3 Things about Nahum
நாகூம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
11-03-2025
3 Things about Nahum
நாகூம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
11-03-2025

ஒபதியா புத்தகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்

3 Things You Should Know about Obadiah

ஒபதியா புத்தகம் பழைய ஏற்பாட்டில் மிகச் சிறிய புத்தகம் என்பதாலும், வேதத்தை வாசிப்பவர்களுக்கு  பரிட்சயமில்லாத புத்தகமாக  இருப்பதாலும், சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களின் நடுவில் இது மறைந்திருப்பதாலும் ஒபதியாவின் தீர்க்கதரிசன புத்தகம் கவனக்குறைவாகவே எண்ணப்படுகிறது. ஒபதியா புத்தகத்தை வாசிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களே போதுமானதாக இருப்பதால், அப்புத்தகத்தில் உள்ள அடிப்படை சத்தியங்களை கற்றுக்கொள்வது நமக்கு எளிதாக இருக்கும். ஏதோம் தேசத்திற்கு விரோதமான தேவனுடைய நியாயத்தீர்ப்பை ஒபதியா தீர்க்கதரிசி முன்னறிவிக்கிறார் (ஒப- 1-4,8-10). சிறிய தேசமாக இருந்தாலும் சௌகரியத்தோடும், பாதுகாப்போடும் காணப்பட்டதால் அத்தேசம் இருதயத்தில் அகந்தையும், பெருமையும் கொண்டதாக காணப்பட்டது (ஒப 3,12). அவர்களின் இந்நிலைமைக்கு இரண்டு முக்கியமான அடிப்படை காரியங்கள் இருந்தன. ஒன்று அவர்கள் உயர்ந்த ஸ்தானமாகிய கன்மலை வெடிப்புகளிலே குடியிருந்தார்கள். அதனால் மனித கண்ணோட்டத்தில் அது மிகுந்த அரணிப்பானதாகவும், அதை விழத்தள்ளுவதற்கு கடினமானதாகவும் இருந்தது (ஒப 3,12). எல்லாவற்றையும் விட ஏதோம், (பெரும்பாலும் அதன் முக்கிய நகரமான தேமானால் குறிப்பிடப்படுகிறது) சிறந்த மனித ஞானத்தைக் கொண்டிருந்து, நல்ல நற்பெயரையும் பெற்றிருந்தது (ஒப. 8–9; எரே. 49:7 ஐயும்  பார்க்கவும்). வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால் ஏதோம், அதன் குடிமக்கள் எல்லாரும் பாதுகாப்பாக வாழ்வதற்கான   போர்த்திறமை சார்ந்த எல்லா உத்திகளையும், ஆயுதங்களையும் கொண்டிருந்தது. இருப்பினும், பாபிலோனியர்கள் யூதர்களைத் தாக்கியபோது அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாததற்காக (கி.மு. 587/586 இல் எருசலேமின் அழிவு மற்றும் நாடுகடத்துதல் அதிதீவிரமாக இருந்தது) ஏதோமியர்கள் மீது நியாயத்தீர்ப்பு உண்டு என்பதையும் தேவன் இங்கே தெரியப்படுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் ஏதோமியர்கள்  தப்பியோடிய யூதர்களைப் பிடித்து அவர்களை சிறையிருப்புக்கு ஒப்புக்கொடுத்து, யூதர்களை ஒடுக்குகிறவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் அவர்களுக்கு இந்த அழிவு உண்டு என்பதையும் முன்னறிவித்தார் (ஒப. 11–14; சங்.137:8–9; எசே. 25:12; 35:5). ஏதோமின் நியாயத்தீர்ப்புக்கான  தீர்க்கதரிசனத்தை அறிவித்ததோடு நின்றுவிடாமல் தேவன்  தம்முடைய ராஜ்யத்தை திரும்பவுமாக நிலைப்படுத்துவதன் மூலமாக தன்னுடைய ஜனங்களை மீண்டும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன் என்றும்  இங்கே வாக்குகொடுக்கிறார் (ஓப. 17–21).

ஒபதியா புத்தகத்தைப் பற்றிய பின்வரும் மூன்று விஷயங்களைப் கருத்தில் கொள்வது அதன் கருப்பொருளை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.

