
நரகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
27-02-2025
2 பேதுருவிலிருந்து அறிய வேண்டிய மூன்று அடிப்படை காரியங்கள்
06-03-2025கொலோசெயர் நிருபத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

டேவிட் முர்ரே
ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுஞ்செய்தியையோ அதன் பின்புலம், சூழல், நோக்கம் ஆகியவற்றை அறியாதவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல் கொலோசே திருச்சபைக்கான பவுலின் நிருபத்தை, அதன் பின்னணி, சூழல் மற்றும் நோக்கம் இல்லாமல் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது.
கொலோசெயருக்கு பவுல் எழுதிய கடிதத்திற்கு பின்னால், தவறான போதனைகள் கொலோசெய விசுவாசிகளின் விசுவாசத்தையும், நடைமுறையையயும் பாதிக்கிறது என்ற கவலை பவுலுக்கு இருந்தது. இந்த கள்ள போதனையாளர்கள் Gnostics (உலக சமய ஞானவாதிகள்) என்று அழைக்கப்பட்டனர். காரணம், இவர்கள் இரட்சிப்பிற்கான வழியானது, சிறப்பான ஞானமாகவும் மற்றும் இப்பூமியிலிருந்து தெய்வீக உலகுக்கு உயர்த்துவதற்கு உலக ஞானம் சார்ந்த உள்ளார்ந்த அறிவும் தேவை என்பதை நம்பினார்கள்.
கொலோசெயர் நிருபத்தின் மூன்று முக்கிய கருப்பொருள்கள், Gnostics என அழைக்கப்படும் சமய ஞானவாதிகளின் போதனைகளுடன் தொடர்புடையவை என்பதில் ஆச்சர்யமேதுமில்லை.
1.கிறிஸ்துவே முதன்மையானவர்
தெய்வீக ஆவிகளின் உலகத்தில் ஓர் சிக்கலான படிநிலைகள் உள்ளதென்றும், அந்த படிநிலைகளில் கீழாக உள்ளதுதான் பொருள் சார்ந்த உலகத்தை உண்டாக்கியது என்றும், எனவே சரீரம் சார்ந்தவைகள் எவைகளோ அவைகள் குறைந்த மதிப்புடைய வை, நமது பாவம் சரீரத்தை மட்டுமே பாதித்து ஆத்துமாவை பாதிக்காததால் நம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்றும் சமய ஞானவாதிகள் (Gnostics) நம்பினர்.
பவுல், கிறிஸ்து தேவனின் பூரண சாயலாக இருக்கிறார் என்றும் அவர் பொருள் சார்ந்த மற்றும் ஆவிகள் சார்ந்த உலகங்கள் எல்லாவற்றையும் படைத்ததினால் அனைத்து படைப்புகள் மீதும் முதன்மையானவர் என்பதை காண்பிப்பதின் மூலம் கிறிஸ்துவின் உன்னத நிலை மற்றும் அவரின் அதிகாரத்தை பவுல் இதில் காண்பிக்கிறார் (கொலோ 1:15-16). கிறிஸ்து வெறுமனே எல்லாவற்றையும் படைத்துவிட்டு அப்படியே விட்டு விட்டு செல்லவில்லை, மாறாக தான் படைத்த அனைத்தையும் ஒன்றாக பிடித்து, சகலத்தையும் தாங்கி ஆளுகை செய்துகொண்டிருக்கிறார் (கொலோ 1:17). கிறிஸ்து தனது மானுட பிறப்பில், தன் மானுட சரீரத்தோடு தெய்வீக பூரணத்தை இணைத்து, பாடுபட்டு, மரித்து, பாவிகளை தேவனோடு ஒப்புரவாக்குவதற்கு மீண்டும் மூன்றாவது நாள் தன் சரீரத்தில் உயிர்த்தெழுந்ததினால் அவர் முதன்மையானவராகவும் திருச்சபைக்கு தலைவராகவும் இருக்கிறார் (கொலோ 1:18-20).
பவுல் கொலோசெயருக்கு இவ்வாறு கூறுகிறார்: “ சமய ஞானவாதிகளுக்கு செவிகொடாதிருங்கள். கிறிஸ்துவே உன்னத தேவனாயிருக்கிறார், மற்ற ஆவிகள் சார்ந்த படைப்புகள் அல்ல. பொருள் மற்றும் சரீரம் சார்ந்த உலகங்கள் தாழ்ந்த ஆவிகளால் உண்டாக்கப்படவில்லை, அவைகள் உன்னதமான கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டன. இந்த உன்னதமான கிறிஸ்து சரீரத்தில் இப்பூமியில் பிரவேசித்தார். சரீரத்தில் வாழும் மனிதர்களை தேவனோடு ஒப்புரவாக்குவதற்கு இவையனைத்தையும் கிறிஸ்து செய்தார். தேவனுக்கு இம்மனுக்குலம் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை பார்க்கிறீர்களா? எனவே நமது சரீரங்களையும், இப்பொருள் சார்ந்த உலகத்தையும் அற்பமாக எண்ணாமல் இவைகளை தேவன் இரட்சிக்க விரும்பும் படைப்புகள் என்பதை உணர்ந்து அவைகளை கனப்படுத்துங்கள்.
2.கிறிஸ்துவே போதுமானவர்
சமய ஞானிகளுக்கே உரித்தான ஒரு சில மாயையான அனுபவங்கள், அரிதான உள்ளுணர்வுகள் மற்றும் சிறப்பான ஞானங்கள் மூலமாகவே இரட்சிப்பு வருகிறது என்று Gnostics போதித்தார்கள். இவைகளே அவர்களை இரட்சிக்கும் என்பதை நம்பினார்கள் (கொலோ 2:1-3).
