பயபக்தியே பிதாவுடனான அவருடைய தொடர்புகளை வரையறுத்தது. தேவனுக்கான அவருடைய பரிசுத்த பயபக்தியின் காரணமாகவே அவர் கேட்கப்பட்டார். கர்த்தராகிய இயேசு தமது வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்தார் என்பது குறித்த ஒரு பெரும் உள்ளுணர்வை இது நமக்குத் தருகிறது. அவர் தேவனைப் பற்றிய ஒரு மாபெரும் கண்ணோட்டத்துடன் வாழ்ந்தார். அவர் தேவனைப் பற்றிய அந்த பார்வையை ஒருபோதும் இழக்கவில்லை. அது ஒருபோதும் பார்வையில் இருந்து நழுவவில்லை, எந்தத் தடையும் அதை ஒருபோதும் மறைக்கவில்லை. பரிசேயரோ சதுசேயரோ அதை ஒருபோதும் தடுக்கவில்லை. பிசாசால் கூட அதைக் குறைக்க முடியவில்லை. தேவனைப் பற்றிய உயர்வான எண்ணம் இயேசுவை முழுமையாக நிரப்பியிருந்தது.
கர்த்தராகிய இயேசுவே பிதாவை இவ்வாறு அணுகினாரானால், நாமும் தேவனை இந்த வகையான பயபக்தியுடனும் பிரமிப்புடனும் அணுக வேண்டும் ( எபி. 12:28 ). “பிரமிப்பு” என்றால், தேவனுடைய மகத்துவத்தைக் கண்டு நாம் நடுங்குகிறோம் என்று பொருள். நாம் பிரமிப்பு என்ற வார்த்தையை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துகிறோம், ஆனால் அது உண்மையில் மிகவும் பிரமிப்பான ஒன்றான தேவனுக்காகவே ஒதுக்கப்பட வேண்டும், ஏனெனில் “நம்முடைய தேவன் பட்சிக்கும் அக்கினியாக இருக்கிறார்” ( எபி. 12:29 ). ஒரு பிரசங்கத்திலோ அல்லது சீஷத்துவக் கூட்டத்திலோ தேவன் “பட்சிக்கும் அக்கினி” என்று வர்ணிக்கப்படுவதை நீங்கள் கடைசியாக எப்போது கேட்டீர்கள்? நம்மை ஆறுதல்படுத்தும் உள்ளார்ந்த தேவன் மீது கவனம் செலுத்துவதற்கு நாம் மிகவும் பழகிவிட்டதால், அவருடைய மேன்மையையும் பரிசுத்தத்தையும் மறந்துவிடுகிறோம். அவர் இடத்திற்கும் காலத்திற்கும் அப்பாற்பட்டவர். அவர் பரிசுத்தமானவர், சர்வவல்லவர், நித்தியமானவர், நீதியுள்ளவர், மற்றும் சர்வ வல்லமையுள்ளவர். அவர் ஒரு “பட்சிக்கும் அக்கினி.”
கடவுளை நாம் ஆராதிக்கும் ஆராதனையில் ஆழ்ந்த பயம் இருக்கவேண்டும் என்பதை எபிரெயர் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
ஒருவேளை இந்த நிருபத்தின் ஆசிரியர் தேவனுடைய பர்வதமாகிய சீனாய் மலையில் கடவுள் தன்னை மோசேக்கு வெளிப்படுத்தியதை மனதில் வைத்து எழுதியிருக்கலாம்.
“அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார். அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான்.”
(யாத்திராகமம் 24:12-13).
மலையின் மீது ஏறி போவதற்கு மீதம் உள்ள ஜனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்கள் மலையில் ஏறாதபடிக்கு மலையைச் சுற்றிலும் மிகப்பெரிய எல்லை குறிக்கப்பட்டு இருந்தது. செல்களின் மூப்பர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் ஆனாலும் மலையின் மீது ஏறி போவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. யாரேனும் குறிக்கப்பட்ட இந்த எல்லையை மீறி செல்வார்களானால், தேவனால் அவர்கள் கொல்லப்படுவார்கள்.
வசனம் கூறுகிறது, மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
(யாத்திராகமம் 24:15)
“கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது. மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது. ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.” அதாவது மெய்யாகவே தேவனுடைய கணம் நிறைந்த பிரசன்னமானது அந்த மலையின் மீது தங்கி இருந்தது. இந்த மகிமை மிகவும் மேலானதாகவும் பரிசுத்தமானதாகவும் இருந்தபடியா அது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது. “மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது. ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.” (யாத் 24:16). “மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.” (யாத் 24:17).
தேவனுடைய வெளிப்பாடு பட்சிக்கிற அக்கினியாக மலையின் கொடுமுடியை பிரகாசித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக மோசே அந்த அக்கினியின் மேகத்துக்குள்ளாக 40 நாள் பகலும் 40 நாள் இரவும் இருந்தான். தேவனைப் பற்றிய இந்த காட்சியின் மூலமாக பரிசுத்த தேவனோடு உள்ள பயபக்திக்குரிய சந்திப்பை நாம் சிந்திக்க வேண்டும் என்பதை எபிரெய நிருபத்தின் ஆசிரியர் விரும்புகிறார். இந்த காரணத்திற்காகவே நாம் நமது மகத்துவமான பிரதான ஆசாரியனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனை சேருகிறோம். ஆனாலும் நாம் இந்த தேவனை பயத்துடனும் பக்தியுடனும் அணுகுகிறோம்.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


