
பிரயாணம் செய்யும் மக்கள்
06-01-2026நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்
எனக்கு வரலாற்றின் சில காலக்கட்டங்கள், வரலாற்றின் போக்கிற்கு மிகவும் போதனையானவைகளாக தனித்து நிற்கின்றன. அதாவது, சில நேரங்களில் நாம் கடந்த காலத்தில் ஒரு காலகட்டத்தை ஒன்றுமில்லாததாக எண்ணலாம், மனித வரலாற்றின் முழு காலகட்டமும் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை எவ்வாறு மீண்டும் பிரதிபலிக்கிறது என்பதைக் கவனித்து, பின்னர் அந்தக் காலகட்டத்திலிருந்து, இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். இவ்விதமான போதனைகள் நிறைந்த காலக்கட்டங்களில் ஒன்றுதான் நியாயாதிபதிகளின் காலம். நியாயாதிபதிகள் மற்றும் ரூத்தின் புத்தகங்களிலும் 1 சாமுவேலின் தொடக்க அதிகாரங்களிலும் நமக்காக விவரிக்கப்பட்டுள்ள இந்தக் காலம், தோராயமாக 350 வருட வரலாற்றை உள்ளடக்கியது. இது எவ்வளவு பரந்த காலகட்டத்தைக் குறிக்கிறது என்பதை நீங்கள் உணர விரும்பினால், அமெரிக்காவில் பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சிந்தியுங்கள். புரட்சிகரப் போருக்கு 125 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இன்று வரை அமெரிக்காவில் நிகழ்ந்த அனைத்து வரலாற்றையும் நினைத்துப் பாருங்கள். இவ்விதமான காலத்தைப் போன்றுதான் நியாயாதிபதிகளின் காலம் உள்ளடக்கியுள்ளது.
சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் நீடித்த இந்தக் காலகட்டத்தில், இஸ்ரவேலில் எந்த ராஜாவும் இல்லை, தேசத்திற்கு ஒரு தனித் தலைவரும் இல்லை. இஸ்ரவேல் கானான் தேசத்தில் ஒரு பழங்குடி கூட்டமாகதான் வாழ்ந்து வந்தது, நெருக்கடியான இந்த காலங்களில் குறிப்பிட்ட பணிகளைச் செய்ய தேவன் எழுப்பி அதிகாரம் அளித்த தனிநபர்களின் வரிசையால் இக்கால கட்டம் வழிநடத்தப்பட்டது. பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ், சிம்சோன் பெலிஸ்தியர்களுக்கு எதிராக தனது மிகுந்த உடல் வலிமையைப் பயன்படுத்தினான். தீய ராஜாவான யாபீனை தோற்கடிக்க தெபோராவும் பாராக்கும் அபிஷேகம் செய்யப்பட்டனர். இவர்களைப் போல அநேகர் இவ்வாறு செயல்பட்டனர்.
இப்போது, நியாயாதிபதிகளின் காலம் முழு வரலாற்றிற்கும் போதனையானது என்று நான் நம்புவதற்குக் காரணம், அந்த 350 ஆண்டுகளில் நாம் காணும் சுழற்சி முறைதான். இந்த சகாப்தத்தில், இஸ்ரவேலர்கள் பின்வரும் ஓர் சுழற்சியில் காணப்பட்டார்கள் என்று நியாயாதிபதிகள் புத்தகம் நமக்குச் சொல்கிறது,: “இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வையில் பொல்லாங்கானதைச் செய்தார்கள்.” நியாயாதிபதிகள் புத்தகத்தில் இந்த சொற்றொடரை நாம் படிக்கும் ஒவ்வொரு முறையும், கடவுள் இஸ்ரவேலின் எதிரிகளை – மீதியானியர்கள், பெலிஸ்தர், மோவாபியர் மற்றும் பிறரை – தம்முடைய மக்களுக்கு எதிராகத் தண்டிக்கும் கருவிகளாக எழுப்பினார் என்பதைக் காண்கிறோம். அந்த புறமத தேசங்கள் இஸ்ரவேலர்களை ஒடுக்குவார்கள், பின்னர் அவர்கள் விடுதலைக்காக கூக்குரலிட்டு தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புவார்கள். பின்னர், பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ், இஸ்ரவேலின் எதிரிகளைத் தோற்கடித்து விடுதலையைக் கொண்டுவரும் நியாயாதிபதிகளில் ஒருவரை தேவன் எழுப்புவார். ஒரு அறிஞர் இதை மறுமீட்சி, பழிவாங்கல், மனந்திரும்புதல் மற்றும் மீட்பு ஆகியவற்றின் சுழற்சி என்று அழைக்கிறார். நியாயாதிபதிகள் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒவ்வொரு கொடிய பாவத்திற்கும் பின்தொடர்வது கடவுளின் பழிவாங்கும் நீதிதான், இதன் மூலம் அவர் தனது சொந்த மக்களுக்கு எதிராக தனது தீர்ப்பையும் கோபத்தையும் ஊற்றுகிறார். கடவுளின் பழிவாங்கும் நீதியின் பாரத்தின் கீழ், மக்கள் மனந்திரும்புதலுக்குக் கொண்டுவரப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் சூழ்நிலையைப் பற்றி புலம்பி, அவர்களை மீட்கும் கடவுளால் தங்கள் மீட்புக்காகக் காத்திருக்கிறார்கள்.
