
இளைஞர்களுக்கு இறையியலைக் கற்பிப்பதற்கான மூன்று வழிகள்.
07-08-2025
குடும்பத்தில் சீஷத்துவம்
14-08-2025நான் எப்படி விசுவாசத்தில் வளர முடியும்?
ஒரு புயல் வீசும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு உயிர்காக்கும் மிதவைப்பொருள் (lifebelt) வீசப்படுகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். விரக்தியுடன், அவன் அதைப் பிடித்துக்கொள்கிறான், அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறான், அதற்குள் வருகிறான். இறுதியாக, அவன் பயங்கரமான அலைகளின் மேல் செல்லத் தொடங்குகிறான். இன்னும் பயங்கரங்களும் சந்தேகங்களும் நிறைந்தவனாக, அந்த உயிர்காக்கும் மிதவைப்பொருள் எப்படியாவது தன்னை கைவிட்டுவிடுமோ, தான் கடலின் ஆழத்தில் மூழ்கிவிடுவோமோ என்று கவலைப்படுகிறான். அந்த உயிர்காக்கும் மிதவையுடன் ஒரு சிறிய நீர்ப்புகாத புத்தகம் இணைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கிறான். அந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அந்த கவலையுள்ள மனிதன் படிக்கத் தொடங்குகிறான். அந்தப் புத்தகம் அவனது உயிர்காக்கும் மிதவைப்பொருளின் நன்மைகளை எடுத்துரைக்கிறது. அது எந்தெந்த பொருட்களால் ஆனது, அதன் வடிவமைப்பு அம்சங்கள், மற்றும் மிதக்கும் தன்மையிலும் நம்பகத்தன்மையிலும் அதன் அற்புதமான தரத்தின் குணங்கள் பற்றி அவன் படிக்கிறான். அது எவ்வளவு முழுமையாக சோதிக்கப்பட்டுள்ளது, மிகக் கடுமையான கடல்களிலும் மிகக் கனமான எடையைத் தாங்கியுள்ளது, அதைப் பிடித்திருந்த எவரும் ஒருபோதும் மூழ்கியதில்லை என்றும் அவன் படிக்கிறான். அவன் அதைப் படிக்கப் படிக்க, அவனது நம்பிக்கை அதிகரிக்கிறது.
அவன் இன்னும் கடலின் புயல்களுக்கு மத்தியில் இருக்கிறானா? ஆம். சில பெரிய அலைகள் இன்னும் அவனுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தக்கூடுமா? ஆம். அவன் இருந்ததை விட இப்போது பாதுகாப்பானவனா? இல்லை. அவன் அந்த உயிர்காக்கும் மிதவையைப் பிடித்தபோது எவ்வளவு பாதுகாப்பாகவும் உறுதியாகவும் இருந்தானோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறான். ஆனால் இப்போது அவன் எதிர்கொள்ளும் அனைத்து ஆபத்துகள் மற்றும் பிரச்சனைகள் வழியாகவும் அது அவனைத் தாங்கி, இறுதியாக கடலிலிருந்து அவனை வெளியே எடுத்து, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவரக்கூடிய அதன் திறனில் அவனுக்கு அதிக மற்றும் எப்போதும் வளர்ந்துவரும் நம்பிக்கை உள்ளது.
இந்த உவமையின் வரம்புகளை அறிந்துகொண்டு, நமது விசுவாசத்தின் வளர்ச்சிக்கு சில அடிப்படை காரியங்களை நான் இங்கு பரிந்துரைக்கிறேன். ஒரு பாவி முதன்முதலில் இயேசுவை நம்பும்போது, அந்தப் பாவி இரட்சிக்கப்படுகிறான் மற்றும் பாதுகாப்பாக இருக்கிறான். எவரும் அல்லது எதுவும் அவனை இயேசுவின் கைகளிலிருந்து பறிக்க முடியாது. அவன் இருக்கக்கூடிய அளவுக்கு உறுதியாக இருக்கிறான். ஆனால் அவன் தனது பாதுகாப்பை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். கிறிஸ்துவிடம் வர அவனுக்குப் போதுமான அளவு தெரிந்திருக்கிறது, ஆனால் அவன் விசுவாசத்தில் வளர கிறிஸ்துவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவன் நம்பும் இரட்சகரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும்போதுதான் அவனது விசுவாச நம்பிக்கை அதிகரிக்கும். இது எப்படி சாத்தியமாகும்?
