The Christian Life
கிறிஸ்தவ வாழ்வு
16-10-2025
The Self Disclosure of God
தேவனின் சுய வெளிப்பாடு
23-10-2025
The Christian Life
கிறிஸ்தவ வாழ்வு
16-10-2025
The Self Disclosure of God
தேவனின் சுய வெளிப்பாடு
23-10-2025

ஆத்தும இளைப்பாறுதல்

Soul Rest - Jonathan L. Master

ஜோனத்தன் எல். மாஸ்டர்

Soul Rest-Jonathan L. Master

கிறிஸ்துவின் மிகவும் விலையேறப்பெற்ற வாக்குறுதிகளில் ஒன்று, அவர் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலை அளிப்பவர் என்பதுவே. பிரசித்திபெற்ற திருச்சபை பிதாவான அகஸ்டின், “தேவனே, நீர் எங்களை உமக்காகவே உண்டாக்கினீர், எங்கள் இருதயங்கள் உம்மில் இளைப்பாறுதல் அடையும்வரை அதற்கு இளைப்பாறுதல் இல்லை” என்று தமது விசுவாச கோட்பாடு (The Confessions) என்ற நூலில் எழுதியிருக்கிறார். இந்த இளைப்பாறுதலின் தேவையைப் பற்றியே இயேசு இவ்விதமாக குறிப்பிடுகிறார்:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் , என் சுமை இலகுவாயும் இருக்கிறது  என்றார்.” (மத்தேயு 11:28–30)

இது எப்பேர்பட்ட சிறப்புமிக்க ஒரு வாக்குறுதி: நம்முடைய ஆத்துமாக்களுக்கான இளைப்பாறுதல்! இதுதான் நமக்கு உண்மையாகவே தேவையல்லவா?

ஆங்கிலிக்கன் போதகர்.ஜே.சி. ரைல் (J.C. Ryle) இயேசுவின் வார்த்தைகள் அளிக்கும் அதனுடைய ஆழமான உற்சாகத்தை அறிந்துணர்ந்தார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் கண்ணோட்டத்தில் இருந்து அதை எழுதினாலும், மனித நிலையைப் பற்றிய அவரது பகுப்பாய்வு அகஸ்டினின் பகுப்பாய்விலிருந்து வேறுபடவில்லை: தேவனுக்கு வெளியே நமக்கு எவ்விதமான நம்பிக்கையும் ஆறுதலும் கிடையாது என்பதே அதன் தாற்பரியம். J.C.ரைல் மேலும் இவ்வாறு எழுதுகிறார்:

இந்த வார்த்தைகள் எவ்வளவு உற்சாகமளிப்பதாகவும், ஆறுதலளிப்பதாகவும் இருக்கின்றன! உலகத்தின் மிகப்பெரிய பண்புகளில் ஒன்று இளைப்பாறுதலின்மை: அவசரம், எரிச்சல், தோல்வி, ஏமாற்றம் ஆகியவை எல்லா பக்கங்களிலுமிருந்து நம்மை நெருக்கி, வெறித்துப் பார்க்கின்றன. ஆனால் இங்கே நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது: அலைந்து திரிகிற நோவாவின் புறாவுக்கு ஒரு அடைக்கலப் பேழை இருந்ததுபோல, சோர்ந்துபோனவர்களுக்கும் ஒரு அடைக்கலத்திற்கான பேழை உண்டு. கிறிஸ்துவுக்குள்ளான இளைப்பாறுதலே அது—இது ஒரு மனசாட்சியில் இளைப்பாறுதல், இருதயத்தில் இளைப்பாறுதல்; இது எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுவதினால் கட்டமைக்கப்பட்டுள்ளது, தேவனுடனான சமாதானத்திலிருந்து இந்த இளைப்பாறுதல் நமக்கு கரைபுரண்டு  வருகிறது.

