Who Was Ruth?
ரூத் யார்?
24-02-2026
கிறிஸ்தவ ஆராதனை
03-03-2026
Who Was Ruth?
ரூத் யார்?
24-02-2026
கிறிஸ்தவ ஆராதனை
03-03-2026

யார் இந்த சிம்சோன்?

Who Was Samson?

நியாயாதிபதிகள் 13-16 அதிகாரங்களில் சொல்லப்பட்டபடியே, நியாயாதிபதிகள் புத்தகத்தின் பன்னிரண்டாவது, கடைசியான மற்றும் உணர்ச்சி நிறைந்த நியாயாதிபதி சிம்சோன் ஆவார். அவருடைய குடும்பம் தாண் கோத்திரத்தைச் சேர்ந்தது (நியா. 13:2). ஒரு நியாயாதிபதியாக, சிம்சோன் மோசேயின் உடன்படிக்கையின் அதிகாரியாகவும், கிறிஸ்துவின் நிழலாட்டமாகவும் காணப்பட்டார். சிம்சோன் கிறிஸ்துவின் நிழலாட்டமாகத் திகழ்ந்தார் என்ற வாதம் இரண்டு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது. முதலாவதாக, நியாயாதிபதிகள் புத்தகத்திலுள்ள அனைத்து நியாயாதிபதிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவியினால்  கிறிஸ்துவின் நிழலாட்டமாகச் செயல்பட்டனர். இரண்டாவதாக, சிம்சோனின் வாழ்க்கையில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள், வரவிருக்கும் மெய்யான ராஜாவின் முன்னோடியான யோவான் ஸ்நானகனோடும், மற்றும் இஸ்ரவேல் தேசத்தை அவர்களை ஒடுக்கும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், அண்டை நாடுகளின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாக்கும் தேவனுடைய மகாபெரிய திட்டத்தோடும் தொடர்பு படுத்துகிறது.

நியாயாதிபதிகள் புத்தகத்திலுள்ள அனைத்து முக்கிய நியாயாதிபதிகளைப் போலவே, சிம்சோனும் ஒரு ‘நியாயாதிபதி’ என்கிற அவருடைய பதவியின் காரணமாகவே  கிறிஸ்துவின் நிழலாட்டமாகச் சித்தரிக்கப்படுகிறார். நியாயாதிபதிகள், யோசுவாவிற்கு பின்பு வருபவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள் (நியா. 1:1; 2:6-10, 16); யோசுவா, மோசேயின் உடன்படிக்கையின் மத்தியஸ்தராக மோசேக்குப் பின் வந்தவர் (உபா. 31:23; 34:9; யோசு. 1:1-9). ஒரு ஆசிரியர் இதை இவ்வாறு சுருக்கமாகக் கூறுகிறார்:

“இவ்வாறாக, மோசே மற்றும் யோசுவாவின் பின்வருபவர்களாக, நியாயாதிபதிகள் மிகவும் பரந்த நோக்கத்தோடு  உடன்படிக்கையின் மத்தியஸ்தர்களாக அழைக்கப்பட்டிருக்க வேண்டும்; அந்த உடன்படிக்கையின் மையமாகத் தேவனை மட்டுமே தொழுதுகொள்வதும்,தேவனுடைய வழிகளுக்குக் முற்றிலுமாக கீழ்ப்படிவதும் அவசியமாக காணப்பட்டது.”

நியாயாதிபதிகள் புத்தகத்தின் இரண்டாவது அறிமுக பகுதியில், நியாயாதிபதி என்ற பதவியில் ஐந்துமடங்கு அதிகமாக அவர்களுடைய செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன (நியா. 2:6–3:6). இந்த நபர்கள் யாரென்றால்:

1.கர்த்தரால் எழுப்பப்பட்டவர்கள் (நியா. 2:16, 18);
2.கர்த்தருடைய ஆவியினால் பலப்படுத்தப்பட்டவர்கள் (நியா. 2:18; மேலும் 3:10; 4:14; 6:34; 11:29; 13:25; 14:6, 19; 15:14);
3.தேவனுடைய ஜனங்களை விடுவிக்க (இரட்சிக்க) நியமிக்கப்பட்டவர்கள் (நியா. 2:16; மேலும் 3:9);
4.தேசத்தின் அமைதியை நிலைநாட்டினவர்கள் (நியா. 2:18; மேலும் 3:11; 8:28);
5.மற்றும் தேவனுடைய உடன்படிக்கைக்கு இஸ்ரவேலர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தவர்கள் (நியா. 2:17-19).

