What Is an Assurance of Pardon?
பாவ மன்னிப்பின் நிச்சயம் என்றால் என்ன?
03-03-2026
What Is an Assurance of Pardon?
பாவ மன்னிப்பின் நிச்சயம் என்றால் என்ன?
03-03-2026

பாவ அறிக்கை என்றால் என்ன?

What Is a Confession of Sin?

சீர்திருத்த திருச்சபையின் ஆராதனையில் நீங்கள் கலந்துகொள்ளும்போது, சபையின் போதகர் உங்களுடைய பாவத்தை அறிக்கை செய்யும்படியாக  வழிநடத்தலாம். அப்படி செய்வதற்கு முன்பாக அவர் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை வாசிக்கலாம் அல்லது கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் கிடைக்கும் மன்னிப்பை பற்றி உபதேசிக்கலாம். இந்த ‘பாவ அறிக்கை’ எதைக் குறிக்கிறது?  இதை நாம் எப்படி ஆரம்பிக்க வேண்டும்? இதை  நாம்  இன்னும் எப்படி உண்மையுடன் அனுசரிக்க வேண்டும்?

பாவ அறிக்கை என்பதின் அர்த்தம் என்ன?

 1 யோவான் 1:9 சொல்லுகிறது: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” இங்கே ‘அறிக்கையிடுதல்’ என்பதற்கு யோவான் பயன்படுத்திய கிரேக்க வார்த்தையின் பொருள் என்னவென்றால் “ஒரே காரியத்தைச் சொல்லுதல்” என்று பொருள்படும். அதாவது, நமது பாவத்தைப் பற்றி வேதத்தில்  தேவன் எவ்விதமாக விவரித்திருக்கிறாரோ அதையே நாமும் அங்கீகரிப்பதே உண்மையான பாவ அறிக்கையாகும்.

பொதுவான ஆராதனையில், பாவ அறிக்கை செய்வதென்பது, சபையின் போதகர் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது தனது பாவங்களை ஒப்புக் கொள்ளும்படியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதை வழிநடத்துவதாகும். மேலும் அவர், கிறிஸ்துவுக்குள் கிடைக்கும் தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபிப்பார்.

பாவ அறிக்கையின் துவக்கம் 

பழைய ஏற்பாட்டு ஆசாரிப்பு கூடாரத்திலும் தேவாலயத்திலும், பிரகாரத்தின் வாசல் கிழக்கு நோக்கி இருக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார் (யாத். 27:13). ஆதாமும் ஏவாளும் பாவத்தில் விழுந்த பிறகு ஏதேன் தோட்டத்திலிருந்து கிழக்கு திசை நோக்கியே அவர்கள் துரத்தப்பட்டதால் பிரகாரத்தின் திசையும் இவ்விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டது (ஆதி. 3:24). இந்த வாசல், இஸ்ரவேலர்கள் மீண்டும் தேவனிடம் திரும்புவதற்கான ஒரு கிருபையுள்ள அழைப்பாகவே இருந்தது.

ஆலயத்திற்கு வருபவர்கள் வாசலுக்குள் நுழைந்ததும் அங்கு முதலில் காணப்படுவது ‘பலிபீடம்’. அங்கே அவர்கள் நின்று, பலியிடப்பட வேண்டிய மிருகத்தின் மேல் தங்கள் கைகளை வைத்து, தங்கள் பாவங்களை அறிக்கை செய்வார்கள்; அதன் பிறகு ஆசாரியன் அதைப் பரிசுத்த தேவனுக்குப் பலியிடுவான். “இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாயிராது” (எபி. 9:22) என்பதை இந்த வழக்கம் அவர்களுக்கு நினைவுபடுத்தியது.

எபிரெயர் 9:10-22 வசனங்கள், இவ்விதமான மிருகத்தினால் செய்யப்படும் பலிகளுக்கு மெய்யான சுத்திகரிக்கும் வல்லமை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கு மாறாக, “நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம், ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” (எபி. 9:14) என்று வாசிக்கிறோம்.

