
இயேசுகிறிஸ்துவின் ஜெபங்களினால் கிடைக்கும் ஆறுதல்
15-01-2026
புனிதவெள்ளி ஏன் “புனிதமான” என்று அழைக்கப்படுகிறது?
22-01-2026ஒரே தேவன்
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது கல்வி ஆண்டில் முதல் பழைய ஏற்பாட்டின் வகுப்பில் நான் அமர்ந்திருந்தபோது, உருவகமாக கூறவேண்டுமென்றால் எனது தாடை தரையில் விழுவதை போல நான் திகைப்படைந்தேன். மதச்சார்பற்ற ஓர் பல்கலைக்கழகத்தில் பங்குபெற்றதினால், அங்கு போதுமான வேதாகம கற்பித்தலை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், எனது பேராசிரியர் ஓர் பழைமைவாத யூதராக இருப்பதினால் வேதாகமம் ஓரளவு நியாயமாக கையாளப்படும் என்ற நம்பிக்கை சிறிதளவு இருந்தது. ஆனால், உண்மையான ஆதிகால யூதர்கள் பிற கடவுள்களின் இருத்தலையும் நிராகரிக்கவில்லை என்று எனது பேராசிரியர் கற்பித்தபோது, எனது திகைப்பு எவ்விதமாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். யூதர்கள் மற்ற எல்லா கடவுள்களுக்கும் மேலாக “யாவே” வை ஆராதித்தார்கள், ஆனால் மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள் என்பதை நம்பினார்கள் என்று அவர் போதித்தார்.
அந்த பேராசிரியர் நம்பின “ஹேனோதீய்ஸ்ம்” என அழைக்கப்படும் (அதாவது மற்ற கடவுள்களின் இருத்தலையும் விசுவாசித்து ஆனால் ஒருவரை மட்டும் ஆராதித்தல்) என்ற இந்த கோட்பாட்டை, தாராளவாத உயர் விமர்சன குழுவினரும் ஏற்றுக்கொள்கின்றன. இந்த விமர்சகர்கள் கூறுவதென்னவென்றால், ஒரே தேவன் உண்டு என்ற “மோனோதீய்ஸ்ம்” என்ற கோட்பாடு இஸ்ரவேல் வரலாற்றில் தாமதமாக உண்டானது என்று. ஹேனோதீய்ஸ்ம் – “henotheism” என்ற கருத்தின் ஆதரவாளர்கள் முன்வைக்கின்ற பெரும்பாலுமான வாதங்கள், ஐந்து ஆகமங்களில் அடிக்கடி வரக்கூடிய மற்ற தேவர்களின் பெயர்கள் தான், இதை ஆதரமாக எடுத்துக்கொண்டு, மற்ற அந்நிய மக்களின் தேவர்களின் இருத்தலை மோசே குறிப்பிட்டாலும், இஸ்ரவேலர் யாவே தேவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என மோசே நம்பினார் என்று இவர்கள் கூறுகிறார்கள். (உதா. யாத் 20:3).
இவ்விதமான நபர்கள், henotheism என்ற கோட்பாட்டை கண்டுபிடிப்பதற்கு, வேதத்தின் பரந்த சூழலை உற்றுநோக்காமால் குறிப்பிட்ட சிறிய வசனத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார்கள். மோசே, ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருப்பதை ஐந்து ஆகமங்களின் முதல் அதிகாரத்திலேயே உறுதிப்படுத்துகிறார். பண்டைய கிழக்கு நாடுகளின் நம்பிக்கையான பூமியை கைப்பற்ற கடவுள்களுக்கு இடையே நடந்த சண்டையை பற்றி வேதாகமத்தில் எங்கும் நாம் படிக்கவில்லை. ஆதியாகமம் 1, வானத்தையும் பூமியையும் படைத்த ஒரே தேவனை காண்பிக்கிறது (ஆதி 1:1). வரலாற்றில் ஒரே ஒரு கதாநாயகனான “யாவே” தேவன், தனது வார்த்தையால் இந்த முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கினார்.
