
யாக்கோபு நிருபத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 பிரதான காரியங்கள்- Dr.கிரிகோரி ஆர். லேனியர்
08-05-2025
மீகா புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரதான காரியங்கள்
15-05-2025சகரியா பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

மைக்கேல் பி.வி பேரட்
1.சகரியா பற்றி அறிந்துக் கொள்ளவேண்டிய முதலாவது காரியம் அவரைப் பற்றியது.
பழைய ஏற்பாட்டில் சகரியா என்பது ஓர் பொதுவான பெயர், ஆனால் குறிப்பாக முதலாம் வசனம் அவரை “தீர்க்கதரிசி இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன்” என்று குறிப்பிடுகிறது. நெகேமியா 12:1-4 ன் படி,
பாபிலோனிய சிறையிருப்பிற்கு பிறகு செருபாபேலுடன் பாலஸ்தீனத்திற்கு திரும்பிய ஆசாரியர்களில் இத்தோவும் ஒருவர். நாடுகடத்தலுக்குப் பிறகு யூதாவுக்குத் திரும்பியவர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை, பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட தேவாலயத்தை திரும்ப எடுத்துக்கட்டுவதாகும். முதலில் செருபாபேலின் தலைமையில் வேலை மிகவும் வேகமாக செய்யப்பட்டது, ஆனால் பின்னர் வெளிப்புற அழுத்தம் மற்றும் உட்புற அக்கறையின்மை காரணமாக வேலை தடுமாறி தாமதமானது (எஸ்றா 4-5). சகரியாவின் தாத்தாவாகிய இத்தோ ஆலயத்தின் ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டிருப்பார். வேலை முடிக்கப்படுவதை பார்ப்பதில் சகரியா ஓர் உபகரணமாக இருந்தார். இயேசுவின் கூற்றுப்படி (மத்தேயு 23:35-37) சகரியா பங்கு வகித்த அதே தேவாலயத்தில் அவர் கொல்லப்பட்டார்.
ஆனால் சகரியா கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் நீண்ட ஊழியம் செய்தார். கிமு 520 ல் தரியுவின் இரண்டாம் ஆண்டில் தனது முதல் செய்தியை குறிப்பிடுகிறார் (சக 1-6). இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தரியுவின் நான்காம் ஆண்டில் (கிமு 518) தனது இரண்டாவது செய்தியை குறிப்பிடுகிறார். 9-14 அதிகாரங்கள் தேதியிடப்படவில்லை. ஆனால் கிரேக்க கணக்கின்படி 480 – 470 கிமு இடைப்பட்ட காலங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது (சக 9:13). எனவே சகரியா 50 ஆண்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
2. சகரியாவைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய இரண்டாவது காரியம் அவருடைய செய்தியைப் பற்றியது.
பாபிலோனிய சிறையிருப்பு முடிந்துவிட்டது ஆனால் மக்கள் எதிர்ப்பார்த்த ஆசீர்வாதத்தையோ அல்லது செழிப்பையோ இன்னும் அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் சமாரியர்களின் எதிர்ப்பையும், தேசத்தில் பாழடைதலையும், கடின உழைப்பு மற்றும் கஷ்டங்களையும் எதிர்கொண்டனர். அவர்களின் நிலைமை நம்பிக்கையற்றதாக தோன்றியது, தேவன் அவர்களை மறந்துவிட்டார் என்பதுபோல இருந்தது. சகரியா என்பதற்கு “தேவன் நினைத்திருக்கிறார்” என்று அர்த்தம். எனவே சகரியா என்ற பெயரை மக்கள் கேட்கும்போதெல்லாம், தேவன் அவர்களை மறக்கவில்லை என்று நினைவில் கொள்வார்கள்.
