
ஆவிக்குரிய யுத்தம் என்றால் என்ன?
18-12-2025இயேசுவைப் போல் சிந்தித்தல்
ஆர்.சி. ஸ்ப்ரௌல்
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற இறையியல் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற அழைக்கப்பட்டேன். அந்த உரையில் வேத வியாக்கினத்தில் வசனங்களின் அர்த்தத்தை துல்லியமாகப் புரிந்துகொள்ளவும், முரண்பாடான முடிவுகளைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்படும் “தர்க்க விதிகளின்” முக்கியத்துவத்தை பற்றி பேசி, அவற்றைப் பற்றிய பாடத்திட்டங்களை தேவையான பிரிவில் சேர்க்குமாறு அந்த இறையியல் கல்லூரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தேன். பொதுவாக அனைத்து இறையியல் பாடத்திட்டங்களிலும், வேதாகமம் எழுதப்பட்ட மொழிகளான எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியை ஓரளவுக்காவது கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அந்த வசனங்களில் உள்ள வரலாற்றுப் பிண்ணனியை பார்க்கும்படி கற்பிக்கப்படுகிறார்கள், பின்பு வேதம் வியாக்கினத்தின் அடிப்படை அம்சங்களை கற்றுக்கொள்ளுகிறார்கள். வேதாகமத்தின் நல்ல உக்கிரணாக்காரர்களாக நாம் இருப்பதற்கு இவையெல்லாம் முக்கியமான மற்றும் பயனுள்ளவைகளாகும். இருப்பினும், வேதாகம வியாக்கினத்தில் பிழைகள் நிகழ்வதற்கான காரணம் அவர்கள் எபிரெய மொழியிலோ அல்லது அந்த புத்தகம் எழுதப்பட்ட கால சூழ்நிலையை பற்றிய அறிவு இல்லாததோ அல்ல. வேதாகமத்தை தவறாக புரிந்துக் கொள்வதற்கான காரணங்களில் முதன்மையான ஒன்று, அந்த வசனத்திலிருந்து இறையியல் விதிகளின் ஆதாரம் எதுவும் இல்லாமல் அவற்றை ஊகிப்பதுதான். எனவே வேதாகம வியாக்கினர்கள் இந்த வேதவியாக்கின தர்க்கத்தில் தேறினவர்களாக இருப்பார்களென்றால், ஒரு வேதப் பகுதியை பற்றிய தவறான புரிந்துக் கொள்ளுதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதுதான் எனது நம்பிக்கை.
இவ்வித தவறான புரிந்துக் கொள்ளுதலுக்கான ஓர் உதாரணத்தை எனது மனதில் உள்ளதை தருகிறேன். தேவனுடைய இறையாண்மையுள்ள தெரிந்தெடுப்பை பற்றி சிலரோடு விவாதிக்கும்போது, அவர்கள் “ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
யோவான் 3:16 என்று வேதம் சொல்லவில்லையா என்ற கேள்வியோடு இந்த வசனத்தை மேற்கோள் காட்டாமல் இருந்ததே இல்லை. உடனே நான் ஆம் வேதம் அவ்வாறே சொல்கிறது என்றுதான் ஏற்றுக்கொள்வேன். இந்த வசனத்தை நாம் முறைப்படி வியாக்கின தர்க்கத்தின்படி மொழிபெயர்த்தோமென்றால், விசுவாசிக்கிற அனைவருமே நித்திய ஜீவனை அடைவார்கள், நித்திய ஜீவனை அடையாத அனைவரும் அழிந்து போவார்கள், காரணம் விசுவாசத்தின் அடிப்படையில் அழிவும் நித்திய ஜீவனும் எதிர் எதிர் துருவங்களாகும். இருப்பினும், இந்த வசனம், கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கான மனித திறனைப் பற்றி ஏதும் கூறவில்லை. யார் விசுவாசிப்பார்கள் என்பதையும் இந்த வசனம் கூறவில்லை. இயேசு சொல்கிறார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்: கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.” (யோவான் 6:44). இங்கு திறனை விவரிக்கும் ஓர் உலகளாவிய எதிர்மறை உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை தேவன் பூர்த்திசெய்யாத வரை ஒருவரும் கிறிஸ்துவிடம் வரமுடியாது. இந்த உண்மை, விசுவாசத்திற்கான எவ்வித முன் நிபந்தனையை சொல்லாத யோவான் 3:16 ன் வெளிச்சத்தில் மறக்கப்பட்டுவிட்டது. எனவே, வேதாகமத்தில் மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றான யோவான் 3:16, தொடர்ச்சியாக, வழக்கமாக, இறையியல் ரீதியாக தவறான ஊகங்களினாலும், விளக்கங்களினாலும் சிதைக்கப்படுகிறது.
எல்லாக் காரியங்களிலும் நாம் நமது ஆண்டவரை மாதிரியாக பின்பற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். அவரது சிந்தனை உட்பட.
