A Pilgrim People
பிரயாணம் செய்யும் மக்கள்
06-01-2026
Learning from the Judges
நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் 
13-01-2026
A Pilgrim People
பிரயாணம் செய்யும் மக்கள்
06-01-2026
Learning from the Judges
நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் 
13-01-2026

மாறும் உலகில் மாறாத சத்தியம்

Unchanging Truth in a Changing World

ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில், ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் தன் தலையை ஒரு மேகம், அல்லது பனிமூட்டம் அல்லது பஞ்சு உருண்டைகள் நிறைந்த ஒரு பகுதிக்குள் நடந்துசெல்வது போன்ற ஒரு காட்சி   காட்டப்படுகிறது. மிகுந்த கரகோஷத்துடன் “நிச்சயத்தின் மகிழ்ச்சி” என்ற சத்தம் தொனிக்கிறது. அப்போது மேகம் அல்லது பனிமூட்டம் விலகுகிறது. உடனே அந்தக் கதாபாத்திரம் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து நடந்து செல்கிறது. 800 என்ற எண்ணில்  தொடர்பு கொள்வதினால் மனோதத்துவ நிபுணர்களை (Psychics) , அணுகுவதினால் இந்த நிச்சயத்தின் மகிழ்ச்சி வாக்குறுதியளிக்கப்படுகிறது என்று அந்த விளம்பரம் அறிவிக்கிறது.

இத்தகைய விளம்பரம் நம் காலத்தின் அமைதியற்ற மற்றும் உண்மையின் வேரற்ற தன்மையைக் காட்டுகிறது.

இன்று பலர் தங்களை பகுத்தறிவுள்ளவர்கள், நவீனமானவர்கள் மற்றும் விஞ்ஞானப்பூர்வமானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் எளிதில் ஏமாற்றமடைகிறார்கள் மற்றும் அவ்விதமான மகிழ்ச்சிக்கான நிச்சயத் தன்மையையும் உண்மையையும் அது இல்லாத வீணான இடங்களில் தேடித்திரிகிறார்கள்.  மிகவும் நிச்சயமற்ற மற்றும் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில்  நாம் நிச்சயத்தையும் சத்தியத்தையும் எங்கே காண முடியும்? கிறிஸ்தவர்களாகிய நாம், தேவனுடைய வார்த்தையை உற்று நோக்குவதால், அதில் நாம் காணும் சத்தியத்தின் மீது மட்டுமே நம்பிக்கையுடன் இருக்க முடியும். 

வேதாகமத்தின் மீது நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தை  மற்றவர்களுக்கு உதவும் வகையில் நாம் எப்படி பகிர்ந்து கொள்ள முடியும்? நாம் விசுவாசிக்கிற சத்தியத்துக்காக நாம் நிச்சயமாக போராட முடியும், போராடவும் வேண்டும். ஆனால் நவீன காலத்தவர்கள் பெரும்பாலும் நம்முடைய வாதங்களைக் கேட்டு, அது தங்களுக்கு ஏற்கனவே நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறார்கள். நவீன காலத்தில் வாழ்பவர்களின் அனுமானங்களை சவால் செய்யும் விதமாக, கிறிஸ்தவத்தின் சத்தியங்களை அவர்கள் மீண்டும் ஏற்றுக்கொண்டு, பரிசீலிக்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா?

சத்தியத்திற்கான சத்திய போராட்டத்தில் மட்டும் நாம் கவனம் செலுத்தாமல், சத்தியத்தின் அழகை வலியுறுத்தும்படியான ஒரு வழி நமக்கு உண்டு. நாம் உற்று நோக்கும் தேவனுடைய வார்த்தையில்  சத்தியத்தின் உள்ளடக்கம் மற்றும் அதின் வடிவம் இரண்டிலும் சத்தியத்தின் அழகைக் காணலாம். அழகு என்று நாம் குறிப்பிடுவது, சத்தியத்தின் சமநிலை மற்றும் விகிதாச்சாரம், சத்தியத்தின் மீதான கவர்ச்சி மற்றும் மனநிறைவு ஆகியவற்றைக் குறிக்கிறது. அழகு என்பது சத்தியத்தின் மீது பகுத்தறிவு ரீதியான நம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதன் உணர்ச்சிபூர்வமான ஆத்தும நிறைவையும்  குறிக்கிறது.

