Who Are the “Sons of God” in Genesis 6?
ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 
02-12-2025
The Reformed Doctrine of God
கடவுளைப் பற்றிய சீர்திருத்த உபதேசம் 
09-12-2025
Who Are the “Sons of God” in Genesis 6?
ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 
02-12-2025
The Reformed Doctrine of God
கடவுளைப் பற்றிய சீர்திருத்த உபதேசம் 
09-12-2025

வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலாளர்கள் என்பவர்கள் யார்? 

Who Were the Westminster Divines

வெஸ்ட்மின்ஸ்டர் குழு (The Westminster Assembly) (1643–53) இங்கிலாந்தில் தீவிரமான  கிறிஸ்தவ மதம் மற்றும் தேசம் சார்ந்த குழப்பம் நிலவிய காலத்தில் கூடியது. அது தரமான இறையியலுக்கான அளவீடுகளை (theological standards) உருவாக்கியது — குறிப்பாக, வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Confession of Faith), பெரிய மற்றும் சிறிய  வினாவிடை போதனைகள் (Larger and Shorter Catechisms) ஆகியவற்றை உருவாக்கியது. இதனுடைய உலகளாவிய முக்கியத்துவத்தையும், இன்றளவில் அதனுடைய தாக்கத்தையும் நாம் காணக்கூடும். 

இதனுடைய பின்னணி மற்றும் சூழலை (Background and Context) நாம் கருத்தில் கொள்வது நல்லது. இங்கிலாந்தில் முதலாம் சார்லஸ் மன்னருக்கும் (King Charles I) நாடாளுமன்றத்திற்கும் இடையே ஆங்கில உள்நாட்டுப் போர் (English Civil War) (1642–51) வெடித்தபோது, இங்கிலாந்தில் இருந்த திருச்சபை பெரும் குழப்பத்தில் (disarray) இருந்தது. எலிசபெத் ராணி I (Queen Elizabeth I) காலத்தில் 1559-இல்,  புரோட்டஸ்டன்ட் இறையியலுக்கும் (Protestant theology) ரோமன் கத்தோலிக்கத்தின் வழிபாடுகளுக்கும் இடையே ஒரு ஊடகத்தின் மூலமாக பிணைப்பு ஏற்பட்டு ,ரோமின் ஆட்சிமுறை, தோற்றம் மற்றும் மதப் பழக்கவழக்கங்களோடு ஒத்து போய், இந்த அமைப்பு உறுதியாக நிறுவப்பட்டாலும், அந்தக் கலப்பு சமரசத்தின் (compromise) வெளிப்பாடு பதினேழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இதன் காரணமாக, பலர் இங்கிலாந்து திருச்சபையை அதன் ரோமன் கத்தோலிக்க வழிமுறைகளிலிருந்து (Roman Catholic vestiges) சுத்திகரிக்க முயன்றனர், இவர்கள் அப்போதும் இன்றும் “தூய்மைவாதிகள்” (Puritans) என்று அழைக்கப்படுகின்றனர்.

தூய்மைவாதிகள் இங்கிலாந்து திருச்சபையின் வேதாகம ஆராதனை மற்றும் வழிபாடுகளை சீர்திருத்த விரும்பினர். ஏனெனில் இந்த புரட்டஸ்டன்ட் இறையிலானது அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலையான பாதிப்பை ஏற்படுத்தியது.  தூய்மைவாதிகளில் பலர் இங்கிலாந்து திருச்சபையின் பொதுஜெப புத்தகத்தில் (Book of Common Prayer) குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய உபதேசங்கள், ஜெபங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை (prescribed homilies, prayers, and liturgy) நிராகரித்ததால், அவர்கள் கத்தோலிக்க வழிபாடுகளுக்கு மாற்றுசிந்தனை கொண்டவர்களாகவும் (dissenters), அதற்கு உடன்படாதவர்களாகவும் (nonconformists) இருந்தனர்.

