
சகரியா பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
13-05-2025
வெளிப்படுத்தின விசேஷம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
20-05-2025மீகா புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரதான காரியங்கள்

மீகாவின் தீர்க்கதரிசனம், பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசின புத்தகங்களில் ஆறாவதாக இடம்பெற்றுள்ளது. அவருடைய மூன்று பிரதான தீர்க்கதரிசனங்களில் (மீகா 1:2–2:13; 3:1–5:15; 6:1–7:20) ஒன்று, கலககுணம் கொண்ட வடக்குதிசையிலுள்ள இஸ்ரவேல் தேசத்தின் (10 கோத்திரங்கள்) மீது இருக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பை முன்னறிவித்தன, இரண்டாவதாக செழிப்புள்ள தெற்குதிசையிலுள்ள யூதா தேசத்தில் (2 கோத்திரங்கள்) காணப்படும் அநீதிகளுக்கு விரோதமாகவும் , மூன்றாவதாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் வருகையை பற்றியும் உரைக்கப்பட்டவைகளாகும்.
1. மீகா தீர்க்கதரிசி, ஏசாயா மற்றும் ஓசியா தீர்க்கதரிசிகளின் காலகட்டத்தில் வாழ்ந்தவர். மேலும் இஸ்ரவேல் மனந்திரும்ப வேண்டும் என்பதற்கான அழைப்பை தன்னுடைய தீர்க்கதரிசனத்தின் மூலமாக எடுத்துரைத்தார்.
ஆமோஸ் மற்றும் யோனா தீர்க்கதரிசிகளின் காலத்திற்கு பின்னர், ஒரு தலைமுறையை கடந்து, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா போன்ற ராஜாக்களின் ஆட்சி காலத்தில், கிமு 8 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார். இது குழப்பம் நிறைந்த, கலகமும் கொந்தளிப்பான காலகட்டமாயிருந்தது. அசீரிய ராஜாவாகிய சல்மனேசர் சமாரியாவை சூறையாடி, இஸ்ரவேலைக் கைப்பற்றி, யூதாவையும் பயமுறுத்தினான். செல்வாக்குள்ளவர்கள் ஏழைகளை ஒடுக்கினார்கள். மற்றும் அதிகாரத்திலிருப்பவர்களுடைய ஒழுக்கக்கேடு, கலாச்சார வீழ்ச்சி மற்றும் ஆவிக்குரிய வீழ்ச்சிகள் எங்கும் பரவலாக காணப்பட்டன. மற்ற எல்லா தீர்க்கதரிசிகளையும் போலவே, மீகா, ஏசாயா மற்றும் ஓசியா போன்ற தீர்க்கதரிசிகளும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அவருடைய ஜனங்களை மனந்திரும்புதலுக்கேதுவாய் அழைக்கும் பொதுவான செய்தியையே பகிர்ந்து கொண்டனர். சகரியா தீர்க்கதரிசியைப் போலவே, ஜனங்களை தொடர்ந்து மனந்திரும்பும்படியாக கர்த்தருடைய வார்த்தைகள், பிரமாணங்கள் மற்றும் கட்டளைகளை அறிவிப்பதே முக்கியமான செய்தியாக இருந்தது (சக. 1:6). யோவேலைப் போலவே, இஸ்ரவேலர்கள் இரட்டுடுத்தி புலம்ப வேண்டும் என்றெடுத்துரைத்தார் (யோவேல் 1:13). எசேக்கியேலைப் போலவே, அவர்களுடைய அக்கிரமங்கள் அவர்களுக்குத் தடையாயிராதபடிக்கு அவர்கள் மனந்திரும்பி தங்கள் எல்லா அக்கிரமங்களையும் விட்டுவிலக வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் (எசே. 18:30). தீர்க்கதரிசிகள் தொடர்ந்து கீழ்க்கண்ட ஒரேசெய்தியையே பிரஸ்தாபம் பண்ணினார்கள்.
சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள் (ஏசா. 1:27).
மெய்யாகவே, மீகாவின் மனந்திரும்புதலுக்கேதுவான செய்தியானது நம்பிக்கைகுரியதாக இருந்தாலும் அது அவர்கள் விருப்பத்திற்கேற்ப வரவேற்பதை போன்று காணப்படவில்லை – தேவனின் செய்தி தீர்க்கதரிசிகளின் நாட்களில் அன்றும் அப்படி காணப்படவில்லை, இன்றும் அப்படி காணப்படுவதில்லை.
