கிறிஸ்து ஒரு தன்மையை உடையவரா அல்லது இரண்டு தன்மையை கொண்டவரா?
31-10-2024
TULIP – சீர்திருத்த இறையியல்: குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பதிலாள் மரணம்
05-11-2024
கிறிஸ்து ஒரு தன்மையை உடையவரா அல்லது இரண்டு தன்மையை கொண்டவரா?
31-10-2024
TULIP – சீர்திருத்த இறையியல்: குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பதிலாள் மரணம்
05-11-2024

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்

Blessed Are the Pure in Heart, for They Shall See God

தங்களின் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களே தேவனை தரிசிப்பார்க்ள் என்று இயேசு கூறுகிறார். 1 யோவான் நிருபத்தில் இந்த மேன்மையான வாக்குறுதியை பார்க்கிறோம்: “ நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.” (1 யோவான் 3:1a). அப்போஸ்தல ஆச்சரியத்தோடு இந்த நிருபத்தை யோவான் அறிமுகப்படுத்துகிறார். விய்க்கத்தக்க மற்றும் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் இருதயத்தில் சுத்தமில்லாத நபர்கள் தேவனுடைய குடும்பத்தில் தேவனுடைய பிள்ளைகளாக இணைக்கப்பட்டதுதான். வெறுமனே நமது சொந்த தகுதியின் அடிப்படையில் இந்த புத்திரசுவிகாரத்துக்கு தகுதியில்லாதவர்களாயிருப்பினும் நாம் தேவனின் பிள்ளைகளென்று அழைக்கப்படுகிறோம்.

யோவான் இவ்வாறு கூறுகிறார்:

உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
(1 யோவான் 3:1b-3).

நாம் அடிக்கடி கேட்கிற கேள்வி என்னவென்றால், பரலோகத்தில் நாம் எவ்வாறு இருப்போம் என்பதுதான். நாம் எதைப்போல் இருப்போம்? ஒருவரையொருவர் அறிந்திருப்போமா? நாம் எந்த வயதில் மரித்தோமோ அதே வயதில் அங்கேயும் இருப்போமா? அல்லது வயதே இல்லாத மகிமையடைந்த சரீரத்தோடு வாழ்வோமா? நமது நேரத்தை அங்கு எவ்வாறு செலவிடுவோம்? போன்ற கேள்விகளில் நாம் எப்பொழுதும் குழப்பமடைகிறோம். யோவானும் இவ்வித வியப்போடு இவ்வாறு கூறுகிறார், “ இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை.” பரலோகம் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு சில உண்மை காட்சிகளை வேதம் நமக்கு காட்டுகிறது. ஆனாலும், பரலோகத்தில் எப்படியெல்லாம் இருக்கும் என்பதற்கான முழுமையான கண்ணோட்டம் நம்மிடம் இல்லை. யோவான் நமது அறிவின் எல்லையையும், பரலோகத்தைப்பற்றி தேவனிடமிருந்து தனக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டின் எல்லையையும் அறிந்திருக்கிறார். ஆனாலும் இதைப்பற்றிய அந்தகாரத்தில் நாம் தடவி திரிவதற்கு அவர் நம்மை விடவில்லை. நாம் எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் நாம் அறியவில்லையென்றாலும், ஒன்றை மாத்திரம் நாம் நிச்சயமாக அறிவோம்: “கிறிஸ்து இருக்கிறவண்ணமாக.. அவருக்கு ஒப்பாயிருப்போம்.”

வேதத்தில் மற்ற இடங்களில் கிறிஸ்துவின் இராஜரீக வருகையை குறித்து புதிய ஏற்பாடு பேசுகையில் Apocalypse என்ற “வெளிப்பாடு” என்ற பதத்திலேயே பேசுகிறது. கிறிஸ்து வெளிப்படப்போகிறார்; தனது முழு மகிமையோடு வெளிப்படப்போகிறார். நமது கண்கள் அவரைக் காணும் என்று வேதம் சொல்கையில், அவர் வெளிப்படும்போது தோன்றுகையில் நாம் அவரைப் பார்ப்போம் என்றே வேதம் கூறுகிறது. எனவே இந்த வேதப்பகுதிகளின் உந்துதல், தன் முழு மகிமையில் வெளிப்படப்போகிற கிறிஸ்துவை நாம் ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையை நோக்கி நமது கவனத்தை திரும்பச் செய்யவேண்டும்.

ஒரே தேவன் அவர் இருத்தலில் ஒருவராகவும் ஆள்தத்துவங்களில் மூன்று நபராக பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியானவராகிய தேவனாகவும் இருக்கிறார்கள் என்பதை வேதமும் திரித்துவத்தைக் குறித்த இறையியல் விளக்கமும் கூறுகிறது. இந்த உண்மை புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தால்,கிறிஸ்துவை அவரின் மகிமையில் நேருக்கு நேர் பார்ப்பதை விட பெரிதான ஒன்றை இது வாக்களிக்கிறது. நாம் வெறுமனே தேவனின் பூரண தன்மையின் வெளிப்பாட்டை மட்டும் பார்க்க மாட்டோம்; நாம் அவரை முகமுகமாக அவர் இருக்கும் வண்ணமாகவே நாம் பார்க்கப் போகிறோம். வெளிப்படையாக இது ஒரு கடினமான தத்துவ மற்றும் இறையியல் கேள்வியை முன்வைக்கிறது: தேவன் ஆவியாக இருக்கிறாரென்றால், அவரின் பரிசுத்த தன்மை ஆவியாகவும் பார்க்கமுடியாததாகவும் இருக்கையில் நாம் அவரை பார்ப்பதைப் பற்றி வேதம் எவ்வாறு கூறமுடியும்?.

