Contentment_2560
மனநிறைவில் நிலைத்திருப்பதற்கான ஐந்து வழிமுறைகள்
25-09-2025
How Can I Be a Christian in My Workplace?
எனது வேலை ஸ்தலத்தில் நான் எவ்வாறு கிறிஸ்தவனாக இருப்பது?
02-10-2025
Contentment_2560
மனநிறைவில் நிலைத்திருப்பதற்கான ஐந்து வழிமுறைகள்
25-09-2025
How Can I Be a Christian in My Workplace?
எனது வேலை ஸ்தலத்தில் நான் எவ்வாறு கிறிஸ்தவனாக இருப்பது?
02-10-2025

கிறிஸ்தவர்கள் மீது தேவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாரா?

Is-God-Always-Please-with-Christians

இக்கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்க, நாம் கிரியைக்கு முன்பாக கிருபையை  முன்னிறுத்தி உறுதியான அஸ்திபாரத்தை அமைக்க வேண்டும்.

1. கிறிஸ்துவுக்கு வெளியே, நம்முடைய சொந்த ஒழுக்கம், முயற்சி அல்லது தகுதியால் நாம் தேவனை பிரியப்படுத்த முடியாது. 

பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்காத ஆத்துமாக்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாதவர்களாகவும், தேவனில்  விருப்பமற்றவர்களாகவும் இருப்பதோடு அவருடைய கட்டளைகளையும் எதிர்க்கிறார்கள் (ரோமர் 8:5-8). மாம்சத்தில் வேரூன்றி, சுயத்தை நேசிக்கக்கூடிய பாவம் அவர்களுடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது (2 தீமோத்தேயு 3:1-5). விசுவாசத்தால் மட்டுமே ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தான் (எபிரேயர் 11:5-6). நம்முடைய மனது புதிதாக்கப்பட்டு, சித்தம் மற்றும்  இருதயம் போன்றவை கிருபையின் அடிப்படையில் மாற்றப்படும்போதுதான், நம்முடைய நம்பிக்கையற்ற அவல நிலையை நாம் உணர்ந்து, தேவன் நீதியுள்ளவர் என்பதை ஒப்புக்கொண்டு, நம்மை கிறிஸ்துவிடம் ஒப்புக் கொடுப்போம். நாம் உண்மையிலேயே நன்றியுணர்வோடும், தேவனை மகிமைப்படுத்தும் விதத்திலும் அவரைப் பிரியப்படுத்த முயற்சி செய்வதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவர் முதலில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை நம் இருதயத்தில் பதித்து, அதற்கு நம்முடைய மனதை சாய்க்கப் பண்ண வேண்டும்.

2. என்றென்றைக்கும் நித்தியமாக, தம்முடைய சர்வ ஏகாதிபத்தியத்தின் அடிப்படையில்  தம்முடைய பிள்ளைகளை தெரிந்துகொண்டதினால் அவர்  ஒரு கணம் கூட வருத்தப்படுவதில்லை. 

