
வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலாளர்கள் என்பவர்கள் யார்?
04-12-2025
இருதயத்திற்கான வினா விடை போதனைகள்
11-12-2025கடவுளைப் பற்றிய சீர்திருத்த உபதேசம்
ஆர்.சி. ஸ்ப்ரௌல்
கடந்த ஆண்டுகளாக, நான் இறையியல் வகுப்புகள் முதல் பல்கலைக்கழக படிப்புகள் வரை, ஞாயிறு வேதப்பாட வகுப்புகள் முதல் உள்ளூர் சபைகள் வரை பல்வேறு இடங்களில் முறைப்படுத்தப்பட்ட இறையியலை (Systematic theology) கற்பிக்க எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்த இறையியலை நான் எங்கு கற்பிக்க சென்றாலும் முதலில் நான் தொடங்குவது தேவனைப் பற்றிய உபதேசத்தைதான். இறையியல் என்பது நிச்சயமாக தேவனைப் பற்றியும் அவரது குணாதிசயங்கள் மற்றும் கிரியைகள் பற்றியும் படிப்பதாகும், மேலும் இரட்சிப்பியியல், சபையியல், வருங்கால இயல், மற்றும் பிற முறைப்படுத்தப்பட்ட இறையியலை ஆராய்வதற்கு முன்பாக தேவனின் தன்மை மற்றும் குணாதிசயங்களில் கவனத்தை செலுத்தி ஆரம்பிப்பது பொருத்தமானதாகும்.
நான் கடவுளைக் குறித்து கற்பிக்கும்போதெல்லாம், எனது மாணவர்களில் பலரையும் சிறிது கலக்கமடையச் செய்யும் இரண்டு கூற்றுகளை நான் முன்வைத்தேன். அதாவது, கிறிஸ்தவ இறையியலில் சீர்திருத்த சமுதாயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட தேவனுடைய குணாதிசயங்களில் குறிப்பாக தனித்துவமானது எதுவுமில்லை என்று அவர்களிடம் சொல்வது எனது வழக்கம். லுத்தரன்கள், ஆங்கிலிக்கன்ஸ், மெத்தடிஸ்டுகள், கிழக்கு ஆர்த்தடாகஸ் மற்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் அனைவரும் நம்பும் அதே குணாதிசயங்களைத்தான் பிரஸ்பிடீரியன்ஸ், சீர்திருத்த பாப்திஸ்துகள், டச்சு சீர்திருத்தவாதிகள் மற்றும் பிற சீர்திருத்த கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். கடவுளைப் பற்றிய உபதேசத்தில் முழுவதும் வேறுபாடானது என்பது ஒன்றுமில்லை.
இருப்பினும், அப்படியென்றால் சீர்திருத்த இறையியலின் சிறப்பம்சம்தான் என்ன என்று இதே மாணவர்கள் என்னிடம் கேட்கும் பொழுது நான் அவர்களுக்கு கூறின பதில், இது கடவுளைப் பற்றிய நமது உபதேசம் என்பதுதான். இப்பொழுது நான் கூறிய இந்த கூற்று நான் முன்பு கூறியவையோடு முரண்படுவதுபோல தோன்றலாம், ஆனால் தேவனைப் பற்றிய சீர்திருத்த உபதேசம் மற்ற கிறிஸ்தவ பிரிவினரின் உபதேசங்களிலிருந்து நம்மை வேறுபடுத்துகிறது, ஏனென்றால் மற்ற எல்லா கோட்பாடுகளையும் விட தேவனைப் பற்றிய உபதேசங்களை தீவிரமாக கூறும் நமது இறையியலை போன்று வேறெதையும் நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலான முறைப்படுத்தப்பட்ட இறையியலில் முதல் பக்கத்தில் தேவனின் இறையாண்மைப் பற்றிய ஓர் உறுதிப்பாட்டை காண்பீர்கள் ஆனால் அதே புத்தகத்தில் இரட்சிப்பியியல், வருங்கால இயல், மனிதயியல் போன்றவற்றில், ஆசிரியர் முதல் பக்கத்தில் தேவனுடைய சர்வ இறையாண்மையை பற்றி என்ன சொன்னாரோ அதை இங்கு மறந்துவிட்டது போல காணப்படும்.
இருப்பினும், சீர்திருத்தப்பட்ட இறையியலாளர்கள், கடவுளைப் பற்றிய கோட்பாடு கிறிஸ்தவ இறையியலின் முழு நோக்கத்தையும் வெளிப்படுத்துவதாக தங்களின் இருதயங்களில் அறிந்திருக்கிறார்கள். கால்வினிஸ்டுகள் பழைய ஏற்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்கு இதுவே ஒரு காரணம். கிறிஸ்துவைப் பற்றிய நமது புரிதல், நம்மைப் பற்றிய நமது புரிதல், இரட்சிப்பைப் பற்றிய நமது புரிதல் என அனைத்தையும் வரையறுக்கும் கடவுளின் தன்மை குறித்து நாங்கள் அக்கறைப்படுகிறோம். இவ்வுலகில் எங்கும் கடவுளின் குணாதிசயங்கள் மற்றும் தன்மை குறித்து நீங்கள் காண்பதற்கு மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக பழைய ஏற்பாடு இருப்பதினால் நாம் அவற்றின் பக்கம் திரும்புகிறோம். சீர்திருத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், ஏனெனில் அது கடவுளின் மாட்சிமையின் தெளிவான வெளிப்பாடு.
