Learning from the Judges
நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் 
13-01-2026
Learning from the Judges
நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் 
13-01-2026

இயேசுகிறிஸ்துவின் ஜெபங்களினால் கிடைக்கும் ஆறுதல்

The Comfort of Jesus' Prayers

போதகனாக நியமனம் செய்யப்பட்ட நான், பல்வேறு விஷயங்களைப் பற்றி தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அநேகருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்யும்படி வேதவசனங்களைப் படிக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். பல ஆண்டுகளாக,  அனேகர் என்னிடத்தில் கேட்ட பொதுவான கேள்விகளில் ஒன்று, ஒரு விசுவாசியின் இரட்சிப்பின் பாதுகாப்பிற்காக கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளின் சாரம் எவை என்பதே. உண்மையாக இரட்சிக்கப்பட்டவர்கள் நிலைத்திருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள புதிய ஏற்பாடு நமக்கு பல வகையான பதில்களை அளிக்கிறது. நீதிமானாக்கப்படுதல் (Justification) என்ற ஒரு பிரிவு உள்ளது, இது கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலம் அவருடைய நீதியை நாம் பெற்றுக் கொண்டோம் என்பதையும், நாம் தேவனோடு சமாதானமாக இருக்கிறோம் என்பதையும் கூறுகிறது. இது ஒரு சிறிய தீமை செய்வதினால் உண்டாகும் கோபத்தை உடனே தடுத்து நிறுத்தும்படியான ஒரு காரியம் அல்ல, மாறாக தேவன் நமக்கு எதிராக ஒருபோதும் தம்முடைய கோபாக்கினையை செலுத்தாதபடிக்கு நித்தியமான சமாதானத்தை உண்டாக்கின மிகப்பெரிய செயலாகும் (ரோமர் 5:1). பரிசுத்தமாக்குதல் (Sanctification) என்ற ஒரு பிரிவும் உள்ளது, இது தேவன் தாம் தொடங்கின இரட்சிப்பின் கிரியையை எப்போது முடிப்பார் என்பதை எடுத்துரைக்கிறது: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்தி வருவார் என்று நம்பி” (பிலிப்பியர் 1:6) என்று அறிவிக்கிறது.

பிலிப்பியர் நிருபத்தில், பரிசுத்த ஆவியின் மூலமாக நம்முடைய இரட்சிப்பின் கிரியைகளை தேவேனே நமக்குள்ளே நடைபெற செய்து, நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாய் மாற்றுகிறார் என்று பொதுவாகப் புரிந்துகொள்கிறோம். அது நிச்சயமாக உண்மைதான், ஆனால் இயேசுவும் இந்தக்கிரியைகளில் இருக்கிறார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நம்முடைய விசுவாச விடாமுயற்சியை பற்றிய மிகப்பெரிய ஆறுதல், கிறிஸ்துவினுடைய தற்போதைய கிரியையைப்பற்றிப் புதிய ஏற்பாடு வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டே அமைகிறது. நாம் அடிக்கடி “கிறிஸ்து நமக்காக செய்து முடித்த கிரியை” பற்றி பேசுகிறோம். இது கிறிஸ்துவின் பரிகாரபலி நிறைவடைந்ததைக் குறிக்கிறது—நமக்காக அவர் சம்பாதித்த மீட்பின் முடிவையும், அவர் தேவனுடைய சாபத்தைத் தாமே ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் சுருக்கமான வார்த்தைகளாகும். இருப்பினும், கிறிஸ்துவின் இரட்சிப்பின் கிரியை அத்துடன் முடிவடையவில்லை. சிலுவைக்குப் பிறகும் அவர் செய்ய வேண்டியவை அநேக காரியங்கள் இருந்தன. அவர் நம்மை நீதிமானாக்க மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார், பின்பு பரலோகத்திற்கு ஏறிச்சென்று, அங்கே அவர் தேவனுடைய வலது பாரிசத்தில்  வீற்றிருக்கிறார். அங்கே அவர் ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தராகவுமாக ஆட்சி செய்கிறார், படைப்புகளையும் மற்றும் தனது திருச்சபையையும்  முழுமையாக ஆளுகிறார் (அப்போஸ்தலர் 2:33; ரோமர் 4:23–25; 1 கொரிந்தியர் 15:25).

அதுமட்டுமல்ல, தமது ஜனங்களுக்காக அவர் செய்து வரும் தற்போதைய கிரியையில் மிகவும் பிரதானமான கிரியைகளில் ஒன்று அவருடைய பரிந்துபேசுதல் ஜெபமாகும். கிறிஸ்துவின் ஆசாரிய ஊழியம் சிலுவையோடு முடிவடையவில்லை. ஒவ்வொரு நாளும், பிதாவின் பிரசன்னத்தில், கிறிஸ்து தமது ஜனங்களுக்காகப் பரிந்துபேசிக்கொண்டு இருக்கிறார். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்” மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று யாக்கோபு சொல்லுகிற வண்ணமாக, இயேசுவின் ஜெபங்கள் அவருடைய ஜனங்களுக்காக எவ்வளவு அதிகமான பலனைக்  கொடுக்கும்? விசுவாசிக்காகக் கிறிஸ்து செய்யும் பரிந்துபேசுதலில் காணப்படும் ஆறுதலில் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்று, இயேசுவின் மகாபிரதான ஆசாரிய ஜெபத்தில் காணப்படுகிறது. அதுவே ஒரு ஆழமான பரிந்துபேசுதலின் ஜெபமாகும். ஆச்சரியப்படும் விதமாக, நாமும் இந்தப் பெரிய பரிந்துபேசுதலின் ஜெபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளோம். யோவான் 17:1–9-ல் நாம் கீழ்க்கண்டவாறு பார்க்கிறோம்:

“பிதாவே, உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே  மகிமைப்படுத்தும். நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து  எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர்  என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குக் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.”