தேவனிடம் வருவதற்கு கிறிஸ்துவின் இரத்தம் அவசியம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், பல சீர்திருத்தசபை ஆராதனை முறைமைகளில் பாவ அறிக்கையானது  ஆரம்பத்திலேயே இடம்பெற்றுள்ளன. ஜான் கால்வின் சுவிட்சர்லாந்து சபைகளில் ஆராதனையை தொடங்கும்போது பின்வரும் அழைப்போடு அதை ஆரம்பித்தார்:

“நம்முடைய  சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. ஆமென்.” (சங். 124:8)

இதைத் தொடர்ந்து பகிரங்கமான பாவ அறிக்கை இடம்பெற்றது. இதைப் பற்றி கால்வின் கூறுகையில்: 

“ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எல்லாச் சபைகளிலும், பயனுள்ள வகையில் வழக்கமாக, போதகர் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் தனது பெயரிலும் மக்கள் பெயரிலும் ஒரு பாவ அறிக்கையை உருவாக்கி, அக்கிரமங்களை ஒப்புக்கொண்டு கர்த்தரிடம் மன்னிப்புக்காகக் கெஞ்ச வேண்டும் ” (Institutes 3.4.11).

கால்வின் மூலமாகவும், மற்ற பலருடைய தாக்கத்தாலும் இந்த வழக்கமானது திருச்சபை வாழ்வின் நடைமுறையில் பிரபலமாயிற்று. வெஸ்ட் மினிஸ்டர் பொதுவான ஆராதனை குறிப்புகளை கொண்ட புத்தகத்தில், ” ஆராதனையின் போது முதலாவதாக  புரிந்துகொள்ள முடியாத சிந்தனைக்கு அப்பாற்பட்ட தேவனுடைய மகத்துவத்தையும் மேன்மையையும் சொல்வதிலிருந்து தொடங்கி அதன் பின்பு நம்முடைய இழிவான மற்றும் தகுதியற்ற நிலைமையை தேவனிடத்தில் அறிக்கையிட்டு அவருடைய சமூகத்தில் சேரக்கடவோம்” என்று சொல்லுகிறது. அத்தோடு நின்றுவிடாமல் நம்முடைய அநேக பாவ வழிகளையும் நாம் விசேஷமாக அறிக்கையிட வேண்டும் என்றும் அந்த குறிப்பேட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆவிக்குரிய சுதந்திரவாளிகளாக இதே சீர்திருத்த வழக்கமானது இன்று நம் மத்தியிலும் வந்தெட்டியிருக்கிறது.

பாவ அறிக்கையைச் செயல்படுத்தும் முறை 

நமது பாவங்களை இன்னும் உண்மையுடன் அறிக்கை செய்ய மூன்று வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

1.நமது பாவத்தின் பயங்கரத்தை ஒப்புக்கொள்ளுங்கள்: 

 நாம் செய்த செயலை மட்டுமே பாவமாக நாம் அநேகமுறை நினைக்கிறோம். ஆனால், நாம் யாருக்கு எதிராகப் பாவம் செய்தோம் என்பதுதான் மிக முக்கியமானது. 

உதாரணமாக, நான் வரைந்த ஒரு படத்தில் நீங்கள் ஒரு மீசையை வரைந்தால், அது ஒரு சிறிய குற்றமாகவே கருதப்படும்; ஏனெனில் நான் ஒரு சாதாரணமான கலைஞன். ஆனால், நீங்கள் ‘லூவ்ரே’ (Louvre) அருங்காட்சியகத்திற்குச் சென்று டாவின்சியின் ‘மோனாலிசா’ படத்தில் அப்படிச் செய்தால், நீங்கள் பெரிய குற்றம் செய்த சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். செயல் ஒன்றுதான், ஆனால் ஒரு தலைசிறந்த படைப்பை நீங்கள் அவமதித்ததால் அதன் தண்டனை கடுமையாகிறது.