தேவனைப் பற்றிய நமது சீர்திருத்த உபதேசம் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை, பழைய ஏற்பாட்டில் இருந்தும் புதிய ஏற்பாட்டில் இருந்தும் எடுக்கப்பட்டவை ஆகும்.
பழைய ஏற்பாட்டில் கடவுளின் முக்கிய வெளிப்பாடுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஏசாயா 6- ல் , வேதாகமம் முழுவதிலும் தெய்வீக பரிசுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடுகளில் ஒன்றைக் காண்கிறோம். பின்னர், யாத்திராகமம் 3- ல் நாம் படிக்கும் போது எரியும் புதரில் மோசேக்கு கர்த்தர் தம்மையும் தம் உடன்படிக்கையின் நாமத்தையும் வெளிப்படுத்துகிறார் . கடவுளின் சுயாதீன சித்தம் மற்றும் சுய இருத்தலைப் புரிந்துகொள்ள விரும்பும் எவரும் படிக்க வேண்டிய அதிகாரம் இது. நமது சிருஷ்டிகர் செய்த தமது வாக்குத்தத்துக்கான அர்ப்பணிப்பையும் மற்றும் அவரது உடன்படிக்கை வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதற்கான அவரது உண்மைத்தன்மையையும் நினைவில் கொள்வதற்கு நான் அடிக்கடி தேடும்போது, நான் ஆதியாகமம் 15 ஐ வாசித்திருக்கிறேன் , அங்கு கடவுள் ஆபிரகாமுக்கு எண்ணற்ற சந்ததியினரைக் கொடுப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தம்மையே ஆணையிடுகிறார். மேலும் கடவுள் தம்முடைய மக்களாகிய தமது மணவாட்டியின் மீது கொண்ட தவறாத, வல்லமையான அன்பின் தெளிவான சித்தரிப்புக்கு, ஓசியா புத்தகத்தை விட வேதாகமத்தில் சிறந்த புத்தகத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது.
இன்னும் அநேக உதாரணங்களை நான் காண்பிக்க முடியும். ஆனால் இவையனைத்தும் பொதுவாக என்ன கூறுகிறது? தேவனுடைய இந்த வெளிப்பாடானது தேவனுடைய மக்களின் பல்வேறுபட்ட நெருக்கடியான நேரங்களில் நிகழ்ந்தவைகள் ஆகும். மோசேயும் ஏசாயாவும் தேவனுடைய மகத்துவங்களை கடினமுள்ள மக்களுக்கு பிரசங்கிப்பதற்கு தேவனால் அனுப்பப்பட்டவராவர். இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் இந்த மக்களுக்கு எது தேவைப்பட்டது? வெற்றியின் வாக்குறுதியா? அல்ல. உண்மையில் ஏசாயாவின் பிரசங்கம் இருதயங்களைக் கடினப்படுத்தும் என்று சொல்லப்பட்டது (ஏசாயா 6:8-13). அவர்களுக்கு தேவையானது தேவனுடைய குணாதிசயங்களைப் பற்றிய புரிதல். தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யும்போது தன்னையே ஆணையிடுத்துவித்தார். ஆபிரகாமிடமும் ஓசியாவிடமும் இதுவே உண்மை. மனித ரீதியாக பார்க்கையில், தேவன் அநேக சந்ததிகளை கொடுப்பார் என்பதை நம்புவதற்கு ஆபிரகாமிடம் போதுமான அளவில் எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே, கர்த்தர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றாவிட்டால் சாத்தியமற்ற தம்முடைய அழிவிற்கே தம்மை ஆணையிட்டதின் மூலமாக ஆபிரகாமுக்கு தேவன் வாக்குப்பண்ணினார். தேவன் முழுவதுமாக தமது மக்களை அவர்களின் உண்மையற்ற நிலையினால் புறந்தள்ளிவிட்டார் என்பது போல தோன்றிய நாட்களில் ஓசியா வாழ்ந்து வந்தார். இஸ்ரவேலை நித்திய அன்பினால் தேவன் நேசித்தார் என்பதற்கு என்ன நம்பிக்கையை அளிக்க முடியும்? அன்பிலும் உண்மையிலும் உள்ள கணவனைப் போல தம்மைப் பற்றி வெளிப்படுத்துவதின் மூலமாகவே.
சீர்திருத்தப்பட்ட இறையியலின் கடவுளைப் பற்றிய கோட்பாடும், இரட்சிப்பின் வெளிப்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய அனைத்து குணாதிசயங்களையும் வலியுறுத்துவதும், கர்த்தரைப் பற்றிய பிற கிறிஸ்தவ இறையியல் புரிதல்களிலிருந்து அதை வேறுபடுத்துகிறது. மேலும், கடவுளைப் பற்றிய நமது உபதேசம் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை, பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் பெறப்பட்டது. எனவே, நாம் கடவுளின் முழு ஆலோசனையையும் உள்வாங்கி, இரண்டு ஏற்பாடுகளையும் மிகுந்த பக்தியுடன் ஏன் வாசிக்கக்கூடாது?
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


