
கடவுளைப் பற்றிய சீர்திருத்த உபதேசம்
09-12-2025
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது
16-12-2025இருதயத்திற்கான வினா விடை போதனைகள்
சில சமயங்களில் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களிடம், “உங்களுடைய புத்தகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். முதல்முறையாக இந்தக் கேள்வி என்னிடத்தில் கேட்கப்படும்போது, “எனக்குத் தெரியவில்லை; நான் அதைப் பற்றி உண்மையில் யோசித்துப் பார்த்ததில்லை”என்று பதில் அளித்தேன். ஆனால் அதைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, என்னுடைய நிரந்தரமான பதில் இதுவாகிவிட்டது: “எனக்குப் பிடித்த புத்தகம் எதுவென்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு ‘தேவனுக்கான இருதயம்’ (A Heart for God) என்றுரைத்தேன்”. “ஏன்?” இவ்வாறு பதிலளித்தீர்கள் என்ற கேள்வி அரிதாகவே என்னிடத்தில் கேட்கப்பட்டது. ஆனால் (இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டால்) அந்தத் தலைப்பு நான் எப்படி இருக்க விரும்புகிறேன் என்பதை எளிதாக வெளிப்படுத்துகிறது: ஒரு கிறிஸ்தவனாக தேவனுக்கேற்ற இருதயத்தை கொண்டிருப்பதுதான் அது.
இது ஒரு வகையில், நாம் கடந்த காலத்து சிறந்த திருச்சபை ஜாம்பவான்களின் தோள்களில் அமர்ந்திருக்கிறோம் என்பதன் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம். ஜான் கால்வினின் அறிக்கையையும் பொன்மொழியையும் நினைத்துப் பாருங்கள்: ஒரு உள்ளங்கையின் மையத்தில் வைத்திருக்கும் இருதயம் மற்றும் “கர்த்தாவே, என் இருதயத்தை உமக்கு விருப்பத்துடனும், உண்மையுடனும் நான் கொடுக்கிறேன்” என்ற வார்த்தைகள். அல்லது சார்ல்ஸ் வெஸ்லியின் பாடலைக் கவனியுங்கள்:
“என் தேவனைப் புகழ ஒரு இருதயம் வேண்டும்!
பாவத்திலிருந்து விடுதலையான ஒரு இருதயம் வேண்டும்.”
சில கீர்த்தனைப் புத்தகங்களில் வெஸ்லியின் இந்தப் பாடல் சேர்க்கப்படவில்லை, மறைமுகமாக ஒரு சில பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளது ஏனெனில் ஒருவேளை அவருடைய பூரண அன்பு மற்றும் முழுமையான பரிசுத்தப்படுத்துதல் (Perfect Love and Entire Sanctification – அதாவது இவ்வுலகிலேயே அவருடைய பரிசுத்த வாழ்வின் வாஞ்சை நிறைவேற்றப்படும் என்று அவர் நினைத்தார்.) என்ற கொள்கையின் வெளிப்பாடாக அது இருக்கலாம் என்பதாலேயே அவரின் பாடல் சேர்க்கப்படவில்லை. ஆனால் வெஸ்லியின் உணர்வு நிச்சயமாக வேதாகமத்திற்கு உட்பட்டதே.
அதேவேளையில் திருச்சபைத் தலைவர்களின் கூற்றுக்குப் பின்னால் வேதவசனத்தின் சாட்சி நிற்கிறது. முதலாவது மற்றும் பிரதானமான கட்டளை என்னவென்றால், நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் நம்முடைய முழு இருதயத்தோடும் அன்பு கூறுவதே (உபா. 6:5). அதனால்தான், சவுலுக்குப் பதிலாக வேறொரு ராஜாவை இஸ்ரவேல் மக்கள் ஏற்படுத்தியபோது, தேவன் “தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தேடினார்” (1 சாமு. 13:14), ஏனெனில் “கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமு. 16:7). சுவிசேஷத்திற்கான நம்முடைய மறுமொழி என்னவென்றால், இருதயத்தின் காரியம் என்பது இருதயம் தான் காரியம். இது ஒரு உலகம் அறிந்த ஒரு உண்மையாகும். ஆனால் உலகறிந்த உண்மையோ இல்லையோ, அதுவே வேதம் கூறும் உண்மை.
எனவே இந்த இருதயத்தை பற்றி அது எப்படி இருக்கும், அது எவ்வாறு உருவானது, எந்தெந்த வழிகளில் அது அச்சுறுத்தப்படலாம், மற்றும் அது எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரையில் சிறிது சிறிதாக நாம் ஆராய்வோம். எனவே, இந்த ஆரம்பமாக, இருதயத்தைப் பற்றிய பிரதானமான காரியங்களை வினா விடை போதனை அடிப்படையில் சிந்திப்பது நமக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
1. இருதயம் என்றால் என்ன?
ப.1. இருதயம் என்பது அறிவு சார்ந்து (அது என் மனதை உள்ளடக்கியது), உணர்ச்சிபூர்வமாக (அது என் ஆத்துமாவை வடிவமைக்கிறது), மற்றும் முழுமையாகவும் (அது என் வாழ்க்கைக்கு ஆற்றலை வழங்குகிறது) என் வாழ்க்கையின் மைய மற்றும் உந்துசக்தி ஆகும்.
2. என் இருதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
ப.2. இல்லை. இயற்கையாகவே என்னுடைய இருதயம் பாவநோயுற்றது. பிறப்பிலிருந்தே, என் இருதயம் சீர் கெட்டு, தேவனுக்கு விரோதமாக இருக்கிறது. அதன் நினைவுகளின் தோற்றங்களும் நோக்கங்களும் தொடர்ச்சியாக தீமை நிறைந்ததாக இருக்கிறது.
