
நமது சரீரங்களால் தேவனை மகிமைப்படுத்துதல்
24-11-2026யோபுவின் புத்தகத்தில் கிறிஸ்துவின் நிழல்
யோபுவின் புத்தகம் தனித்துவமானது, ஆனால் அது மீட்பின் வரலாறு முழுவதும் எதிரொலிக்கும் வழக்கமான விவரங்களையே வெளிப்படுத்துகிறது. யோசேப்பு மற்றும் தாவீதை போலவே இதுவும் விவரிக்கப்படும் ஒரு சரித்திர நிகழ்வாகும். இது தேவனால் அங்கீகரிக்கப்பட்ட, ஆழமான துன்பத்தினூடே தள்ளப்பட்ட, பின்னர் உயர்த்தப்பட்டு நிரூபனமாக்கப்பட்ட ஒரு மனிதனின் நிகழ்வாகும். இது தேவனுடைய குமாரன் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை (பிலிப்பியர் 2:5-9) பெறுவதற்கு முன்பு மிக மோசமான பாடுகளை சந்திப்பதற்கு முன்பே, முன்னறிவிக்கப்பட்ட கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதையாகும். கிறிஸ்துவின் ஆவியானவரால் முன்னுரைக்கப்பட்ட பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் முழுவதும் “கிறிஸ்துவின் பாடுகளையும், அதற்குப்பின்பு உண்டாகும் மகிமைகளையும்” பற்றியது என்று பேதுரு நமக்குக் கூறுகிறார் (1 பேதுரு 1:10-11). இவ்விதமான பாடுகளினூடே உண்டான மகிமையின் சரித்திரமானது கிறிஸ்துவின் பணியை நோக்கிப்பார்க்கும் படியாய் நம்மை வழிநடத்துவதே யோபு புத்தகத்தின் சாரம்சமாகும்.
யோபு எந்தவித குடும்ப வம்சாவளியும் இல்லாமல் அறிமுகப்படுத்தப்படுகிறார்; இது மெல்கிசேதேக்குடன் ஒப்புமைப்படுத்தப்படும் ஒரு தனித்துவமான அம்சமாகும், மேலும் எபிரேயர் நிருபத்தின் ஆக்கியோன் அதை முன்னுதாரணத்தின் (Typology) வெளிப்படையான ஆதாரமாகக் கருதினார் (எபி7:1–3). யோபு “உத்தமனும் சன்மார்க்கனும்” என்றும், “கிழக்கத்திபுத்திரர் எல்லாரிலும் பெரியவன்” என்றும் வர்ணிக்கப்படுகிறார் (யோபு 1:1, 3). “உத்தமனும் சன்மார்க்கனுமான அவனைப் போல பூமியில் … ஒருவனுமில்லை” என்று தேவன் அவரைப் புகழுவதை பார்க்கலாம் (1:8; 2:3). நிச்சயமாக, யோபு பாவமே இல்லாதவர் அல்ல, ஆனால் தேவனால் சொல்லப்பட்டபடியே அவருடைய துன்பங்களின் மத்தியில் அவன் எவ்விதமாக உத்தமனாகவும் சன்மார்க்கனாகவும் திகழ்ந்தான் என்பதை நம்மால் காண முடியும். “உத்தமனான” ஒரு மனிதன் பெரும் துன்பங்களை அனுபவிப்பது யோபுவின் சிநேகிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிந்தனையாக இருந்தது, ஆனால் அது யோபுவின் மூலமாக சொல்லப்படும் கிறிஸ்துவின் மாதிரியை வெளிப்படுத்தும் ஒரு படமாகும். இது பாடுகளினால் சோதிக்கப்பட வேண்டிய ஒரு உண்மையான பாவமற்ற மனிதனை வெளிப்படுத்த அவசியமான இரட்சிப்பின் திட்டத்தை சுட்டிக்காட்டுகிறது.
