War and Peace with a Holy God
பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்
06-11-2025
Adriel Sanchez - 3-Ways-to-Have-a-Better-Prayer-Life
சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்
13-11-2025
War and Peace with a Holy God
பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்
06-11-2025
Adriel Sanchez - 3-Ways-to-Have-a-Better-Prayer-Life
சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்
13-11-2025

மகிமையை நாடுதல்

The Quest for Glory

(The Quest for Glory – R.C. Sproul)

உலக மகிமையை நாடுவது (Quest for Glory) நம்மை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.  உலக மகிமையானது  நம்முடைய கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாகத் தோன்றும்போது, அதற்காக நாம் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படுவோம், அல்லது எவ்வளவு தூரம் ஓடுவோம்! அப்படிப்பட்ட மகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே  நாம், நம்முடைய தனிப்பட்ட சௌகரியத்தைக்கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். “வேதனையின்றி, ஆதாயமில்லை!” என்று திரும்பத் திரும்பச் சொல்லி, நாம் மேலும் நம்மை முன்னோக்கித் தள்ளப் போராடுகிறோம். நாம் இன்னும் அதிக விரைவாக ஓடத்தக்கதாக “வலி இல்லாமல் மகிமை இல்லை”  என்ற கூற்றை அடிக்கடி முழங்குகிறோம். நம்முடைய வாழ்க்கை மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். தகுதியான ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான நம்முடைய பிரயாசங்கள்  கொண்டாடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

இப்படிப்பட்ட மகிமைக்காக நாம் கொண்டிருக்கும் ஆழமான தாகத்துக்கு ஒரு மிகப்பெரிய  காரணம் இருக்கிறது. நாம் தேவ மகிமைக்காக சிருஷ்டிக்கப்பட்டோம் என்கிற ஒரு சத்தியத்தை நாம் கர்த்தருடைய வேதத்தில்  காணலாம். அவருடைய பரிசுத்தத்தின் மகத்துவத்தை நாம் அறிந்து, அதைக் குறித்து பயபக்தியோடு செயல்படும்படிக்கு, அவர் நம்முடைய சரீரங்களைப் படைத்து, நமக்குள் ஜீவ சுவாசத்தையும் ஊதியிருக்கிறார். தேவன் நமக்கு பாராட்டின எண்ணிலடங்காத  நன்மைகளினால், நம்முடைய இதயமும், சிந்தையும் எவ்வளவாக ஆட்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். அப்பொழுதுதான் அவரை ஆராதித்து, அவருக்கு கீழ்ப்படியும்படியாய் நாம் எப்பொழுதும் ஆயத்தப்பட்டவர்களாய் காணப்படுவோம். இதன் மூலமாக மட்டுமே நாம் உலக மகிமையை அல்ல, தேவனுடைய உன்னதமான மகிமையை நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலித்து வாழ முடியும்.

ஆனாலும், உங்களைச் சுற்றிப் பாருங்கள். பரிசுத்தத்தின் மகிமையினால் இந்த உலகம் பிரகாசிக்கவில்லையே, அப்படித்தானே? நாம் வாழும் இந்த உலகத்தை பாவம் எப்படி சீரழித்திருக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கு துயரம், கசப்பு, வஞ்சகம் மற்றும் மரணம் போன்றவையே காணப்படுகிறது. தேவனுடைய மகிமையை அறியவே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருப்போமானால், எங்கே தவறு நடந்தது?

தேவனுடைய வார்த்தையானது இதற்கான பதிலை சுட்டிக்காட்டுகிறது, அது நம்முடைய இருதயத்திலே இருக்கிறது. நாம் தேவனைச் சார்ந்து, அவருக்கு மகிமையை செலுத்தும்படி சிருஷ்டிக்கப்பட்டோம். ஆனால், அதற்குப் பதிலாக நாம் நம்முடைய மகிமையையே தேடி ஓடுகிறவர்களாக இருக்கிறோம். தேவனுடைய சித்தத்திற்குப் பதிலாக நம்முடைய சொந்த விருப்பங்களை அந்த இடத்திலேயே வைத்து, நமக்கே பேர் உண்டாகும்படியாக செயல்படுகிறோம். இதைத்தான் வேதாகமம் ‘பாவம்’ என்று அழைக்கிறது. இதனாலேயே நமக்கான தேவனுடைய திட்டத்தை நாம் விட்டு விட்டு கீழ்படியாமைக்குள்ளாகிறோம். தேவனுடைய மகத்துவத்தில் களிகூறுவதற்கு பதிலாக பாவம் நம்மை, நம்முடைய சொந்த பெலவீனத்தில் திருப்தியடையும்படியாய்  சோதனைக்குட்படுத்துகிறது. இதனால் நாம் வழிதவறிப்போய் நம்முடைய அடையாளத்திலும், நம்முடைய  வேலையிலும், நம்முடைய கனவுகளின் மூலமாகவும் நமக்கான நிரந்தரமான மகிமையை தேடி அலைகிறோம். ஆனால், மீண்டும் மீண்டுமாக திருப்தியற்றவர்களாகவும், வெறுமையானவர்களாகவுமே நாம் இருப்பதை  நம்மால் அறிந்து கொள்ள முடியும். மேலும், நம்முடைய பாவம் தேவனால் கவனிக்கப்படாமல் போவதில்லை என்றறிந்து, நாம் ஆக்கினைக்குள்ளானவர்கள் என்பதையும் அறிகிறோம். அவர் ஒரு நீதியுள்ள நியாயாதிபதி. அவருடைய சத்தியத்தை புறக்கணித்து, நமக்கானதை நாம் நிலைநிறுத்த தேடுகிறபடியால் அவருக்கு முன்பாக நாம் குற்றவாளிகளாக நிற்கிறோம். இவ்விதமான பாவத்திற்கான தண்டனை வேதத்தில் மிகவும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது: மரணமும், தேவனை விட்டு நித்தியமாக பிரிக்கப்படுவதுமேயாகும். 