நியாயாதிபதிகள் காலத்தில் இஸ்ரவேலரின் பாவங்களின் இந்த கொடுமையான வரலாறு, அவர்கள் எதை வாக்குப்பண்ணினார்களே அதற்கு எதிராக செல்கிறது. அதாவது, யோசுவா தான் மரிப்பதற்கு முன்பாக மக்களை ஒன்றுக்கூட்டி தேவனோடுள்ள அவர்களின் உடன்படிக்கையை புதிப்பிக்கிறார். அங்கு மக்கள் இரு காரியங்களில் வாக்குப்பண்ணுகிறார்கள். ஒன்று நேர்மறையானது மற்றொன்று எதிர்மறையானது. ஒன்று, தேவனுக்கு கீழ்ப்படிவதற்கு உறுதிக்கொண்டார்கள் மற்றொன்று விக்கிரகங்களுக்காக தேவனை விட்டுவிடாமல் இருப்பதற்காக உறுதிக்கொண்டார்கள்.
திருச்சபை மனந்திரும்பி தேவனை நோக்கிக் கூப்பிடுகையில், தேவன் தமது திருச்சபையை நிச்சயமாக மீட்டு காப்பார் என்பதை நியாயாதிபதிகளின் காலம் நமக்கு காண்பிக்கிறது.
மேலும், தேவன் முற்பிதாக்களுக்கு மீண்டும் மீண்டும் அளித்த வாக்குறுதியின் வெளிச்சத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தேவன் யாக்கோபுக்கு வாக்குப்பண்ணினபோது, “ நான் உன்னைவிட்டு விலகுவதில்லை” (ஆதி 28:15) என்றார். தேவனோடு ஐக்கியத்தில் உள்ளவர்களுக்கு தேவன் பண்ணின உடன்படிக்கை வேதத்தின் ஓர் முக்கிய கருப்பொருளாகும். தமது மக்களை தேவன் தண்டித்தாலும், அவர் நேசித்த அவருடைய பிள்ளைகளைத்தான் அவர் தண்டித்தார் என்பதற்கு நியாயதிபதிகள் சான்றளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கைவிடப்பட்டதைப்போல அவர்கள் எண்ணினாலும், தேவன் முழுவதுமாக அவர்களை கைவிடவில்லை.
