
ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம்?
05-08-2025இளைஞர்களுக்கு இறையியலைக் கற்பிப்பதற்கான மூன்று வழிகள்.

3 Ways to Teach Young People Theology
ஜான் நீல்சன்
ஒருவேளை நீங்கள் வாலிபர் ஊழியமோ அல்லது கல்லூரி ஊழியமோ செய்வீர்களென்றால், “இரவு உணவும் உபேதசங்களும்” அல்லது “இன்று இறையியல்” என்ற அறிவிப்பை அளிப்பீர்களென்றால், இது கூட்டத்தை கூட்டுவதற்கான வழியாக இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள். இறையியல் சிந்தனைக்கான ஆர்வத்தை தடுக்கின்ற பொழுதுபோக்கிலும் இரண்டு நிமிட காணொளிகள் போன்ற சமூகவலைதளங்களிலும், ஆழமாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை இறையியல் படிப்பில் ஈடுபடுத்துவது கடினமான ஒன்று. இருப்பினும், உள்ளூர் திருச்சபையில் உள்ள மெய்யான விசுவாசிகளின் கடமை என்னவென்றால், நமது வாலிபர்கள் தேவனுடைய வார்த்தையால் வழிநடத்தப்படுபவர்களாகவும், இறையியல் ரீதியாக சிந்திக்கவும், புரிதலில் வளரவும் உதவி செய்யவேண்டும்.
எங்களது திருச்சபையில், எங்களது வாலிபர்களுக்கான போதகர், அவர்களை ஆரோக்கியமான உபதேசத்தில் வளரவும், ஆழமாக இறையியல் புரிதலை நோக்கி நகரவும் அவர்களை வழிநடத்துவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களது கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை ஒன்றுக்கூடி தூய்மைவாதிகளின் புத்தகங்களை படித்து, தியானித்து அதை பகிர்ந்துக் கொண்டு, அநேக இறையியல் தலைப்புகளில் விவாதிக்கின்றனர். எங்களது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையை வாசித்தும் அதன் கேள்வி பதில்களை மனப்பாடம் செய்தும் அதன் இறையியலைக் கற்று எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதையும் போதிக்கப்படுகிறார்கள்.
நமது சபைகளில் வாலிபர்கள் மற்றும் இளம் வயதினரை இறையியல் போதனைகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான மூன்று ஊக்கங்களை நான் தாழ்மையோடு இங்கு குறிப்பிடுகிறேன்.
1.இறையியல் நடைமுறைக்கானது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
இறையியலை படிப்பதற்கும் அதன் புரிதலுக்கும் இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வைப்பதில் முதலாவது “கொள்கை வாதம்” (apologetic) என்னவென்றால், இறையியல் என்பது நடைமுறைக்கு மாறானது, அது இறையியல் கல்லூரியின் நூலகங்களுக்கு மட்டுமே சொந்தமானது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அது அப்பாற்பட்டது என்ற பொது மனப்போக்கை கண்டிப்பதாகும். அவர்களது இறையியல் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் செதுக்குகிறது என்ற உண்மையை நினைவுப்படுத்துவது நல்லது: அவர்களின் சிந்தனை முறைமைகள், முடிவெடிக்கும் ஆற்றல்கள், நம்பிக்கைகள், கலாச்சார ஈடுபாடு, ஊக்கப்படுதல் மற்றும் அவர்களது ஐக்கியங்கள் போன்றவைகள். நாம் தேவனை பற்றி எதை விசுவாசிக்கிறோம் என்பதுதான் நம்மைப் பற்றியதான ஆழமான நடைமுறை காரியங்களாகும்.
வேதாகமத்தில், இறையியல் நம்பிக்கையின் நடைமுறை தன்மைக்கு எதிர்மறையான குறிப்பிடத்தகுந்த உதாரணம் ரோமர் 1:18-32 ல் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை மற்றும் ஆராதனை பற்றியதான தவறான முடிவுகளோடு எது ஆரம்பமாகிறதோ, (படைப்புகளுக்கு பதிலாக படைத்தவரை மாற்றுவது) அதுவே அனைத்து வகையான பாவ நடத்தை மற்றும் செயல்களில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. உண்மையில், நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பது நமது நடைமுறை வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் ஏற்கனவே இளைஞர்கள் இறையியல் சிந்தனையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவது உதவியாக இருக்கும். பாடல் வரிகள், ட்வீட்கள், டிக்டாக் வீடியோக்கள், மற்றும் சமூக ஊடகத்தில் பிரபலமானவர்கள் ஆகியவற்றின் மூலம் அவர்கள் இறையியல் சிந்தனையில் “சீஷர்களாக” மாற்றப்படுகிறார்கள். கிறிஸ்தவ இறையியல் தியானத்தில் அவர்கள் ஈடுபடத் தவறுவது அவர்களை நடுநிலையான நிலையில் விடாது, ஆனால் தவறான இறையியல் சீஷத்துவத்தின் பிற வடிவங்களுக்கு அவர்களை எளிதில் பாதிக்கச் செய்யும்.
