5 Things about Calvin
கால்வின் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
06-02-2025
5 Things You Should Know about David
தாவீது ராஜாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரியங்கள்.
13-02-2025
5 Things about Calvin
கால்வின் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்
06-02-2025
5 Things You Should Know about David
தாவீது ராஜாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரியங்கள்.
13-02-2025

பரிசுத்தமாகுதலை பற்றி அறிந்துக் கொள்ளவேண்டிய ஐந்து காரியங்கள்

5 Things You Should Know about Sanctification

ஆசிரியர்

பரிசுத்தமாகுதல் பற்றிய இறையியல் கோட்பாட்டின் சுருக்கமான விளக்கத்தை நீங்கள் தேடிக்கொண்டிருந்தீர்களென்றால், வெஸ்ட்மின்ஸ்டர் கேள்விபதில்களில் உள்ளதை விட சிறந்த ஒன்றை காண்பதில் உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். இதில் கேள்வி 35 ல் “பரிசுத்தமாகுதல் என்பது தேவனுடைய இலவசமான கிருபையின் செயலாகும். இதிலே நாம் தேவனுடைய சாயலுக்கு ஒப்பாக முழுமையான மனிதனாக புதுப்பிக்கப்படுகிறோம். மேலும் பாவத்திற்கு மரிக்கவும், நீதிக்குள்ளாக வாழவும் செய்யப்படுகிறோம்.” தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலுக்கு இந்த விளக்கம் துல்லியமான ஒன்றாக இருப்பினும், மீட்பின் பலன்களை பற்றிய முழுமையான புரிதலை பெறுவதற்கு தேவையான பரிசுத்தமாகுதலின் பல முக்கியமான அம்சங்களை வேதம் நமக்கு குறிப்பிடுகிறது.

1.கிறிஸ்துவே பரிசுத்தமாகுதலின் ஆதாரம்

விசுவாசிகள் கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தின் மூலம் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள். அவர் தம்முடைய ஜனங்கள் விசுவாசத்தினால் தம்மில் நிலைத்திருக்கிறவர்களாக, அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்குவதால், அவரே பரிசுத்தமாகுதலின் ஆதாரமாக இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார், “ அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமாயிருக்கிறார்.” (1கொரி 1:31). தமது மக்களுக்கு பரிசுத்தமாகுதலின் ஆதாரமாயிருப்பதற்கு, மீட்பில் தம்மைத்தாமே தேவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது (யோவான் 17:19). அவர் பாவமில்லாதவராயிருப்பினும் (2 கொரி 5:21) தேவனின் வார்த்தைக்கும், அவருக்கு அருளப்பட்ட மத்தியஸ்த கட்டளைகளுக்கும் பரிபூரணமாக கீழ்ப்படிவதின் மூலம் தம் மக்களுக்காக தம்மைத்தாமே அர்ப்பணித்தார் (யோவான் 10:17-18). Geerhardus Vos என்ற இறையியலாளர் இவ்வாறு கூறுகிறார்: “ கிறிஸ்துவின் வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாததினால் அவருக்கு பரிசுத்தமாகுதல் தேவைப்படுகிறது என்றும், இரட்சகரில் மாறும் நிலை உள்ளது என்றும் புரிந்துக்கொள்ளாமல், தனது மத்தியஸ்த பணியில் அதாவது தேவனுக்கு கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையிலும், கீழ்ப்படிதலுள்ள மரணத்திலும் தன்னை பிரதிஷ்டை செய்தார் என்றே புரிந்துக் கொள்ளவேண்டும்.” அவரின் கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கைக்கு கூடுதலாக, கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது நமக்காக தம்மை பரிசுத்தமாக்கி பிதாவுக்கு தம்மை அர்ப்பணித்தார். விசுவாசிகளின் பாவங்கள் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டதால் , சிலுவையில் அவைகளை தமது சரீரத்திலே சுமந்து தேவனின் கொடிய கோபாக்கினைக்கு கீழாக அவர் விழுகையில் விசுவாசிகள் சட்ட ரீதியாக சுத்திகரிக்கப்பட்டார்கள்.

2.மறுபிறப்பே பரிசுத்தமாகுதலின் ஆரம்பமாகும்.

நீதிமானாக்கப்படுதல் மீட்பின் சட்ட ரீதியான பலனாக இருப்பினும் பரிசுத்தமாகுதல், மறுபிறப்பின் ஆசீர்வாதத்தின் ஊற்றிலிருந்தே புறப்படுகிறது. விசுவாசிகளின் வாழ்க்கையில் மறுபிறப்பில் புதிய சிருஷ்டியாக மாறி அனுபவிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையின் செயல்பாடானது பரிசுத்தமாகுதலின் வளர்ச்சியை துவங்குகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை கூறுவது போல், “ புதிய இருதயமும் புதிய ஆவியும் உள்ள மறுபிறப்படைந்த விசுவாசிகள், மேலும் பரிசுத்தமாக்கப்பட்டு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவரின் பெலத்தின் மூலம் மறுபிறப்படைந்தவர்களாக வளருவார்கள்; மேலும் பரிசுத்தவான்கள் கிருபையில் வளர்ந்து, தேவபயத்தில் பரிசுத்தத்தை பூரணப்படுத்துவார்கள்.” (WCF 13:1,3).

3.பரிசுத்தமாகுதல் தீர்க்கமான நிலையை தன்னில் கொண்டுள்ளது.

