Gospel Practices in Hard Seasons

கடினமான காலங்களில் சுவிசேஷத்தை மையமாகக் கொண்ட நடைமுறைகள்

10-11-2026
Gospel Practices in Hard Seasons

கடினமான காலங்களில் சுவிசேஷத்தை மையமாகக் கொண்ட நடைமுறைகள்

10-11-2026

தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல்

Fulfillment of Prophecy

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு புதிய ஏற்பாட்டில் நிறைவேறின என்பதை விளக்கும் பல வசனங்கள் உள்ளன. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இத்தகைய வசனங்களைப் படிக்கும்போது, அந்தத் தீர்க்கதரிசன வசனங்கள் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள குறிப்பிட்ட மனிதர்களையும் நிகழ்வுகளையுமே துல்லியமாக எடுத்துரைத்திருக்கிறது என்று கருதுகின்றனர். சில தீர்க்கதரிசனங்கள் நேரடியாகவே வரவிருக்கும் காரியங்களை முன்கூட்டியே கூறியிருந்தாலும், பல தீர்க்கதரிசனங்கள் ஆரம்ப காலத்தின் பழைய ஏற்பாட்டிலுள்ள நிகழ்வுகளையும் தனிநபர்களையுமே குறிப்பிடுகின்றன; ஆனால் புதிய ஏற்பாட்டில் அவை ஆழமான அர்த்தத்தை உடையதாய் காணப்பட்டன. இதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

பொதுவாக நாம் “நிறைவேறுதல்” (fulfill) என்று மொழிபெயர்க்கும் கிரேக்க வார்த்தைகளுக்கு, “நிரப்புதல்”, “முழுமையாக்குதல்”, “முடித்தல்” , “பூர்த்தி செய்தல்”  அல்லது “கடைப்பிடித்தல்”  – (சட்டத்தைக் கைக்கொள்வது போல) போன்ற பல அர்த்தங்களும் உண்டு. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நிறைவேறுதல் என்ற வார்த்தையானது முன்கூட்டியே உரைக்கப்பட்ட ஒன்றின் மீதே கட்டமைக்கப்படுகிறது: அதாவது பாதி அர்த்தம், ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளின் தொகுப்பு அல்லது கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை போன்றவற்றைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. வேதாகம நிறைவேறுதலுக்கு, தீர்க்கதரிசனமானது தனித்த மற்றும் குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற எந்தவிதமான அவசியமும் இல்லை. மாறாக, முன்னுரைக்கப்பட்ட வார்த்தைகளின் அர்த்தங்கள் பின்பு வந்த காரியங்களை விரிவாக்கியது அல்லது முழுமை பெறசெய்தது  என்பதையே அது உணர்த்துகிறது.

இதற்கு சரியான ஒரு உவமானமாக, நம் வாழ்க்கையில் நாம்   “நிறைவேற்றப்பட்டதாக”  உணர்ந்த காரியங்களை  நினைத்துப் பார்க்கலாம். இதற்கு முன் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தது என்று இதற்கு அர்த்தமல்ல. மாறாக, முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் அதிக ஆழத்தையும் முழுமையையும் அனுபவிக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே இதன் பொருளாகும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றப்பட்டன  என்பதை விவரிப்பதற்கு இதே உண்மை பொருத்தமாயிருக்கும். பழைய ஏற்பாட்டின் அர்த்தங்களை மேலும் செழுமையாகவும் ஆழமாகவும் நடைபெற்றதைக் குறிக்கவே  “நிறைவேறுதல்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தீர்க்கதரிசனம் என்றால் என்ன? 

தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலைப் புரிந்துகொள்வதில் மற்றொரு முக்கிய காரணி, “தீர்க்கதரிசனம்” என்பதன்  ஆழமான அர்த்தத்தை சரியாக 

புரிந்துகொள்வதாகும். பெரும்பாலான நவீனகால வாசிப்பாளர்கள்  தீர்க்கதரிசனத்தை எதிர்காலத்தை கணிக்கக்கூடிய காரியமாகவே பார்க்கிறார்கள். வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தில் எதிர்காலத்தைப் பற்றி சொல்லக்கூடிய சில  காரியங்கள் அடங்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதில் வரலாற்று நிகழ்வுகளை சரியாகப் புரிந்து கொள்ளுதல், தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் குறித்த சரியான சிந்தனை போக்கு, மனந்திரும்புதலுக்கும் கீழ்ப்படிதலுக்குமான அழைப்புகள், தேவனை துதித்து பாடுதல், புலம்பல்கள், தீர்க்கதரிசனத்தின் பார்வையை விவரித்தல் மற்றும் பல விஷயங்களும் அடங்கியுள்ளன. அடிப்படையில், ஒரு தீர்க்கதரிசி தேவனுடைய பிரதிநிதியாக என்ன சொன்னாரோ அல்லது எழுதினாரோ அதுவே தீர்க்கதரிசனமாகும்.