1. ஒபதியாவின் தீர்க்கதரிசனம், “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” (ஆதி. 25:23) என்று ஈசாக்கு தன்னுடைய மகன்களாகிய யாக்கோபு மற்றும் ஏசாவை குறித்து முன் சொன்ன தேவனுடைய சர்வ இறையாண்மைகொண்ட ஆணையினுடைய  நிறைவேறுதலாக இருக்கிறது.

ஏசா மற்றும் யாக்கோபின் மூலமாக  ஏதோம் மற்றும் யூதேயா தேசங்கள்  தோன்றின (ஆதி. 36:1–43; 49:1–28). இவ்விருவருக்கும் இடையிலான உறவு முறிவின் காரணமாக இரண்டு தேசங்களாக இவைகள் உருவாகின. ஏதோம் என்பது ஏசாவின் மூலமாகவும் யூதேயா என்பது யாக்கோபின் மூலமாகவும் உண்டாகின (ஆதி. 27:41–45). யாக்கோபு உண்மையற்றவனாகவும், நயவஞ்சகனாகவும் இருந்தபோதிலும், முதற்பேறான தன்னுடைய சகோதரனாகிய ஏசாவுக்கு சொந்தமான புத்திர சுவிகாரத்தினுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டான் (ஆதி. 25:29–33; 27:1–40). இதனாலேயே,  ஏதோமியர்கள் மீது யூதேயா தேசத்தார் அதிகாரம் கொண்டவர்களாக காணப்பட்டனர் (எண். 24:18–19), இதனுடைய பாதிப்பு முழு இஸ்ரவேல், ஏதோம் வரலாற்றிலேயும் நம்மால் பார்க்க முடிகிறது (எடுத்துக்காட்டாக, 1 சாமு. 14:47; 2 சாமு. 8:11–14; 1 இராஜாக்கள் 22:47; 1 நாளா. 18:11). ஆதலால் தேவன் தன்னுடைய நிபந்தனையற்ற கிருபைகளையும், இரக்கங்களையும் தகுதியற்ற யாக்கோபுக்கும் இஸ்ரவேலுக்கும் கொடுக்கிறதை நாம் வேதத்தில் உற்று கவனிக்கலாம். (மல். 1:1–4; ரோ. 9:10–16).

2. ஒபதியாவின் தரிசனமானது,தேவனுடைய நியாயத்தீர்ப்பையும்  அவருடைய மீட்பின் செயல்களையும் ஒன்றாக இணைத்து நமக்கு படம் பிடித்து காண்பிக்கிறது (ஒப. 1) .

ஒபதியா, ஏதோமின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பை மட்டும் சொல்லாமல், முழு தேசத்திற்குமான நியாய தீர்ப்பின்(ஒப :16)  “கர்த்தருடைய நாள்” (ஒப: 15) பற்றிய முக்கியத்துவத்தையும் தேவனுடைய ஜனங்களின் மீட்பையும்  (ஒப. 17) இங்கே அறிவிக்கிறார். இவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சம்பவிக்கும் என்பது போல நமக்கு தோன்றலாம் . ஆனால் வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் மற்றும் அவருடைய இரட்சிப்பின் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்தே சொல்லுகிறதை பார்க்க முடிகிறது, இதற்கு  ஒப்புமையாக புரிந்துகொள்ள வேண்டுமானால்  நீட்டிக்கப்பட்ட தொலைநோக்கியை (telescope) ஒருவர் எடுத்து அதை ஒரு சிறிய அலகாகச் சுருக்கி தூரத்தில் உள்ளவைகளை பார்ப்பதற்கு ஒப்பாகும். இந்த மாதிரியான பேச்சு முறை பெரும்பாலும் “தீர்க்கதரிசன தொலைசுருக்க பார்வை”அல்லது “தொலைநோக்கி” என்று அழைக்கலாம். மேலும்  இவ்விதமான தீர்க்கதரிசன நுட்பத்தைப் பற்றி அறிந்திருப்பது, படிப்பவர்களுடைய  குழப்பத்தைத் தவிர்க்க உதவி செய்கிறது. ஆகவே பொதுவாக தீர்க்கதரிசனத்தின் முன்னறிவிப்புகளை குறித்ததான அடிப்படை சாராம்சத்தை நாம் அறிந்தோமானால், ஒபதியாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வாறு நிகழ்கிறது என்பதையும்  அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக, ஏதோமினுடைய அழிவு  ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும், விசுவாசிகள்  “கர்த்தருடைய நாளுக்காக” இன்றுவரை  காத்திருக்கிறார்கள், ஏனென்றால் இது முழு தேசங்களுக்குமான நியாயத்தீர்ப்பின் அழைப்பையும்  திருச்சபையினுடைய முழுமையான இரட்சிப்பையும் உள்ளடக்கியிருக்கிறது.