ஆனால், சுவிசேஷத்தின் செய்தியே நமக்கு மகிமையான நற்செய்தி! “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” என்று வேதாகமம் கூறுகிறது (யோவான் 3:16). மனிதனுக்காக எந்த பாவ சுபாவமும் இல்லாமல், பரிபூரணமான தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, மனிதனாக அவதரித்தார். அவர் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்தும், அவர்களுடைய கீழ்ப்படியாமையில் பங்கேற்கவில்லை.

அவர் தேவனுடைய சித்தத்தை செய்வதிலிருந்தும், தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்கவில்லை. அவர் தேவனுடைய மகிமையை பரிபூரணமாகப் பிரதிபலித்தார்.

வேதாகமம், இயேசு கிறிஸ்து “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி” (பிலி. 2:8, KJV) காணப்பட்டார் என்றுரைக்கிறது. அவருடைய கீழ்ப்படிதல் அவரை சிலுவையின் மரணத்திற்கு நேராக வழிநடத்தியது. இது ஏன்?

அதற்கான பதில்: இயேசு கிறிஸ்து நம்முடைய ஆக்கினையைத் தம்மேல் ஏற்றுக்கொண்டார். நாம் பிழைக்கும்படியாக அவர் நமக்கு பதிலாக மரித்தார் . நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். நாம் மன்னிப்பைப் பெறுவதற்காக அவர் நம்முடைய பாவங்களை சுமந்தார். நாம் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்படுவதற்காக அவர் தன்னுடைய ஜீவனைக் கொடுத்தார். நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து, அவருக்குள்ளாக மீட்பை கண்டடையத்தக்கதாக,  அவர் நமக்காக மரித்தார். இதுவே ஆச்சரியமான, மகிமையான நற்செய்தி!.

அவர் மரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். அவர் ஆக்கினைத் தீர்ப்பு, மரணம் மற்றும் பாவம் ஆகியவற்றின்மேல் ஜெயங்கொண்டவராக உயிர்த்தெழுந்தார். 

வேதாகமம் இந்த நற்செய்தியை இவ்வாறு விவரிக்கிறது: “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு  ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1).

இயேசுவுக்குள், நாம் மன்னிப்பு, நம்பிக்கை, சமாதானம் மற்றும் மனநிறைவு ஆகியவற்றை தேவனின் ஈவாகப்பெறுகிறோம்.  கிறிஸ்துவுக்குள்ளாக,தேவனுடைய சமூகத்திற்குமுன்பாக நாம்  உடனடியாக அங்கீகரிக்கப்படுகிறோம். அது மட்டுமல்ல அவருடைய அன்பு மற்றும் பரிசுத்தத்தின் அழகை இன்னும் புதுமையாக அறிந்துகொள்ளுகிறோம். இதுவே இரட்சிப்பு. இதுவே உண்மையாகவே மகிமையானது. இதுவே சுவிசேஷம்.
பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறீர்களா? நாம் இரட்சிக்கப்படுவதற்கான ஒரே  வழியாகிய இயேசுகிறிஸ்துவின்  மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நம்புகிறீர்களா? அப்படி விசுவாசிப்பீர்களானால் நீங்கள் இன்றே இரட்சிக்கப்படலாம். அவர் உங்களை மன்னிப்பார்.  நீங்கள் அவரை விசுவாசித்து அவருடைய  மகிமையினால் வரும் உண்மையான ஆத்தும திருப்தியை கண்டறிய வேண்டும் என்பதே எங்கள் ஜெபமாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.