
ஏன் பிரசங்கம் கிருபையின் சாதனம்?
02-09-2025
ஏன் நான் திருச்சபைக்குச் செல்லவேண்டும்?
09-09-2025கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?
தேவபக்தியுள்ள ஒரு தாயாக நான் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்ட பொழுது “அவர்களை அன்பு கூறுங்கள்,” என்று எங்களுடைய ஞானமுள்ள போதகர் அறிவுரை கூறினார். பிள்ளை வளர்ப்பு தொடர்பாக ஒழுக்கம், முறையான கோட்பாடுகள், மற்றும் வளர்ச்சி நிலைகளைப் பற்றி நான் வாசித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு ஆரம்பகால தாயாக இருந்த எனக்கு அவர் மிக முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டினார்: அது அன்பு (1 கொரிந்தியர் 13:1). பல வருடங்கள் ஆகியும், அவரது ஞானம் உள்ள அறிவுரையை புகழுவதற்கான நேரம் இது. அன்பை பிரதானமாக வைத்து, தாய்மார்களுக்கு பரிசுத்தத்தைப் பற்றிய பன்னிரண்டு கோட்பாடுகளை நான் கொடுக்க விரும்புகிறேன்.
1. நம்முடைய பரிசுத்தமே தேவனுடைய பிரதான நோக்கமாகும்
ஸ்காட்டிஷ் போதகரான ராபர்ட் முர்ரே மெச்செய்ன் (1813-1843) கூறியது போல, “என்னுடைய ஜனங்களின் மிகப்பெரிய தேவை எனது தனிப்பட்ட பரிசுத்தமே.” தாய்மார்களுக்கும் இது பொருந்தும். “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்” (1 கொரிந்தியர் 11:1) என்று நாம் நமது பிள்ளைகளுக்கு சொல்லும் விதத்தில் தாழ்மையுடன் வாழ வேண்டும். இவ்விதமாக நாம் வாழும் போது, நமது பிள்ளைகள் நாம் நினைப்பதை விட அநேக காரியங்களை கற்றுக் கொள்ளுகிறார்கள்.
2. நமது பரிசுத்தம் கிறிஸ்துவில் மட்டுமே உள்ளது
நாம் பாவம் செய்யும்போது, நாம் அனைவரும் செய்வது போல (ரோமர் 3:23, 1 யோவான் 1:8), மனந்திரும்புதலுக்கான ஒரு உதாரணத்தையும் காண்பிக்க கூடும். உங்கள் பிள்ளைகளுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்யும்போது, உங்கள் பிள்ளைகளிடம் உங்களை மன்னிக்கும்படி கேளுங்கள். நமது ஆதி பெற்றோர்கள் செய்தது போல பாவம் செய்யாததைப் போல மறைக்க முற்படாதிருங்கள் (ஆதியாகமம் 3:7-8). நீங்கள் உங்கள் பாவத்தை கையாளும் விதத்தின் மூலம் உங்கள் பிள்ளைகள் தங்கள் சொந்த பாவத்தை எப்படி கையாள்வது என்று கற்றுக்கொள்வார்கள். நீங்கள் உங்கள் பாவத்தை அறிக்கையிடும்போது, தேவன் உங்களுடைய பரிசுத்தத்தில் எவ்வளவு அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும் அவரே பரிசுத்தத்திற்கான வழியை சுவிசேஷத்தில் இருந்து கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் தருகிறார் என்பதையும் உங்கள் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள் (1 யோவான் 1:9).
3. நமது பிள்ளைகளுக்கு சேவை செய்வது ஒரு பரிசுத்த அழைப்பாகும்.
பிள்ளைகளை சரீரப் பிரகாரமாக சுத்தம் செய்வது, அவர்களுக்கான எல்லாவற்றையும் சரி பார்ப்பது, அல்லது ஒரு நடக்க பழகும் சிறுபிள்ளை அல்லது இளம் வயதுடைய பிள்ளையுடன் ஒரு விளையாட்டை விளையாடுவது போன்றவற்றை விட மதிப்புமிக்க ஒன்று உள்ளது என்று நாம் நினைக்கும்படியாய் சோதிக்கப்படலாம். பெற்றோருக்கான கடமைகள் அநேகம் உலகம் சார்ந்தவையாக சாதாரணமாக தோன்றலாம் ஆனால் அதை விசுவாசத்தோடு செய்யும்போது அவை மகிமையானவை! இயேசு தனது சீடர்களின் கால்களை கழுவியபோது, அவர் தாழ்மையான சேவைக்கு மதிப்பை கொடுத்தார். மேலும், இந்த சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் (மத்தேயு 25:40) என்று அவர் கூறினார். அவருடைய நாமத்தில் ஒரு கலசம் குளிர்ந்த தண்ணீரை நமது பிள்ளைகளுக்கு குடுக்கும்போது நாம் தாழ்மையுடன் சேவை செய்கிறோம் (மத்தேயு 10:42). இவ்விதமான அன்பான கரிசனை மிகுந்த காரியங்கள், தேவன் தன்னுடைய பிள்ளைகளின் மீது எவ்வளவு அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 7:9-11).