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17 ஆம்  நூற்றாண்டின் ஆரம்பத்திலும், கத்தோலிக்க பற்றுடைய மதகுருமார்களுக்கும் (Catholic-leaning clergy),  தூய்மை வாதிகளின் ஒருபிரிவினருக்கும் இடையிலான மோதல் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இறுதியில் மன்னர் சார்லஸ் தனது ஏகாதிபத்திய அதிகாரத்தை மீறி செயல்பட்டார். 1642-இல், அவர் நாடாளுமன்றத்திற்கு எதிராக அரச அடையாளக் கொடியை ஏற்றி, ஆங்கில உள்நாட்டுப் போரைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு, திருச்சபையின் வரலாற்றில்  மிகவும் திறமையான, பக்தியுள்ள மற்றும் இறையியல் ரீதியாக புத்திசாலித்தனமான மனிதர்களை கூடிவரும்படி  நாடாளுமன்றம் அழைப்பு விடுத்தது.

வெஸ்ட்மின்ஸ்டர் குழுவானது (The Westminster Assembly) 121 ஆங்கில மதகுருமார்கள், முப்பது சாமானிய விசுவாசமுள்ள மனிதர்கள் (laymen), மற்றும் வாக்குரிமை இல்லாத (ஆனால் மிகவும் செல்வாக்கு மிக்க) ஸ்காட்டிஷ் பிரஸ்பைடீரியன் பிரதிநிதிகளைக் (Scottish Presbyterians) கொண்டிருந்தது. இந்தக் குழுவில், தாமஸ் குட்வின், எட்வர்ட் காலாமி, வில்லியம் கூஜ், மற்றும் ஜெரெமியா பர்ரோஸ் போன்ற குறிப்பிடத்தக்க இறையியலாளர்களும் போதகர்களும் இருந்தனர். அத்துடன், ஜார்ஜ் கில்லெஸ்பி மற்றும் சாமுவேல் ரூத்தர்ஃபோர்ட் போன்ற ஸ்காட்டிஷ் ஆணையாளர்களும் (Scottish commissioners) இருந்தனர். இந்தச் சபைகூடுகை 1643 முதல் 1649 வரை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் குருமடத்தில் (Westminster Abbey) கூடியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியதுடன், 1653 வரை விட்டுவிட்டு தொடர்ச்சியாக கூடி வந்தார்கள்.

ஆங்கில நாடாளுமன்றத்திற்கும் ஸ்காட்லாந்திற்கும் இடையேயான உறுதியான கூட்டமைப்பு மற்றும் உடன்படிக்கையின் (The Solemn League and Covenant) (1643) காரணமாக இராணுவ மற்றும் திருச்சபைக் கூட்டமைப்பை திறந்து வைத்தது. இது மன்னர் சார்லஸுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் படைபலத்தை வலுப்படுத்தியதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் உருவாக்கிய மதிப்பீடுகளின் தரத்தையும் பாதித்தது. மூப்பர்களால் வழிநடத்தப்படும் திருச்சபையின் ஆட்சிமுறை (elder-led church polity) என்ற  அளவீடை பிரஸ்பைடீரியன் ஆவணங்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும்,  ஸ்காட்டிஷ் பிரஸ்பைடீரியன்களின் உதவியுடன், வெஸ்ட்மின்ஸ்டர் குழுவானது (அத்துடன் சுயாதீன சபை உள்ளிட்ட பிறருக்கும்) சீர்திருத்தப்பட்ட விசுவாச அறிக்கையின் (Reformed confessionalism) எல்லைக்குள், பிரஸ்பைடீரியன்கள் தங்கள் திருச்சபை அரசாங்கத்தின் வடிவங்களைப் பயன்படுத்த சுதந்திரம் அளித்தன.