பரலோகத்தின் சிங்காசனத்திற்கு சீக்கிரமாக இந்த புத்தகம் நம்மை கொண்டு செல்கிறது, அங்கு தேவன் சாத்தானை அழைத்து அவன் தன்னைக் குறித்து கணக்கொப்புவிக்கும்படி கேட்கிறார். தான் பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித் திரிந்து வருகிறேன் என்று சாத்தான் பெருமை அடைகிறான் (1:7). பூமியிலே சாத்தானுக்கு கொடுக்கப்பட்ட வேலையையும் மற்றும் பெருமையோடு தன்னுடைய சுயாட்சியை செயல்பாட்டிற்கும் தேவன் எவ்வாறு பதிலளிப்பார்? பூமியில் சுற்றித் திரிந்து தன்னுடைய தீமையான சிந்தனையை பரப்பும் இவ்விதமான எதிரிக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார்? இதுவே புத்தகத்தின் முக்கியக் கேள்வியாகும், அதற்கு தேவன், “என் தாசனாகிய யோபுவின் மீது கவனம் வைத்தாயோ ?” என்று பதிலளிக்கிறார். பூமியில் சுற்றித் திரிபவனான எதிரிக்கு தேவன், பெரும் துன்பங்களைச் சகித்து முடிவில் உயர்த்தப்படும் ஒரு மனிதனுடைய உதாரணத்தின் ஒரு வகையை பதிலாக காண்பிக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் முன்ருசியாகும், இதில் ஒரு நீதியான மனிதன் வதைக்கப்படுகிறான் ஆனால் எதிரி நசுக்கப்படுகிறான் (ஆதியாகமம் 3:15).
யோபுவின் விசுவாசத்தை துன்பங்களின் மூலம் சோதித்துப் பார்க்குமாறு தேவன் சாத்தானுக்கு சவால் விடுத்து அழைப்பையும் கொடுக்கிறார் . இங்கே வெளிப்படுத்தப்படும் நிகழ்வானது கடினமான காலங்களில் ஒரு சராசரி விசுவாசி கர்த்தரை நம்பும் சாதாரண கதையல்ல. இங்கே சொல்லப்படுவது பூமியில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் உத்தமனான ஒரு மனிதன் ஒரே நாளில் தன் வாழ்வைத் தவிர மற்ற அனைத்தையும் இழக்கும் ஒரு சரித்திரமாகும். இந்தக் கதையில் சாதாரணமானது என்று எதுவுமே இல்லை. யோபு பூமியின் மிகச்சிறந்த மற்றும் பக்தியுள்ள மனிதராக இருப்பதில் இருந்து ஆரம்பித்து, அவரது நண்பர்களுக்கே அடையாளம் தெரியாதவராக மாறுவது வரைக்கும் மனித அனுபவத்தின் இரண்டு முனைகளிலும் உள்ள உச்சகட்ட எல்லைகளையும் விவரிக்கிறது (யோபு 2:12). இத்தகைய மாபெரும் தாழ்மைபடுத்தப்படுதல், மனித அனுபவத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட, “தேவனுக்கு சமமாக இருந்து” பின்னர் “சிலுவையின் மரணத்திற்கு” கீழ்ப்படிந்த ஒருவரையே (பிலிப்பியர் 2:6-8) முன்னறிவிக்கிறது.
யோபுவிற்கும் அவரது “நண்பர்களுக்கும்” இடையே முப்பத்தைந்து அதிகாரங்களுக்கு குறையாமல் ஒரு நீண்ட உரையாடல் தொடர்கிறது. அவர்களுடைய வாதத்தின் மையம் என்னவென்றால், யோபு பாவம் செய்துவிட்டு இந்த பொல்லாப்பைத் தன் மீது வருவித்துக் கொண்டாரா என்பதுதான். எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோபார் ஆகிய மூவரும், யோபு ஏதோ ஒரு பெரிய பாவத்தை மறைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர், ஏனெனில் பாவிகள் மட்டுமே அத்தகைய பேரழிவை அனுபவிக்கிறார்கள், அதே நேரத்தில் நீதியுள்ளவர்கள் மட்டுமே செழிப்பை அனுபவிக்கிறார்கள் என்று நினைத்தார்கள் (அவர்கள் அந்தக் காலகட்டத்தின் “சுகம் மற்றும் செல்வம்”போன்ற செழிப்பை பிரசங்கிப்பவர்களாக இருந்தனர்). இந்த மூன்று நண்பர்களும் தேவனுடைய ஆளுகையை குறித்ததான அவர்களுடைய எளிமையான பார்வையும் புத்தகத்தின் முடிவில் தேவனால் கண்டிக்கப்படுகின்றன, ஆனால் அவர்கள் அறியாமலேயே யோபுவின் முன்னுதாரணத்தின் நோக்கத்தில் ஒரு பங்கை வகித்தனர். “உத்தமனும் சன்மார்க்கனுமான” இந்த மனிதனை அவர் செய்யாத பாவங்களுக்காக அவர்கள் பொய்யாகக் குற்றம் சாட்டுகின்றனர், அதுபோலவே முற்றிலும் பரிபூரணரான இரட்சகரும் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு “அக்கிரமக்காரர்களில் ஒருவராக எண்ணப்பட்டார்” (ஏசாயா 53:12; லூக்கா 22:37).