 அதுபோலவே, அகில உலகத்தையும் படைத்த எஜமானருக்கு எதிராகப் பாவம் செய்வது மிகவும் பாரதூரமானது.
பத்சேபாவுடன்  விபச்சாரம் செய்து அவளுடைய கணவனை கொலை செய்தபோது தாவீது தன்னுடைய பாவத்தை குறித்து, இருவருமே (பத்சேபாள்-உரியா) தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால்,  “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்தேன்” என்று அறிக்கையிடுகிறார்

2. திருச்சபையாக நாம் செய்யும் பாவத்திற்காகத் துக்கப்படுங்கள்: 

கர்த்தர் கற்பித்த ஜெபத்தில், “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” (மத். 6:12) என்று பன்மை (சபையாக) தன்மையில் நாம் வேண்டுகிறோம். நாம் கிறிஸ்துவின் ஆவியினால் சபையிலுள்ள மற்றவர்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறோம். நமது பாவம் சபையைப் பாதிப்பதால், நாம் ஒன்றாக  இணைந்து பாவ அறிக்கை செய்ய வேண்டும். 

அப்போஸ்தலனாகிய பவுல் கூறியது போல,” நீங்கள் தேவனுடைய ஆலயம் என்றும் தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசம் பண்ணுகிறார் என்றும் அறியீர்களா?” (1கொரி3:16). இங்கே சொல்லப்பட்டுள்ள “நீங்கள்” என்பதும் பன்மை தன்மையில் பேசப்பட்டிருக்கிறது. சபையில் செய்யப்படும் பாவங்கள் அசுத்தமானவை; ஏனெனில் அங்கே பரிசுத்த தேவன் வாசம்பண்ணுகிறார். சபை என்பது தேவனுடைய கலைக்கூடம் போன்றது, நம்மை அழகுபடுத்தும் ‘வண்ணம்’ கிறிஸ்துவின் இரத்தம் (எபி. 10:28-31). தாமஸ் வாட்சன் கூறியது போல: “துன்மார்க்கரின் பாவம் தேவனுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது; ஆனால் அவருடைய மக்களின் பாவமோ அவரைத் துயரப்படுத்துகிறது.”

3. நம்முடைய பாவத்திற்கான உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும்: 

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் முறுமுறுத்தபோது கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பிய நேரத்திலும் (எண். 21:7), சிறையிருப்பிலிருந்து திரும்பி எருசலேமின் மதில்களைக் கட்டிய போதும் (நெகே. 9:1-3) அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்ததாக வேதம் கூறுகிறது. அந்தப் பகுதிகளில் தேவனுடைய  ஆழ்ந்த மனவருத்தத்தை நாம் பார்க்க முடியும்.

ஏதாவது ஒரு பாவம் கர்த்தருக்கு விரோதமாகச் செய்யப்பட்டால் அது உண்மையான திருச்சபைக்கு துக்கத்தைக் கொண்டுவர வேண்டும். பாவ அறிக்கைக்காகப் பாடப்படும் சங்கீதங்கள் நமது மீறுதல்களுக்காக இருதயப்பூர்வமான புலம்பலை வெளிப்படுத்துகின்றன. மார்ட்டின் லூத்தர் கூறியது போல: “பாவ அறிக்கையைச் செய்யும்படி நான் உங்களை அறிவுறுத்தும்போது, ஒரு கிறிஸ்தவனாக இருக்கும்படியே நான் உங்களை அறிவுறுத்துகிறேன்.”

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

பேரி யார்க்
பேரி யார்க்
பென்சில்வேனியாவில் உள்ள ரிவர் வேலி சீர்திருத்த திருச்சபையின் போதகராகவும், பிட்ஸ்பர்க் சீர்திருத்த பிரஸ்பைடீரியன் இறையியல் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். மற்றும் சீர்திருத்த பிரசிபிடேரியன் இறையியல் இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார் "இலக்கை நோக்கி தொடருதல்" என்ற புத்தகம் உள்பட அனேக புத்தகங்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.