இதற்கு ஏற்ப, புதிய ஏற்பாடு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலைப் பற்றிப் பேசும்போது, தீர்க்கதரிசனம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அது தேவனுடைய திட்டத்தின் நிறைவேறுதலையே பொதுவாக மையமாகக் கொண்டு பேசுகிறது. வேறு விதமாகக் கூறினால், தீர்க்கதரிசனங்களின் பல நிறைவேறுதல்கள் வெறும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட  கணிப்புகள் அல்ல. மாறாக, அவை தீர்க்கதரிசி சொல்லிய வார்த்தைக்கு கூடுதலான மற்றும் முழுமையான அர்த்தத்தைக் கொடுப்பதாக அமைகின்றன.

உதாரணமாக, ஓசியா 11:1-இல், தேவன் இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து எவ்வாறு மீட்டார் என்பதைத் தீர்க்கதரிசி நினைவுகூர்ந்தார். பின்னர் மத்தேயு 2:15-இல், ஏரோதின் மறைவுக்குப் பிறகு இயேசு எகிப்திலிருந்து கலிலேயாவிற்குச் சென்றபோது, ஓசியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக நாம் படிக்கிறோம். ஓசியா தன் காலத்திலிருந்த ஜனங்களுக்கு தேவன் அவர்களையும் காப்பாற்றுவார் என்று தைரியபடுத்துவதற்காகக் கடந்த காலத்தைக் குறிப்பிட்டார். ஓசியாவோ அல்லது அவரது காலத்தில் இருந்த மக்களோ இந்த தீர்க்கதரிசனத்தின் முறைமைகள்  எதிர்காலத்தில் எவ்வாறு நிறைவேறும் என்பதை யூகித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கிறிஸ்துவிற்கு பிறகு வந்த   மத்தேயு, தேவன் யாத்திராகமத்தில் (exodus) செய்ததற்கும் இயேசுவின் வாழ்க்கையில் செய்ததற்கும் இடையே உள்ள ஒப்புமைகளை எழுதுகிறார். எனவே, இயேசு ஓசியாவால் சொல்லப்பட்ட  வார்த்தைகளின் அர்த்தத்தை விரிவுபடுத்தினார் அல்லது முழுமையாக்கினார் என்று அவர் சரியாகக்  கூறுகிறார்.

மாதிரியியல் (Typology)

 நாம் மேலே குறிப்பிட்டது போன்ற நிறைவேறுதல்கள் பெரும்பாலும் “மாதிரியியல்” (typological) என்று விவரிக்கப்படுகின்றன. இந்த வார்த்தை, கடந்த காலத்தில் நடந்த ஒரு விஷயம் பின்னாட்களில் நடந்த விஷயத்தின் அதே தன்மையை  அல்லது மாதிரியை ஒத்ததாக காணப்பட்டது என்கிற  கருத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள  மனிதர்களும் சம்பவங்களும் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் மிகப்பெரிய விஷயத்திற்கு நிழலாக இருக்கின்றன அல்லது அதை நோக்கிச் சுட்டிக்காட்டுகின்றன என்று சொல்வதற்கு இது ஒரு பொருத்தமான வழிமுறையாகும். உதாரணமாக, ரோமர் 5:14-இல், பவுல் ஆதாம் கிறிஸ்துவிற்கு ஒரு “முன்னடையாளமாக”  இருந்தான் என்று எழுதினார்; ஏனெனில் தேவனுடைய ஜனங்களுடனான உடன்படிக்கையின் தலையாக  கிறிஸ்துவுக்கு இணையான பொறுப்பு ஆதாமுக்கும் கொடுக்கப்பட்டது.

தீர்க்கதரிசன நிறைவேறுதலின் மாதிரியியல் என்பது மிகவும் வழக்கமானதே. குறிப்பாகப் பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாடு பயன்படுத்தும் விதத்தில் இது சிறப்பம்சங்களுடன் செயல்படுகிறது. உதாரணமாக, ஏரோது பெத்லகேமிலிருந்த குழந்தைகளைக் கொன்ற பிறகு அங்குள்ள தாய்மார்கள் அழுதது, எரேமியா 31:15-ன் நிறைவேறுதல் என்று மத்தேயு 2:17 கூறுகிறது. அந்த வசனம் முதலாவது கிமு 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர்களையே குறிப்பிடுகிறது. மற்றுமொரு உதாரணமாக, யோவான் 13:18-இல், சங்கீதம் 41:9-ன் வார்த்தைகளை நிறைவேற்றவே இயேசு தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவியதாகக் கூறுகிறார்; அங்கு தாவீது தன் நண்பர்களால் வஞ்சிக்கப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டதைப் பற்றிப் புலம்பியிருந்தார். அதேபோல், யோவான் 19:28-இல், இயேசு தாகமடைந்து காடியை ருசிபார்த்தது சங்கீதம் 69: 21 உள்ள வசனத்தின் நிறைவேறுதல் என்று குறிப்பிடுகிறார்; அங்கு தாவீது தன்னுடைய பாடுகளை குறித்துப் புலம்பி, மீட்புக்காகக் தேவனிடம் மன்றாடினார்