படைப்பிற்கு முன்பாகவே, தம்முடைய முன்குறித்தலின்படி தேவன் தம்முடைய மணவாட்டியாகிய திருச்சபையை,  விலையேறப்பெற்ற பொக்கிஷமாகவும், தம்முடைய கண்ணின் மணியாகவும்  திட்டமிட்டது  அவருக்கு நலமாகத் தோன்றிற்று. அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று,  அன்பினால் ஆறுதல்படுத்துகிறவராய் இருக்கிறார் (செப்பனியா 3:11-17). பொதுவாக சொல்வோமானால், குறிப்பிட்ட விதிவிலக்குகளுடன், பிரபுக்கள், ஞானிகள் மற்றும் அதிகாரத்திலுள்ளவர்களை வெட்கப்படுத்த தேவன் – தாழ்ந்தவர்கள், கல்லாதவர்கள், மற்றும் பலவீனமானவர்களைத் தெரிந்துகொள்வது அவருக்கு பிரியமாயிருந்தது (1 கொரிந்தியர் 1:20-29). தேவன் வெளிப்படுத்தின வெளிச்சத்தை ஞானிகளிடமிருந்து மறைத்து, அதை பாலகரிடத்தில் பிரகாசிக்கச் செய்வது பிதாவுக்கு பிரியமாயிருந்தது (மத்தேயு 11:25-27; லூக்கா 2:14; 12:32). ஆழமான சிந்தனையில்லாத மீனவர்கள், கொலைகார வேதபாரகர்கள்,  மரித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகள், அவமான வேசிகள், மோசமான பிசாசு பிடித்தவர்கள், மற்றும் ஊழல்  செய்த வரி வசூலிப்பவர்கள் ஆகியோரின் எடுத்துக்காட்டுகளை வைத்துப் பார்க்கும்போது, மனிதப் பெருமையைத் தலைகீழாக மாற்றி, தாம் ஒருவரே அதிக மகிமையைப் பெரும்படி, மிகவும் மோசமான மற்றும் விரும்பத்தகாதவர்களை  தேவன் தெரிந்தெடுத்தார். தேவன் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடத்தில் பிரியமாயிருப்பாரானால், இந்தத் தெரிந்து கொள்ளுதலின் சத்தியத்தினால், ஒரு கிறிஸ்தவன் தேவனை மகிமைப்படுத்துவான்.

3. கடவுள் எல்லாருக்கும் நன்மையைச் செய்பவராக (benevolent) இருந்தாலும், பரிசுத்தவான்களுக்கு சிறப்பாக நன்மையைச் செய்பவராக (well-willing) இருந்தாலும், ஒரே ஒரு மனிதர் மட்டுமே, முழுமையாக, எப்போதும் பிதாவுக்கு  பிரியமானவராக இருக்கிறார் (யோவான் 8:29).

 தேவன், மேசியாவாகிய கிறிஸ்துவின்  நற்செய்தி, அவருடைய அற்புதங்கள்,  நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிதல், மற்றும் பாடுகள் ஆகியவற்றில் மகிழ்ச்சியடைகிறார். அதை உறுதிப்படுத்தும் தேவனுடைய பிரகாசமான வார்த்தைகள் வானத்திலிருந்து எதிரொலித்தது: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:16-17; 17:5). நித்திய குமாரனாகவும் உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும் இருந்து, இயேசு நித்தியமாக தேவனை பிரியப்படுத்துவதினால், அவரோடு ஐக்கியப்பட்டு அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள், அவருடைய நீதியால் மூடப்பட்டு, பிரியமானவருக்குள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் (எபேசியர் 1:3-6), மற்றும்  தேவனுக்கும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள்.

4. உறுதியான தேவனின் தெரிந்து கொள்ளுதலும், அவருடைய அங்கீகாரமும்,  சீஷர்கள் நன்றியுடன், மேலும் மேலும்  தேவனை பிரியப்படுத்தி அவருக்கு கீழ்ப்படியும்படியாய்  நடத்துகிறது (எபேசியர் 5:1-10; கொலோசெயர் 1:9-14),   இவர்கள் முன்னமே ஆயத்தம் பண்ணப்பட்ட நற்கிரியைகளை செய்யும்படியான, அழைப்பை அலட்சியப்படுத்தமாட்டார்கள் (எபேசியர் 2:5-10). 

அதற்குப் பதிலாக, கர்த்தரை எப்படிப் பிரியப்படுத்துவது என்பதைக் கண்டறிய நாம் தீர்மானத்துடன் காணப்பட வேண்டும். நாம் இதை ஒரு போர்வீரனாக, தீமோத்தேயுவைப் போல, நம்முடைய தலைமை அதிகாரியாகிய இயேசுவைப் பிரியப்படுத்துவதையே நம்முடைய முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்  (2 தீமோத்தேயு 2:1-4). சிலுவைக்கு ஒப்புக்கொடுக்கும் படியாய், தம்மை தாமே தாழ்த்திய கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்றி, அவருடைய ஊழியக்காரர்களாக நாம் இதை செய்ய வேண்டும்.  மனிதப் புகழ்ச்சியை இனிமேலும் நாம் வாஞ்சிக்காமல், ஆனால் நம்முடைய சொந்த சுயநல நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற சகோதர, சகோதரிகளுடைய தேவையை முன்னிறுத்தவும், எல்லா இடறலையும் தவிர்த்து, பலவீனமானவர்களைப் பக்தி விருத்தியடையசெய்து, தேவனுடைய வார்த்தையை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

5. வேதாகமம் பெரும்பாலும் தேவனை எப்படிப் பிரியப்படுத்துவது என்பதை திட்டவட்டமாக நமக்கு வெளிப்படுத்துகிறது.

