Jesus Is the New David

புதிய தாவீதாகிய இயேசு

11-08-2026
How Can I Grow in Wisdom?

ஞானத்தில் நான் எவ்வாறு வளருவது?

18-08-2026
Jesus Is the New David

புதிய தாவீதாகிய இயேசு

11-08-2026
How Can I Grow in Wisdom?

ஞானத்தில் நான் எவ்வாறு வளருவது?

18-08-2026

இயேசு பரிபூரணமானவரா?

Was Jesus Perfect?

“யாருமே பரிபூரணமானவர்கள் இல்லை.” என்பது நிதர்சனமான ஒரு நவீனகாலப் பொன்மொழியாகும். நாம் அனைவரும் நம்முடைய தவறுகளையும் நம்முடைய குறைவுகளையும், எல்லைவரம்புகளையும்  நன்கு அறிந்திருக்கிறோம், மேலும் நமக்கு இந்தப் பொன்மொழியைப் பயன்படுத்துவதில் மிக விரைவாக செயல்படுகிறோம்.

இருப்பினும், வேதாகமம் இந்த விதிக்கும் ஒரு விதிவிலக்கை கொடுக்கிறது. நாமும் கூட இதைப்பற்றி அறிந்திருக்கலாம்: அதாவது “ஒரே ஒரு பரிபூரண மனிதன் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்.” அந்த மனிதன்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.

இந்த உலகில் வாழ்ந்தவர்களில் ஒரே ஒரு பரிபூரண மனிதர் இயேசுகிறிஸ்துதான் என்பது முற்றிலும் சரியானதே. ஆனால் வேதாகமம் இதை எங்கே, எப்படிப் போதிக்கிறது? சுவாரஸ்யமாக, சில வேத வசனங்கள் இயேசு பரிபூரணரானார் என்றும் கூறுகின்றன. இயேசுவின் பரிபூரணத்தைப் பற்றி நாம் சில அடிப்படை காரியங்களை இங்கே சிந்திக்கப் போகிறோம்.

தெய்வீக தேவ குமாரன்

இயேசுவின் பரிபூரணமான மனித வாழ்க்கையைப் பற்றி நாம் விரிவாகப் பேசுவதற்கு முன்பாக, அவர் ஒரு நித்தியமான, தெய்வீக தன்மை பொருந்திய நபர் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவர் தேவனுடைய நித்திய குமாரனாவார் (யோவான் 1:1). தேவனின் தன்மையோடு இணைந்த அனைத்துப் பரிபூரணத்திலும் அவர் நித்தியமாக தொடர்புடையவர். அவர் “தம்முடைய இருத்தல், ஞானம், வல்லமை, பரிசுத்தம், நீதி, நன்மை மற்றும் சத்தியம் போன்ற எல்லாவற்றிலும் முடிவற்றவராகவும், நித்தியமானவராகவும், மாறாதவராகவும் இருக்கிறார்” (வெஸ்ட்மின்ஸ்டர் சிறிய வேதாகம வினா-விடை 4).

அதாவது, இயேசு தம்முடைய தெய்வீக குமாரத்துவத்தின் தன்மையினால் பரிபூரணமானவர். அவர் பாவத்திலிருந்து முற்றிலும் விலகியவர்.

இயேசுவின் பரிபூரண மனிதத்தன்மை

அவருடைய தெய்வீக குமாரத்துவத்திற்கு மாறாக, இயேசுவின் பரிபூரண பூலோக வாழ்க்கையைப் பற்றி நாம் பேசும்போது,   மனுஉருவை எடுத்த அவருடைய மனிதத்தன்மையின்படி—அதாவது, அவருடைய மனித சுபாவத்தின் பரிபூரணத்தைப் பற்றிச் சொல்லுகிறேன். இதை பல்வேறு கோணங்களில் இருந்து நாம்  பார்க்க முடியும்.

முதலாவதாக, நம்மைப்போல ஆதாமின் பாவத்திற்கு இயேசு உட்பட்டவரல்ல. ரோமர் 5:12–21 போன்ற  வேதப்பகுதியின் சத்தியங்கள் இதையே விளக்குகின்றன. ஆதாமிற்குள் “எல்லாரும் பாவம் செய்தார்கள்” (ரோமர் 5:12), ஆனால் இயேசு அதற்கு நேர்மாறான சிறப்பம்சத்தை கொண்டிருந்தார். ஆதாமுக்குள் காணப்பட்ட ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, கிறிஸ்துவினுடைய ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.  (ரோமர் 5:18–19).