2. இறையியல் உற்சாகமானது என்பதை அவர்களுக்கு காட்டுங்கள்.
என்னுடைய இறையியல் படிப்பின் ஆண்டுகளில், டி. ஏ கார்சன் அடிக்கடி குறிப்பிட்ட காரியம் என்னவென்றால், தனது மாணவர்கள் தாம் கற்றுக்கொடுத்த அனைத்தையும் நினைவில் வைக்கமாட்டார்கள் என்றாலும், நாம் உற்சாகமாக கற்பித்த காரியங்களை அவர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதை தான் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார். வாலிபர்களுக்கு ஊழியம் செய்யும் திருச்சபையின் போதகர்கள் மற்றும் பிற தலைவர்களுக்கு நான் பரிந்துரைக்க விரும்பும் காரியம் என்னவென்றால், உங்களது மாணவர்கள் இறையியலை நேசிப்பதற்கான முதல் படி, தேவன் மற்றும் அவருடைய வார்த்தை மற்றும் கிறிஸ்தவ கோட்பாட்டின் அழகு ஆகியவற்றின் மீதின உங்களின் ஆர்வம் அவர்களின் உற்சாகத்தை மூட்டிவிட வேண்டும்.
கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒருவேளை இறையியலைப் பற்றிதான தங்கள் சொந்த புரிதலில் வளரத்தொடங்குவதற்கு முன்பே இறையியலின் ஆழம், சுவிசேஷத்தின் அழகு மற்றும் வேதாகமத்தின் மகத்துவங்கள் மீதான நமது உற்சாகத்தை அவர்களால் உணரமுடியும். இந்த உலகத்தின் மிக முக்கியமான மற்றும் மகிமையான விஷயங்களை நாம் அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகிறோம் என்பதை நம் வாலிபர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கிறிஸ்தவ கோட்பாட்டை பற்றி அவர்களிடம் நாம் பேசுகிறோமா?
3. இறையியல் ஆராதனைக்குரியதாக இருக்கவேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.
எபேசு திருச்சபைக்கான பவுலின் அழகான ஜெபம் எபேசியர் 1:15-21 ல் உள்ளது. இது ‘’இறையியல் அறிவு” என்று நாம் அழைக்கக்கூடிய அறிவில் அவர்கள் வளரவேண்டும் என்பதற்கானது. ஆனால் தேவனை அறிகிற அறிவில் வளரவேண்டும் என்பதற்கான ஜெபமானது, தேவனை ஆராதிப்பதை நோக்கிச் செல்கிறது. விசுவாசிகள் இறையியலை கற்று ஆழமான புரிதலில் வளர்ந்து அதன் மூலம் அவர்களது மகிமையான இரட்சகரை ஆராதித்து அவரில் களிகூறவேணடும் என்பதே பவுலின் விருப்பமாகும். அவரது விருப்பமெல்லாம் விசுவாசிகள், “தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்,
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்கவேண்டுமென்றும்” என்பதே எபேசியர் 1:18-19. பவுல் இறையியல் அறிவை மட்டும் நாடவில்லை, அவரைப் பொறுத்தவரை இறையியல் புரிதலில் வளர்ச்சி என்பது தேவனை ஆராதிப்பதற்கும், நாம் வாழ்வில் அவர் செய்த மகிமையான இரட்சிப்பின் பணிக்காக அவரை புகழ்வதற்கும் நமது இருதயங்களை மேலும் மேலும் ஆயத்தப்படுத்துவதாகும்.
இறையியல் படிப்பையும், போதனைகளையும், தமது வார்த்தையில் தம்மை வெளிப்படுத்திய மகிமையான தேவனிடமிருந்து பிரித்துவிடக்கூடாது. நாம் அவரை அதிகமாக அறிய அறிய, அதிகமாக அவரை ஆராதித்து , அவரில் அதிகமாக நாம் மகிழ்ச்சியடைவோம்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.