 திருச்சபையில் ஊழியர்கள் கடினமாக உழைக்கும்போது, பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படியும்போது, திருமணங்கள் உறுதியாக இருக்கும்போது, குடிமக்கள் ஆட்சியாளர்களை மதிக்கும்போது, அங்கத்தினர் மூப்பர்களுக்குச் செவிகொடுக்கும்போது, மற்றும்  விபச்சாரத்திற்குப் பதிலாக பரிசுத்தத்தை  பற்றிக்கொள்ளும் போதும்  தேவன் மகிழ்ச்சியடைகிறார் (1 தெசலோனிக்கேயர் 4:1-8). சமாதானம் சண்டையை அடக்கும்போது, சபைகள் வார்த்தையால் நிரப்பப்பட்டிருக்கும்போது, மற்றும் ஆடுகள் போஷிக்கப்படும்போது  (காயப்படுத்தப்படாமல் அல்லது பட்டினியால் வாடாமல்) நம்முடைய கிரியைகளை தேவன் அங்கீகாரம் பண்ணுகிறார். உள்ளான உண்மை வெறுமையான மத சடங்குகளுக்குப் பதிலாக உள்ளார்ந்த உண்மையான காரியங்களும், குற்றமுள்ள பாவிகள் இருதயம் நொறுங்குண்டவர்களாக இருக்கும்போது (சங்கீதம் 51:16-17; மீகா 6:6-8), மன்னிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தாராளமான காணிக்கைகளுடன் தேவனுக்கு செலுத்தி சேவை செய்யும்போது (பிலிப்பியர் 4:18; எபிரேயர் 13:16), மற்றும் நாம் ஜெபத்தில் மூழ்கும்போது கிறிஸ்தவ ஆராதனை  மிகவும் அழகுள்ளதாகிறது (1 தீமோத்தேயு 2:1-4).

6. தேவனை பிரியப்படுத்தும் வழியைப் பின்பற்றுவதற்கு இரண்டு உண்மைகள் நமக்கு உதவுகின்றன. 

ஒன்று, தேவனுடைய அங்கீகரிப்பை  தேடும் உந்துதல் மற்றும் ஆசையாகிய எதுவும் சுயமாக வருகிற ஒன்றல்ல, ஆனால் கிறிஸ்துவின் வல்லமையுள்ள சுவிசேஷ வார்த்தையின் விளைவு மற்றும் தாக்கத்தால், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களில் செயல்பட்டு, நடைமுறைப்படுத்தி, தேவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சிந்திக்கவும் செயல்படவும் நம்மை உந்துகிறது (பிலிப்பியர் 2:12-13; எபிரேயர் 13:20-21).

மற்றொன்று, நாம் மனிதப் புகழை வாஞ்சிப்பதை நிறுத்தி, சுயநலத்தை வெறுத்து, நம்மை நாமே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தாழ்மையான சிலுவையின் வழி மட்டுமே  உண்மையான விடுதலை மற்றும் ஜீவனுக்கு நேராக நடத்துகிறது என்பதை காண வேண்டும் (ரோமர் 14:1-15:33; 1 கொரிந்தியர் 10:31-33). வேதாகமம் சொல்வது போல, “வாங்குகிறதை பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்” (அப்போஸ்தலர் 20:35). நாம் அவரில் மகிழ்ச்சியைக் கண்டடைவது அவரை பிரியப்படுத்துகிறதாக இருக்கிறது.