நமது ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் இயேசுவின் மூலமாக மட்டுமே வர முடியும். மனிதர்கள் இந்த இளைப்பாறுதலை மற்ற காரியங்கள் மூலமாக அடையும்படி தேடி திரிகிறார்கள். ஆனால் அவர்களுடைய ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து தோல்வியடைவதால், அவர்களுடைய ஆத்துமாவின் அமைதியின்மை இன்னும் வலிமையாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. நாம்  கிறிஸ்துவினிடத்தில் மட்டும் வருவதினால், அவருடைய நுகத்தை ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் கற்றுக்கொள்வதன் மூலம் நம்முடைய ஆத்துமாவிற்கான இளைப்பாறுதலைக் கண்டடைகிறோம். இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக இளைப்பாறுவதன் மூலம், நம்முடைய ஆத்துமாவிற்கான உண்மையான இளைப்பாறுதலை நாம் கண்டடைகிறோம்.

அகஸ்டினும், ரைலும் உணர்ந்த அதே உண்மையைத் தான், பதினேழாம் நூற்றாண்டின் பியூரிட்டன் போதகரான தாமஸ் வின்சென்ட் (Thomas Vincent) சிந்தித்து அதை பொக்கிஷமாகக் கருதினார். அவர் கிறிஸ்துவுக்குள்ளான ஆத்துமாவிற்கான  இளைப்பாறுதலைப் பற்றி இவ்வாறு விளக்கினார்:

பாவத்தின் காரணமாகத் நாம் இழந்த நிலையையும், அந்த நிலையிலிருந்து மீள முடியாத நம்முடைய இயலாமையையும், எந்தவொரு சிருஷ்டிகளினாலும் நம்மை மீட்ககூடாததனுடைய  நிலையையும் உணரும்போது, இரட்சிப்பதற்கான கிறிஸ்துவின் வல்லமையையும், விருப்பத்தையும் அறிந்துணரும் போது ; அப்பொழுது அது சிருஷ்டிகளின் மீதான எல்லாப் பிடிப்பையும் விட்டுவிட்டு, தன் சொந்த நீதியைக் கைவிட்டு, கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவரை மட்டுமே நம்பி, இரட்சிப்புக்காக அவரை மட்டுமே சார்ந்திருக்கும்போது, நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவுக்குள் மெய்யாகவே  இளைப்பாறுகிறது.

உங்கள் ஆத்துமாவுக்கு நீங்களே இளைப்பாறுதலை அளிக்க முடியாத உங்கள் இயலாமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இரட்சிப்பதற்கு கிறிஸ்துவின் வல்லமை மற்றும் விருப்பத்தை குறித்து நீங்கள் உறுதியுள்ளவர்களாயிருக்கிறீர்களா? இரட்சிப்பிற்காக அவரைப் பற்றிக்கொண்டீர்களா? இயேசுவிடம் வாருங்கள், அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். அவரில் மட்டுமே இளைப்பாறுங்கள், அப்பொழுது நீங்கள் சோர்ந்துபோன உங்கள்  ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள்.

English : One of Christ’s most precious promises is that He will provide rest for the soul. The great church father Augustine famously wrote in The Confessions, “You have made us for Yourself, O Lord, and our hearts are restless until they find their rest in You.” 

Tamil: கிறிஸ்துவின் மிகவும் விலையேறப்பெற்ற வாக்குறுதிகளில் ஒன்று, அவர் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலை அளிப்பவர் என்பதுவே. பிரசித்திபெற்ற திருச்சபை பிதாவான அகஸ்டின், “தேவனே, நீர் எங்களை உமக்காகவே உண்டாக்கினீர், எங்கள் இருதயங்கள் உம்மில் இளைப்பாறுதல் அடையும்வரை அதற்கு இளைப்பாறுதல் இல்லை” என்று தமது விசுவாச கோட்பாடு (The Confessions) என்ற நூலில் எழுதியிருக்கிறார். 

முனைவர். ஜொனாத்தன் எல். மாஸ்டர் என்பவர் தென் கரோலினாவில் (Greenville, S.C.) அமைந்துள்ள க்ரீன்வில் பிரஸ்பைடீரியன் இறையியல் கல்லூரியின் (Greenville Presbyterian Theological Seminary) தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மேலும், அவர் அமெரிக்காவில் உள்ள பிரஸ்பைடீரியன் திருச்சபையில் (Presbyterian Church in America – PCA) போதகராகவும் (Teaching Elder) பணியாற்றுகிறார். அவர் பல நூல்களின் ஆசிரியர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

Growing in Grace (கிருபையில் வளருதல்)

Reformed Theology (சீர்திருத்தப்பட்ட இறையியல்) ஆகியவை ஆகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.