தனது தோழர்களுடனான மிகுதியான சூடான முறையிலான வாக்குவாதம் முழுவதிலும், யோபு அவர்களின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து தனது பாவமற்ற தன்மையை நிலைநிறுத்தி கொண்டே இருக்கிறார் (எ.கா., யோபு 27:5-6). அவரது குற்றமற்ற தன்மையை பற்றிய வெளிப்படுத்தல்கள் அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆவேசமான பாதுகாப்பு மட்டுமல்ல, அவரது பாவம் அந்த அளவுக்குத் துன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதியானதா இல்லையா என்பது பற்றிய ஒப்பீடு மட்டுமல்ல. யோபு உண்மையிலேயே பாவம் செய்யாத முழுமையான மனிதனாக அர்த்தப்படுத்தப்படவில்லை, மாறாக முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தில் தனது பங்கை வகிக்கும் ஒரு முன்னுதாரணமான குற்றமற்ற வடிவத்தை கொண்டிருந்தார். யோபுவின் துன்பம் பாவம் காரணமாக ஏற்பட்டதல்ல என்பதை தேவன் உறுதிப்படுத்தினார், சாத்தானை நோக்கி, “காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டாய்” என்று கூறுகிறார் (2:3). யோபுவும் தனது துன்பம் காரணமின்றி ஏற்பட்டது என்றே வாதிடுகிறார்: “அவர் புசலினால் என்னை முறிக்கிறார் முகாந்திரம் இல்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்” (9:17) என்ற சொற்றொடர் கிறிஸ்து தனது சொந்தத் துன்பங்களையும் பாடுகளையும் விவரிக்கப் பயன்படுத்திய ஒரு முக்கிய சொற்றொடராகும் (யோவான் 15:25 பார்க்கவும்).
தனக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மனித எதிரிகளின் கூட்டத்தையும், தன்னை இகழ்ந்து, கேலி செய்து, தாக்கி, துப்பிய பொல்லாத மனிதர்களை குறித்து யோபு விவரிக்கிறார். “தேவன் என்னை அநியாயக்காரர் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்பட பண்ணினார்” (யோபு 16:11). “ஜனங்களுக்குள்ளே அவர் என்னை பழமொழியாக வைத்தார் அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்” (17:6). தனது குற்றமற்ற நிலைமையில் துன்பப்படும் இந்த மனிதனுக்கு எதிராக தேவன் ஏன் எதிரிகளின் உலகத்தை ஏவினார்? இது கிறிஸ்துவினுடைய வாழ்க்கையில் நிறைவேற்றப்படவிருக்கும் முன்னுதாரணமான பிம்பத்தின் ஒரு பகுதியாகும். மேசியாவை பற்றி சொல்லப்படும் சங்கீதங்களில் நாம் காணும் அதே பாடுகளின் பிம்பங்களை யோபு பயன்படுத்துகிறார்; உதாரணமாக, “எனக்கு விரோதமாய் தங்கள் வாயை விரிவாய் திறந்தார்கள் யோபு 16:10; சங்கீதம் 22:13 பார்க்கவும்) மற்றும் “இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்” (யோபு 30:9; சங்கீதம் 69:11-12 பார்க்கவும்). இது போன்ற ஒப்புமைகள் எண்ணற்றவை, மேலும் அவை யோபுவின் பாடுகளின் மத்தியில் அவருடைய நீண்ட, பாடல்களின் மூலமாக வெளிப்படுகின்றன. அவர் தனது சொந்தத் துன்பங்களின் மூலமாக வரவிருக்கும் பாடுபடும் இரட்சகரை குறித்த வரலாற்று ரீதியாக சொல்லப்பட்ட தீர்க்கதரிசன செய்திகளின் வடிவத்தை பிரதிபலிக்கிறார்.