இத்தகைய அழகை நாம் வேதவசனங்களின் பல இடங்களில் காணலாம், ஆனால் ஓர் சிறந்த உதாரணம் சங்கீதம் 103 ஆகும். டச்சு சீர்திருத்தவாதிகளின் மிகவும் பிடித்தமான சங்கீதமான சங்கீதம் 103, தமது ஜனங்களுக்குத் தேவன் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிக்கும் சங்கீதமாகும். இந்தச் சங்கீதம், தேவனுடைய கிரியைகளுக்காக அவரைத் துதிக்கும் வார்த்தைகளுடன் தொடங்குகிறது மற்றும் முடிவடைகிறது; தேவனுடைய தனிப்பட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகளுக்காகவும் (வசனங்கள் 1–4), எல்லாவற்றிலும் அவருடைய சர்வலோக ஆளுகைக்காகவும் (வசனங்கள் 20–22) அவரைத் துதிக்கிறது.

இந்தச் சங்கீதத்தின் மையத்தில், தேவனுடைய குணாதிசயத்தைப் பற்றிய ஓர் அழகான வெளிப்பாடு உள்ளது. அதிலிருந்து அவருடைய அன்பான கிரியைகள் வெளிவருகின்றன. சங்கீதத்தின் இருதயமாகிய வசனம் 13 இவ்வாறு அறிவிக்கிறது: “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல , கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.” கர்த்தர் தமது ஜனங்கள்மீது வைத்திருக்கும் அன்பும், உருக்கமான இரக்கங்களும், ஒரு தகப்பன் தன் பிள்ளைகள்மீது காட்டும் அக்கறைக்கும் கவனிப்புக்கும் ஒப்பாகும். தேவன் நம்முடைய பரலோகத் தகப்பனாயிருக்கிறார். நாம் முற்றிலும் உயிரற்ற, பொருட்களால் நிறைந்த, ஆளற்ற பிரபஞ்சத்தில் வாழவில்லை; நாம் தேவனுடைய தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் அன்பால் சூழப்பட்டிருக்கிறோம்.

சங்கீதம் 103-ல் தேவனுடைய மனதுருக்கம் இரண்டு மிகப் பெரிய மனிதத் தேவைகளில் கவனம் செலுத்துகிறது. நாம் மக்களிடம் அவர்களின் மிகப்பெரிய தேவைகள் என்னவென்று கேட்டால், பல பதில்கள் முழுவதுமாக எந்த மதிப்பெண்ணையும் பெறப்போவதில்லை. மனுக்குலத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி, தனக்குத் தேவையானது என்னவென்று கூடத் தெரியாமல் இருப்பதுதான். இந்தச் சங்கீதம் மிகுந்த  ஞானத்துடன் நம்முடைய மிகப் பெரிய தேவைகள் நம்முடைய பாவ சுபாவம் மற்றும் நம்முடைய  மரிக்கும் தன்மை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. நம்முடைய பாவம் நம்மைத் தேவனிடமிருந்து பிரித்து, அவருடைய நியாயத்தீர்ப்புக்கு ஆளாக்குகிறது. நம்முடைய மரணம் நம்முடைய வாழ்க்கை நிழலை போன்றது என்றும் அது அழிவின் மரணத்தோடு முடிவடைய கூடியது என்றும் வெளியாக்குகிறது.

சங்கீதம் , “உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற” (வசனம் 3) தேவனுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் நினைவுகூர நம்மை அழைக்கிறது. பாவிகள் மற்றும் மரணத்துக்கு ஏதுவான பாத்திரங்கள் மீதுள்ள தேவனுடைய மனதுருக்கம் ஆகியவற்றை வசனங்கள் 1-5-ல் வெளிப்படுத்தி, அதற்கான விளக்கத்தை வசனங்கள் 8-12 மற்றும் 14-17 போன்றவற்றில்  அழகான கவிதைகளாக விவரிக்கின்றன.

பாவிகள் மீதான தேவனுடைய மனதுருக்கம் யாத்திராகமம் 34:6-ல் உள்ள ஒரு மேற்கோளுடன் தொடங்குகிறது. மோசே தேவனிடம் அவருடைய மகிமையைத் தனக்கு காண்பிக்கும்படி கேட்டார். அதற்கு தேவன் , மோசே கன்மலையின் வெடிப்பில் மறைந்திருக்கையில், அவர் கடந்துபோகும்போது தமது எல்லா நன்மையையும் அவருக்குக் காண்பிப்பதாக வாக்களித்தார் (யாத். 33:18-23). அவ்விதமாக தேவன் கடந்துபோகும்போது, அவருடைய நன்மையை விவரித்து  சங்கீதம் 103:8-ல் மேற்கோள் காட்டப்பட்ட வசனங்களை சொன்னார்: “கர்த்தர் உருக்கமும், மனதுருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” அந்தப் பெரிய இரக்கத்தினிமித்தம், நம்முடைய பாவத்திற்காக நாம்  உண்மையில் எவைகளை சுதந்தரிக்கத் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமோ அதை நமக்கு அவர் செய்யாமல் இருக்கிறார் (வசனம் 10). நம்முடைய பாவங்கள் நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு மட்டுமே தகுதியானவைகள். ஆனால் தேவனுடைய எல்லையற்ற அன்பு— “பூமிக்குமேல் வானம் எவ்வளவு உயரமாய் இருக்கிறதோ அவ்வளவாய்” (வசனம் 11) இருப்பதினால்—நம்முடைய பாவங்களை “கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்” (வசனம் 12) நம்மைவிட்டு விலக்கினார்.

