
ஞான புத்தகங்களை வாசிப்பது எப்படி?
17-06-2025
வேதாகமத்தை நினைவு கூர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதின் அவசியம்
24-06-2025தீர்க்கதரிசன புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது?
தீர்க்கதரிசனங்களை புரிந்துக் கொள்வது சற்று கடினமானது. காரணம், தேவன் தம்மை அவர்களுக்கு சொப்பனங்களிலும், தரிசனங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களில் மோசேயுடன் மட்டுமே தேவன் முகமுகமாக பேசினார் (எண் 12:6-8). ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல் ஆகியவைகள் பெரிய தீர்க்கதரிசனங்களாகும். ஓசியா, யோவான், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூர், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா, ஆகியவைகள் சிறிய தீர்க்கத்தரிசனப் புத்தகங்களாகும். தீர்க்கதரிசன புத்தகங்களை படிக்கவும், அதை புரிந்துக் கொள்ள உதவுவதற்கான ஒரு சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1.சூழலை (Context) ஆராயுங்கள்.
முதலாவது, கூடுமானவரை நீங்கள் படிக்கும் புத்தகத்தின் வரலாற்றுப் பிண்ணனிக் குறித்தும், கலாச்சாரச் சூழல் பற்றியும், அந்த தீர்க்கதரிசியைப் பற்றியும் புரிந்துக் கொள்ளுங்கள். சீர்திருத்த வேதாகம விளக்கவுரை போன்ற நல்ல ஒரு வேதாகம விளக்கவுரை உங்களுக்கு உதவிச் செய்யும்.
2. தீர்க்கதரிசிகள் தேவனின் உடன்படிக்கையின் வழக்குரைஞர்கள் என்பதை கண்டுக்கொள்ளுங்கள்.
இரண்டாவது, தீர்க்கதரிசிகள் விசேஷமாக தேவனுடைய உடன்படிக்கையின் வழக்குரைஞர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். உடன்படிக்கையின் பல்வேறு பகுதிகளைப் பற்றி தீர்க்கதரிகள் பேசினாலும், உதாரணமாக (“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே”) என்ற வரலாற்றின் முன்னுரைகளைப் பற்றி பேசினாலும், மற்றும் தேவனின் கட்டளைகளை (நிபந்தனைகள்) அவர்கள் கைக்கொண்டு நிறைவேற்றவேண்டும் என்ற அவர்களின் கடமைகளை வலியுறுத்தினாலும், மிக பிரதானமாக அவர்களின் பிரதானமான நோக்கம் உடன்படிக்கையின் ஒப்புதல்களை (ஆசீர்வாதங்கள்/ சாபங்கள்) மக்களுக்குத் தெரிவிப்பதாகும். பழக்கமான இன்றைய பேச்சுவழக்கில் ஒப்புதல் அல்லது ஆணை என்ற வார்த்தையை நாம் எதிர்மறையாகவே பார்க்கிறோம். (உதா. “பொருளாதார தடைவிதிப்பு”). ஆனால் வேதாகமத்தில், இந்த வார்த்தை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கீழ்படிதலுக்கு ஆசீர்வாதங்கள்; கீழ்ப்படியாமைக்கு தண்டனைகள். நல்ல வழக்குரைஞர்களைப் போலவே, தீர்க்கதரிசிகளும் ராஜாவுக்கு எதிரான மக்களின் காரியங்களையோ அல்லது மக்களுக்கு எதிரான ராஜாவின் காரியங்களையோ தொகுத்துப் பிரசங்கித்து, எவ்வாறு அவர்கள் தேவனின் நீதிக்கேற்ப வாழ தவறினார்கள் என்பதை தீர்க்கதரிசிகள் பிரசங்கித்தார்கள்.