பண்டைய மத்திய கிழக்கில், பல கடவுள் கொள்கை பரவலாக இருந்ததால், வேதாகம ஆசிரியர்கள் ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். உபாகமம் 6 ல், ஒரே தேவனை உறுதியளிக்கும் shema விசுவாச அறிக்கைக்கு முன்பாகவே (உபா 4:39) ல் “அவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை” என்று வாசிக்கிறோம். எலியாவிற்கும் பாகாலின் தீர்க்கதரிசகளுக்கும் இடையில் நடந்த போராட்டத்தில், யாவே மட்டுமே தேவன் பாகால் அல்ல என்பதை யாவேவாகிய தேவனே சாட்சியமளித்தார் (1 இராஜா 18:20-40). ஏசாயா “தேவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை” என்று கூறி மரத்தின் சிலைகளில் வணங்கப்படும் தெய்வங்களை ஆராதிப்பதின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டுகிறார் (ஏசாயா 44).
அப்போஸ்தலர்கள் எப்பொழுது கிரேக்க மக்களை சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் ஒரே தேவன் மட்டுமே உண்டு என்பதை உறுதியாக பிரசங்கித்தார்கள். அநேக கடவுள்களின் இருத்தலை பழைய ஏற்பாடு மறுதலித்கிறது என்பதின் தொடர்ச்சியை ரோமர் 1 ம் அதிகாரத்தில் பவுல் விளக்குகிறார், மேலும் மெய்யான தேவனை பற்றிய அறிவை மக்கள் அடக்கி வைத்து, அவர்களால் கையாளப்படும் தெய்வங்களை உருவாக்கினதாலும் பலதெய்வ கோட்பாடு எழுகிறது என்பதை பவுல் விளக்குகிறார் (ரோமர் 1:18-23). இதே அப்போஸ்தலன், பல தெய்வங்களை வணங்கக்கூடிய சூழலில் போதகனாக இருக்கிற தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், “தேவன் ஒருவரே” என்று நினைப்பூட்டுகிறார் (1 தீமோ 2:5). வெளிப்படுத்தல் முழுவதுமாக அப்போஸ்தலனாகிய யோவான், ரோம மத நம்பிக்கையின் மாய்மாலத்தை சுட்டிக்காட்டி, சர்வ வல்லமையுள்ள தேவனின் சிங்கானத்தில் தான் அமர்ந்திருப்பதைப் போல காண்பிக்கும் ஒவ்வொரு நபரின் இறுதி வீழ்ச்சியையும் விவரிக்கிறார்.
வேதாகமத்தின் தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார் – மெய்யாகவே, நாம் அவரை அறிய வேண்டுமென்றால் அவரே தன்னை வெளிப்படுத்தவேண்டும்.
இந்த ஒரே தேவன் தனது படைப்புகளுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார் என்பது ஒரே தேவன் உண்டு என்ற வேத உபதேசத்துக்கு (monotheism) ஆதாரமாயிருக்கிறது. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து, அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாமல் இருப்பதால் என்ன நன்மை? நாமாகவே நமது முயற்சியினால் தேவனை அறிந்துக்கொள்வதற்கு அவர் விரும்பினால், இந்த தேவன் செயல்படுகிறவராக இல்லாமலும், அவரது சித்தத்தை நாமாகவே அறிந்துக்கொள்ளவும் நம்மை விட்டுவிடுவார். வேதாகமத்தின் தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார் – மெய்யாகவே, நாம் அவரை அறிய வேண்டுமென்றால் அவரே தன்னை வெளிப்படுத்தவேண்டும். இந்த பொதுவான வெளிப்பாடு படைப்பின் மூலமாக வருகிறது (சங் 19; ரோமர் 1:18-32), ஆனால் படைத்தவரைப் பற்றிய இரட்சிப்பின் ஞானமானது சிறப்பான வெளிப்பாடாகிய வேதாகமத்தின் மூலம் மட்டுமே வருகிறது (மத் 11:27; 2 தீமோ 3:15-17).