தேவன் எப்படி நம்முடைய பாவங்களை நீக்குகிறார் என்று சங்கீதம் 103 சொல்லவில்லை, ஆனால் ஏசாயா 53 தெளிவாகச் சொல்கிறது. பாடுகள் நிறைந்த தேவனுடைய  தாசனாகிய கிறிஸ்து நம்முடைய பாவங்களை நம்மை விட்டு நீக்குவார். ஏசாயாவில் உள்ள அந்தத் தீர்க்கதரிசனம் இயேசுவை நோக்கி நம்மை நடத்துகிறது. அவர் சிலுவையில் நம்முடைய பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டு, அதற்கான தண்டனையைச் செலுத்தி, நாம் என்றென்றும் அவற்றிலிருந்து விடுதலைபெரும்படியான வழியை உண்டாக்கினார் .

சங்கீதம் 103  மரணத்துக்கு ஏதுவானவர்கள் மீதான தேவனுடைய மனதுருக்கத்தையும் பிரதிபலிக்கிறது. இதுவும் யாத்திராகமம் 34:6-ஐச் சுட்டிக்காட்டுகிறது. தேவனுடைய அன்பு நித்தியமானது, அதாவது மரணம் அதைத் தோற்கடிக்கவோ அல்லது முடிவுண்டாக்கவோ முடியாது. “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது” (சங். 103:17). அநாதி அன்பு, அந்த அன்பில் என்றென்றும் வாழப்போகிறவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

நமக்கு அநாதி அன்பு தேவை, ஏனென்றால், நாம் நம்மையே சார்ந்திருந்தால், நாம் உருவாக்கப்பட்ட மண்ணுக்கே திரும்பி விடுவோம். கர்த்தர் அதை அறிவார். நம்முடைய நாட்கள் விரைவாகக் கடந்து போகிறது என்பதையும், நாம் வெளியின் புல்லைப்போல இருக்கிறோம் என்பதையும் அவர் நினைவுகூறுகிறார். நம்மை ஆதரிக்கத் தேவனுடைய அநாதி அன்பு இல்லாவிட்டால், “உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கத்தினாலும் முடிசூட்டுகிறார்” (வசனம் 4) என்ற வாக்குத்தத்தம் இல்லாவிட்டால், வாழ்க்கை முற்றிலும் அர்த்தமற்றதாகிவிடும். இயேசுவின் உயிர்த்தெழுதலே தேவனுடைய அன்பிற்குள்ளாக நமக்கிருக்கும் நித்திய ஜீவனுக்கேதுவான வாக்குத்தத்தம் என்பதை நாம் நினைவு கூற வேண்டும். இதுவே வேதம் கூறும் உன்னதமான அழகான சத்தியம்.

உலகில் சிலர் கர்த்தருடைய இரக்கத்தைக் கேட்டு, வரவிருக்கும் கோபத்திலிருந்து தாங்களும் பாதுகாக்கப்பட்டதாக  நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தச் சங்கீதம், தேவனுடைய மனதுருக்கம் அவருடன் உடன்படிக்கையில் இருப்பவர்களுக்கும் (வசனம் 18), அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கும் (வசனங்கள் 11, 13, 17) மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தேவனுடைய உடன்படிக்கையின் இரக்கங்கள் நமக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் (வசனம் 7), ஆனால் அந்த தேவனின் உன்னத வெளிப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ளும்போதுதான் சுவிசேஷத்தின் அழகான சத்தியத்தை நம்மால் காண முடியும். இதுவே நித்தியத்திற்கும் மாறாத சத்தியம்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

W.ராபர்ட் காட்ப்ரே
W.ராபர்ட் காட்ப்ரே
முனைவர்.W.ராபர்ட் காட்ப்ரே - லிகனோர் ஊழியங்களின் தலைவரும் பிரதான போதக ஆசிரியருமாக இருக்கிறார். வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியின் (கலிபோர்னியா) ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வராகவும், திருச்சபை வராலாறு பாடத்தை போதித்த பேராசிரியராகவும் இருக்கிறார்.