புதிதாக நிறைவேறிய மற்றும் நிறைவேற்றப்படாத கணிப்புகள் 

புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல நிறைவேறுதல்கள் மாதிரியியல் சார்ந்தவை என்றாலும், சில கணிப்புகள் முதன்முறையாக நேரடியாக நிறைவேறுகின்றன. உதாரணமாக, ஏசாயா 53:1 நிறைவேறும் பொருட்டே யூதர்கள் இயேசுவை நிராகரித்தார்கள் என்று யோவான் 12:38 கூறுகிறது. அந்தப் பகுதி, மேசியாவின் சொந்த ஜனங்களே அவரை அவருடைய வார்த்தைகளோடுகூட நிராகரிப்பார்கள் என்று கூறுகிறது.  மேசியாவை பற்றிய பல கணிப்புகளைப் போலவே, இதையும் இயேசுவின் மானுடதன்மைக்கு முன்பே நிறைவேற்றியிருக்க முடியாது. இது இயேசுவின் மூலமாக மட்டுமே நிறைவேற வேண்டியிருந்தது.

இப்போது, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் உடனடியாக நிறைவேற்றப்படாத  சந்தர்ப்பங்களில்கூட, அவை அந்த காலகட்டத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாகவே இருந்தன. தேவன் தங்களை மீட்பதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் ஒரு மீட்பரை அனுப்புவார் என்று முன்னுரைக்கப்பட்ட வார்த்தையானது பண்டைய இஸ்ரவேலர்களும் யூதர்களும் விசுவாசிப்பதற்கு உறுதுணையாய் அமைந்தது. இந்த வாக்குறுதி ஏதேன் தோட்டத்திலிருந்தே (ஆதியாகமம் 3:15) தேவனுடைய பிள்ளைகளை தாங்கி வழி நடத்தியது, மேலும் அவர்களின் வரலாறு முழுவதிலும் தொடர்ந்து அவர்களைத் தேற்றியது. இது அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களுக்கு மத்தியிலும் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க  அவர்களை ஊக்கப்படுத்தியது ஏனெனில் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்பதினால் முன்சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும் என்பதையும் அறிந்திருந்தார்கள்.

ஆச்சரியமான விதமாக, இன்று விசுவாசிகளாகிய நாமும் பெரும்பாலும் அதே சூழ்நிலையில்தான் இருக்கிறோம். உதாரணமாக, ஏசாயா 65-66 வசனங்கள், நாம் வாழ்வதற்காக தேவன் ஒரு புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்குவார் என்று கூறுகிறது. ஆனால் 2 பேதுரு 3:13-ன் படி, இயேசு திரும்பிவரும் வரை அவைகளை சுதந்தரிக்க முடியாது என்று கூறுகிறது. பேதுருவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, யோவான் வெளிப்படுத்தின விசேஷம் 21:1-22:5-இல் தனது தரிசனத்தைப் பதிவுசெய்தார்; அங்கு அவர் ஏசாயாவின் வார்த்தைகளை மீண்டும் உறுதிப்படுத்தி, நமக்கு இன்னும் அதிகமான நம்பிக்கையை கொடுக்கிறார். இவை நம்முடைய எதிர்காலத்தைப் பற்றியே கூறுகிறது —தொலைதூரத்தில நிகழவிருக்கும் காரியமாக

 இருக்கலாம். ஆனால் அது இவைகளை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுமா? நிச்சயமாக இல்லை. நமது இறுதி வெகுமதியைப் பெறுவதற்குப் உறுதியோடு நிலைத்திருக்க இவை நம்மை ஊக்குவிக்கின்றன.

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனம் சவாலானதாக இருக்கலாம். ஆனால் புதிய ஏற்பாட்டில் அது விளக்கப்பட்ட பல்வேறு வழிகளைப் புரிந்துகொள்வது, அதை நம்பிக்கையோடு படிக்கவும், கவனமாக விளக்கப்படுத்தவும், வேதத்தின் பிற பகுதிகளோடு ஒப்புமைபடுத்திப் பயன்படுத்தவும் நம்மைத் தயார்படுத்துகிறது.

இக்கட்டுரை முதலில் டேபிள்டாக் (Tabletalk) இதழில் வெளியிடப்பட்டது.

ஆர். ஏ. மெக்லாலின்

ஆர். ஏ. மெக்லாலின்

ஆசிரியர்: Ra McLaughlin - ஆர். ஏ. மெக்லாஃப்லின் - இவர் மூன்றாவது மில்லேனியம் ஊழியத்தின் (Third Millennium Ministries) செயல்பாடுகள் மற்றும் நிதித்துறை துணைத் தலைவராக உள்ளார். இவர் "பரிசுத்த ஆவியானவரின் குணமும் அவருடைய வேலையும்" (The Nature and Work of the Holy Spirit) என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.