நியாயாதிபதிகளின் பொறுப்பை பற்றிச் சொல்லப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு அம்சமும், புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் அவருடைய கிரியைகளையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசு எப்படிப்பட்டவரென்றால்:

1. பிதாவினால் அனுப்பப்பட்டவர் (யோவான் 5:36–37; ரோமர் 6:4; கலா. 1:1);
2.ஆவியினால் பலப்படுத்தப்பட்டவர் (மத். 3:16; 12:18);
3.தேவனுடைய ஜனங்களை விடுதலையாக்க வெளிப்பட்டவர் (மத். 1:21; 1 யோவான் 4:14);
4. அவர்களுக்கான இழைப்பாறுதலை அளித்தவர் (மத். 11:28-29);
5.மற்றும் தேவனுடைய ஜனங்களின் கீழ்ப்படிதலை உறுதிப்படுத்தினவர் (ரோமர் 5:19).

சிம்சோனின் வாழ்க்கை விவரங்கள் அனைத்தும் அவரது பதவியைத் தவிர, அவரை வரப்போகும் ராஜாவின் முன்னோடியாகவும், அந்த ராஜாவிற்கு ஒரு நிழலாட்டமாகவும் அடையாளம் காட்டுகின்றன. நியாயாதிபதிகள் 13:5-ல் கர்த்தர் சிம்சோனுக்கு ஒரு பொறுப்பை கொடுத்தார்: “அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் தொடங்குவான்” என்பதே. இதன் மூலம், சிம்சோன் தாவீது ராஜாவோடு தொடர்பு படுத்தப்படுகிறார்; சிம்சோன் எதைத் தொடங்கினாரோ, அதை முடிவுக்கு கொண்டு வர தாவீது ராஜா பெலிஸ்தரிடமிருந்து இஸ்ரவேலை விடுவித்தார்  (1 சாமு. 17; 2 சாமு. 7:1).

தாவீது ராஜாவின் வருகைக்கு ஒரு முன்னோடியாகவும், மட்டுமல்ல புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூலாசிரியர்கள், வரப்போகும் மற்றொரு தாவீது வம்சத்து ராஜாவின் (இயேசு) முன்னோடியான யோவான் ஸ்நானகனின் வாழ்க்கையை விவரிக்கும்போது, நியாயாதிபதிகள் புத்தகத்திலுள்ள சிம்சோனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மாதிரியாகப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.  இவர்கள் இருவரின் பிறப்பும் ஒரே மாதிரியான  அறிவிப்புகளுடன் தொடங்குகின்றன (நியா. 13; லூக்கா 1:5-25). இரண்டு பேருடைய தாய்மார்களும் மலடிகளாக இருந்தனர் (நியா. 13:2; லூக்கா 1:7). இருவரும் பிறப்பதற்கு முன்பே திராட்சரசத்தையும் மதுபானத்தையும் தவிர்க்குமாறு கட்டளையிடப்பட்டனர் (நியா. 13:3-5; லூக்கா 1:15). இரண்டிலும், கர்த்தருடைய தூதன் பிறப்பின் செய்தியை அறிவிக்கிறார் (நியா. 13:3; லூக்கா 1:11). இருவருடைய தகப்பன்மார்களும் தேவதூதன் கூறிய  செய்தியை நம்புவதற்கு தயங்கினார்கள் (நியா. 13:16-17; லூக்கா 1:18-20). இரண்டு பிறப்பின் சம்பவங்களும் அந்த நபர்களின் பணி அல்லது பொறுப்பைப் பற்றி சொல்லுகிறது (நியா. 13:5; லூக்கா 1:16-17). பிற்காலத்தில், சிம்சோனும் யோவான் ஸ்நானகனும் துரோகம் பண்ணப்பட்டனர் (முறையே தெலீலாள் மற்றும் ஏரோதியாளின் மகள்), இது இறுதியில் அவர்களின் மரணத்திற்கும் வழிவகுத்தது (நியா. 16; மத். 14:1-12). இறுதியாக, இருவருமே தேவனுடைய ஜனங்களுக்கு ஒரு மாபெரும் இழைப்பாறுதலைத் தரப்போகும் ராஜாவின் வருகைக்கு முன்னோடிகளாகச் செயல்பட்டனர் (2 சாமு. 7:1; மத். 11:28).