4. நமது பிள்ளைகள் தேவனுக்கு சொந்தமானவர்கள்
நம்முடைய பிள்ளைகள் முதலாவது தேவனுக்கு சொந்தமானவர்கள் (எபேசியர் 1:4). அவரே அவர்களுடைய பரலோக சிருஷ்டிகர். அவர்களை நம்முடைய நோக்கங்களுக்காக அல்ல, மாறாக தேவன் அவருடைய நோக்கத்திற்காகவே அவர்களை உருவாக்கினார். அதாவது பிள்ளைகளை அவர்களுடைய படைப்பின் பிரதானமான நோக்கத்திற்கு நேராக வழிநடத்தும் உக்கிராணகாரர்களாக பெற்றோர்கள் காணப்பட வேண்டும் (எபிரெயர் 12:5-11). நாம் எப்போதும் நமது பிள்ளைகளுக்கான நம்முடைய திட்டங்களை தேவனுடைய திட்டத்திற்கு அடிபணியச் செய்ய வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும் (நீதிமொழிகள் 16:9). தேவன் நம்முடைய பிள்ளைகள் எங்கே வாழுவார்கள் (அப்போஸ்தலர் 17:26), அவர்கள் எவ்விதமான நன்மைகளை செய்வார்கள் (எபேசியர் 2:10), மற்றும் அவர்களின் வாழ்க்கையில் செல்லும் திசை (சங்கீதம் 139:16) போன்றவற்றை முன்னதாகவே அவர் தீர்மானித்திருக்கிறார்.
5. தேவன் துன்பத்தை பயன்படுத்தி தனது பரிசுத்த நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.
தேவன் நம்முடைய பிள்ளைகளுக்கான துன்பத்தையும் கூட தெரிந்தெடுத்தே வைத்திருக்கிறார். ஒரு அன்பான தகப்பனாக தேவன், அதற்கான ஆறுதலை அளிக்காமல் துன்பத்தை அனுமதிக்க மாட்டார் (ஏசாயா 41:10; 1 கொரிந்தியர் 10:13; 1 பேதுரு 4:19; வெளிப்படுத்துதல் 21:4). இயற்கையாகவே, நமது பிள்ளைகள் துன்பப்படுவதைக் காணும்போது நமது இருதயம் உடைந்து போவதுண்டு. ஆனால் தேவனது பரிசுத்த மற்றும் ஞானமான பராமரிப்பில், தேவன் நமது பிள்ளைகளுக்கு (மற்றும் நமக்கும்) சோதனைகளை அனுமதித்து, அவர்களை அவரது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார் (ரோமர் 8:29). இந்த நல்ல நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாம் துன்பத்தில் மகிழ்ச்சியடைய வேண்டும். மேலும் காலப்போக்கில், நமது பிள்ளைகளுக்கும் அதை நாம் கற்பிக்க வேண்டும் (யாக்கோபு 1:2-4).
6. பரிசுத்தத்திற்கு ஒழுக்கம் தேவை
தேவன் எவர்களை நேசிக்கிறாரோ அவர்களை அவர் சிட்சிக்கிறார், எனவே நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் (எபிரெயர் 12:6, நீதிமொழிகள் 13:24, 23:13). தாய்மார்கள் உட்பட யாரும், அந்நேரத்தில் சிட்சையை விரும்புவதில்லை, ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனை தரும் (எபிரெயர் 12:11). நம்முடைய பிள்ளைகளை சரியான விதத்தில் சிட்சைக்குட்படுத்த தேவையான ஞானத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும் மற்றும் தேவன் அதை கொடுப்பார் என்று முழுமையாக அவரை விசுவாசிக்க வேண்டும் (யாக்கோபு 1:5, 1 யோவான் 5:14-15).
7. தேவனுடைய பார்வையிலிருந்து பரிசுத்தத்தை கண்ணோக்க வேண்டும்.
மனுஷன் முகத்தை பார்க்கிறான் ஆனால் கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார் (1 சாமுவேல் 16:7). நமது பிள்ளைகள் தவறாக நடந்துகொள்ளும்போது, நாம் வெளித்தோற்றத்தை வைத்து நியாயந்தீர்க்க சோதிக்கப்படலாம். “யாவரும் கேட்கிறதற்கு தீவிரமாயும் பேசுவதற்கு பொறுமையாயும் கோபிக்கிறதற்கு தாமதமாயும் இருக்க வேண்டும்” என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது (யாக்கோபு 1:19) மற்றும் “ஞானியின் செவி அறிவை நாடும்” (நீதிமொழிகள் 18:15) என்று நமக்கு சொல்கிறது. சில நேரங்களில் பிள்ளைகளை நாம் உடனடியாக சிட்சிக்காமல் தாமதப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், நாம் நம்முடைய பிள்ளைகளின் இருதயத்தை துல்லியமாக கையாளுவதற்காக, முதலாவதாக நாம் நல்ல புரிதலை கொண்டிருக்கும்படியாய் தேவனுடைய உதவிக்காக கெஞ்ச வேண்டும் (நீதிமொழிகள் 14:29).