ஆதாமுக்குள்ளாக எல்லாரும் பாவத்துக்குட்பட்டிருந்தால், கிறிஸ்து நீதியையும் ஜீவனையும் கொண்டுவருகிறார் என்கிற சத்தியம், ஆதாமிற்குள் பாவத்திற்குட்பட்ட “எல்லாரும்” என்கின்ற பதத்தில் கிறிஸ்துவுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்கிறது. அவரால் நமக்கு கொடுக்கப்படும் நீதியானது, ஒரு உடன்படிக்கையின் தலையாக மற்றும் முழு நீதியுள்ள ஒரு பிரதிநிதியாகவும் அவருடைய தனித்துவமான ஆளுமையிலிருந்து வருகிறது. மரியாளிடம் தேவதூதனாகிய கேபிரியேல், அவளிடத்திலிருந்து உருவாகும் குழந்தை பரிசுத்தமும் தேவனுடைய குமாரனுமாய் இருக்கும் என்று கூறிய செய்தியோடு இது ஒத்துப்போகிறது (லூக்கா 1:35).

இவை எல்லாவற்றின் பொருள் என்னவென்றால், முழுமையாக வீழ்ச்சியடைந்த பாவத்தின் தன்மைக்கு இயேசு விலக்கப்பட்டவர் என்பதே. இயேசு பாவத்தில் வீழ்ச்சியடையாத, பாவமில்லாத மனித சுபாவத்தைக் கொண்டிருந்தார். அவர் முற்றிலும் நீதியுள்ளவர்.

இரண்டாவதாக, இயேசு முற்றிலும் கீழ்ப்படிதலுள்ள ஒரு மானுட வாழ்க்கையை கொண்டிருந்தார். இதையும் ஆதாமுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். ஆதாமின் கீழ்ப்படியாமை ஆக்கினைத்தீர்ப்பிற்கு வழிவகுத்தது, ஆனால் புதிய ஏற்பாடு இயேசுவை இரண்டாவது மற்றும் கடைசி ஆதாமாக சித்தரிக்கிறது; அதாவது அவர் முதல் ஆதாமின் கீழ்ப்படியாமையை மாற்றியமைக்கும் பிரதிநிதியாக காணப்பட்டார்.

ரோமர் 5:12–21  மற்றும், மாற்கு புத்தகத்தில் காணப்படும் இயேசுவுக்கு பிசாசினால் ஏற்படும் சோதனைகள் அவரை புதிய ஆதாமாகவும், சோதனையின் நேரத்தில் ஒரு பிரதிநிதியாக அவருடைய கீழ்ப்படிதலையும் காண்பிக்கிறது. இதனால்தான் ஏதேன் தோட்டத்தை நினைவூட்டும் விதமாக காட்டுவிலங்குகள் நடுவே சஞ்சரித்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கலாம் (மாற்கு 1:12–13).

அதேபோல, லூக்கா 3:21–22-ல் இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, லூக்கா சுவிசேஷம் இயேசுவின் வம்சவரலாற்றை  பின்னோக்கிக் கொண்டு சென்று ஆதாமில் முடிக்கிறது  (லூக்கா 3:23–38). இதற்குப் பின்பு, இயேசு வனாந்தரத்தில் முழுமையாக பிதாவுக்கு கீழ்ப்படிகிறார் (லூக்கா 4:1–13). இது மீண்டும் இயேசுவின் கீழ்ப்படிதலை ஒருபுதிய ஆதாமாக  அடையாளப்படுத்தி தொடர்புபடுத்துகிறது.

பவுலும் இதை 1 கொரிந்தியர் 15-ல் மேலும் விளக்குகிறார். இயேசுவே கடைசி ஆதாமாக இருக்கிறார், அவர் மூலமே மரித்தோரின் உயிர்த்தெழுதல் நடைபெறுகிறது (1 கொரி. 15:21–22, 45).  அவருடைய அநீதியான மரணத்திற்கு கிடைத்த  நீதியான செயலே இயேசுவின் உயிர்த்தெழுதலாகும். இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராக இருந்ததால், ஒரு குற்றவாளியைப் போல அவரை கொலை செய்தது அநீதியாகும். மேலும் அவருடைய புதிய ஜீவனோடு கூடிய  உயிர்த்தெழுதல்  அவருடைய பரிபூரண கீழ்ப்படிதலைக் காட்டுகிறது (1 தீமோ. 3:16 காண்க). இயேசுவின் உயிர்த்தெழுதல் அவருடைய வாழ்நாள் முழுவதுமான பரிபூரணமான கீழ்ப்படிதலை நமக்கு  சுட்டிக்காட்டுகிறது (எபிரெயர் 2:14–18 காண்க).