3. தீர்க்கதரிசனத்தின் அடையாள மொழியை அறிந்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
தீர்க்கதரிசன அடையாள மொழி என்பது, எதிர்காலத்தின் உண்மைகளைக் குறித்து அந்த தீர்க்கதரிசி என்ன கூறுகிறார் என்பதைப் பற்றிய மிக முக்கியமான அம்சமாகும். இங்கு மையக் கருத்து என்னவென்றால், தொடர்ச்சியாக தீர்க்கதரிசன புத்தகங்கள், இஸ்ரவேலர், கோத்திரங்கள், தேசம், மற்றும் அவர்களின் தேவாலயம் ஆகியவற்றின் பராமரிப்புகளைப் பற்றிப் பேசினாலும் மிக அதிகமாக வரவிருக்கும் புதிய உடன்படிக்கையின் சத்தியங்களையே விவரிக்கிறது. எனவே, தொடர்ந்து வாசகர் கேட்கவேண்டிய கேள்வி, “உண்மையில் இந்த தீர்க்கத்தரிசி உரைக்கும் காரியங்கள் தன்னை சுற்றியுள்ள சமகால நிகழ்வுகள் பற்றியதா? அல்லது வரவிருக்கும் எதிர்கால உண்மைகளைப் பற்றியதா? என்பதே. எனவே தீர்க்கதரிசன அடையாள மொழி என்பது, ஓர் உண்மையை இலக்கண மொழியில் வெளிப்படுத்தும் முறையாகும், இதன்மூலம் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலரின் காரியங்கள் பற்றிய மாதிரியியல் வடிவங்களைப் பயன்படுத்தி அதன் நிழலாட்டமாக புதிய உடன்படிக்கையின் காலத்தில் மேசியாவைப் பற்றியதான சத்தியங்களைக் காண்பிக்கிறார்கள். இதுவே தீர்க்கதரிசனத்தின் அடையாள மொழியாகும், இதைப்பற்றி நாம் அறியவில்லையென்றால் நிச்சயமாக தீர்க்கதரிசன புத்தகங்களை நாம் தவறாக புரிந்துக் கொள்வோம்.
இதைத்தான் பவுல், அகிரிப்பா ராஜாவுக்கு முன்பாக நிற்கும் பொழுதும் நன்றாக அறிந்திருந்தார் (அப் 26:19-29). தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், புறஜாதிகளுக்கான தனது ஊழியங்களைப் பற்றியும் பேசினார்கள் என்பதை பவுல் கூறினார். தீர்க்கதரிசனங்களின் மொழி, அவைகள் தங்களை வெளிப்படுத்தும் ஓர் விதமான உருவக அடையாள மொழியாகும், இதில் குறிப்பாக புதிய உடன்படிக்கையின் விசுவாசிகள், புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய உண்மைகளிலிருந்து வெளிப்புற அடையாள உருவகங்களை பிரித்து சரியாக விளங்கிக்கொள்வதை எதிர்பார்க்கிறது.
சுருக்கமாக, அடையாள உருவக மொழியில், பெரும்பாலும் தீர்க்கதரிசிகள் பழைய உடன்படிக்கையின் சூழ்நிலைகளிலிருந்து புதிய உடன்படிக்கையின் அம்சங்களை விவரிக்கிறார்கள். தீர்க்கதரிசனத்தின் மொழியமைப்பு, அவர்கள் பயன்படுத்தும் அடையாளங்கள், விளக்கப்படும் பயன்படுத்தப்படும் உருவகங்கள் இவையனைத்தும் கிறிஸ்துவிலும் மற்றும் அனைத்து மனிதர்களிலும் நடைபெறக்கூடிய காரியங்களை பற்றி கூறவே பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமான ஒன்றாக மாறுகிறது, உதாரணமாக, நாடுகடத்தப்படுதல் மற்றும் சிதறடிக்கப்படுதல், கோத்திரங்களை கூட்டிச் சேர்த்தல், மீண்டும் தேசத்துக்கு திரும்புதல், மற்றும் சாபங்களை நீக்கிப்போடுதல் ஆகியவற்றில் இவை முக்கியமானது. தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தைக்குறித்த எல்லாவற்றையும் அறிந்தவர்களாக பேசவில்லையென்றாலும், புதிய உடன்படிக்கையில் கிறிஸ்துவில் தேவனின் வருகையையும் மற்றும் தீர்க்கதரிசனங்களில் ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்துக்காட்டமால், கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைக் குறித்தும் கூட பேசுகிறார்கள். இருப்பினும், பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல் கீழ் அவர்கள் உரைக்கும் பலவித நிலைகளுக்கிடையே ஓர் ஒருங்கிணைந்த ஒற்றுமை உள்ளது.