புத்தகம் முழுவதும் உள்ள ராஜரீக மற்றும் ஆசாரியத்துவ உருவகங்கள் மூலம் யோபுவின் முன்னுதாரண பங்களிப்பு மேலும் எடுத்துக்காட்டப்படுகிறது. அவர் தன்னைத் தாழ்த்தி தன்னுடைய கிரீடத்தை இழந்த ஒரு ராஜாவைப் போல் தன்னை காண்பிக்கிறார்: “என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை அவர் எடுத்துப் போட்டார் ” (யோபு 19:9). தேவன் மேசியாவாகிய கிறிஸ்துவை விழுந்து போகும்படி செய்ததை சங்கீதக்காரன் தனது வருத்தத்தை விவரிக்க எழுதப்பட்ட சங்கீதம் 89:44 இல் அதே உருவகத்தைப் பயன்படுத்துகிறதை காணலாம்: “அவன் மகிமையை அற்றுப்போகப் பண்ணி அவன் சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர்.” யோபு ஒரு ராஜாவை போல, தேவனுடைய கரத்தால் பெரும் அவமானத்தைச் சந்திக்கும் ராஜாவாக தன்னைச் சித்தரிக்கிறார்.
இந்தப் புத்தகம் யோபு தனது குடும்பத்தினருக்காகவும் நண்பர்களுக்காகவும் பலிகளையும் பரிந்துபேசுதல்களையும் செய்வதோடு தொடங்குகிறது (யோபு 1:5) மற்றும் முடிகிறது (42:7-9). பிந்தைய பகுதியானது தேவன் யோபுவின் முகத்தை பார்த்தார் என்று இரண்டு முறை கூறுகிறது. தேவன் யோபுவை அவருடைய சோதனைகளிலிருந்து தப்புவித்தார், அவரை அங்கீகரித்தார், மேலும் வழிதப்பிய அவருடைய மூன்று நண்பர்களுக்காக அவர் செய்யும் பரிந்துபேசுதலைப் கேட்க தயாராக இருந்தார்: “என் தாசனான யோபு உங்களுக்காக ஜெபம் பண்ணுவான்; நான் அவன் முகத்தைப் பார்த்து” (42:8) என்று வருகிறது. யோபுவின் கதை துன்பத்தின் மூலமாக பரிந்துபேசுதலின் பூரணத்தை வெளிப்படுத்தும் கதையாகும், இது நமது மகா பிரதான ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிபூரண ஊழியத்தைச் சுட்டிக்காட்டுகிறது (எபிரேயர் 5:7-10).
தனது இறுதி பகுதியில், யோபு தனது நண்பர்களின் வாயை அடைத்து மற்றும் தன்னுடைய முன்னுதாரணப் பங்களிப்பை வெளிப்படுத்தும் முத்திரையாகிய ஒரு குண்டை வீசுகிறார். 31 ஆம் அதிகாரத்தில், அவருடைய குற்றமற்றத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு பொதுவான சூத்திரத்தைப் பயன்படுத்துகிறார். “இருந்தால்-அப்போது” என்று பல அறிக்கைகளை அங்கே வெளிப்படுத்துகிறார்; உதாரணமாக: “நான் மாயையிலே நடந்திருந்தால்” (வசனம் 5), “அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக” (வசனம் 8). அவரது இறுதி உறுதிமொழி முழு உரையாடலையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருகிறது: “நான் ஆதாமை போல் என் மீறுதல்களை மூடி என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்து வைத்தேனோ” (வசனம் 33), “[அப்பொழுது] கோதுமைக்குப் பதிலாக முட்களும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்ககடவது” (வசனம் 40). யோபு வெளிப்படையாக முதல் மனிதனான ஆதாமுடைய முதல் பாவத்தையும் அதனால் விளைந்த சாபத்தையும் குறிப்பிடுகிறார். வியக்கத்தக்க வகையில், அவர் முதல் பாவியைப் போல தான் பாவம் செய்யவில்லை என்பதற்கு ஒரு சபதம் செய்கிறார், அங்கு ஆதாம் தோல்வியடைந்த இடத்தில், அவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் குற்றமற்றவராய் துன்பப்பட்ட போது, கடைசி ஆதாமை பற்றி பேசுவதற்கான முன்னடையாளமாக திகழ்ந்தார், அத்தகைய காரியத்தை பற்றி பேசக்கூடிய ஒரே நபர் அவர்தான் (ரோமர் 5:12–21; 1 கொரிந்தியர் 15:45). இந்த மூச்சுத் திணற வைக்கும் வார்த்தைகளுக்குப் பிறகு, யோபு 31 இவ்வாறு முடிகிறது: “யோபுவின் வார்த்தைகள் முடிவடைந்தன” (வசனம் 40).
