
இயேசு எப்படி “மெய்யான திராட்சச்செடி” யாக இருக்கிறார்?
29-07-2025எவ்வாறு இயேசு உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்?

How Is Jesus the Light of the World?
பீட்டர் வேன் டூட்வார்டு
சில வாரங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்தபோது, மரங்கள் சூரியனை நோக்கி எவ்வாறு வளருகிறது என்பதை கவனித்தேன்: அதன் மையத்தில், மரங்களும், அதன் ஓரங்களில் நீண்ட கிளைகளும் தங்களுக்கு உயிர் ஆதாரமாக இருக்கும் சக்தியை நோக்கிச் செல்கின்றன. அப்போது கிறிஸ்துவின் பிரசங்கத்தின் விளைவுகளை ஏசாயா முன்னறிவித்ததை நான் நினைவுகூர்ந்தேன்:
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார், அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
(ஏசாயா 61:1,3)
தேவன் வெளிச்சத்தை கட்டளையிட்டார், வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் (ஆதி 1:4), உடனே எந்தவொரு ஆற்றலும் நிறையும் இல்லாத பொருளாகிய வெளிச்சம் உண்டாயிற்று, இது இன்னும் நமக்கு மறைபொருளாகவே உள்ளது. தேவன் வெளிச்சத்தை கொடுக்கும் படைப்புகளையும் உண்டாக்கினார்: “தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.” ஆதியாகமம் 1:16.
மிகப்பெரிய சுடராகிய சூரியன் என்பது ஓர் அணு இணைவு உலையாகும், ஆச்சரியமூட்டும் பரிமாணங்களையும், ஆற்றலையும் கொண்டு இது பூமியை நிரப்புகிறது. நாம் இவற்றை எளிதாக மறந்துவிடுகிறோம், குறைந்த மகிமை அல்லது எவ்வித மகிமையுமல்லாத காரியங்களால் நாம் நிரப்பப்பட்டும், திசைமாற்றப்பட்டும் இருந்து, ஒரு நீண்ட இரவை கடப்பதற்கு விரும்பும் வரை அல்லது இருண்ட குளிர்கால நாட்களை வசந்த காலங்களாக மாறுவதற்கு மீண்டும் ஏங்கும் வரை நாம் சூரிய வெளிச்சத்தின் மகத்துவத்தை உணராமலேயே இருக்கிறோம். ஒளியே ஜீவனாகயிருக்கிறது.
ஆனால், வெளிச்சம் என்பது இரட்சிப்பை சித்தரிக்கவும் உருவாக்கப்பட்டது. அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பாக இருந்தது, ஆனால் எகிப்தியரோ காரிருளில் வாழ்ந்தார்கள் (யாத் 14:20). மேஜையின் மீது வைக்கப்பட்ட பன்னிரண்டு அப்பங்களின் மீது பொன்குத்துவிளக்கின் வெளிச்சம் பிரகாசித்தது. இஸ்ரவேல் கோத்திரங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பதை விளக்க ஏற்படுத்தப்பட்ட காட்சி இது: “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி” (எண் 6:24-27). சங்கீதக்காரன் கூறுகிறான்: “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்” என்று (சங் 27:1). ஆனால், இந்த உலகம் மனிதனின் பாவத்தினால் ஏற்பட்ட காரிருளால் சூழப்பட்டுள்ளது. கீழ்ப்படியாமை என்பது, “குருடன் அந்தாகரத்தில் தடவித் திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்.” (உபா 28:29). ஆனால் இரட்சிப்பின் வழியானது தேவனுடைய வார்த்தை என்கிற வெளிச்சத்தினால் ஒளிரச் செய்யப்படுகிறது, இதுவே “நமது கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது” (சங் 119:105).
அந்தாகரத்திலிருந்து வெளிச்சத்திற்கு வருவதே இரட்சிப்பு, மற்றும் “நானே உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்” என்று இயேசு கூறுகையில், அவர் மேன்மையான மகிமை மற்றும் இரட்சிக்கும் வல்லமையை பற்றி உறுதியான சத்தியத்தை முன்வைத்தார்.
இந்த வசனத்தில் கிறிஸ்து தமது தெய்வீகத்தை வலியுறுத்துகிறார். அவர் தன்னில் தானே நிறைவுடைய நித்தியமானவராகயிருக்கிறார். “இருக்கிறவராகவே இருக்கிறவராகவும்” சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சிருஷ்டிகராகவும் உள்ளார் (யாத் 3:14). அவரே ஒளியின் மகிமையை ஆரம்பிக்கிறவரும், ஆதாரமானவருமாக உள்ளார். யோவான் கூறுவதுபோல், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை.” (1 யோவான் 1:5), ஆகவே இயேசு அவர் ஒளியாயிருக்கும் தேவனாகயிருக்கிறார். ஒருவரும் சேரமுடியாத மகிமையில் வசிக்கும் பிதாவிடமிருந்து அவரை வெளிப்படுத்தும் தெய்வீக வழிகாட்டிய இயேசு உள்ளார். “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.” யோவான் 1:4-5.