இதனால் என்ன?
ஒரே தேவன் என்கிற வேத கோட்பாடு வெறுமனே ஓர் சிறிய ஊகம் அல்ல, மாறாக வாழ்க்கைக்கும் ஊழியத்துக்கும அவசியமான குறிப்பிட்ட நான்கு விளைவுகளைக் கொண்டுள்ளது.
நிச்சயம் – தேவன் தெளிவாகவும் உண்மையாகவும் தம்மை வெளிப்படுத்துகிறார், இதனால் அவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை ஊகிக்காமல் இருக்க முடியும். நவீன கால மக்கள் அடிக்கடி தங்களை “தேடுகிறவர்களாக” எண்ணி, கடவுளை வடிவமைப்பதற்கு தங்களால் முடிந்த காரியங்களையெல்லாம் செய்கிறார்கள். ஆனால் இவ்விதமான தவறான ஊகம், ஒருவரின் நித்திய வாழ்விற்கான ஆடிக்கொண்டிருக்கும் அஸ்திபாரமாகத்தான் இருக்கும்.
தைரியம் – மேற்கத்திய கிறிஸ்தவர்கள் இன்னும் சிங்கங்களுக்கு இரையாக்கப்படவில்லை. நாம் கடுமையான துன்பங்களை சந்திக்கும் வேளையில், வேதாகமத்தின் இந்த தேவன் தான் மெய்யான ஒரே தேவன் என்று விசுவாசிக்கவில்லையென்றால் நம்மால் நிலைத்து நிற்கமுடியாது. ஒரே தேவன் என்றால் உலகத்திற்கு ஒரே இரட்சகர் என்ற சத்தியத்தில் நாம் உறுதியாக இல்லாத பட்சத்தில், துன்பத்தின் முதல் படியிலேயே நாம் கிறிஸ்துவை மறுதலித்து விடுகிறோம். இவ்வித அஸ்திவாரம் இல்லையெனில் மத சார்பியல் வாதத்துக்கு நாம் அடிபணிகிறோம். ஒரே தேவன் என்ற கோட்பாட்டின் மீதான தானியேல் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கைதான் விக்கிரவழிபாட்டை எதிர்க்க பெலப்படுத்தியது. தேவனுடைய கிருபையால், நாமும் இந்த உதாரணத்தை பின்பற்றவேண்டும். நமது எதிரிகள் நமது பொருட்களுக்கோ, குடும்பங்களுக்கோ அல்லது நமது உயிருக்கோ என்ன செய்வார்கள் என்று நாம் பயப்படுவதில்லை, காரணம் ஒரே தேவன் இருக்கிறார் நாம் அவரது பக்கம் இருந்தால், இந்த உபத்திரவங்கள், நமக்காக காத்திருக்கும், “நித்திய மகிமையுடன்” ஒப்பிடும்போது இலேசான தற்காலிகமான துன்பமாக மட்டுமே இருக்கும் (2 கொரி 4:17-18).
உறுதிப்பாடு – உறுதிப்பாடும் தைரியமும் பிரிக்க முடியாதவை மற்றும் ஒன்றையொன்று சார்ந்தவை. ஒரே உண்மையான கடவுளின் மீதுள்ள அன்பில் விடாமுயற்சியுடன் இருக்க தைரியம் நமக்கு உதவுகிறது. துன்பம் நமக்கு வருவதற்கு முன்பே உறுதிப்பாடு நம்மை ஒரு நிலைப்பாட்டை எடுக்க உதவுகிறது. ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார், எனவே ஒரே உண்மையில் நமது நம்பிக்கை அடித்தளமாகக் கொண்டால், நமது பிரசங்கம், போதித்தல், சுவிசேஷப் பிரசங்கம் மற்றும் கலாச்சார ஈடுபாடு வலுவாக இருக்கும். வீழ்ச்சியுற்ற மனுகுலத்தின் கோட்டைகளை நாம் எதிர்கொள்வோம், மேலும் பாவிகளின் இதயங்களை மென்மையாக்க ஆவியானவர் நமது வார்த்தைகளைப் பயன்படுத்துவார். தெய்வீக உறுதிப்பாடு கொண்ட ஆண்களும் பெண்களும் திருச்சபைக்கு மிகவும் தேவை. அத்தகைய உறுதிப்பாடு ஒரே தேவன் என்ற வேதக் கோட்பாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடங்குகிறது.
