Preaching and Teaching
பிரசங்கம் மற்றும் போதித்தல்
25-12-2025
Preaching and Teaching
பிரசங்கம் மற்றும் போதித்தல்
25-12-2025

இயேசுவைப் போல் சிந்தித்தல்

Fear and Uncertainty

மரணம் என்பது மனிதர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும். மரணத்தை பற்றிய எண்ணங்களை நமது மனதிலிருந்து தொலைதூரத்தில் ஒருவேளை அதை மறைத்து வைக்க நாம் முயற்சிக்கலாம், ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வை நாம் முற்றிலுமாக அழிக்க முடியாது. எனவே மரணம் என்கிற காணக்கூடாத ஓர் எதிரி நமக்காக காத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறுகிறார்: 

“இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது, நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.” ரோமர் 5:12-14.

மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் இருந்தது என்றும், நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே மரணம் நிகழ்ந்ததினால் இந்த உண்மை நிரூபிக்கப்படுகிறது. மரணத்தின் உண்மை பாவத்தின் பிரசன்னத்தை காண்பிக்கிறது, பாவத்தைப் பற்றிய உண்மை நியாயப்பிரமாணம் உள்ளது என்பதைக் காட்டுகிறது, இந்த நியாயப்பிரமாணம் ஆதியிலே மனிதனின் மனதில் உள்ளார்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாவத்தின் நேரடி விளைவாக மரணம் உலகத்தில் பிரவேசித்தது.

கிறிஸ்தவர்கள் எவ்வாறு மரணத்தை வீழ்ச்சியின் ஓர் விளைவாக பார்க்கிறார்களோ அதேபோல்‌, இந்த உலகம் மரணத்தை ஓர் இயற்கையின் சுழற்சியாக பார்க்கிறது; இது மனிதனின் உண்மையான நிலை அல்ல. தேவனின் நியாயத்தீர்ப்பாக மரணம் உலகத்தில் பிரவேசித்தது. ஆதி முதற்கொண்டே பாவம் என்பது மரணத்தண்டனைக்குரிய குற்றமாகும். “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 

ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”

(ஆதியாகமம் 2:17). தேவன் எச்சரித்த மரணம் வெறுமனே ஆவிக்குரிய மரணம் மாத்திரமல்ல சரீர மரணத்தையும்தான். ஆதாமும் ஏவாளும் அவர்கள் பாவம் செய்த அதே நாளில் சரீரத்தில் மரித்துபோகவில்லை; இந்த தண்டனை நிகழ்வதற்கு முன்பு இன்னும் சிறிது காலம் அவர்கள் பூமியில் வாழ தேவன் அவர்களுக்கு இரக்கத்தைக் காண்பித்தார். இருப்பினும் இறுதியில் அவர்கள் பூமியிலிருந்து அழிக்கப்பட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் எவ்வாறு மரணத்தை வீழ்ச்சியின் ஓர் விளைவாக பார்க்கிறார்களோ அதேபோல்‌, இந்த உலகம் மரணத்தை ஓர் இயற்கையின் சுழற்சியாக பார்க்கிறது; இது மனிதனின் உண்மையான நிலை அல்ல.

எல்லா மனிதர்களும் பாவிகளும் மற்றும் மரணத்துக்கு ஏதுவானவர்களாக உள்ளார்கள். இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக நாம் அனைவருமே காத்திருக்கிறோம். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால், மரணத்துக்குப் பிறகு என்ன நடைபெறும் என்பதுதான். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இந்த தண்டனை கிறிஸ்துவால் செலுத்தப்பட்டது. இதுதான் மரணத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் தாக்கங்களை கொண்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் இதை எழுதும்போது சிறையில் உள்ளார்:

“அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். 

ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். 

அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.” (பிலிப்பியர் 1:19-24).

இவ்வசனங்களில் பவுலின் வார்த்தைகளைப் பற்றி நாம் ஆச்சரியப்படலாம். மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியில் நாம் களிகூர்ந்தாலும், நாம் மரணத்தைக் குறித்து அஞ்சுகிறோம். வேதனை மிகுந்த இந்த சரீர மரணத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு ஒன்றும் விலக்கு அளிக்கப்படவில்லை. இருப்பினும், மரணத்தைப் பற்றிய எண்ணம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவரல்லாதவர்களுக்கும் பயத்தைத் தருகிறது. அந்த பயம் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்ற கேள்வியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கோ, தேவன் அளித்த வாக்குத்தத்தம் உள்ளது, அந்த வாக்குத்தத்தம் தான் பவுலை, “கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்.” என்று தைரியமாக சூளுரைக்க வைத்தது. நாம் தேவனுடைய பிரசன்னத்தை சென்றடைவோம் என்று வாக்களிக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும் இந்த வாக்குத்தத்தத்தோடு அநேக கேள்விகள் உள்ளன. பரலோகம் எப்படி இருக்கும்? நாம் அதை அனுபவிப்போமா? நாம் அங்கு என்ன செய்வோம்? எவ்வாறாக இருப்போம்? என்று.

இந்த வாழ்வின் எல்லா சிரமங்களுக்கும் மத்தியில் நாம் இவையெல்லாம் அறிந்திருக்கிறோம். பவுலும்கூட இந்த உலக வாழ்வை அவர் இழிவுப்படுத்தவில்லை. அவர் கூறுகிறார், “ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.”(பிலிப்பியர் 1:23). பவுல் இந்த உலகில் தனது வாழ்வையும் முக்கியமாக அவரது ஊழியத்தையும் தொடர விரும்பினார், ஆனால் “தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு” அது அதிக நன்மையாயிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். 

கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு இச்செய்தி ஓர் பயனற்றதாக தோன்றும். மீண்டும் இங்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்ப்டுகிறது, ஆனால் இப்பொழுது அது தண்டனைக்குரிய வாக்குத்தத்தம், கிறிஸ்துவில் விசுவாசமில்லாமல் வாழும் மக்கள் மீது தேவ கோபாக்கினை பாவத்துக்கு எதிராக ஊற்றப்படும் என்ற வாக்குத்தத்தம். இந்த ஆக்கினை நரகம் என்கிற இடத்தில் நிகழும், ஆனால் மீண்டும் நிச்சயமின்மை காணப்படுகிறது. நரகம் எவ்வாறு இருக்கும்? எவ்வித தண்டனை அங்கு இருக்கும்? அதிலிருந்து தப்பிக்க வழி ஏதேனும் உண்டா? இது நியாயமானதா அல்லது துன்மார்க்கர் அழிக்கப்பட இன்னும் அதிக நியாயமானதா? 

இவைகள் மிக முக்கிய கேள்விகள். நாமனைவரும் ஒருநாள் மரணத்தை சந்திப்போம். நிலையான கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது வேதத்தின் அசைக்க முடியாத இயற்கைக்கு அப்பாற்பட்ட கொள்கையை உறுதிப்படுத்துவதாகும், இது இன்றைய உலகத்திற்கு வெறுக்கத்தக்க ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட கொள்கையாகும். நமது உலகக் கண்ணோட்டத்தை நம்பிக்கையற்ற கலாச்சாரத்தால் அல்ல, மாறாக வேதத்தால் வடிவமைக்க வேண்டும். நாம் அவ்வாறு செய்யும்போது, நம்மைப் படைத்த கடவுளில் நம்பிக்கையைக் காண்போம் – அவர் தம்முடைய குமாரனின் செயலால் நம்மைப் பரலோகத்திற்குக் கொண்டு வந்து நரகத்தின் வேதனைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதாக உறுதியளிக்கிறார்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.