நான்காவது “நண்பரான” எலிகூ உள்ளே நுழைகிறார், அவர் யாருக்கும் பதிலளிக்க இடம் கொடாமல் ஒரு தனி கட்டுரையை ஐந்து அதிகாரங்களின் நமக்கு வழங்குகிறார். “அவனுக்கு கோபம் மூண்டது ” (32:2), என்ற சொல்லிற்கான முக்கியக் காரணம் 31 ஆம் அதிகாரத்தின் முடிவில் யோபுவின் அதிர்ச்சியூட்டும் வார்த்தைகளாக இருக்கலாம். இந்த உரையாடலில் அவரது பங்கு குறித்து பரவலான கருத்துக்கள் உள்ளன, ஆனால் மற்ற மூன்று பேரைப் போலவே, அவரும் யோபுவைப் பாவத்திற்காகத் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார் (34:36-37). தனக்கு பரிபூரண அறிவு இருப்பதாகக் கூறும் அவரது துணிச்சலான கூற்றுக்கு அப்பால் (36:4), எலிகூ தேவனுக்காக ஒரு மத்தியஸ்தராக இருப்பதைப் போல தோற்றமளித்தார் (33:6), ஆனால் அது யோபுவுக்கு நன்றாக தெரியும் . யோபு புத்தகம் முழுவதும் தன்னுடைய உண்மையான பரலோக மத்தியஸ்தரைப் பற்றிப் பேசியிருக்கிறார் (16:19–21; 19:23–27), அது எலிகூ அல்ல. இந்த நான்காவது “நண்பர்” சாத்தானின் கடைசி தந்திரமாக இருக்கலாம், அவரை நாம் 2 ஆம் அதிகாரத்திலிருந்து இதுவரை பார்க்கவில்லை, மேலும் நன்கு அறிவுள்ள நண்பரைப் பயன்படுத்தி சோதிக்கும் ஒரு வழியை பயன்படுத்தவும் சாத்தான் தயங்கமாட்டான் (மத்தேயு 16:23).
இறுதியில், யோபு 38 இல் தேவன் “புசல்காற்றிலிருந்து” பதிலளிக்கிறார். “நான் பூமியின் அடிக்கல்லை நாட்டினபோது நீ எங்கே இருந்தாய்?” என்று படைப்பு மற்றும் அவருடைய ஆளுகை வெளிப்படும் அவருடைய புரிந்துகொள்ள முடியாத ஞானத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் கேள்விகளோடு தொடங்குகிறார். யோபுவும் அவரது நண்பர்களும் தாங்கள் புரிந்துகொள்ள முடியாததை விளக்க முயன்று இருளில் போராடிக்கொண்டிருந்தனர், ஆனால் தேவனுடைய பதில் அவர்களுக்கு ஒரு உயர்வான முக்கியமான ஒரு தொடக்கப் புள்ளியை காண்பித்தது. யோபுவின் பாடுகளின் அர்த்தமானது தேவனுடைய ஆராய முடியாத ஞானத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவர் மனிதனுடைய பாடுகளின் ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்பாக இருந்து தனது நன்மையான மற்றும் ஞானமான நோக்கங்களை நிறைவேற்றுகிறார், குறிப்பாக ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த இந்த ஒரு மனிதனின் வாழ்க்கையின் மூலமாக.
யோபுவின் ஆரம்ப வாழ்க்கை இன்பமாக இருந்தது என்றால், இறுதியில் அது மகத்துவத்திற்குக் குறைவில்லாமலே முடிந்தது . அவரது சோதனை முடிந்தபின், யோபு ஆரம்பத்தில் இருந்ததை விட இருமடங்கு அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டார் (யோபு 42:10, 12), இது துன்பம் அதிக மகிமைக்கு வழிவகுக்கும் என்பதற்கான முன்னுதாரணமாக திகழ்கிறது. ஆனால் எந்த குடும்ப பின்னணியும் இல்லாமல் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மனிதன் எல்லாவற்றிற்கும் மேலான ஒரு மனிதர்தான், அவர் “நெடுநாள் இருந்து பூரண வயதுள்ளவனாய் மரித்தான்” (வசனம் 17). இன்னும் அதிகமாகத் தன்னைத் தாழ்த்தி, இதைப் பார்க்கிலும் மேலான பெரிய காரியங்களைச் சகித்தவரான ஒருவர், நமக்காக “எப்பொழுதும் பரிந்து பேசும்படி உயிரோடிருக்கிறார்” (எபிரேயர் 7:25).
இக்கட்டுரை முதலில் டேபிள்டாக் (Tabletalk) இதழில் வெளியிடப்பட்டது.