3. சீர் கெட்ட என்னுடைய இருதயத்தை குணப்படுத்த முடியுமா?
ப.3. ஆம். தேவன், தம்முடைய கிருபையினால், அவரை நேசிக்கவும் மற்றும் அவருக்கு ஊழியம் செய்யும் விருப்பத்தை கொண்ட ஒரு புதிய இருதயத்தையும் எனக்கு கொடுக்க முடியும்.
4. தேவன் இதை எப்படிச் செய்கிறார்?
ப.4. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த கிரியை மூலமாகவும் மற்றும் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் செய்யும் செயலின் மூலமாகவும் தேவன் இதை நடபிக்கிறார். அவர் சுவிசேஷத்தின் சத்தியத்தின் மூலம் என் மனதை ஒளிரச் செய்கிறார், பாவத்தினால் கட்டப்பட்டு அடிமைத்தனத்திற்குள்ளான என்னுடைய சித்தத்தை விடுதலையாக்குகிறார். தம்முடைய கிருபையினால் என்னுடைய உணர்வுகளைசுத்திகரிக்கிறார். மேலும் அவர் நேசிப்பதை நானும் நேசிக்கும்படியாக, தம்முடைய நியாயப்பிரமாணத்தை என் இருதயத்தில் மீண்டும் எழுதுவதன் மூலம் அவருக்காக வாழும்படி என்னை ஊக்கப்படுத்துகிறார். வேதாகமம் இதை “மேலிருந்து பிறத்தல் (மறுபிறப்பு) ” என்று அழைக்கிறது.
5. இதனால் நான் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டேன் என்று சொல்லலாமா?
ப.5. இல்லை. நான் தேவனால் மகிமைப்படுத்தப்படும்வரை (Glorified) இந்த உலகில் பாவங்களுடன் தொடர்ந்து போராட வேண்டும். தேவன் எனக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் தற்போது நான் விழுந்துபோன இந்த உலகில் தொடர்ந்து வாழும்படியாக அவர் அனுமதித்திருக்கிறார். எனவே உலகம், மாம்சம் மற்றும் பிசாசு போன்றவற்றிலிருந்து வரும் பாவத்திற்கான சோதனைகளை நாளுக்குநாள் நான் எதிர்கொள்ள வேண்டும். அதேவேளை, “நாம் நம்மில் அன்பு கூறுகிறவறாலே முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம் ” என்று தேவன் வாக்குபண்ணியிருக்கிறார்.
6. என் இருதயம் அவருக்குள்ளாக காக்கப்படுவதற்கு நான் செய்யும்படி தேவன் எனக்குப் போதிக்கும் நான்கு காரியங்கள் யாவை?
ப.6. முதலாவதாக, எல்லாமே இருதயத்தின் அடிப்படையில் செயல்படுவதால் அதை நாம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இதன் பொருள், கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்திற்காக நான் என் இருதயத்தை ஒரு பரிசுத்த ஸ்தலம் போல வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல அவரைத்தவிர வேறு எதையும், யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்கவும் கூடாது.
இரண்டாவதாக, நான் சரியான ஆவிக்குரிய உணவை அளித்து என் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையினால் போஷிக்கப்படுவதன் மூலம் நான் பலமடைய வேண்டும் — வேதத்தை என்னுடைய ஆத்தும நன்மைக்காக வாசித்து மற்றும் அந்த சத்தியத்தை தியானித்து, விசேஷமாக பிரசங்கத்தின் மூலமாக தேவனுடைய வார்த்தையை கேட்டு தொடர்ந்து போஷிக்கப்பட வேண்டும். என் இருதயத்திற்கு காதுகளும், கண்களும் உண்டு என்பதையும் நினைவு கூற வேண்டும். தேவனுடைய திரியேக நாமத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக ஞானஸ்நானத்தை பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் கர்த்தருடைய இராப்போஜனம் கர்த்தராகிய இயேசுவின் மீதான என்னுடைய அன்பை மேன்மேலும் தூண்டுகிறது.
மூன்றாவதாக, நான் தவறாமல் தொடர்ச்சியாக ஆவிக்குரிய பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், நான் அவர்மீது அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடுகளில் என் முழு ஜீவனையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அவருக்கு செலுத்தும் தனிப்பட்ட ஆராதனையின் மூலம் என் இருதயம் பலப்படுத்தப்படும்.
நான்காவதாக, அவருடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொண்டு அவருடைய சித்தத்தில் இளைப்பாறி அவருடைய இரட்சித்து தாங்கும் கிருபைக்காக அவரிடத்தில் கெஞ்சி ஜெபத்தில் என்னை அர்ப்பணிக்க வேண்டும். மேலும் இதை நான் தனியாக செய்வது மட்டுமல்லாமல், மற்றவிசுவாசிகளுடன் சேர்ந்து செய்ய வேண்டும். அதனால் தேவனுக்கேற்ற இருதயத்தை கொண்டிருக்கும்படி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தலாம்.
மேற்கண்டவைகள் மற்றும் இன்னும் பல ஆவிக்குரிய விஷயங்கள் இருதயத்தினுடைய வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் விளக்கப்படுத்துதலுக்கு அவசியமாயிருக்கிறது. இறுதியாக இந்த இருதயம் காக்கப்படுவதை நீதிமொழிகளில் வரும் ஒரே ஒரு வசனத்தில் சுருக்கமாகக் கூறலாம். உங்கள் தகப்பனின் வேண்டுகோளைக் கேளுங்கள்: “என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு.” என்பதே ஆகும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


