பிரிக்கமுடியாத தேவனுடைய  அன்பு
29-01-2026
பிரிக்கமுடியாத தேவனுடைய  அன்பு
29-01-2026

ஏன் தேவனும்-மனிதனும்?

Why the God-Man?

பதினொன்றாம் நூற்றாண்டில் திருச்சபையின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான கேன்டர்பரியின் ஆயர் அன்செல்ம், வரலாற்றில் திருச்சபைக்குள் ஓர் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று முக்கியமான புத்தகங்களை எழுதினார். கிறிஸ்தவ தத்துவ தொகுப்பில், கடவுளின் இருத்தலின் ஆதாரங்களையும், குணாதிசயங்களையும்(Monologium), மற்றும் அவரைப் பற்றி அறிய நாடுவதையும் (proslogium) பற்றியும் எழுதியுள்ளார். முறைப்படுத்தப்பட்ட இறையியல் தொகுப்பில், cur Deus Homo அதாவது, “ஏன் தேவனும்-மனிதனும்?” என்று மொழிப்பெயர்க்கப்பட்ட மாபெரும் கிறிஸ்தவ இலக்கியத்தை எழுதினார்.

இதில், கிறிஸ்துவின் பரிகார பலியைப் பற்றிய திருச்சபையின் புரிதலின் ஒரு முக்கிய அம்சத்திற்கான தத்துவ மற்றும் இறையியல் புரிதலின் அஸ்திபாரங்களை அன்செல்ம் முன் வைக்கிறார். குறிப்பாக பாவநிவாரணத்தில் திருப்திபடுத்துதல் என்ற பார்வை. இதில், தேவனுடைய நீதியை திருப்திபடுத்துவதற்கு பாவ நிவாரணபலி அவசியம் என்று வாதிட்டார். இந்த கண்ணோட்டம்தான் இடைக்காலத்தில், கிறிஸ்துவின் பாவநிவாரணபலியில் அவர் செய்த முடித்த பணியைப் பற்றிய சபையின் புரிதலின் அடிப்படையில் மையப்போதனையாக இருந்தது. இருப்பினும் அப்போதிருந்தே, கிறிஸ்துவின் பரிகாரபலியைப் பற்றி விமர்சகர்கள் அதிகரித்துள்ளனர்.

இடைக்காலத்தில், கிறிஸ்துவின் பாவநிவாரணபலி கடவுளின் நீதியை நிறைவேற்ற வேண்டிய உலகத்தின் சில சட்டங்களால் அவசியமானது என்று நினைப்பதின் நியாயத்தன்மையை குறித்த கேள்விகள் எழுந்தன. இது Ex Lex விவாதத்திற்கு வழிவகுத்தது. இந்த விவாதத்தில், கடவுளின் சித்தம் எந்த சட்டத்திலிருந்தும் தனியாகவோ அல்லது எந்த சட்டத்திற்கும் வெளியே செயல்பட்டாதா அல்லது கடவுளின் சித்தம் தானே நீதியின் விதிமுறைக்கு உட்பட்டதா அல்லது கடவுள், பின்பற்ற வேண்டிய உலக சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது சுருக்கமாக கேள்வி என்னவென்றால், “தேவன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா அல்லது சட்டத்தின் கீழ் உட்பட்டவரா?”.

இந்த தடுமாற்றத்திற்கான திருச்சபையின் பதில் எதுவாக இருந்தது என்றால், அடிப்படையாக தேவன் சட்டத்திற்கு புறம்பானவரோ அல்லது அதற்கு உட்பட்டவரோ அல்ல என்று அறிவிப்பது ஆகும். மாறாக, கடவுள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் மற்றும் அதற்கு உட்பட்டவர் என்று கூறுவதின் மூலம் திருச்சபை பதில் அளித்தது, ஏனெனில் அவர் தனக்கு வெளியே உள்ள சட்டத்தினால் அவர் மீது விதிக்கப்பட்ட எந்தவொரு கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டுள்ளார். அந்த வகையில், அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். சட்டத்தின் கீழ் இல்லை. அதே நேரத்தில், கடவுள் தன்னிச்சையானவரோ அல்லது சமநிலையற்றவரோ அல்ல மற்றும் கடவுள் அவரது சுய இருத்தலின் சட்டத்தின்படியே அவர் செயல்படுகிறார். கடவுள்தான் அவருக்கு சட்டம் என்பதை சபை பிரகடனப்படுத்தியது. இது தேவனுக்குள் அநீதி உள்ளது என்பதை குறிக்கவில்லை ஆனால் கடவுளின் செயல் மற்றும் அவரது சித்தத்திற்கான விதிமுறை பதினேழாம் நூற்றாண்டின் இறையியலாளர்கள் கூறியது போல், “தேவனின் இயற்கை சட்டம்” என்பதை அடிப்படையாகக் கொண்டது.