தெளிவு – monotheism ஐ நாம் புரிந்துக் கொள்வது, நாம் எதை விசுவாசிக்கிறோம், எதை போதிக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க உதவுகிறது. ஒரே தேவன் உண்டு ஆனால் அவன் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறார், எனவே இரட்சிப்பிற்கு பல வழிகள் உண்டு என்பதை நாம் விசுவாசிப்பதில்லை. ஒரே தேவன் உண்டு என்பதை மாத்திரம் நாம் விசுவாசிப்பதில்லை. இஸ்லாமியர்கள், மோர்மோன்ஸ்கள், யெகோவா சாட்சிகள், அனிமிஸ்ட் அல்லது நவீன யூதர்களால் ஆராதிக்கப்படாத வேதத்தின் தேவனை தான் நாம் விசுவாசிக்கவேண்டும் என்பதை நாங்கள் அறிக்கை செய்கிறோம்.
திரித்துவத்தை நிராகரிப்பதில்லை (Not Unitarianism) – அதாவது, ஒரே தேவன் என்ற monotheism, திரித்துவத்தை நிராகரிப்பதில்லை. வேத உபதேசமான தேவன் ஒருவரே என்ற shema விசுவாச கோட்பாட்டின் முழுமையான சாட்சியானது, ஒரே தேவன் என்பதை திரியேக தேவனின் ஒற்றுமையிலிருந்து எவ்வித வேறுபாட்டையும் அளிக்கவில்லை. அவரது ஒருமை அவரது தெய்வீக சாரத்துடன் தொடர்புடையது, ஆனால் ஒரே தெய்வீக சாராம்சம் மூன்று தனித்துவமான நபர்களால் முழுமையாகவும் சமமாகவும் பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் சமமாகவும், முழுமையாகவும் தெய்வீக மானவர்கள், அதேசமயம் பிதா குமாரன் அல்ல, குமாரன் ஆவியானவர் அல்ல (யோவான் 1:1; 14:16-17; 2 கொரி 13:14).
இரட்சிப்பு என்பது திரியேக தேவனின் செயல்பாடு. பிதா குமாரனை அனுப்புகிறார்; குமாரன் பாவத்திற்கான பரிகாரம் செய்கிறார்; ஆவியானவர் இந்த பரிகாரத்தை நமக்குள் பயன்படுத்துகிறார். ஆவியானவர் தம்முடைய மக்களை மறுபடியும் பிறப்பிக்கிறார்; இவ்வாறு, அவர்கள் குமாரனை மட்டுமே விசுவாசிக்கிறார்கள்; மேலும் “தேவன் எல்லாரிலும் எல்லாமுமாக இருப்பதற்கு” ( யோவான் 3:5, 16 ; 1 கொரி. 15:20–28 ; எபி. 1:1–4 ) பிதாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ராஜ்யத்தை, குமாரன் பிதாவிடம் அருளுகிறார்.
இரட்சிக்கப்பட திரித்துவத்தைப் பற்றி நாம் முழுமையாக புரிந்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவ்விதமான புரிதல் படைப்புகளுக்கு சாத்தியமற்றது. ஆனால் அத்தேனிசியஸ் அறிக்கை கூறுவதுபோல், நாம் திரித்துவத்தில் ஒரே தேவனை மற்றும் ஒருவரில் திரியேக தேவனை ஆராதிக்கிறோம் என்று நம்பாத எவரும் இரட்சிக்கப்படமுடியாது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