7. நம்முடைய வாழ்க்கையில் உள்ள பாவத்தை தேவன் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை என்று வேதாகமம் சந்தேகத்திற்கிடமில்லாமல் நமக்கு போதிக்கிறது. 

தாவீது பத்சேபாளை எடுத்துக்கொண்ட போது, பெருமையுடன்  இஸ்ரவேலின் ஜனத்தொகை கணக்கெடுப்பை எடுத்தபோது, யெகோவா தாவீதின் மேல் பிரியமற்றவராக இருந்தார் (2 சாமுவேல் 11:27; 1 நாளாகமம் 21:1-7). அன்பற்ற செயல்கள் பரிசுத்த ஆவியானவருக்குத் துக்கத்தை உண்டாக்குகின்றன (எபேசியர் 4:25-32). தமது பரிசுத்தவான்களின் நித்திய நன்மைக்காக, நம்முடைய  பிதா தமது பிள்ளைகளை அன்புடன் ஒழுங்குபடுத்துகிறார் (எபிரேயர் 12:5-11), தீவிரமான  பாவங்களையும் அப்படியே கண்டிக்கிறார்

 (1 கொரிந்தியர் 11:28-34).  ஆசியாவில் உள்ள ஏழு  சபைகளில் ஆறில் கிறிஸ்து குற்றம் கண்டுபிடித்தாலும் (வெளிப்படுத்துதல் 2:1-3:22),  எப்போதுமே கடைசி வார்த்தை கிருபையுடனே முடிவடைகிறது. நாம் தூசி என்று கர்த்தர் அறிந்திருக்கிறார், பாவத்தினால் நாம் சம்பாதித்ததை நாம் திரும்ப செலுத்த முடியாது, ஆனால் நாம் தவற்றிலிருந்து மனந்திரும்பும்போது  தேவன் பொறுமையுடன் நம்மை மன்னித்து நமக்கு இறங்குகிறார் (சங்கீதம் 103:8-18).

முடிவுரை 

தேவனுடைய நோக்கத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் பரிசுத்தவான்கள் மீது மகிழ்ச்சியாக இருக்கிறார். கிறிஸ்துவுக்குள்ளாக காணப்படும் விசுவாசிகளின் நிலையைப் பொறுத்தவரை, தேவனுடைய  மகிழ்ச்சி உறுதியானது. ஆனால் நம்முடைய செயல்பாட்டைப் பொறுத்தவரை, தேவன் பாவத்தை அங்கீகரிப்பதில்லை, ஆனால் அவர் நமக்குள்ளே செயல்படுத்துகிற கீழ்ப்படிதலை அங்கீகரிக்கிறார். நம்மிடத்தில் காணப்படும் மோசமான பாவம் மற்றும் தவறுகள் மத்தியிலும், தேவன்  நம்மை ஏன் காப்பாற்ற விருப்பமுள்ளவராயிருக்கிறார்  என்று நாம் ஆச்சரியப்படுவோமானால், அது அவர் மகிமைப்படுத்தப்படுவதற்கும், அவர் மகிழ்ச்சியடைவதற்காக மட்டுமே. நம்முடைய ஆழத்திற்கு தக்கதாக அவர் குனிந்து, நம்மை அவருடைய உயரத்திற்கு உயர்த்துவதன் மூலம், அவர் தமது பொறுமையையும், இரக்கத்தையும், மன்னிக்கும் இருதயத்தையும் வெளிப்படுத்துகிறார். இதனால் அவருடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக அவருடைய நித்திய ஜீவன்  நமக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆண்ட்ரூ கெர்
ஆண்ட்ரூ கெர்
Dr. Andrew Kerr - Dr. ஆண்ட்ரூ கெர், நியூ ஜெர்சியின் ரிட்ஜ்ஃபீல்ட் பார்க் சீர்திருத்த பிரஸ்பைடீரியன் திருச்சபையின் போதகராகவும், பிட்ஸ்பர்க்கில் உள்ள சீர்திருத்த பிரஸ்பைடீரியன் இறையியல் கல்லூரியின் துணைப் பேராசிரியராகவும் உள்ளார்.