முதலில் சூரிய ஒளியின் மகிமையை கருத்தில் கொண்டு, பின்னர் நமது இருதயத்தை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் மகிமைக்கு உயர்த்தும் போதுதான் இந்த வசனத்தின் மகத்துவத்தை நம்மால் விளங்கிக்கொள்ளமுடியும். அனைத்து நட்சத்திரங்களும், மிகவும் பிரகாசமான நட்சத்திரமும், இந்த தேவனின் மகிமையின் நித்திய வல்லமையோடு ஒப்பிடுகையில் அவைகள் மிகவும் அற்பமானவைகளே.
பாவத்தின் அந்தாரத்தால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் கிறிஸ்துவே ஆவிக்குரிய வாழ்வின் ஆதாரமாயிருக்கிறார்.
இயேசு தனது இரட்சிப்பின் பணியைப் பற்றியும் பேசுகிறார். பாவத்தின் அந்தாரத்தால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் கிறிஸ்துவே ஆவிக்குரிய வாழ்வின் ஆதாரமாயிருக்கிறார். மல்கியா மேசியாவின் வருகையை எதிர்நோக்குகிறார். “ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.” மல்கியா 4:2. மறுரூபமலையில் இயேசுவின் முகம் சூரியனைப் போல பிரகாசித்து (மத் 17:2). “மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.” என்று பவுல் கூறுகிறார். அப்போஸ்தலர் 26:13. அப்போஸதலனாகிய யோவான் காண்கையில், “அவரது முகம் வல்லமையாய் பிரகாசிப்பிக்கிற சூரியனைப் போலிருந்தது.” (வெளி 1:16-20). நாம் கிறிஸ்தவர்களாக மாறினோம் என்றால் அதற்கான காரணம், “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.” 2 கொரிந்தியர் 4:6.
பெரிய வெளிச்சமாகிய இயேசு கிறிஸ்து தமது சுடர்விடும் பரிசுத்தத்தினால் நமது பாவங்களை வெளிப்படுத்தி பின்னர் நமது இருதயங்களின் ஆழங்களில் தமது சுத்திகரிக்கும் மற்றும் ஜீவனை அளிக்கும் வல்லமையை பிரகாசிப்பிக்கிறார். இயேசு சிலுவையிலும், வெறுமையான கல்லறையிலும் மற்றும் பரமேறுதலிலும் மகிமையாக பிரகாசித்தார். மீண்டும் அவரது வருகையானது இந்த முழு உலகத்தையும் வெளிச்சத்தில் அதிரச்செய்கிற ஒற்றை மின்னலைப் போல் இருக்கும். இந்த வெளிச்சத்தின் அனைத்து செய்திகளும் இவ்வுலகிற்கு சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது, மற்றும் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் அவைகள் பெறப்படுகிறது.
நாம் இயேசுவை விசுவாசிக்கும் நேரத்தில் அங்கு முழுமையான மற்றும் நித்தியமான மாற்றம் நிகழ்கிறது: “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” யோவான் 8:12.
பவுல் சொல்கிறார், “முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். “ (எபேசியர் 5:8). கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட்டிருப்பதினால், நாம் எங்கு சென்றாலும், அவரது ஒளி பிரகாசிக்கிறது. இந்த சத்தியம், நாம் நாம் இந்த உலகத்தினால் எதிர்க்கப்படும்போது நமக்கு ஆறுதலை அளிக்கிறது. இந்த சத்தியம், மனிதர்கள் நமது நற்கிரியைகளை கண்டு, பரலோகத்தில் பிதாவை மகிமைப்படுத்தி, வெளிச்சத்தினிடம் வருவதற்கு அவர்களுக்காக ஜெபிக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது.
கிறிஸ்துவின் ஜீவன் மனிதர்களுக்கு ஒளி என்று யோவான் கூறுகிறார் (யோவான் 1:4). நாம் வெறுமனே இந்த ஒளியியல் வந்துவிட்டு பிறகு நமது வழியில் நாம் செல்லமுடியாது. மாறாக, பரலோகத்தின் மகிமை நம்மீது இன்னும் அதிகமாக பிரகாசிக்க நாம் விரும்புகிறோம். உதிக்கும் சூரியனுக்கு அப்பாற்பட்ட மகிமையை, அதை தாங்கிக்கொண்டிருப்பவரின் முகத்தில் நாம் கண்டுள்ளோம், இப்போது தேவனின் மகத்துவமான எல்லையற்ற அந்த மகிமைக்காக நாம் காத்திருக்கிறோம். எப்பொழுது இந்த சிறிய சூரியனின் வெளிச்சம் அந்தாகாரப்பட்டு, சந்திரன் இரத்தமாக மாறும்போது, அது திரியேக தேவனின் அளவற்ற மகிமையின் வருகையின் விளிம்பில் நாம் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளமாகும். சூரியனோ அல்லது சந்திரனோ தேவைப்படாத ஒரு நகரத்தின் நடுவில் உள்ள சிங்காசனத்திலிருந்து எப்போதும் பாய்ந்து வரும் ஜீவ ஒளியை பெறுவதற்கு நமது ஒலிவ இலைகள் திரும்பும், ஏனென்றால் தேவனின் மகிமை அதை ஒளிரச் செய்கிறது (வெளி 21:23). கர்த்தரே நமது வெளிச்சமாகயிருப்பார், அவர் இன்றும் என்றும் சதாகாலங்களுக்கும் ஆட்சி செய்வார்.
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12) என்று இயேசு சொன்னபோது இவைகளையே அர்த்தப்படுத்தினார்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.