3. ஒபதியாவின் தீர்க்கதரிசனம் புதிய ஏற்பாட்டில் நேரடியாக மேற்கோள் காட்டப்படவில்லை, ஆனால் வேதம் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக, ஒபதியாவின்  நிறைவேறுதலை ஆச்சரியமான விதத்தில் எடுத்துரைக்கிறது.

ஒபதியா புத்தகம் மட்டுமல்ல, எஸ்தர் மற்றும் செப்பனியா போன்ற ஒரு சில பழைய ஏற்பாட்டின் புத்தகங்களும் கூட புதிய ஏற்பாட்டில் எங்கும் மேற்கோள் காட்டப்படவில்லை. இருப்பினும், ஒபதியாவின் தீர்க்கதரிசனம் ஆச்சரியமான முறையில் நிறைவேறியதாக வேதம் நமக்கு குறிப்பிடுகிறது. காலப்போக்கில், ஏதோமியர்கள் வெளிநாட்டு சக்திகளால் அடிமைத்தனத்திற்குள்ளானார்கள் என்றும், யூத வரலாற்றாசிரியர் ஜோசபஸின் கூற்றுப்படி, அவர்கள் மீண்டும் யூத ஆட்சியின் கீழ் வந்தனர் என்றும், மேலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஜான் ஹிர்கானஸ் (இவர் ஒரு ஹாஸ்மோனிய அதிகாரி மற்றும் யூத பிரதான ஆசாரியன்) என்பவரால் விருத்தசேதனம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் அறியலாம் (Antiquities 13:256). இதன் விளைவாக, இவர்கள் “இதுமேயர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் யூதயா தேசத்திற்குள்ளாகவும் ஊடுருவ தொடங்கினார்கள். மட்டுமல்ல இதுமேயர்கள் தங்களுடைய சுதந்திர பாகத்தையும், சுய தேசத்தினுடைய அடையாளத்தையும் இழந்ததின் விளைவாக, இயேசுவை மேசியாவாகப் பின்பற்றின கூட்டத்தாரில் ஒருவராக இருந்ததினால், மறைமுகமாக  அது அவர்களுக்கு ஆசீர்வாதமாகவே அமைந்தது (மாற்கு 3:8–9). இது கொலோசெயர் 3:11 இல் சொல்லப்பட்ட சத்தியத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது – “அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்”. ஒபதியா முன்னறிவித்தது போல, சீயோன் மலையில் மீட்பு காணப்பட்டது (ஒப.17).  – அதாவது, தேவனுடைய ஜனங்களுடைய வாழ்க்கையில் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு இந்த மீட்பானது நிறைவேறிற்று (எபி. 12:22–24) என்பதேயாகும்.

இறுதியாக, ஒபதியா புத்தகத்தின் மூலமாக ஆதி கால பழமொழிகளில் ஒன்றான “நன்மையானவைகள் சிறிது சிறிதாகவே வருகிறது” என்கிற கூற்று மெய்யாயிற்று.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

மேக்ஸ் ரோக்லேண்ட்
மேக்ஸ் ரோக்லேண்ட்
டாக்டர் மேக்ஸ் F. ரோக்லேண்ட், அவர்கள் ரோஸ் ஹில் பிரஸ்பைடிரியன் திருச்சபையின் மூத்த ஊழியராகவும், கொலம்பியா, எஸ்.சி.யில் உள்ள எர்ஸ்கைன் இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டின் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.