தேவன் தம்முடைய செயல்களில் தனது இருத்தலையும் அல்லது அவரது குணாதிசயங்களையும் ஒருபோதும் சமரசப்படுத்துவதில்லை .

இறையியல் கோட்பாட்டின்படி, தேவனுடைய இயற்கை சட்டம் என்பது, மிக எளிதில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டும் குழப்பமடையவும் கூடும், இவற்றை அரசியல் கோட்பாட்டிலும், இயற்கை சட்டம் என்ற இறையியலிலும் பரந்த பார்வையில் பார்க்கும் போது இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது. இந்த சொற்றொடரின் அர்த்தத்தில் பார்க்கும்போது, இயற்கை சட்டம் என்பது இயற்கை உலகில் சில நெறிமுறைக் கொள்கைகளை பற்றி கடவுள் வெளிப்படுத்தும் காரியங்களை குறிக்கிறது. இயற்கை சட்டம் என்ற வார்த்தையின் பொதுவான பயன்பாட்டிலிருந்து வேறுபட்டு, பதினேழாம் நூற்றாண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் போதகர்கள் தேவனின் இயற்கை சட்டத்தை பற்றி பேசியபோது அவர்கள் சொன்னது இதுதான்: தேவன் தனது சுய இயல்பின் சட்டத்தின் படி செயல்படுகிறார். அதாவது, கடவுள் ஒருபோதும் தனது சொந்த பரிசுத்தம், தனது சொந்த நீதி, தனது சொந்த நியாயம், தனது சொந்த சர்வ வல்லமை மற்றும் பலவற்றிற்கு முரணான வகையில் செயல்படுவதில்லை. தேவன் தம்முடைய செயல்களில் தனது இருத்தலையும் அல்லது அவரது குணாதிசயங்களையும் ஒருபோதும் சமரசப்படுத்துவதில்லை.

தேவனுடைய நீதியை திருப்திபடுத்திவதின் தேவையை திருச்சபை அறிக்கைச் செய்கையில், இதன் தேவை என்பது ஏதோ வெளியிலிருந்து தேவன்மீது சுமத்தப்பட்டதல்ல, ஆனால் பாவ நிவாரண பலியின் தேவை என்பது தேவனின் சொந்த குணாதியத்தினாலும் அவரது பரிசுத்த தன்மையினாலும் ஏற்பட்டதாகும். தேவன் தாம் தேவனாக இருப்பதும், தமது பரிசுத்தம், நீதி, நியாயம் ஆகியவற்றை சமரசப்படுத்தாமலும் இருப்பதென்பது அவருக்கு அவசியம். எனவே இது, அவருடைய நீதியை திருப்திப்படுத்தும் பாவ நிவாரணத்தின் அவசியத்தைக் கோருகிறது.

சமீபகாலமாக, நவீன சிந்தனையாளர்கள் பரிகாரபலியில் திருப்திபடுத்துதல் என்ற சத்தியத்தை எதிர்க்கின்றனர், காரணம் இந்த சத்தியம் தேவனுடைய இலவசமான கிருபை மற்றும் அவரது அன்பின் மீது நிழலிட்டு அதை மறைக்கின்றன என கருதுகின்றனர். தேவன் அன்பாகவே இருக்கிறாரென்றால், நீதியை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளாமல், அவரது சுய சட்டமாக இருந்தாலும் சரி அல்லது வெளியிலிருந்து திணிக்கப்பட்ட சட்டமாக இருந்தாலும் சரி, அவரது கிருபையின் காரணத்தினால் ஏன் அவர் மக்களை இலவசமாக எவ்வித நிவாரணமும் இல்லாமல் மன்னிக்கமுடியாது? மீண்டுமாக, பாவநிவாரணத்தைப் பற்றிய இந்த தவறான பார்வை, தேவன் பாவிகளை இரட்சிக்க விருப்பங்கொண்டாலும் ஒருபோதும் அவர் தமது நீதியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதை புரிந்துக் கொள்ள தவறுகிறது.