உதாரணமாக, யோவேல் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதையும், கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் பெரிதான பயங்கரமான காரியங்களையும் உரைக்கும் போது, அது யோவேலின் முதல் வாசகர்களுக்கு மாத்திரம் மட்டுமல்ல (யோவேல் 2:28-32). பெந்தேகோஸ்தே நாளில் (அப் 2:17-21) யோவேல் 2 சுட்டிக்காட்டப்படுகிறது. இதே உருவகங்கள் அப் 2:28-32 ல் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றியும் பேசுகிறது. மற்றும் யோவேலின் தீர்க்கதரிசனம் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைக் குறித்தும் பேசுகிறது என்றும் நம்மால் உறுதியாக கூறமுடியும். எனவே, யோவேல் ஒரே நோக்கத்தை மனதில் வைத்திருந்தாலும், மீட்பின் வரலாற்றில் அவரின் வார்த்தைகள் அநேக குறிப்புகளை காண்பிக்கிறது. எனவேதான் பரிசுத்த ஆவியானவரின் ஊற்றுதலைப் பற்றிதான இந்த உருவக மொழியமைப்பை விளக்கப்படுத்துவதற்கு இந்த பகுதி ஜான் கால்வினுக்கு மிகவும் பிடித்தப் பகுதியாகும்.
4. புதிய ஏற்பாட்டின் வசனங்கள், தீர்க்கதரிசனங்களை எவ்வாறு மேற்கோள் காட்டி, குறிப்பிட்டு அல்லது பிரதிபலிக்கிறது என்ற வழிமுறைகளை ஆராயுங்கள்.
இறுதியாக, நான்காவது கிறிஸ்து தமது சீஷர்களாகிய எம்மாவு சீஷர்களிடம், அனைத்து வேதவாக்கியங்களும் தம்மைக்குறித்தும் தமது ஊழியத்தைக்குறித்தும், தமது சரீரமாகிய திருச்சபைக் குறித்தும் பேசியிருக்கிறது என்று கூறியிருக்கையில், நாமும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் எவ்வாறு தீர்க்கதரிசனங்களை மேற்கோள் காட்டி, குறிப்பிட்டு அல்லது பிரதிபலித்து உள்ளது என்ற வழிமுறைகளை ஆராயவேண்டும். உதாரணமாக கிறிஸ்துவின் மறுரூபமடைதலை நேரில் கண்ட பேதுரு, உபாகமம் 18:15-19 ல் அனைத்து தீர்க்கதரிசிகளுக்கும் பிரதானமான தீர்க்கதரிசி மோசையைப் பற்றி பேசியிருப்பினும், இவைகள் மிகவும் பிரதானமான இறுதி தீர்க்கதரிசியாகிய கிறிஸ்துவில் வந்தடைகிறது என்பதை பேதுரு அறிந்திருந்தான் (அப் 3:17-26). மோசே தனது வீட்டில் (பழைய உடன்படிக்கை) எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான், ஆனால் கிறிஸ்துவோ தனது வீட்டிற்கு (புதிய உடன்படிக்கை) மேற்பட்ட குமாரனாக உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை எபிரெயர் ஆசிரியர் மேலும் உறுதிப்படுத்துகிறார். மேலும், தேவனே முழு வீடாகிய பழைய மற்றும் புதிய உடன்படிக்கையை கட்டுபவராக இருக்கிறார் (எபி 3:1-6).
இந்தக் கட்டுரை Hermeneutics (வேதாகம விளக்கக் கலை) தொகுப்பின் ஒரு பகுதி.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