இருப்பினும், மக்கள் தேவனை விட்டுவிட்டார்கள் என்பதுதான் வரலாறு. இதுதான் இஸ்ரவேல் மற்றும் உடன்படிக்கையின் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு. தேவன் நம்மை கைவிடுவதில்லை ஆனால் நாம் அவரை விட்டுவிடுகிறோம். நியாயதிபதிகளின் காலத்தில் தேவனை விட்டு விலகுவதற்கு அவர்களை தூண்டியது எதுவென்றால், தங்களை சுற்றியுள்ள மற்ற அந்நியர்களை போல தாங்களும் வாழவேண்டும் என்ற அவர்களின் மிகப்பெரிய ஆசைதான். அவர்களைப்போல வாழாமல் இருப்பதற்கு தான் தேவன் அவர்களை அழைத்தார். பரிசுத்த ஜாதியாக வாழ்வதற்கு அவர்களை அழைத்தார். தேவபக்தியுள்ளவர்களாகவும், விக்கிரகாரதனையிலிருந்து விலகி இருக்கும்படியாகவும் தேவன் அவர்களை அழைத்தார், ஆனால் இவ்வாறு வாழ்வதென்பது அந்நாட்களில் பிரபலமற்றதாக இருந்தது. சபை வரலாற்றிலும் ஏன் இன்றும் இவை அரிதாகத்தான் உள்ளது. வேதாகம வரலாற்றில் மீண்டும் மீண்டும் காணப்பட்ட சுழற்சியான மீட்சி, நியாயத்தீர்ப்பு, மனந்திரும்புதல் மற்றும் விடுதலை ஆகியவற்றை தேவனுடைய மக்கள் மீண்டும் மீண்டும் அனுபவித்தனர். மேலும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் திருச்சபை இதேபோன்ற சுழற்சியைக் கண்டிருக்கிறது என்று நான் தைரியமாக கூறுகிறேன். மேலும், இதுபோன்ற விஷயங்கள் இன்றைய திருச்சபையின் வாழ்க்கையில் இன்றைக்கும் ஒருபோதும் நடக்காது என்று எண்ணும் போக்கு நம்மிடம் உள்ளது. கடவுள் தம்மை விட்டுவிடும் மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்த மாட்டார் என்று நம்பி, கடவுளின் செயல்களின் இந்த தொடர்ச்சியான வடிவத்தைக் கவனிக்க நாம் மறுக்கிறோம். ஆனால் இஸ்ரவேலின் தேவன் ஆசீர்வாதம் மற்றும் சாபம் இரண்டையும், செழிப்பு மற்றும் பேரழிவு இரண்டையும் வாக்குறுதியளிக்கும் கடவுளாக இருக்கிறார். திருச்சபை உலகப்பிரகாரமாகவும், தேவனுக்கு உண்மையில்லாததாயும் இருக்கையில் அது துன்பங்களுக்குட்படுவதை எண்ணி நாம் ஆச்சரியப்படக்கூடாது. சிலநேரங்களில், சபை அதன் உண்மையுள்ள தன்மையினால் உபத்திரவப்படுத்தப்படுகிறது, காரணம் சுவிசேஷத்தின் வளர்ச்சிக்கு விரோதமாக அந்தாகரத்தின் வல்லமைகள் செயல்படுகின்றன. மற்ற நேரங்களில், அதன் பரவலான தொடர்ச்சியான துரோகத்தாலும் அது துன்பப்படுகிறது. இதுதான் நியாயதிபதிகள் காலத்தில் நிகழ்ந்தன மற்றும் இன்றும் இவைகள் நிகழும்.
ஆனாலும், இஸ்ரவேலர் மனந்திரும்புகையில் தேவன் அவர்களை விடுவித்தார் என்பதை நியாயதிபதிகளில் நாம் படிக்கிறோம். தேவனுடைய உடன்படிக்கையின் மக்கள் எவ்வளவு மோசமாக பாவத்தில் வீழ்ந்தாலும், அவரது சபையாகிய அவள் மனந்திரும்பும்போது தேவன் அவர்களை சீக்கிரமாக விடுவிக்கிறார். அவரது மக்கள் அவரை கைவிடுகிறார்கள் ஆனால் அவரோ ஒருபோதும் அவர்களை கைவிடுவதில்லை. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறது (1 பேதுரு 4:17), ஆனால் இந்த நியாயத்தீர்ப்பு அழிவுக்கானது அல்ல, சீர்திருத்ததலுக்கானது. நம்மை மனந்திரும்புதலுக்கும் உண்மைக்கும் நேராக வழிநடத்துவதற்கு இவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருச்சபை மனந்திரும்பி தேவனை நோக்கிக் கூப்பிடுகையில், தேவன் தமது திருச்சபையை நிச்சயமாக மீட்டு காப்பார் என்பதை நியாயாதிபதிகளின் காலம் நமக்கு காண்பிக்கிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