பாவநிவாரண பலியில், தேவன் பாவிகளாகிய நம்மீதான கிருபையையும் வெளிப்படுத்துகிறார் அதேபோல் தமது நீதியிலும் நியாயத்திலும் உறுதியானவர் என்பதையும் வெளிப்படுத்துகிறார். தேவனுடைய நீதியை பூர்த்திச் செய்யும் கிறிஸ்துவின் பணியால் நியாயம் வழங்கப்படுகிறது, இதன்மூலம் நீதிக்கும் நியாயத்துக்குமான தேவனின் உறுதிப்பாடு காக்கப்படுகிறது. நமக்கு பதிலாக நீதியின் திருப்திபடுத்துதலை செயலாற்றும் நமது இடத்தில் நிற்கும் இன்னொருவரை தேவன் கொடுத்தப்படியினால் அவரது நீதிக்கான கட்டாயத்தை அவர் நிறைவேற்றினார். இந்த திருப்தியடைதலின் மத்தியில் தேவனுடைய ஆச்சரியமான கிருபை வெளிப்படுகிறது. தேவனுடைய கிருபை அவரது நீதியின் நிறைவேறுதலில் விளக்கப்படுத்தப்படுகிறது, இதில் நமக்காக அவர் நியமித்த நபரால் நிறைவேறியது. முழு உலகத்தின் நியாயதிபதியாக எது சரி என்பதை செய்வதென்பது தேவனுடைய தன்மையாகும். மற்றும் சரியானதை செய்யும் நியாயதிபதி ஒருபோதும் தமது நீதியின் அளவு கோள்களை மீறுவதில்லை. 

வேதம் சிலுவையை விளக்கும்பொழுது, கிருபாதாரபலி மற்றும் பாவநிவிர்த்தி ஆகியவற்றில் காண்பிக்கிறது, இந்த இரண்டு பணிகளும் கிறிஸ்து நமக்காக செய்துமுடித்தவை. கிருபாதார பலி என்பது குறிப்பாக தேவனுடைய நீதியின் கோபத்தை தணிக்கும் பணியாகும். நமது பாவத்துக்கான தண்டனையை அவர் நமக்காக செலுத்தினார். நாம் கடனாளிகள், தேவனுடைய நீதிக்கு எதிரான நமது குற்றத்தால் நமது செலுத்தப்படவேண்டிய கடனை அடைக்க முடியாது. ஆகையால், கிறிஸ்து நமக்காக செய்த பரிபூரண வலியால் தேவ கோபம் திருப்தியடைந்து சாந்தப்படுத்தப்படுகிறது. ஆனால் இது ஒரு பக்கம்தான். இரண்டாவது பணி, பாவநிவிர்த்தி. இதில் நமது பாவங்கள் நம்மிடமிருந்து அகற்றப்பட்டது, நமக்கு பதிலாக பாடுபட்ட கிறிஸ்துவின் மீது நமது பாவங்கள் சுமத்தப்பட்டதாலும் அல்லது பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் இது நடந்தேறியது. தேவன் திருப்தியடைந்தார், மற்றும் நமக்கான கிறிஸ்துவின் பரிபூரண பலியினால் அவைகள் அகற்றப்பட்டது. பழைய உடன்படிக்கையின் பாவநிவாரண நாளில் பாவம் பரிகாரம் செய்யப்பட்ட இரட்டை அர்த்தத்தை இது நிறைவேற்றுகிறது, ஒரு மிருகத்தை பலியிடுவதன் மூலமும், மக்களின் பாவங்களை, அடையாளமாக பலியாட்டின் மேல் மாற்றுவதன் மூலமும், பின்னர் அந்த பலியாடு வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டு, மக்களிடமிருந்து பாவங்களை நீக்குகிறது.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.