கூடுதலாக, சிம்சோன் தான் நேசித்தவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு, அவருடைய சொந்த ஜனங்களாலேயே எதிரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அவனுடைய உடல் வலிமையும், எதிரிகளுக்கு எதிரான வெற்றிகளும் தேவனுடைய ஆவியின் வல்லமையினால் கிடைத்தவைகளே. உண்மையில், மற்ற எந்த நியாயாதிபதியையும் விட, சிம்சோனிடத்தில் செயல்படுத்தப்பட்ட ஆவியானவரின் கிரியை நான்கு முறை குறிப்பிடப்பட்டுள்ளது (நியா. 13:25; 14:6, 19; 15:14). அவரது வாழ்க்கையில் இருந்த பல்வேறு தோல்விகள், அவரை விட மேலான ஒருவர் (கிறிஸ்து) தேவை என்பதைச் சுட்டிக்காட்டினாலும், பெலிஸ்தரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற தேவனுடைய அழைப்பிற்கு அவர் மரணம்வரை உண்மையாக இருந்தார். தன்னுடைய மரணத்தின்போது, சிம்சோன் தன்னுடைய எதிரிகளுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியைப் பறைசாற்றினார்; அந்த வெற்றி அவரது சிறுமைப்படுத்தப்பட்ட சூழலில் கிடைத்தது, இதுவே உண்மையான வல்லமையின் உச்சகட்ட வெளிப்பாடாகும். நியாயாதிபதிகள் புத்தகத்தில், சிம்சோன் கிறிஸ்துவின் நிழலாட்டமாக இருக்கிறாரே ஒழிய உங்களையோ என்னையோ படம் பிடித்து காட்டுவதற்கு  அல்ல. சிம்சோனும் இயேசுவும் இரட்சகர்கள், நாம் இரட்சிக்கப்பட வேண்டியவர்கள். சிம்சோனின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் குறித்து  ஆசிரியர்.பேரி வெப் (Barry Webb) கீழ்க்கண்டவாறு உற்று நோக்குகிறார்:

“அவருடைய பிறப்பு ஒரு தேவதூதனால் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அவர் கருவில் உருவானதே அற்புதமான செயல். அவர் தனது சொந்த ஜனங்களாலேயே நிராகரிக்கப்படுகிறார். அவருடைய தேசத்தின் தலைவர்கள் அவரைக் கட்டி  புறஜாதி பிரபுக்களிடம் ஒப்படைக்கிறார்கள் (16:13). அவருடைய இரட்சிப்பின் கிரியை அவரது மரணத்தில் நிறைவேற்றப்படுகிறது; அந்த மரணத்தின் மூலம் அவர் தாகோனை (Dagon) வீழ்த்தி, எதிர்காலத்தில் இன்னும் முழுமையாக வெளிப்படப்போகும் ஒரு முழுமையான வெற்றிக்கு அடித்தளம் இடுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், இந்த எதிர்பாராத ஒரு நபரிடத்தில், பழைய ஏற்பாட்டில் வேறெங்கும் இல்லாத அளவுக்குத் தெளிவாக, வரப்போகும் சுவிசேஷ காரியங்களின் வடிவமைப்பை  நாம் காண்கிறோம்.”

சிம்சோன் என்பவர் யார்? சிம்சோன் கிறிஸ்துவின் நிழலாட்டமாக இருந்தார், இன்றும் இருக்கிறார் (எபி. 11:32-40).

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

மைல்ஸ் வான் பெல்ட்
மைல்ஸ் வான் பெல்ட்
டாக்டர் மைல்ஸ் வி. வான் பெல்ட், ஆலன் ஹேய்ஸ் பெல்ச்சர், பழைய ஏற்பாடு மற்றும் பைபிள் மொழிகளின் பேராசிரியராகவும், மிஸ். ஜாக்சனில் உள்ள சீர்திருத்த இறையியல் கருத்தரங்கில் பைபிள் மொழிகளுக்கான கோடைகால நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். அவர் பைபிள் ஹீப்ருவின் அடிப்படைகள் மற்றும் நீதிபதிகள்: 12 வார ஆய்வு உட்பட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.