“தேவனின் தோல்வியடையாத திட்டத்தில் நம்பிக்கை” என்பதே சகரியாவின் செய்தியின் முக்கிய கருப்பொருளாகும். நம்பிக்கை என்பது விசுவாசத்தின் எதிர்கால கண்ணோட்டமாகும். அனைத்து விசுவாசத்தைப் போலவே நம்பிக்கை என்பது எதிர்நோக்கியிருப்பது, இதன் நோக்கம்தான் இதனுடைய மதிப்பை தீர்மானிக்கிறது. வெறுமனே நம்பிக்கை என்பது பயத்துடனும் தயக்கத்துடனும் உள்ள விருப்பம் அல்ல, மாறாக தேவனின் வாக்குத்தத்தம் உண்மையே அல்லாமல் வேறொன்றாக இருக்கமுடியாது என்பதில் உள்ளஉறுதியான எதிர்ப்பார்ப்பாகும். தேவன் மீது உள்ள உற்றுநோக்குதலே நம்பிக்கைக்கான இரகசியமாகும். எனவே சகரியா, மக்களை தேவனைப் பார்க்கும்படி செய்கிறது, தேவனின் வல்லமை, அவரது அதிகாரம், அவரது உடன்படிக்கையின் உண்மைத்தன்மை மற்றும் அவரது கிறிஸ்து ஆகியவற்றை உற்றுநோக்கச் செய்கிறது.
இப்புத்தகம் நம்பிக்கை மீது அதிக கவனம் செலுத்துவதால், பழைய ஏற்பாடு முழுவதிலும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் மேசியாவைப் பற்றிய புத்தகங்களில் சகரியா இடம்பெறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அநேக சோர்வுகள் மற்றும் ஏமாற்றங்கள் நடுவில் நம்பிக்கையிழந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு, கிறிஸ்துவிலும் அவர் மூலமாகவும் சாபத்தை நிவிர்த்தி செய்யும் தேவனின் மீட்பின் திட்டம், மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறதாயிருக்கிறது. கிறிஸ்துவைப் பார்ப்பது என்பது தேவனின் அனைத்து வாக்குத்தத்தங்களின் இருதயத்தை பார்ப்பது போன்று, மற்றும் எல்லா வார்த்தைகளிலும் உறுதியாக நம்பிக்கை வைப்பதாகும் ஏனெனில், இவையனைத்தும் கிறிஸ்துவில் ஆம் என்றும் ஆமேன் என்றும் உள்ளன (2 கொரி 1:20).
சகரியா கிறிஸ்துவின் வருகைக்கு நேராக கவனத்தை செலுத்துகையில், மிக பிரதானமாக கிறிஸ்துவின் மூன்று மத்தியஸ்த பணிகளாகிய தீர்க்கதரிசி, பிரதான ஆசாரியர் மற்றும் ராஜா ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அவரது தீர்க்கதரிசி பணி தேவனின் பிரதிநிதியான ஒன்றாக சகரியா 13:7 ல் கூறப்பட்டுள்ளது, இங்கு சேனைகளின் கர்த்தர் என்பது கிறிஸ்துவை மேய்ப்பராகவும் தேவனுக்கு சமமான வல்லமையுள்ளவராகவும் குறிப்பிடப்பட்டு, அவர் வெட்டப்படுவார் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதை மத்தேயு 26:13 நேரடியாக இயேசுவையும் அவரது சிலுவையைப் பற்றியும் குறிப்பிடுகிறது. மற்றும் கிறிஸ்து நல்ல மேய்ப்பராகவும், அவரும் பிதாவும் ஒன்றாக இருக்கிறார்கள் என்ற கிறிஸ்துவின் வியாக்கினத்தையும் (யோவான் 10:30) ல் நமக்கு காண்பிக்கிறது. அவரது பிரதான ஆசாரிய பணியானது, மேசியாவின் பெயர்களில் ஒன்றான “கிளை” என்பதில் மிக தெளிவாக வெளிப்படுகிறது (சக 3:8, 6:12). இங்கு பிரதான ஆசாரியனான யோசுவாவுக்கு ஒப்புமையாக இவைகள் சொல்லப்பட்டுள்ளது. பரலோகத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருக்கிற