
நான் ஒரு தேவபக்தியுள்ள தந்தையாக எப்படி இருக்க வேண்டும்?
09-09-2025
துன்பங்கள் மற்றும் சோதனைகள் வழியாக பிள்ளைகளை மேய்த்தல்
18-09-2025கிறிஸ்தவர்கள் மரணநிகழ்வில் துக்கமடைவது சரியா?
இது வழக்கத்திற்கு மாறாக வாழ்க்கையின் சூழ்நிலைகள் செல்லும் போது நடக்கும் வழக்கமான ஒன்றாகும்: துயரம் நமது இனிமையான வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நுழைந்து, சீர்குலைக்கிறது. துக்ககரமான அனுபவங்கள் அழைக்கப்படாத விருந்தாளியாக அதனுடைய தாக்கத்தை நம் வாழ்வில் செயல்படுத்துகிறது. அவை அழைக்கப்படாமலேயே,உள்ளே நுழைந்து, அதன் தாக்கத்தினால் துயரத்தையும், மனவலிகளையும், தாழ்வு மனப்பான்மையுள்ள உணர்வுகளையும் ஏற்படுத்திச் செல்கிறது. இவ்விதமான வேதனையுள்ள தருணங்கள் மெய்யான சஞ்சலங்களையும், இழப்பையும் கொண்டு வருகிறது. கூடுதலாக, அவை ஒருபோதும் நாம் விரும்பின நேரத்தில் வருவதில்லை. ஏனென்றால், நேர்மையாகச் சொல்லப்போனால், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நாம் ஒருபோதும் விரும்பாததே அதற்கு காரணம்.
ஆயினும், திருச்சபையில் சில சமயங்களில் நாம் நமது துக்கத்தை மறைத்து, மகிழ்ச்சியான முகஸ்துதியுடன் நம்மை காட்டிக்கொண்டு, மேலும் நாம் எதிர்கொள்ளும் இதுபோன்ற சவால்கள் “நன்றாகவே உள்ளன” என்று எண்ணி நம்முடைய வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை நம்மில் காணப்படுகிறது. உள்ளான நிலையில் நாம் “நன்றாக” இல்லாதபோதும், “எப்படி இருக்கிறீர்கள்?” என்ற வழக்கமான கேள்விக்கு, “நான் நலமாக இருக்கிறேன், நன்றி” என்று பதிலளிக்கிறோம். நாம் ஆராதனைக்குச் சென்று, நமது தற்போதைய சூழ்நிலைக்கு ஒரு படி அதிகமாகவே, உற்சாகமாகத் தோன்றும் பாடல்களைப் பாடுகிறோம்.
கர்த்தருடைய பலத்தால் இடைகட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் துக்கப்பட வேண்டியதில்லை (ஒருவேளை கூடாது) என்றும், வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளின் போது நாம் துக்கத்தை மட்டுப்படுத்துவதால் நமக்கு அதிகமான பெலன் உண்டு என்றும் எண்ணக்கூடிய ஒரு மனப்பாங்கு பலரிடம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ளும்போது அதை மிகுந்த சந்தோஷமாக எண்ண வேண்டும் என்று யாக்கோபு அறிவுறுத்துகிறார் (யாக்கோபு 1:2) என்று அதற்கு ஆதாரமாக கூறுவார்கள்.
இத்தகைய கண்ணோட்டத்தால், நாம் துக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று விசுவாசிகள் ஆச்சரியப்படுகிறார்கள்.
பிரசங்கி 7:2-4 சொல்லப்பட்டவை நமது அன்றாட இறையியலில் வெளிப்படையாக காணப்படுவதில்லை:
“விருந்து வீட்டுக்குப் போவதைப் பார்க்கிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனிதரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினால் இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்க வீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும்.”
உலகம் ஒருபோதும் துக்கப்பட விரும்புவதில்லை என்பது நாம் அறிந்ததே, ஏனெனில் அவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களைப் போல துக்கப்படுகிறார்கள் (1 தெசலோனிக்கேயர் 4:13). அத்தகைய வேதனையைத் தவிர்ப்பது உலகத்தின் நிலைப்பாட்டிற்குப் பொருந்தும். ஆனால் திருச்சபைக்கு அது பொருந்துமா? துன்பத்தை சிறியதாகவும் அற்பமானதாகவும் கருத வேண்டும் என்ற பொய்யை ஏற்றுக்கொள்ளும்படியாய் நாம் சோதிக்கப்படுகிறோமா?. துக்க வீட்டிற்கு போவதை தவிர்த்து, விருந்து, சந்தோஷம் மற்றும் கொண்டாட்ட வீட்டிற்கு போவதற்கு நாம் தீவிரித்து ஓடுகிறோமா ?