இந்த குழுவின் உடைய வேலையானது இன்றும் உலகெங்கிலும் உள்ள சீர்திருத்தப்பட்ட திருச்சபைகளின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் தொடர்ந்து நிர்வகித்து வருகிறது. இது வேதாகமத்துடனும் இறையியலுடனும்  ஆழமான விதத்தில் ஒத்துப் போகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலாளர்கள் (அல்லது ஆணையாளர்கள்) திறமையான மனிதர்கள். அவர்கள் வேதாகமத்திலும், இறையியலிலும், எபிரேய மற்றும் கிரேக்க மூல மொழிகளிலும், லத்தீன் மொழியிலும் திறமையானவர்களாக இருந்தனர். மேலும் வரலாற்றில் திருச்சபை பிதாக்களின் (church fathers) காலத்தில் நடந்தவைகளை வரிசைப்படுத்தி  சொல்லக்கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் சீர்திருத்தவாதிகளின் ஆரம்ப தலைமுறையினரிடமிருந்து (உதாரணமாக, லூதர், கால்வின், ஸ்விங்லி, நாக்ஸ், முதலியோர்) கற்றுக்கொண்டனர். சீர்திருத்தப்பட்ட இறையியலை போதக ரீதியாகவும் மற்றும் நடைமுறை ரீதியாகவும் பயன்படுத்துவதையே அவர்கள் விரும்பினர். அவர்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப ஆராதனையை, வேதாகமத்தில் உள்ள அறிவுரைகளின்படி குடும்பத்தை ஒழுங்கமைப்பதையும், மற்றும் கர்த்தருடைய நாளைக் கிறிஸ்தவ ஓய்வுநாளாகக் (Christian Sabbath) கடைப்பிடிப்பதையும் கவனமாக செயல்படுத்தினர் . வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலாளர்கள் அனுபவப்பூர்வமான கிறிஸ்தவம் (experiential Christianity) மற்றும் போதக ரீதியான அரவணைப்பு (warm pastoral sympathies) ஆகியவற்றில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர், ஆனால் கள்ள உபதேசம், ரோமன் கத்தோலிக்கம், வேதம் போதிக்காத தவறான போதனை மற்றும் மனந்திரும்பாத பாவம் ஆகியவற்றிற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டில் சமரசமற்றவர்களாகவும் இருந்தனர்

இந்த வெஸ்ட்மினிஸ்டர் குழுவின் சாதனைகள் மற்றும் முக்கியத்துவம் (The Assembly’s Accomplishments and Significance) என்னவென்றால் கிறிஸ்தவ திருச்சபை தங்களது விசுவாசத்தை வரையறுக்கவும், ஒன்றிணைக்கவும், தெளிவுபடுத்தவும், வேறுபடுத்தவும், பாதுகாக்கவும், மற்றும் பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காகப் போராடவும் (யூதா 3), விசுவாசத்தை அறிக்கையிடும் நடைமுறையை தலைமுறை தலைமுறையாக அனுசரிக்கவும் வழி வகுத்தது . இறையியல் குழப்பம் மற்றும் நிலைத்தன்மையற்ற ஆராதனை ஆகியவற்றின் பின்னணியில், வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலாளர்கள் — இங்கிலாந்து திருச்சபையின் முப்பத்தொன்பது கட்டுரைகள் (Thirty-Nine Articles) மற்றும் ஜேம்ஸ் உஷரின் (James Ussher) 1615 ஐரிஷ் கட்டுரைகளை (Irish Articles) அடித்தளமாகக் கொண்டு — ஒரு புதிய விசுவாச அறிக்கையை (Confession of Faith) (1646), பெரிய மற்றும் சிறிய  வினாவிடை புத்தகங்கள் (Larger and Shorter Catechisms) (1647), மற்றும் ஒரு பொது ஆராதனை கையேட்டையும் (Directory of Public Worship) (1644) உருவாக்கினர். ஒவ்வொரு கூற்றையும் வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு ஆதாரமான  வசனங்களைச் (prooftexts) சேர்க்குமாறு நாடாளுமன்றம் இறையியலாளர்களைக் கேட்டுக் கொண்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி திருச்சபையின் மிகவும் நீடித்த சாதனையாகும். இது வேதாகமம், தேவன், சிருஷ்டிப்பு, மானுடவியல், பாவம், கிறிஸ்துவில் மீட்பு, பரிசுத்தமாகுதல், திருச்சபை, ஆராதனை, திருமணம், கிருபையின் சாதனைகள், மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு போன்ற தலைப்புகளில் சுருக்கமான மற்றும் முக்கியமான இறையியல் அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