முதலாவதாக, ஆவிக்குரிய விசுவாச வளர்ச்சி வேதவசனங்கள் மூலம் வருகிறது. இது ஒரு மனிதனை கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிப்பிற்காக ஞானமுள்ளவனாக்குவது மட்டுமல்லாமல், அந்த தேவனுடைய மனிதனை விசுவாச வாழ்வில் பூரணமாக்குகிறது. கிறிஸ்தவர்களுக்கு எப்போதும் சுவிசேஷ நற்செய்தி தேவை. நாம் நம் கண்களை எப்பொழுதும் கிறிஸ்துவிடம் நிலைநிறுத்த வேண்டும், நம்முடைய விசுவாச அறிக்கைளின் அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமான கிறிஸ்து இயேசுவை நாம் சிந்திக்க வேண்டும் (எபி. 3:1). கிறிஸ்தவ வாழ்க்கையின் அனைத்து கண்ணிகளுக்கும் துக்கங்களுக்கும் எதிராக, தவறான போதனைகளின் அனைத்து திசைதிருப்பல்களுக்கும் வஞ்சகங்களுக்கும் எதிராக, அப்போஸ்தலர்கள் தங்கள் விசுவாசத்தின் அதிகரிப்புக்காக தேவனுடைய ஜனங்களின் கண்களுக்கு முன்பாக கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் எவ்வாறு முன்வைத்தார்கள் என்பதைக் கவனியுங்கள். வேதவசனங்களில் கிறிஸ்துவைப் படிப்பதன் மூலம், நாம் நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் அதை முடிக்கிறவருமான இயேசுவை நோக்கிப் பார்க்கிறோம், அதனால் நம்முடைய விசுவாசம் வளர்கிறது.
விசுவாசத்தில் வளர இரண்டாவது வழி, அதிக விசுவாசத்தை உருவாக்க அவருடைய பரிசுத்த ஆவியானவர் செயல்பட வேண்டும் என்று கடவுளிடம் ஜெபிப்பதாகும். அவரே விசுவாசத்தைக் கொடுப்பவர், எனவே அதை பலப்படுத்துபவரும் அவர்தான். சீஷர்கள் “எங்கள் விசுவாசத்தை அதிகரியும்!” என்று ஜெபித்தார்கள் (லூக்கா 17:5). ஒரு துன்பப்படும் தந்தை “விசுவாசிக்கிறேன், என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும்!” என்று கூக்குரலிட்டார் (மாற்கு 9:24). அத்தகைய ஜெபங்கள் உண்மையான விசுவாசம் பலவீனமாகவோ அல்லது பலமாகவோ இருக்கலாம் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன, மேலும் விசுவாசம் அதிகரிக்க ஒரு வழி அதை தேவனிடம் நாம் கேட்பது என்பதை நமக்குக் காட்டுகின்றன. அதற்கு பதிலாக, கிறிஸ்து தன்னை இன்னும் அதிகமாக நமக்குக் காட்டுகிறார். ஒருவேளை நாம் கேட்காததால் நமக்கு கிடைப்பதில்லையா (யாக். 4:2)?
விசுவாசத்தை அதிகரிக்க மற்றொரு இனிமையான வழி, பரிசுத்தவான்களுடன் உள்ள ஐக்கியம் ஆகும். உலகம் நம்முடைய விசுவாசத்தைக் குறைக்கும், சாத்தான் அதைத் தாக்கும், நம்மை கிறிஸ்துவிலிருந்து திசைதிருப்பி, சத்தியத்திலிருந்து நம்மை திசைதிருப்பி, மற்ற காரியங்களுக்காக நம் கவனத்தைக் கோரும். இதற்கு ஈடுகொடுப்பதற்கான ஒரு மகிழ்ச்சியான வழி, நாம் தேவனுடைய மக்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பரலோக ராஜ்யத்திற்குரிய காரியங்களைப் பற்றிப் பேசுவதாகும் (மல். 3:16-18). பரிசுத்தவான்களுடனான அத்தகைய ஐக்கியத்தில், பரலோக விஷயங்களைப் பற்றிய நம்முடைய உணர்வு புதுப்பிக்கப்பட்டு மீட்டெடுக்கப்படுகிறது, மேலும் ஆறுதல்கள் தொடர்புகொள்ளப்படுகின்றன (1 தெச. 4:18, 5:11).