வசனம் 9-ஐ மீண்டும் பாருங்கள்: “நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல் நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே” (யோவான் 17:9). இதுவே முக்கியமான விஷயம். இயேசு, உலகத்தில் உள்ள அனைவருக்காகவும் அல்ல, மாறாகத் தேவனுக்குச் சொந்தமான எல்லாருக்காகவும் ஜெபிக்கிறார். பிதாவானவர் தமக்காக ஒரு கூட்ட ஜனங்களைத் தெரிந்துகொண்டார் —அதே ஜனங்கள் கிறிஸ்துவுக்கும் சொந்தமானவர்கள். கேட்டின் மகனான யூதாஸைத் தவிர அவர்களில் ஒருவரும் கெட்டுப் போகவில்லை. அழிவுக்குரிய மகனாக இருந்தவன் ஆரம்பத்திலிருந்தே தேவனுடைய பிள்ளையாக இருக்கவில்லை. இயேசு யாருக்காக ஜெபிக்கிறாரோ அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவர்களில் ஒருவரும் கெட்டுப்போவதில்லை (யோவான் 17:10–19). இது மேல்வீட்டிலே இயேசுவின் ஜெபத்தைக் கண்ட  சீஷர்களுக்கு மட்டுமல்ல, இன்று அவரை விசுவாசிக்கிற நம்மையும் உள்ளடக்குகிறது.  இயேசு தன்னுடைய ஜெபத்தில் நம்மையும் குறிப்பிடுகிறார் என்று நான் சொல்லுகிறேன், எப்படியென்றால் “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால்  என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:20) என்கிறார். இயேசு நமக்காக ஜெபித்ததினாலேயே, நாம் அப்போஸ்தலரின் வார்த்தைகளைக் கேட்டு விசுவாசித்தோம். இதுவே கிறிஸ்துவின் ஜெபம். நம்முடைய மகா பிரதான ஆசாரியரின் பரிந்துபேசுதலால் நாம் பாதுகாக்கப்படுவதினால் இன்னமும் இப்பூவுலகில் நிலைத்திருக்கிறோம்.

ஒரு விசுவாச நண்பரின் அல்லது ஒரு போதகரின் பரிந்துபேசுதலின் ஜெபத்தால் நாம் மிகுந்த ஆறுதலடைவோமானால், இயேசு நமக்காக ஜெபிக்கிறார் என்ற முழுமையான நிச்சயத்தினால் நாம் எவ்வளவு அதிக ஆறுதலை அனுபவிக்க முடியும்? இயேசுவின் ஜெபங்கள் ஒருபோதும் தோல்வியடைவதில்லை என்பது நமக்குத் தெரியும். அவர் தேவனுடைய இருதயத்தை நன்றாக அறிந்திருக்கிறார். நாம் இறுதிவரை  நிலைத்திருக்கும்படி  எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். மேலும் இயேசு கிறிஸ்து, நாம் அவருடைய நாமத்தில் எதைக் கேட்டாலும் பிதாவானவர் நமக்குக் கொடுப்பார் என்று கூறியிருக்கிறார் (யோவான் 16:23). இது உண்மையானால், பிதாவானவர் நிச்சயமாகவே தம்முடைய நேச குமாரன் கேட்பதை அதாவது நாம் நிலைத்திருக்கும்படியாய் அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கத் தவறமாட்டார்.

இயேசுவின் ஜெபத்தின் பலனுக்கு கிடைத்த மிகப் பெரிய உதாரணம் சீமோன்பேதுரு ஆவார். யூதாஸைப் போலவே, சீமோன்பேதுருவுக்கும் ஒரு பெரிய வீழ்ச்சி இருந்தது. யூதாஸைப் போலல்லாமல், பேதுரு மீட்கப்பட்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்தார். அவர்கள் இருவரும் இயேசுவை மறுதலித்தார்கள், ஆனால் பேதுரு மட்டுமே மனந்திரும்பினார். ஏன்? லூக்கா 22:31–32 அதற்கான பதிலை கொடுக்கிறது. சாத்தான் பேதுருவைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும்படி  கேட்டான், ஆனால் இயேசு அவனுக்காக ஜெபித்தார், அதனால் பேதுரு மனந்திரும்பினார் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இயேசு யூதாஸுக்காக ஜெபிக்கவில்லை, ஆனால் அவர் பேதுருவுக்காக ஜெபித்தார், அதனால் பேதுரு விசுவாசத்திலும் மனந்திரும்புதலிலும் நிலைத்திருந்தார். அது இன்று நமக்கும்  ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இயேசுகிறிஸ்து யாருக்காக ஜெபிக்கிறாரோ, அவர்கள் நீண்ட காலத்திற்கு விசுவாசத்தில் நிலைத்திருப்பார்கள். நாம் கிறிஸ்துவை விசுவாசிப்போமனால், அவர் ஒவ்வொருநாளும் நமக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்பதே நமக்கான நித்திய ஆறுதலாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.