மூன்றாவதாக, எபிரெயர் நிருபம் இயேசு பரிபூரணமாக்கப்பட்டார் என்று பேசும்போது (எபிரெயர் 2:10; 5:9; 7:28), அதை இரட்சிப்பின் சரித்திரத்தின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, அவருடைய அத்தியாவசியமான குணாதிசயத்தின் அடிப்படையில் அல்ல. நித்திய தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவிடம் பாவம் இல்லை. மேலும், இயேசு தம்முடைய பூலோக வாழ்க்கையில் ஒருபோதும் பாவம் செய்யவில்லை. எனவே, அவர் பரிபூரணமாக்கப்பட்டார் என்பது, முந்தைய ஆசாரியர்களை விட நமக்கு தேவனிடத்தில் கிட்டிச்சேரும் மேன்மையை அடையும் இறுதியான, பரிபூரண ஆசாரியராக அவருடைய வெற்றிகரமான மத்தியஸ்த பங்கைக் குறிக்கிறது (எபிரெயர் 5:7–10; 6:19–20; 9:11–14; 10:5–14 ).

அழியாத ஜீவனுடைய வல்லமையின்படி என்றென்றைக்கும் வாழ்கிற நித்திய தேவகுமாரனாக இயேசு இருந்ததால், அவரால் பூரணமான முழுமையான இறுதி பலியை தேவனுக்கு செலுத்த முடிந்தது (எபிரெயர் 7:15–28). இயேசுவின் உயிர்த்தெழுதலும், அவர் மூலமாக தேவனிடத்தில் கிட்டிச்சேரும் பாக்கியமும்,  தம்மையே அவர்  தந்த பரிபூரண பலியையும், மட்டுமல்ல அவருடைய பூலோக வாழ்க்கையின் பரிபூரணத்தையும் அடிப்படையாகக் கொண்டே அமைகிறது.

முடிவுரை

நாம் யாருமே பரிபூரணமானவர்கள் இல்லை என்பதால், இயேசுகிறிஸ்து பரிபூரணமானவர் என்பது உண்மையிலேயே நமக்கு சிறந்த நற்செய்தியாகும். இயேசு இரண்டாவது மற்றும் கடைசி ஆதாமாக இருக்கிறார், அவருடைய பரிபூரண கீழ்ப்படிதல் நாம் விசுவாசத்தினால் பெறப்போகும் நீதிமானாக்கப்படுதலுக்கு அடிப்படையாக அமைகிறது. நித்திய ஜீவன் அவருக்குள் காணப்படுகிறது (யோவான் 1:4; 20:31). அவர் வெறும் மனிதர் அல்ல; அவர் நித்திய தேவகுமாரனும் ஆவார். ஆயினும் அவர் உண்மையான மனிதன்—நமக்காக நம்மால் தேவனுக்கு செய்ய முடியாததைச் செய்த தேவ மனிதன்.

ஒரு பரிபூரண ஆசாரியராக, தேவனிடத்தில் பரிபூரணமாக கிட்டிசேரும் சிலாக்கியத்தை கொடுக்கும் ஒரே மத்தியஸ்தராக இயேசு நமக்காக இருக்கிறார் (எபிரெயர் 10:14). எனவே, இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையைக் கண்டடையவும் தைரியத்துடனே கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபிரெயர் 4:14–16).

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

பிராண்டன் டி. குரோ

பிராண்டன் டி. குரோ

ஆசிரியர்: Dr. Brandon D. Crowe - முனைவர் பிராண்டன் டி. குரோ - பிலடெல்பியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியின் புதிய ஏற்பாட்டுப் பேராசிரியராகவும், அமெரிக்க பிரஸ்பிடீரியன் திருச்சபையின் போதகராகவும் உள்ளார். இவர் Why Did Jesus Live a Perfect Life? மற்றும் The Path of Faith: A Biblical Theology of Covenant and Law உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.