2. பூர்வகாலந் தொடங்கி மனந்திரும்புதலின் செய்திக்கு இருந்த எதிர்ப்புகளின் காரணமாக, தீர்க்கதரிசிகள் பெரும்பாலும் தேவனுக்காக “வழக்காடும் வழக்கறிஞர்களாகவே” காணப்பட்டனர்.
சில சமயங்களில், மீகாவின் தீர்க்கதரிசனத்தில் (மீகா 6:1–8), சொல்லப்பட்டதை போல வழக்கறிஞர்களைப் போல காணப்படும் இந்த தீர்க்கதரிசிகளின் பங்களிப்பானது மிகவும் தெளிவாக காணப்பட்டது. இதில் வியப்புமிக்க காரியம் என்னவென்றால், தேவன் தன்னால் தெரிந்தெடுக்கப்பட்ட தன்னுடைய ஜனங்களுக்கு விரோதமாக, அவர் எல்லா குற்றச்சாட்டுகளையும் ஒரு நீதிமன்றத்தில் நடைபெறும் காட்சிக்கொப்பாய் கூறுகிறதை பார்க்கலாம். இந்த வழக்கு பரலோகத்தில் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருந்த தேவனுக்கு முன்பாக நடைபெறுகிறது (மீகா 6:1). பர்வதங்கள் மற்றும் மலைகள் தொடங்கி பூமியின் அஸ்திபாரங்கள் வரை அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிற அனைத்து படைப்புகளும், சாட்சி கொடுக்கவும், அதற்கான ஆதாரங்களைக் கேட்கவும் அழைக்கப்படுகின்றன (மீகா 6:2). பின்னர் வழக்கறிஞர் தனது ஆதாரங்களை முன்வைக்கிறார் (மீகா 6:3–5) மற்றும் எதிர்வாதிகள் அந்த வாதத்திற்கான நியாயங்களை பற்றி பேசுகிறார்கள் (மீகா 6:6–7). ஜனங்கள் கர்த்தரின் பரிசுத்தத்தின் நிமித்தமாக மிகவும் “சோர்வுக்குள்ளானார்கள் “(மீகா 6:3). எனவே, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானதாக மற்றும் துரோகத்திற்குரியதாயிருந்தது. ஜனங்களுடைய மீட்பின் சரித்திரத்திலிருந்து சிந்தித்தால் இந்தக் குற்றச்சாட்டானது, நான்கு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் ஆச்சரியமான முறையில் மீட்கப்பட்டது (மீகா 6:4). இரண்டாவது, அவர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது மோசே, ஆரோன், மிரியம் போன்ற தேவனுக்கான தலைமைத்துவத்தை அவர்களுக்காக எழுப்பியது (மீகா 6:4). மூன்றாவதாக, பாலும் தேனும் ஓடுகிற வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய பிரயாசப்பட்டபோது, பிலேயாமின் சாபங்களை தேவன் மாற்றியமைத்தது (மீகா 6:5). நான்காவதாக, கடைசி கிழக்குக்கரை ஷித்திம் முதல், மேற்குக்கரை கில்கால் வரையுள்ள நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட யோர்தானை கடப்பது (மீகா 6:5) என்பவைகளாகும்.
ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், தேவன் தனது உடன்படிக்கையின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அவரது சர்வ இறையாண்மையின் திட்டத்தின்படி, அவர் ஜனங்களை ஒவ்வொரு ஆபத்தின் ஊடாக வழிநடத்தி, அவர்களுடைய ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்தார். ஆனால் அதற்கு அவர்கள் நன்றியுள்ளவர்களாக வாழ தவறிவிட்டனர். தேவன் மீதான அவர்களுடைய அன்பும் குளிர்ந்து போய்விட்டது.