ஒருவேளை நாம், “புசிப்போம், குடிப்போம், சந்தோஷமாயிருப்போம்” (பிரசங்கி 8:15) “ஏனெனில் நாளைக்கு சாவோம்” (ஏசா 22:13) என்ற உலகத்தின் சிந்தனையை நமக்கு நாமே பிரசங்கிக்கத் தொடங்கியிருக்கிறோம் அல்லவா. மிகத் திறமையாக நாம் பயங்கரமான ஒன்றில் இறங்கியிருக்கிறோம்; தேவனுடைய மெய்யான படைப்பின் நோக்கத்திற்கே விரோதமாக ஆபத்தான ஒன்றை நாம் தெரிந்தெடுக்கிறோம். அதாவது அவர் “மிகவும் நல்லது” என்று படைத்த வாழ்க்கை அனைத்திலும், ஆசீர்வாதம் மற்றும் செழிப்பின் மேன்மை என்ற கருத்தை உட்பகுத்தி அதின் நோக்கத்தை மாசுபடுத்துகிறோம்; தேவனுடைய அழகான வடிவமைப்பிற்குள், நம்முடைய பாவ வீழ்ச்சியின் விளைவாக, படையெடுக்கும்படியாய் நுழைந்த எதிரியான இந்த துன்பத்தைப் பார்த்து, “நீ அவ்வளவு மோசமானவன் அல்ல” என்று நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். எப்படியாக இருந்தாலும் விருப்பு, வெறுப்பு இல்லாதவர்களை போல துன்பத்தை எதிர்கொள்வதை விட, தேவனுடைய சத்தியத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதே மிகுந்த மேன்மையான வழியாகும்.
தேவன் படைத்த வாழ்க்கையில், வேதனையை, அது இருக்கிற வண்ணமாகவே ஒரு விசுவாசி அழைக்க வேண்டும்: அதாவது துயரங்கள் பயங்கரமானது மற்றும் கடினமானது என்று அழைக்க வேண்டும். நாம் துக்க வீட்டுக்குச் போவது நல்லது. நம்மை விசாரிக்கிற தேவனிடத்தில் நாம் எல்லாவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் (1 பேதுரு 5:7) மற்றும் இதை நம்முடைய மனதிலே சிந்திக்க வேண்டும் (பிரசங்கி 7:2). எல்லாவற்றிற்கும் மேலாக, சங்கீத புத்தகம் தேவபக்தியுள்ள புலம்பல்களின் வெளிப்பாடுகளால் நிரம்பியுள்ளன. உண்மையில், அதற்கென அர்ப்பணிக்கப்பட்ட முழு புத்தகமும் வேதாகமத்தில் உள்ளது (புலம்பல்)!
நம்முடைய தேவன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவக்குள்ளாக சாபத்தை வென்றார் என்ற நம்பிக்கையுள்ள சத்தியத்தையும் அதே நேரத்தில் நாம் நினைவு கூறவும் வேண்டும். அவர் இந்த பாவம் மற்றும் அதனுடைய சாபத்தின்மேல் வெற்றி கொண்டவராக, நம்முடைய எல்லா துக்கங்களிலிருந்தும் நம்மை மீட்டுக்கொண்டு, அந்த துக்கத்தை பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கையில் மேலான, நன்மையான நோக்கங்களையும் நடப்பிக்கிறார். எனவே, நாம் நம்பிக்கையற்றவர்களைப் போல துக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. நாம் சரியான விதத்தில் துக்கப்பட வேண்டும். ஆனால் துன்பத்தின் மத்தியில் தேவனுடைய நன்மையான ஆளுகையின் கரத்தையும் நாம் நம்ப வேண்டும். மேலான இந்த சத்தியங்கள் நம்மை தேவபக்தியில் இணைக்க வேண்டுமே ஒழிய பதற்றத்திற்குள்ளாக நம்மை இட்டுச் செல்லக்கூடாது.
ஆகவே, பிரியமான கிறிஸ்தவர்களே, நாம் சரியாக துக்கப்படலாம். நாம் அழுது துக்கப்படலாம். ஆனால் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. நம்முடைய சகோதர சகோதரிகள் துக்கப்படுவதை அனுமதிப்போம், அவர்களை நாம் தடை செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் அதில் முற்றிலும் நம்பிக்கை இழந்து மூழ்கி விடாதபடி கிறிஸ்தவ நம்பிக்கையோடு நாம் அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியடைய வழிவகுப்போம். இந்த உலகில் நாம் எல்லா வகையான கஷ்டங்களையும் எதிர்கொண்டாலும், கிறிஸ்து உலகத்தை ஜெயித்துவிட்டார் என்பதினால் நாம் அனைவரும் தைரியத்தோடிருக்க வேண்டும் (யோவான் 16:33).
ஒரு நாள், எல்லா துக்கமும் துடைக்கப்படும் (வெளி 21:4). ஆனால் இன்று அந்த நாள் அல்ல. அதுவரை, நாம், “கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று சொல்லலாம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