ஏன் இத்தைகயை நியாயமற்ற புரிந்துக் கொள்ளுதல் ஏற்படுகிறது? பாரம்பரிய கிறிஸ்தவ இறையியல், குறிப்பாக சீர்திருத்த இறையியல், பாவத்தால் கறைப்படுத்தப்பட்ட மனதின் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது (noetic effects of sin). இந்த noetic என்ற ஆங்கில வார்த்தை nous என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, இந்த வார்த்தைக்கான மொழியாக்கம் “மனது” என்பதைக் குறிக்கிறது. எனவே, இத்தகைய வீழ்ச்சியுற்ற மனிதனின் மனதின் பாவ விளைவு, மனிதனின் உள்ளார்ந்த அறிவையும் பாதிக்கிறது. நமது முழு மனித தன்மையும், அனைத்து அவயவங்களும் மனிதனின் பாவத்தின் மூலமாக நாசமாக்கப்பட்டது. பாவத்தின் விளைவாக நமது சரீரம் மரிக்கிறது. மனித சித்தம், தீய விருப்பங்களுக்கும், இருதயத்தின் தூண்டுதலுக்கும் கீழாக அடைக்கப்பட்டு, அடிமைகளாக காணப்படுகிறது. அதேபோல் நமது மனதும் வீழ்ச்சியடைந்துள்ளது, மேலும் வீழ்ச்சியால் நமது சிந்திக்கும் திறனும் பலவீனமடைந்துள்ளன. வீழ்ச்சிக்கு முன்பு ஆதாமின் IQ திறன், தரவரிசையில் இருந்து விலகியிருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். தோட்டத்தைப் பராமரிக்கும் காலத்தில் அவன் நியாயமற்ற ஊகங்களை சிந்திக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்திருப்பான் என்பதை நான் சந்தேகிக்கிறேன். மாறாக, அவனது மனம் துல்லியமாகவும், கூர்மையாகவும் இருந்தது. ஆனால் அவன் வீழ்ச்சியுற்ற போது அதை இழந்தும் போனான், அவனோடுக்கூட நாமும் இழந்துப்போனோம்.
இருப்பினும், நாம் வீழ்ச்சியுற்றோம் என்பதினால் இனி நாம் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டோம் என்று அர்த்தமல்ல. நாம் அடிக்கடி தவறு செய்கிறோம், ஆனாலும் நாம் ஒழுங்கான, தர்க்கரீதியாக மற்றும் உறுதியான முறையிலும் பகுத்து ஆராய கற்றுக்கொள்ள முடியும். கிறிஸ்தவர்கள் மிகுந்த தெளிந்த புத்தியுடனும், தெளிவோடும் சிந்திப்பதைப் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே ஒழுக்கத்தின் ஓர் அம்சமாக, வேத வியாக்கினத்தின் தர்க்க முறையின் அடிப்படை கொள்கைகளை கற்றுத் தேர்ந்திருப்பது மிகவும் பயனுள்ளவைகளாயிருக்கும் இதனால், பரிசுத்த ஆவியானவரின் உதவியின் மூலமாக நமது சிந்தனையின் மீதான பாவத்தின் தாக்கத்தை ஓரளவுக்கு நாம் மேற்கொள்ள முடியும்.
பாவம் நம்மில் இருக்கும் வரைக்கும், நாம் நம்மில் தர்க்கரீதியாக சிந்திப்பதில் பரிபூரணமடைவோம் என்று நான் எண்ணுவதில்லை. நாம் வாழும் வரை பாவம் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு எதிராக நம்மை பாரபட்சமாக நடத்துகிறது, தேவனுடைய சத்தியத்தின் மீதான இந்த அடிப்படை தாக்குதல்களை வெல்ல நாம் போராடவேண்டும். எனவே “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூர்வோமென்றால், (மாற்கு 12:30) நம் மனதை கடுமையாக இதில் பயிற்றுவிப்போம்.
ஆம், வீழ்ச்சிக்கு முன்பு ஆதாமுக்கு தெளிவாக சிந்திக்கக் கூடிய மனம் இருந்தது. ஆனால் கிறிஸ்துவின் சிந்தனையைப் போன்று உலகம் ஒருபோதும் இதுவரை பார்த்ததில்லை என்று நான் நம்புகிறேன். நமது கர்த்தருடைய பூலோக வாழ்வில் மானுட சாயலில் ஒரு அம்சம் என்னவென்றால், அவர் ஒருபோதும் நியாயமற்ற தர்க்கங்களை செய்யவில்லை. ஊகங்களினால் உறுதிப்படுத்தப்படாத முடிவிற்கு அவர் போதும் சென்றதில்லை. அவரது சிந்தனை மிகவும் தெளிவாகவும், ஒத்திசைவானதாகவும் காணப்பட்டது. எல்லாக் காரியங்களிலும் நாம் நமது ஆண்டவரை மாதிரியாக பின்பற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். அவரது சிந்தனை உட்பட. ஆகையால், முழு மனதோடு அவரிடத்தில் அன்பு கூறுவதை உங்களின் வாழ்வில் பிரதான மற்றும் தீவிரமான காரியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