8. பரிசுத்தம் தேவனுடைய ஒரு பரிசு
சில சமயங்களில் நாம் தேவனிடம் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினாலே நாம் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் (யாக்கோபு 4:2-3). உங்கள் பிள்ளைகளுடைய பரிசுத்தத்திற்காக தேவனிடத்தில் ஜெபம் பண்ணுங்கள், அதோடு கூட தேவனுடைய வார்த்தையை நேசிக்கும்படியாகவும், கற்றுக்கொள்ளுகிற இருதயம், ஞானம், ஆரோக்கியம், நண்பர்களை தேர்வு செய்வது மற்றும் பல காரியங்களுக்காகவும், நல்ல ஈவுகளுக்காகவும் தேவனிடத்தில் ஜெபியுங்கள் (யாக்கோபு 1:17). உங்களுடைய பட்சத்தில் இருந்து உங்களால் கொடுக்கக்கூடிய நன்மையான ஈவுகளையும் அதோடு தேவன் அவருடைய பட்சத்தில் இருந்து கொடுக்கக் கூடிய ஈவுகளுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் (மத்தேயு 14:13-21).
9. தேவன் பிள்ளைகளுக்கு ஒரு பரிசுத்த வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார்
“உங்கள் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுங்கள்… அதனால் உங்களுக்கு நன்மையுண்டாகும்படி” (எபேசியர் 6:1-4 ஐ பார்க்கவும்). அவர்கள் தகப்பனையும் மற்றும் எல்லா அதிகாரங்களையும் கனம் பண்ணும்படியான நல்ல உதாரணத்துவத்தை அவர்களுக்கு காண்பியுங்கள். தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள் மற்றும் கர்த்தருடைய போதனையிலும், புத்தியிலும் உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் ஒருமித்த சிந்தையை கொண்டிருங்கள் (கொலோசெயர் 3:18-25). உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக நீங்கள் அவர்களின் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென்றால் அதை மரியாதையுடன் செய்யுங்கள் (எபேசியர் 6:33).
10. தேவன் தன்னுடைய பரிசுத்த பணியை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார் (யோவான் 5:17)
உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் தேவனுடைய செயலை காண ஜெபியுங்கள், அதற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள், மற்றும் அதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள். ஒரு தேவபக்தியுள்ள தாய் தனது வீட்டைக் கட்டுகிறாள் (நீதிமொழிகள் 14:1). அவரை துதிப்பதற்கான “பாவமற்ற பரிபூரண நிலைக்காக” காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவன் ஒருபோதும் பூரண நிலைக்காக நம்மிடம் காத்திருப்பதில்லை. அவர் வேதாகமத்தில் பல பரிபூரணமற்ற நபர்களை பாராட்டினதை பார்க்கலாம். உங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் தேவனுடைய உண்மையுள்ள செயல்களை அவர்கள் அறிந்து கொள்ளும்படியாக சுட்டிக்காட்டுங்கள்.
11. இயேசுவே நம்முடைய பரிசுத்தத்திற்கான சமாதானக்காரணர்.
“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு நமக்கு உறுதியாக சொல்லியிருக்கிறார் (யோவான் 16:33). ஒரு தாயாக பிள்ளைகளின் வாழ்வில் பிரச்சனைகளை எதிர்பார்த்து, சோர்ந்து போகாமல், அதற்கு உங்களை தயார்படுத்துங்கள். தேவன் உங்களோடு இருக்கிறார். தேவனுடைய வார்த்தையையும், கர்த்தருடைய ஓய்வு நாளில் கூடி வருதலையும் தொடர்ந்து பிள்ளைகளுக்கு நீங்கள் நினைவுபடுத்தி, உங்கள் பிள்ளைகளுக்காக தேவன் அருளின உடன்படிக்கை வாக்குத்தத்தங்களை நீங்கள் பற்றிக் கொண்டு அதனடிப்படையில், உறுதியாகவும், தைரியமாகவும் இருங்கள் (யோசுவா 1:9).
12. தேவனுடைய பரிசுத்த வார்த்தை போதுமானது (2 தீமோத்தேயு 3:14-15)
தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருந்து ஜெபம் பண்ணுங்கள். அப்படி நீங்கள் செய்யும் போது ஒரு தேவபக்தியுள்ள தாயாக இருப்பதற்கான அநேக சத்தியங்களை நீங்கள் கண்டு கொள்வீர்கள் (யோவான் 17:17). தேவன் யார், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை நீங்கள் வேதத்தில் படிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் ஒரு தாயாக உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்களுக்குக் காண்பிப்பார். அதனால் நீங்கள் அப்போஸ்தலனாகிய பவுலுடன் சேர்ந்து, “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13) என்று விசுவாசத்தோடு சொல்ல முடியும்.
இந்தக் கட்டுரை கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள்என்ற தொகுப்பின் ஒரு பகுதி.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