யோசுவாவின் தரிசன காட்சி, தேவன் எவ்வாறு ஒரு பாவியை மன்னித்து நீதிமானாக்குகிறார் என்பதற்கான அருமையான காட்சியாகும். நீதிமானாகுதலின் அவசியம் பெரிது; நீதிமானாக்கும் செயல் கிருபை மிக்கது; நீதிமானாகுதலின் அடிப்படை (கிளை) உறுதியானது; நீதிமானாகுதலின் கோரிக்கை சட்டரீதியானது. (சகரியா 10:4, 9:9) ல் கிறிஸ்துவின் ராஜா பணியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள (கோடிக்கல், கூடாரமுளை, யுத்தவில்) தீர்க்கதரிசனம் குறிப்பாக குருத்தோலை ஞாயிறு அன்று நிறைவேறியது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு தொடர்புடைய அவரது ராஜ பணியின் ஓர் அம்சமும் நம்பிக்கையின் ஓர் பகுதியாக இப்புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது (சகரியா 14). எனவே இந்த தீர்க்கதரிசன புத்தகத்தை “சகரியாவின் நற்செய்தி” என குறிப்பிடுவது ஒருபோதும் மிகமையாகாது.
3. சகரியாவைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்றாவது காரியம், இதன் முறையைப் பற்றியது.
சகரியா 1:1 ல் கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு வந்தது என்று கூறுகிறது. தேவனின் வார்த்தை கொடுக்கப்பட்ட முறைகளில் ஒன்று தரிசனங்களாகும். முதல் ஆறு அதிகாரங்கள், மக்களின் தற்கால நிலைமை முதல் முடிவின் நாள் வரைக்கும் உள்ள தேவனின் பரந்த நோக்கத்தைப் பற்றிய கூறிக்கொண்டே வருகிறது.
வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு அப்பால், சகரியா புத்தகம் தரிசனங்கள் மூலம் எவ்வாறு தேவன் தமது வார்த்தைகளை வெளிப்படுத்தினார் என்பதைப் பற்றியது. முதலாவது, தரிசனங்கள் தனிப்பட்டது மற்றும் உள்ளார்ந்தது. தீர்க்கதரிசியால் மட்டுமே அவற்றைப் பார்க்கமுடியும். இரண்டாவது, தரிசனங்களை பெறும் நபர் அதில் செயல்படும் பங்கேற்பாளர். தரிசனத்தின் அர்த்தத்தைப் பற்றிய வழிகாட்டுதலின் விளக்கங்களை கொடுக்கும் தேவதூதருடன் சகரியா உரையாடினார். மூன்றாவது, தரிசனங்கள் மிகவும் உருவகமாக இருந்தன. வண்ணமுள்ள குதிரைகள், நான்கு சிற்பாசாரிகள், விளக்குத்தண்டுகள், மற்றும் ஒலிவ மரங்கள், பறக்கும் சுருள்கள், குதிரைகள் ஏற்றப்ட்ட போர் வண்டிகள் அனைத்தும் சில ஆவிக்குரிய உண்மைகளை சுட்டிக்காட்டின.
சகரியாவின் மற்றொரு அம்சம் என்னவென்றால், இதன் முறை ஓர் வெளிப்படுத்தலின் சாயலாக அமைந்துள்ளது. இரண்டாம் வருகை அடங்கியுள்ள எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை பேசுகிறது. அடிமைத்தனத்திற்கு பின்பான இஸ்ரவலுக்கும் அப்பால் உள்ள காரியங்கள் பற்றி சகரியா பேசுகிறது. தேவன் ஆளுகிறார் மற்றும் அவரது நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேறுவதற்கு எல்லாம் அவரது கட்டுப்பாட்டின்படி சரியாக நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைய திருச்சபைக்கு சகரியா புத்தகம் உறுதியளிக்கிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.