பிலதெல்பியாவில் வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான ஜான் முர்ரே, நிலையான பரிசுத்தமாகுதலுக்கும் தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். அநேக புதிய ஏற்பாட்டின் வசனங்கள் நிலையான பரிசுத்தமாகுதலை பற்றி பேசுவதைக்குறித்து, (1கொரி 1:2,6:11,எபி 10:10) முர்ரே இவ்வாறு எழுதுகிறார்,”புதிய ஏற்பாட்டில் பரிசுத்தமாகுதலை பற்றிய அநேக வசனங்கள் தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலை குறிக்காமல் நிலையான பூரண பரிசுத்தமாகுதலையே பேசுகிறது…வேதத்தில் பரிசுத்தமாகுதல் என்பது தொடர்ச்சியான நிகழ்வை மட்டுமே குறிப்பிடுகிறது என எண்ணுவது, வேத மொழியின் விளக்கத்திலிருந்து விலகுவதாகும்.”

விசுவாசியின் வாழ்க்கையில், பாவத்தின் வல்லமையிலிருந்து நிலையான பரிசுத்தமாகுதல்(Definitive sanctification) விடுதலையாக்குகிறது. எப்பொழுது கிறிஸ்து சிலுவையில் மரித்தாரோ அப்பொழுதே பாவத்தின் வல்லமை மேற்கொள்ளப்பட்டது (ரோமர் 6:10). என ஜான் முர்ரே கூறுகிறார்:

“கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிரத்தெழுதலில் பாவத்தின் வல்லமையை மேற்கொண்டு, இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய பிசாசானவனை ஜெயித்து, இவ்வுலகத்தின் மீதும் அதன் அதிபதியின் மீதும் நியாயத்தீர்ப்பை செலுத்தி, அந்த வெற்றியின் மூலம் அந்தகாரத்தின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி தனது மக்களை தன்னோடு இணைத்து, தனது சொந்த இராஜ்யத்துக்கு உட்படுத்தினார். எனவே கிறிஸ்துவுக்கும் அவரது மக்களுக்கும் இடையே உள்ள ஐக்கியம் மிக நெருக்கமானது. அவரது அனைத்து வெற்றிகளிலும் அவரோடு கூட விசுவாசிகள் பங்குபெற்று, இதனால் அவர்கள் பாவத்துக்கு மரித்து கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையால் அவரோடு எழுப்பப்பட்டார்கள்.”

விசுவாசிகள் இரட்சிப்பில் கிறிஸ்துவோடு இணைக்கப்படும்பொழுது, இந்த மீட்பின் அனைத்து அம்சங்களும் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள்.

4.விசுவாசமும் அன்பும் பரிசுத்தமாகுதலின் இரண்டு சாதனங்கள்

நீதிமானாக்குதலில் விசுவாசத்தினால் மட்டுமே விசுவாசிகள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக எண்ணப்படும்பொழுது, “அன்பினால் கிரியை செய்கிற விசுவாசத்தின்” (கலா 5:6) மூலம் பரிசுத்தமாகுதலின் செயல்பாடு விசுவாசியின் வாழ்க்கையில் ஆரம்பமாகிறது. எந்த விசுவாசத்தினால் அவர்கள் கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டார்களோ அதே விசுவாசத்தினால் அவர்கள் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள். இருப்பினும், விசுவாசிகளின் வாழ்க்கையில் கிருபையில் வளர விசுவாசம் அன்போடு இணைந்து செயல்படுகிறது. விசுவாசிகளின் வாழ்க்கையில் தேவனின் ராஜரீக செயலுக்கும், மனிதன் செய்யவேண்டிய பொறுப்பிற்கும் இடையில் இணக்கம் இருக்கிறது. பிலிப்பியர் 2:12-13 ல் இந்த ஒற்றுமையை பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.”

5.தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலில் வளருவதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகளை தேவன் ஏற்படுத்தியிருக்கிறார்.

பரிசுத்தமாகுதல் கிறிஸ்துவின் மரணத்தையும் அவரது உயிர்த்தெழுதலையும் அஸ்திபாரமாக கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்தாலும், விசுவாசிகள் நாள்தோறும் கிருபையில் வளருவதற்கு சில வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியான பரிசுத்தமாகுதல், விசுவாசிகள் கிருபையின் சாதனங்களை பயன்படுத்துவதற்கு ஏற்றதாயிருக்கும். தனது மக்களுக்கு அவர்கள் பரிசுத்தத்தில் வளர தேவன் ஏற்படுத்தின முக்கிய கிருபையின் சாதனங்கள்: வேதம், திருநியமங்கள், ஜெபம். தனது பிரதான ஆசரித்துவ ஜெபத்தில், “உமது சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும் (யோவான் 17:17)” என்று கிறிஸ்து ஜெபிக்கிறார். (1கொரி 10:16) ல் கிருபையின் சாதனமாகிய திருவிருந்தை பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் “ ஆசீர்வாதத்தின் பாத்திரம்” என்று கூறுகிறார். வேதம், திருவிருந்து, ஜெபம் ஆகியவைகளே திருச்சபை ஆராதனையின் மையங்களாகும். எனவே, கர்த்தருடைய நாளில் விசுவாசிகளோடு இணைந்து தேவனை ஆராதிப்பது நமது பரிசுத்தமாகுதலுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

நிக் பாட்ஜிக்
நிக் பாட்ஜிக்
அருட்தந்தை நிக்கோலஸ் டி. பாட்ஜிக், தென் கரோலினாவின் சார்லஸ்டனில் உள்ள சர்ச் க்ரீக் பிரஸ்பைடிரியனின் மூத்த போதகர் ஆவார்.