அதேவேளையில், எதிர்தரப்பினர் தங்கள் குற்றங்களை உடனடியாக ஒப்புக்கொண்டாலும் அதற்கான பரிகாரங்களை எப்படி செய்ய முடியும் என்றும் ஆச்சரியப்படுகிறதையும் நாம் உற்றுநோக்க வேண்டும். ஒருவேளை தகனபலிகளா? அல்லது ஒருவயதான கன்றுக்குட்டிகளா ? அல்லது எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளா? அல்லது அவர்களுடைய கர்ப்பகனிகளில் முதற்பேறானவைகளா? (மீகா 6:6–7) என்றார்கள். ஆனால் மேற்கண்டவைகளில் எதுவுமே இல்லை. ஒரு ராஜாவாக, நீதிபதியாக மற்றும் சட்டங்களை உருவாக்குபவராக, தேவன் இவை எல்லாவற்றையும்விட மிக உயர்ந்த மற்றும் மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றே தேவைப்படுவதாக பதிலளிக்கிறார். அவர் ஒரு வெகுமதியை அவர்களிடத்தில் விரும்பவில்லை. அதற்குப்பதிலாக அந்த வெகுமதியை கொடுக்கும் நபரையே வேண்டுமென்று கேட்கிறார்.
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதே யல்லாமல் வேறே எண்ணத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்? (மீகா 6:8)
இங்கே மனந்திரும்புவதற்கான அழைப்பானது தவிர்க்க முடியாத ஒன்று என்பது தெளிவாகிறது. இதற்குப் பிறகு புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து “நியாயப்பிரமாணத்தினுடைய முக்கியமான காரியங்களை” தொகுத்து கூறும்போது, தீர்க்கதரிசிகளின் மூன்று குணாதிசயங்களான நீதி, இரக்கம் மற்றும் தாழ்மை
(மத். 23:23) ஆகியவற்றை சுட்டிக்காட்டி வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் மனந்திரும்புவதற்கேதுவாக அழைக்கிறதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஐயோ, அவர்கள் தங்கள் முன்னோர்களைப் போலவே சிறப்பான வேறொன்றையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே காணப்பட்டனர். இதினாலேயே “அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார் அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11) என்று வேத வசனம் நமக்கு சொல்லுகிறது. ஆனால், மனத்தாழ்மையோடு கூடிய மனந்திரும்புதலின் மூலமாகவே நாம் குணமடைந்து, நம்பிக்கைக்குரிய வழியை கண்டடைகிறோம். மனந்திரும்புதலில்தான் நாம் தேவகிருபையின் செய்தியைக் கேட்க முடியும்.
3. நியாயத்தீர்ப்பைபற்றிய எச்சரிக்கை மற்றும் மனந்திரும்புதலுக்கான அழைப்பைப் போலவே, தேவனுடைய கிருபையின் செய்தியும் தெளிவாக மீகாவில் அறிவிக்கப்படுகிறது.
மீகாவின் தீர்க்கதரிசனம், மீட்பு மற்றும் புதுப்பிக்கப்படுதல் என்கிற சத்தியங்களை எதிரொலிக்கிறது. “சீயோன் வயல்வெளியைப் போல உழப்படும்” மற்றும் “எருசலேம் மண்மேடுகளாய்ப்போகும்” என்றாலும், “கடைசி நாட்களில், கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும்” மற்றும் “எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடி வருவார்கள்” (ஏசா. 2:2–4; எரே. 26:17–19; மீகா. 3:12–4:3) என்ற வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசன வசனத்தை மீண்டும் நினைவுபடுத்தி ஏசாயாவும், எரேமியாவும் மீகாவை மேற்கோள் காட்டுகிறார்கள். புதிய ஏற்பாட்டில் மத்தேயு,பெத்லகேமிலிருந்து மேசியாவின் வருகையை “கர்த்தருடைய நாமத்தின் மகத்துவம்” மற்றும் “அவருடைய மந்தையின் மேய்ப்பன்” ( மீகா. 5:2–4, மத். 2:6). ) போன்ற சத்தியங்களை மீகா தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். லூக்காவும் அந்த வண்ணமாகவே மேற்கோள் காட்டுகிறார் (லூக்கா 12:53; மீகா 7:6 மற்றும் லூக்கா 11:42–43; மீகா 6:8), இதனால் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளானது நற்செய்தியை பரப்புவதையே அடிப்படையாக கொண்டது.
மீகாவின் தீர்க்கதரிசனங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பார்ப்போமானால், தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியத்தின் மகத்துவம், தேவனுடைய உடன்படிக்கையின் மீறமுடியாத தன்மை, தேவனுடைய நீதியின் உறுதிப்பாடு மற்றும் தேவனுடைய முழுமையான கிருபையின் மேன்மை ஆகிய சத்தியங்களின் வல்லமை நிறைந்த சுருக்கமாகும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.