எனவே, கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் மட்டுமே இரட்சிக்கும் ஐசுவரியம் மற்றும் ஞானத்தின் ஒரே ஆதாரமாக உள்ளது என்பதை பவுல் சுட்டிக்காட்டினார். கிறிஸ்து போதுமானவர் என்ற சத்தியத்திலிருந்து அவர்களை பிரிக்கும் உலக தத்துவங்கள், பாராம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் ஆகிய தவறான காரியங்களுக்கு எதிராக பவுல் அவர்களை எச்சரித்தார் (கொலோ 2:4-9). அனைத்து பரிபூரணங்களும் கிறிஸ்துவுக்குள்ளாகவே இருக்கிறபடியினால், கிறிஸ்தவர்களும் அவருக்குள் பரிபூரணராக உள்ளார்கள் (கொலோ 2:10). சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவில் உள்ள விசுவாசமே அல்லாமல் வேறொன்றும் இரட்சிப்புக்கும், பரிசுத்தமாகுதலுக்கும் அவசியமானதல்ல (கொலோ 2:11-15). எவ்விதமான உலக ஞானங்களும், பழக்கவழக்கங்களும், அனுபவங்களும், தூதர்களும் கிறிஸ்துவோடு சேர்க்கப்படமுடியாது. கிறிஸ்து பரிபூரணமானவராக இருக்கிறார், நாமும் அவருக்குள் பரிபூரணமாக உள்ளோம் (கொலோ 2:16-23).
பவுல் கொலோசெயருக்கு இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் கிறிஸ்துவை பெற்றிருக்கிறீர்களென்றால் போதுமான அனைத்தையும் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் எதை அவரோடு இணைக்கிறீர்களோ, அவைகள் அவரிடமிருந்து எடுக்கப்படும். பரிபூரணமான கிறிஸ்துவில் பரிபூரணமாக இளைப்பாருங்கள்.”
3.கிறிஸ்துவே நமது அடையாளம்
சரீரங்கள் ஆத்மீகம் சார்ந்தது என்பதை சமய ஞானவாதிகள் (Gnostics) நிராகரித்ததினால் அதைப் பற்றிய அநேக கொள்கைகள் இவ்வுலகில் இருக்கின்றன. அவர்களுக்கு இரட்சிப்பு என்பது, இந்த பொருள் சார்ந்த உலகத்திலிருந்து ஆவிகளின் உலகத்திற்கு செல்வது, இப்பூமியில் நமது சரீரத்தில் எவ்வாறு நாம் வாழ்ந்தாலும் அது அவர்களுக்கு கவலை இல்லை.
இதற்கு எதிர்மாறாக, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவோடு மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்ததினால் இவ்வுலகில் அவர்கள் புது அடையாளத்தை கொண்டிருக்கிறார்கள் என்று பவுல் போதித்தார் (கொலோ 3:1-4). இந்த புதிய அடையாளத்தோடு புதிய வாழ்வு உண்டாகி, இந்த உலகத்திலும் நமது வாழ்விலும் புதிய அணுகுமுறையை நாம் கொண்டிருக்கிறோம். உலக வழக்கங்களின் பழைய அடையாளங்கள் களைந்துவிட்டு, கிறிஸ்துவின் புதிய அடையாளம் அணிந்துக் கொள்ளவேண்டும் (3:5-17). இந்த புதிய அடையாளத்தின் பொதுவான வரையறைகள், மனைவிகள், கணவர்கள், குழந்தைகள், வேலைக்காரர்கள், எஜமான்கள் ஆகியவர்களுக்கு கூறப்படும் மிகவும் சிறப்பான அறிவுரைகளில் வெளிப்படுத்தப்படுகிறது (கொலோ 3:18-4:6).
கொலோசெயருக்கான பவுலின் அறிவுரைகள் பின்வருவனவற்றில் சுருக்கமாக வரையறுக்க முடியும்: “ஆன்மீக சார்ந்த உலகத்தை பற்றிய சமய ஞானவாதிகளின் பிரத்யேக உபதேசத்தினால் வழிவிலகி விடாதிருங்கள். இவ்வுலகத்தின் மீதான கிறிஸ்துவின் இறையாண்மை என்பது இவ்வுலகில் நமது சரீரத்தில் அவரின் ராஜரீகத்துக்கு கீழாக வாழவேண்டும் என்பதை கூறுகிறது. கிறிஸ்து போதுமானவர் என்பது, இவ்வுலகில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று நிரூபிப்பதற்கு தேவையான முழுமையான மற்றும் போதுமான புதிய அடையாளத்தை அவரில் அடைந்திருக்கிறீர்கள் என்பதை காண்பிக்கிறது.”
எவ்வாறு நாம் கிறிஸ்துவின் உன்னத இறையாண்மைக்கு கீழாக வாழவும், பரிபூரணமான கிறிஸ்துவில் பரிபூரணத்தை காணவும், கிறிஸ்துவுக்காக நமது புதிய வாழ்வை கிறிஸ்துவின் புதிய அடையாளத்தோடும் நாம் வெளிப்படுத்தமுடியும்? இதற்கு கொலோசியர் நிருபத்தில் பவுலின் முதல் மற்றும் இறுதி வார்த்தைகளை கவனியுங்கள்: “உங்களுக்கு கிருபை உண்டாவதாக” (கொலோ 1:2, 4:18).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.