பெரிய மற்றும் சிறிய வேத வினாவிடை புத்தகங்கள் பொதுவாக விசுவாச அறிக்கையின் எல்லைகளைப் பின்பற்றுகின்றன, ஆனால் பத்துக் கட்டளைகள் மற்றும் கர்த்தருடைய ஜெபம் ஆகியவற்றிற்கு அதிகப் பகுதிகளைக் கொண்டுள்ளன. மேலும், பெரிய வினாவிடை புத்தகம் திருச்சபைக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, சிறிய வினாவிடை புத்தகம் தனிநபருக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இரண்டும் போதகர்கள் மற்றும் சாமானிய விசுவாசிகளுக்கும்  இறையியல் புரிதலில் தெளிவையும் துல்லியத்தையும் வலியுறுத்தி, கோட்பாட்டைக் கற்பிப்பதற்கான கல்வி கருவிகளாக வடிவமைக்கப்பட்டன.

திருச்சபை பொது ஆராதனை கையேடு (The Directory of Public Worship), பொதுஜெப புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட கட்டாய வழிபாட்டு முறையை மாற்றுவதற்காக ஓரளவு உருவாக்கப்பட்டது. இது ஆராதனையின் மீது முற்றிலும் நிலைத்தன்மையுள்ள புரட்டஸ்டன்ட் மற்றும் சீர்திருத்த கையேடாக (Reformed handbook) மாறியது. இந்தக் கையேடு வேத பூர்வமான ஆராதனையின் ஒழுங்குபடுத்தும் கொள்கையை (regulative principle of worship), வேதாகமத்தின் மையத்துவத்தை, ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய இராப்போஜனம் ஆகிய சடங்குகளின் சரியான நிர்வாகத்தை, மற்றும் நோயாளிகளைச் சந்தித்தல், உபவாசம், மற்றும் மரித்தோரை அடக்கம் செய்தல் தொடர்பான போதகர் தொடர்புடைய விஷயங்களையும் வலியுறுத்துகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் குழு  சீர்திருத்தப்பட்ட இறையியலின் வரலாற்றிலும், புரட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியிலும் ஒரு முக்கியமான தருணமாக இன்றும் நிற்கிறது. அதன் நீடித்த மரபு அதன் கோட்பாட்டுக் கட்டமைப்புகளில் மட்டுமல்ல, திருச்சபையியல் (ecclesiology) மற்றும் நடைமுறை கிறிஸ்தவ சிந்தனையிலும் அதன் தாக்கத்திலும் காணப்படுகிறது. இந்தக் குழுவின் வேலை இன்றும் உலகெங்கிலும் உள்ள சீர்திருத்த திருச்சபைகளின் நம்பிக்கைகளையும் நடைமுறை செயல்பாடுகளையும் தொடர்ந்து நிர்வகித்து வருகிறது. இது வேதாகமத்துடனும் கிறிஸ்தவ இறையியலுடனும் ஒரு ஆழமான ஈடுபாட்டை வெளிபடுத்தி வருகிறது.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர்ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டாக்டர். பிரையன் ஹெச். காஸ்பி
டாக்டர். பிரையன் ஹெச். காஸ்பி
டாக்டர். பிரையன் ஹெச். காஸ்பி - சிக்னல் மவுண்டன், டென்னில் உள்ள வேசைட் பிரஸ்பைடீரியன் திருச்சபையின் மூத்த போதகர் மற்றும் அட்லாண்டாவில் உள்ள சீர்திருத்த இறையியல் கல்லூரியில் வரலாற்று இறையியலின் இணைப் பேராசிரியர் ஆவார். தணிக்கை செய்யப்படாதது: முழு வேதாகமத்தையும் தழுவத் துணிதல் (Uncensored: Daring to Embrace the Entire Bible) மற்றும் துன்பப்படுதல் குறித்த ஒரு கிறிஸ்தவரின் சிறிய கையேடு (A Christian’s Pocket Guide to Suffering) உட்படப் பல புத்தகங்களின் ஆசிரியராவார்.