இந்த கேள்விப் பற்றிய சில சுவாரஸ்யமான காரியங்களை ஜோனத்தான் எட்வர்ட்ஸ் சிந்தித்திருக்கிறார். அவரது சிந்தனை நிச்சயமாக ஓர் ஊகமாக இருப்பினும், என்னை அது ஆச்சரியப்படுத்துகிறது. நேரில் கண்ட சாட்சிகளில் நாம் அதிக நம்பிக்கை வைக்கிறோம். ஒரு நபர் தன் கண்களினால் ஒரு காரியத்தைப் பார்த்திருப்பதினால் அது உண்மையாக இருக்கும் என்று சிலர் சொல்வார்கள். கண்ணின் பார்வை எந்தளவுக்கு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பார்வையற்ற ஒருவர் தான் பார்வையை மீட்டெடுக்க என்னத்தைக் கொடுப்பார். நாம் பார்ப்பதற்கு கண்கள் செயல் படவேண்டும், அதேபோல் பார்க்கும் காட்சிகளை சரியாய் விளங்கிக்கொள்ள மூளையின் செயல்பாடும் அவசியம். அதேசமயத்தில், பார்க்கும் திறன் மட்டும் போதாது. நமக்கு வெளிச்சம் தேவை. இருளில் நம்மால் பார்க்க முடியாது. நேரடியான மற்றும் உடனடியான நேரில் கண்ட சாட்சிகளின் அனுபவங்கள் மெய்யாகவே அவைகள் மறைமுகமான மற்றும் இடைநிலை அனுபவங்களாகவே இருக்கிறது என ஜோனத்தான் எட்வர்ட்ஸ் கூறுகிறார். அந்த அனுபவங்கள் ஒளி, உணர்வு, நரம்பின் தூண்டுதல் மற்றும் பல இடைநிலை வழியாக செல்கின்றன. எட்வர்ட்ஸை பொறுத்தவரை, தேவனின் முழுமையான வெளிப்பாடு கண்கள் அற்ற நிலையில் நடைபெறும் ஒன்றாகவே இருக்கும். இது தேவனின் தன்மையை நமது ஆத்துமாவினால் அடையும் நேரடியான மற்றும் உடனடியான புரிதலாகவும் முற்றிலும் வியக்கத்தக்க முறையிலும் இருக்கும். தேவனைப் பார்க்க தடையாக இருக்கும் அனைத்தும் நீக்கப்படும், நமது தேவனின் இருத்தலைப் பற்றிய உடனடி மற்றும் நேரடியான பார்வையில் நமது ஆத்துமா நிரப்பப்பட்டிருக்கும்.

“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” என்று இயேசு கூறுகிறார். நமது இருதயத்தின் அசுத்தங்களும் பாவங்களுமே தேவனைத் தரிசிப்பதிலிருந்து நம்மை விலக்கி வைக்கிறது. நாம் அவரைத் தரிசிக்கையில் அவரைப்போலவே இருப்போம், அவர் இருப்பதை போலவே அவரைப் பார்ப்போம் என்றே யோவான் கூறுகிறார். தேவன் அவர் இருப்பதைப்போலவே அவரைப் பார்ப்பதற்கு நம்மை மகிமைப்படுத்துவாரா அல்லது நம்மை தூய்மைப்படுத்துவதற்கு அவரை நமக்கு காண்பிப்பாரா என்பது கேள்வியாகவே உள்ளது. இதற்கான பதில் நமக்கு தெரியவில்லை. ஆனால் இவை சுவாரஸ்யமானது காரணம், தேவனின் தன்மைப் பற்றி நேரடியான அவர் எப்படிப்பட்டவர் என்ற அவரது உடனடி வெளிப்பாட்டைக் காட்டிலும் வேறொன்றும் நம்மை தூய்மைப்படுத்தமுடியாது. இந்த எதிர்காலத்தைப் பற்றிய வாக்குறுதியும் இப்போதிருந்தே நமது பரிசுத்தமாகுதலை நம்மில் துவங்குகிறது என்பதை யோவான் கூறுகிறார். எனவே உங்கள் ஆத்துமா முழுமைக்கான இறுதி வாக்குறுதியாக இதை எப்பொழுதும் உங்கள் முன்னே வைத்திருங்கள்.

இந்த சிறிய கட்டுரை ஆர். சி. ஸ்ப்ரௌலின் முக்கிய கேள்விகளின் கையேடான How Can I Be Blessed? என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.