அது நம்மை விசுவாச அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது – நம்முடைய சொந்த மற்றும் மற்றவர்களின் அனுபவம். நம்முடைய வேதாகமத்தைப் படிப்பதன் மூலம், தேவனுடைய ஜனங்களின் விசுவாசம் சோதனைகள் மூலம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை நமக்கு முன் வைக்கிறது. விசுவாசிகளின் பிதாவாகிய ஆபிரகாமுக்கு விசுவாசத்தின் சோதனைகளும் வெற்றிகளும் இருந்தன (ரோமர் 4:20). சங்கீதக்காரர்கள் கடவுளின் கடந்தகால செயல்களை நினைவுகூர்வதன் மூலம் தங்களை பலப்படுத்திக்கொண்டனர். கர்த்தர் அவர்களை எப்படி நிலைநிறுத்தினார், அவர்களுக்கு எப்படி உதவினார் என்பது பற்றி கடந்தகால மற்றும் தற்போதைய மற்ற விசுவாசிகளிடமிருந்து படிப்பது மற்றும் கேட்பது மதிப்புமிக்கதாகும். நம்மை மூழ்கடிக்காத ஒவ்வொரு அலையும், நாம் நிற்கும் கன்மலையின் திடத்தன்மையை, நம்முடைய பெரிய உயிர்காக்கும் மிதவையின் செயல்திறனை மீண்டும் நிரூபிக்கிறது என்பதை சிந்தியுங்கள்.
நம்மைக் காப்பாற்றுவது நம்முடைய விசுவாசம் மட்டுமல்ல. ஏனென்றால், நாம் நம்முடைய விசுவாசத்தின் பலத்தில் நம்பிக்கை வைக்கும் ஒரு ஆபத்து உள்ளது, அதற்கு பதிலாக ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதுதான் சரி. விசுவாசத்தால் நம்மைக் காப்பாற்றுபவர் கிறிஸ்துவே. கிறிஸ்து என்கிற பலமான மனிதரிடத்தில் நமது விசுவாசம் இணைக்கப்பட்டுள்ளது. நாம் நம்புபவர் அவர்தான், நம்மை இரட்சிப்பவரும் அவர்தான். நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது, நம்முடைய விசுவாசம் அதிகரித்து வளர்ச்சியடைய வேண்டும்.
இவ்வாறு, ஐசக் வாட்ஸ் வார்த்தைகளில்:
மரணத்தின் அனைத்து சேனைகளும், மற்றும் அறியப்படாத நரகத்தின் வல்லமைகளும், தங்கள் மிக பயங்கரமான வடிவங்களான கோபத்தையும் தீய எண்ணத்தையும் அணிந்துகொண்டால், நான் பாதுகாப்பாக இருப்பேன், ஏனென்றால் கிறிஸ்து உயர்ந்த வல்லமையையும் பாதுகாக்கிற கிருபையையும் என்னில் வெளிப்படுத்துகிறார்.
இந்தக் கட்டுரை, கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள் (The Basics of Christian Discipleship) என்ற தொகுப்பின் ஒரு பகுதி.
ஆசிரியரை பற்றி:
Rev. Jeremy Walker – Rev. ஜெரமி வாக்கர் ஐக்கிய ஐரோப்பிய ராஜ்யத்திலுள்ள மெய்டன்போவர் பாப்திஸ்து திருச்சபையின் போதகர். இவர், கிறிஸ்துவில் வாழ்வு: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராக மாறுதல் மற்றும் இருத்தல் (Life in Christ: Becoming and Being a Disciple of the Lord Jesus Christ) உட்பட பல புத்தகங்களை எழுதியவர்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


